Tuesday, February 26, 2008

வெல்ல சீடை

தேவையானவை:

(மாவு பதம் உப்பு சீடைக்கு சொன்னது போலதான் .)
வெல்லம் - மாவு 2 கப் என்றால் வெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 4
எள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கொஞ்சம் முற்றிய தேங்காய் என்றால் வாசனையாக இருக்கும்
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

வெல்லத்தை தூள் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைந்தபின் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பிசுகென்று வரும் போது மாவை போட்டு மற்ற எல்லா பொருள்களையும் போட்டு கெட்டியாக பிசைந்து துணியில் ஊருட்டி போட்டு பொரித்து எடுக்கவும். கண்டிப்பாக மாவை வறுத்துதான் செய்ய வேண்டும். இல்லையெனில் உருண்டைகளை போட்டவுடன் கரைந்து விடும். மாவின் பதமும் கெட்டியாகதான் இருக்கவேண்டும். அதற்கு தகுந்தபடி மாவில் கொஞ்சம் , கொஞ்சமாக வெல்லம் ஊற்றி பிசைவும். உருட்டும் பதம் வராவிட்டால் அதில் கொஞ்சம் கோதுமை மாவு கலந்து அப்பமாக பொரித்துக் கொள்ளலாம். கலந்த மாவை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

சீடை [உப்பு சீடை]

தேவையானவை:

மாவு பச்சரிசி - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 50 கிராம்
கல் உப்பு, பெருங்காயம் - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்.
கடலைப் பருப்பு [அ] பாசிப்பருப்பு ஊறவக்கவும் [3 ஸ்பூன்]

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி நிழலில் காய வைத்து அரைத்து கொள்ளவும். மாவு ஈரமாக இருக்கும். நன்கு சலித்து கொள்ளவும். இல்லையெனில் சீடை வெடிக்கும். ஊளுத்தம்பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசிமாவை கெட்டியான வாணலியில் போட்டு கோலம் போடும் பதத்திற்கு வறுக்கவும். அதனுடன் எல்லாவற்றையும் சேர்த்து [ பெருங்காயம்,உப்பு ஊறவைத்து அந்த நீர், மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு கொஞ்ச நேரம் காய்ந்தபின் எண்ணெயில் பொட்டு பொரித்து எடுக்கவும். காரம் தேவைபடுபவர்கள் மிளகாய்தூள் [அ] மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் சேர்க்கும் போது ஈரம் இருப்பதால் தண்ணீர் தெளித்து பிசையவும். முதலிலேயே தண்ணீர் அதிகமாக போனால் ஒன்றும் செய்ய முடியாது. கவனமாக செய்யவும். மாவை வறுக்காமல் போட்டால் சீடை வெடிக்கும்.

பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

பச்சை சுண்டைக்காய் - 1/2 கிலோ
உப்பு - 100 கிராம்
எலுமிச்சம் பழம் - 2
வர மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சை சுண்டைக்காய் கொத்தாக இருந்தால் காம்புகளை ஆய்ந்து தனிதனியாக எடுத்து நன்கு அலம்பி சுத்தமாக வைத்து கொள்ளவும். ஊறுகாய்க்கு எப்பொதுமே ஜாடி, அல்லது கெட்டியான ப்ளாஸ்டிக் பக்கெட் நல்லது. சுண்டைக்காயை போட்டு அதனுடன் உப்பு,மிளகாய்தூள், மஞ்சள்பொடிபோட்டு, எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். தினமும் கிளறி விடவும். 5 நாட்களில் நன்கு தண்ணீர் விட்டு இருக்கும். பச்சை சுண்டைக்காய் என்பதால் கடுக்கென்றுதான் இருக்கும். அதுதான் உடம்புக்கு நல்லது தினமும் 5 [அ] 10 சுண்டைக்காய் சாப்பிடலாம். வயிற்று கோளாறுகளை போக்கும். ஊறிய சுண்டைகாயை வதக்கியும் சாப்பிடலாம். மாவடு ஊறுகாய் போட்டு அதன் தண்ணீர் இருந்தால் அதில் சுண்டைக்காயை போட்டு வைக்கலாம்.