Showing posts with label கோடைக் காலம். Show all posts
Showing posts with label கோடைக் காலம். Show all posts

Wednesday, April 30, 2008

வெயில் காலத்திற்க்கு பயன்படும் டிப்ஸ்

1. கோசாப்பழம்[ தர்பூசணி] வெயில் காலத்தில் நிறைய சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் யூரினரி ட்ராக் இன்ஃபெக்‌ஷனில் கொண்டுவிடும். ஒரு நாளைக்கு 2 பீஸ் சாப்பிட்டால் பிரச்சனை வராது.

2. முலாம்பழம், கிர்ணிபழம் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

3. வெள்ளை பூசணிக்காயை நிறைய சாப்பிடலாம். தோல் சீவி , அதனுடன், கொஞ்சம் கேரட், கொஞ்சம் வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுதூள் கலந்து,உப்பு போட்டு சாலட் செய்து சாப்பிடவும். கடுகு தாளித்து, கொஞ்சம் தயிர் போட்டு கலந்து தயிர் பச்சடியாக சாப்பிடவும். மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

4.வெயில் காலத்தில் அடிக்கடி சூடு பிடிக்குதா தண்ணீரை சூடு செய்து கொஞ்சம் காசி கட்டியை கலந்து ஆற வைத்து குடித்தால் எல்லா இன்ஃபெக்‌ஷனும் ஓடி போய் விடும். இது நல்ல மருத்துவகுணம் உள்ளது. தலைவலி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களும் இந்த தண்ணீரை குடிக்கலாம்.

5. வெள்ளரிக்காயை துறுவி கொண்டு அதில் மிளகுதூள், ஏலக்காய்பொடி கலந்து சாப்பிட்டாலும் நீர்கடுப்பு வராது.

6. வெள்ளரிக்காய்= மாதுளைதோல் இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்தாலும் நீர்கடுப்புக்கு நல்லது.

7.வெயில் காலத்தில் மோர் குடிக்கும்போது அடிக்கடி பச்சைமிளகாயை சேர்த்தால் சூடு அதிகம் ஆகும். அதற்குபதில் இஞ்சி,கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம்,உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கலாம்.

8. வெயில் காலத்தில் கத்தரிக்காய் சாபிட்டால் உடல் சுடு அதிகம் ஆகும்.கீரை அதிகம் சேர்த்து கொள்ளவும். கூடிய வரை மசாலா பொருட்களை கோடை காலத்தில் அதிகம் சேர்க்கவேண்டாம்.

9. வெயிலில் வரும் வேனல் கட்டிகளுக்கு சந்தனமும்+மஞ்சளும் கலந்து பூசி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.நல்ல நிவாரணம் கிடைக்கும்.

10. காலையில் 4-பேரிச்சைபழம்,கிஸ்மிஸ் பழம்-4,1-ஸ்பூன் கசகசா இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு இன்னும் தேவைஎனில் பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம்.

11. குடி நீர் இருக்கும் பாத்திரத்தில் குறுமிளகு,கொஞ்சம் வெட்டிவேர்,சீரகம், பனங்கல்கண்டு போட்டு சூடு செய்து அதையே அன்று முழுவதும் குடிக்கலாம். [வெறும் தண்ணீருக்கு பதிலாக] அந்த நீர் அன்றன்று புதியதாக போட்டு கொள்ளனும்.முதல் நாள் தண்ணீர் இருந்தால் கீழே கொட்டி விடவும்.

12.முட்டை கோஸ் அதிகமாக சாப்பிடவும். பொடியாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய்+உப்பு+ மிளகுதூள் போட்டு சாலட் போல் சாப்பிடவும். தக்காளி, பெரிய வெங்காயமும் சேர்த்து சாப்பிடலாம்.

13.சோப் தேய்த்து குளிப்பதற்க்கு பதிலாக மஞ்சள்+சந்தனதூள்+பன்னீர்[அ] கடலைமாவு+பன்னீர்+தயிர் இதில் ஏதாவது ஒன்றை கலந்து தேய்த்து கொஞ்ச நேரம் ஊறியபின் குளிக்கவும்.

14.சந்தனம் + மஞ்சள் + பன்னீர் பேஸ்ட் அருமையான சன்ஸ்க்ரீனும் கூட. இதை தடவி குளித்து விட்டு வெளியில் போனாலும் சூரியனின் சூடு தெரியாது.
வியர்குருவின் மேல் இந்த பேஸ்டை போட்டு சில நாள் குளித்தால் வியர்க்குரு மறைந்துவிடும்.

15.குளிக்கும் நீரில் கொஞ்சம் தினமும் பன்னீர் கலந்து குளித்தால் உடம்பு வாசனையாக இருக்கும்.வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 2[அ] 4 முறைகூட குளிக்கலாம். வேர்வை நாற்றம் வராது. வெட்டி வேரை கொஞ்சம் முதல் நாளே குளிக்கும் நீரில் போட்டு வைத்தும் குளிக்கலாம்.

மசாலா மோர்

செய்முறை: மோர்- தேவையான அளவு, பூண்டு- 2 பற்கள், சிறிய வெங்காயம்-5,கறிவேப்பிலை -10 இலை, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-2 உப்பு- தேவைக்கு ஏற்ப. தாளிக்க கடுகு- 1/4 ஸ்பூன்.
செய்முறை: மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டி, கடுகு தாளித்து குடிக்கலாம். ஜில்லுன்னு வேண்டும் எனில் ஐஸ் கட்டிகளை மேலே மிதக்கவிட்டு குடிக்கவும். கொஞ்சநேரம் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். கோடைகாலத்தில் அதிகமாக குடிக்கலாம்.உடலுக்கு ரொம்ப நல்லது.

பாதாம் கீர்

தேவையான பொருட்கள்; பாதாம் பருப்பு-200 கிராம்
சர்க்கரை-150 கிராம்
லெமன் எல்லோ- கொஞ்சம்
பாதாம் எசன்ஸ்- 2 ஸ்பூன்
தனண்ணீர்-1/4 டம்ளர்
சிட்ரிக் ஆசிட்- கொஞ்சம்
செய்முறை: பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தண்ணீரில் சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு ஆறியபின் பாதாம்விழுது, மற்ற மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளை மேலே போட்டு ஜில்லுனு குடிக்கவும். கொஞ்ச நேரம் கழித்து குடிக்க வேண்டும் என்றால் ஃப்ரிஜில் வைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்பவும் நல்லது.

மசாலா மில்க் ஷேக்

தேவையான பொருள்கள்; கெட்டியான பாலை காய்ச்சி ஆற வைத்து குளிர வைக்கவும். [ தேவையான அளவு] சிறிய பட்டை, 1 லவங்கம், ஏலக்காய்-2 வெள்ளை மிளகு-2 பனங்கல்கண்டு- 4 ஸ்பூன், தேவையான [Ice] கட்டிகள்
செய்முறை: பாலுடன் எல்லா மசாலா பொருட்களையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து நுரைத்து வரும் சமயம் டம்ளரில் ஊற்றி மேலெ [Ice]கட்டிகளை போட்டு குடிக்கவும். வெயில் காலத்தில் வரும் அஜிரணத்துக்கு நல்லது.

ரோஸ் சிரப்

தேவையான பொருட்கள்; கெட்டியான ரோஸ் எசன்ஸ்- 3 ஸ்பூன், சர்க்கரை-150 கிராம், தண்ணீர்- 2, கப், ரோஸ் கலர்- கொஞ்சம், எலுமிச்சை பழம்-2, எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் நன்கு அடித்து [எல்லாம் ஒரே மாதிரி கலக்க] டம்ளரில் ஊற்றி [Ice] கட்டிகளை மேலே போட்டு குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்துதேவைபடும் போது குடிக்கலாம்.பன்னீர் வாசனையுடன் சூப்பராக இருக்கும். வெயில் காலத்திற்க்கு ஏற்றது.

Tuesday, April 29, 2008

புதினா, சீரக ஜூஸ்

தேவையான பொருட்கள்; புதினா- 1 சிறிய கட்டு
சீரகம்- 3 ஸ்பூன்
சர்க்கரை- 100 கிராம்
சிறிய மாங்காய் நறுக்கியது- 10 துண்டுகள்
தண்ணீர்- 2 டம்ளர்
உப்பு- ருசிக்கு கொஞ்சம்

செய்முறை: புதினாவில் இலைகளை மட்டும் ஆய்ந்து அதில் சீரகபொடி,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மாங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதன் சாறையும் கலந்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்கு கலந்து அப்படியே குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்து சில்லென்றும் குடிக்கலாம். அவரவர் விருப்பம்.

கேரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்;
கேரட்-1/4 கிலோ
கெட்டியான காய்ச்சிய பால்-2 டம்ளர்
சர்க்கரை-50கிராம்
ஏலக்காய் பொடி- கொஞ்சம்

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் ஆறிய பால், ஏலக்காய், சர்க்கரை போட்டு நன்கு கலந்து [Ice] கட்டிகளை போட்டு கப்புகளில் ஊற்றி குடிக்கலாம்.

நுங்கு கீர்

தேவையானவை: பால்- 1/2 லிட்டர்
இளசான நுங்கு- 20
சர்க்கரை- 200கிராம்
ஏலக்காய்தூள்- கொஞ்சம்
செய்முறை: நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை தவிர்க்க வேண்டும்.

பானகம்.

தேவையானவை; வெல்லம்- 100கிராம்
எலுமிச்சை பழம்- 2
ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்
சுக்கு தூள்-1/2 ஸ்பூன்
தண்ணீர்- 3 கப்
கொஞ்சம்-உப்ப [ 1சிட்டிகை]
செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரையவிட்டு,அதில் எலுமிச்சை பழத்தை பிழியவும். ஏலக்காய்பொடி, சுக்குபொடி, உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கவும். தேவையானால் [ice ] கட்டிகள் போட்டும் குடிக்கலாம். வெயிலுக்கு இதமாக இருக்கும்.

கோடைக்கு ஏற்ற பானங்கள்

கேரட், வெள்ளரி ஜுஸ். [100 கிராம் சீரகத்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இது ஜுஸுக்கு தேவை, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளுக்கு நல்லது.]

தேவையானவை: தயிர்- 2-கப்
கேரட்- 2
வெள்ளரி காய்-பிஞ்சாக- 2
இஞ்சி- சிறிய துண்டு
உப்பு- தேவையானவை.

செய்முறை: கேரட், வெள்ளரியை நன்கு கழுவி கொண்டு பொடியாக நறுக்கி, இஞ்சி, உப்பு, சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிகொள்ளவும். அதனுடன் தயிரையும் நன்கு கடைந்து கலந்து சீரகதூள் சேர்த்து அப்படியே குடிக்கலாம். குளிரவைத்தும் குடிக்கலாம்.