Monday, January 28, 2008

பொடி மாஸ்

கடலைப்பருப்பு [ அ] பட்டாணிப்பருப்பு [அ] நமக்கு பிடித்தபருப்பை நன்கு ஊற வைத்து அதனுடன் வரமிளகாய்[அ] பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயதூள் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைத்து உதிர்த்து வைத்து கொண்டு எந்த காய்களாக இருந்தாலும் பொடியாக நறுக்கி வெந்தபின் கடைசியில் இந்த பருப்பு பொடிமாஸை போட்டு நன்கு கலந்து இறக்கினால் இதுதான் பொடிமாஸ்.

இதை தேங்காய் சேர்க்கவேண்டும் என்று விரும்பினால் பருப்பை அரைத்து கடைசியில் தேங்காயை துருவி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளலாம். ஆனால் பொடிமாஸில் வெறும் பருப்பை மட்டும் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும். கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் தாளித்தும் போடலாம். எந்த வகை கீரைகளிலும் செய்யலாம்.

Friday, January 25, 2008

பாசிப் பருப்பு மசாலா குழம்பு

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 200 கிராம்
நன்கு பழுத்த தக்காளி - 4
மிள்காய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது- தலா- 1 ஸ்பூன்
உப்பு - தேவையானவை
தாளிக்க - கடுகு, சீரகம். கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுத்து, மஞ்சள்தூள் போட்டு ப்ரஷர் பேனில் மூடி போட்ட பாக்ஸில் வேகவிடவும். இவ்வாறு வேகவிட்டால் பொங்காது. குழையாது. சிம்மில் வைத்து 1 விசில் விட்டால் போதும். மலரவெந்து இருக்கும். அதே பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து இஞ்சி, (தேவையானால் பூண்டு போட்டு) வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள் தக்காளி பொடியாக நறுக்கி கைகளால் பிசைந்து போட்டு நன்கு வதக்கவும்.உப்பு போட்டு வெந்த பருப்பை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து நுரைத்து வந்தபின் கறிவேப்பிலை, மல்லி போட்டு விடவும். தேவையானால் இறக்கியபின் 1 ஸ்பூன் வாசனைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இது கிராமத்து குழம்புபோல் இருக்கும். சாப்பாட்டிற்க்கும், டிபனுக்கும் ஏற்ற டிஷ்.

Thursday, January 24, 2008

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவையான பொருள்கள் :

மாகாளிக் கிழங்கு- 1/2 கிலோ
புளித்த தயிர்- 1/4 லிட்டர்
மிளகாய்தூள்- 100கிராம்
கடுகு பொடி- 1/4 கப்
உப்பு- 200கிராம்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:

மாகாளிக் கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு ஊறியபின் மண் போக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, தயிரில் எல்லா பொருள்களையும் போட்டு நன்கு கலந்து அதில் கிழங்கை போட்டு ஊறவிடவும். தினமும் நன்கு கிளறி கலந்து விடவும். கைபடாமல் இருந்தால் எத்தனை மாதமோ, வருடமோ ஆனாலும் கெடாது. சாப்பிடும் போது சிறிய கிண்ணத்தில் தேவையானதை எடுத்து பயன் படுத்தவேண்டும்.

பூண்டு ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

பூண்டு- 1/4 கிலோ
புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
எலுமிச்சைப் பழம்- 2
மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
கல் உப்பு- 25 கிராம்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
வெல்லம்- சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய்- 200 கிராம்
தாளிக்க கடுகு- 1 ஸ்பூன்
ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்

செய்முறை :

புளியை சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு ஊறவைத்து கெட்டியாக கரைத்து சாறு எடுத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை போட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உறித்து வைத்துள்ள பூண்டைபோட்டு 1 நிமிடம் வதக்கி, [ கொஞ்சம் வதங்கினால் போதும்] அதில் புளியை ஊற்றி [கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கிளறினால் சீக்கிரம் சுண்டி விடும். வதங்கும்போது தெளிக்காது] அதனுடன் மற்ற எல்லா பொருள்களையும் போட்டு 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மேலே எண்ணெய் ஊற்றி ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும். கடைசியில் லெமன் சாறு சேர்க்கவும். பூண்டு அதிகமாக வதங்ககூடாது. 2 நாட்கள் கழித்து ஊறியபின் பயன்படுத்தவும். இன்னும் காரம் அதிகம் தேவைஎனில் பச்சைமிளகாய் கீறிபோட்டு கொள்ளலாம்.

Tuesday, January 22, 2008

தக்காளி-பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

நல்ல சிகப்பு கலரில் பழுத்த தக்காளி- 1/2 கிலோ
பச்சை மிளகாய்- 50 கிராம்
பெரிய வெங்காயம்- 2
எலுமிச்சம் பழம்-1
தேவையானால் மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
வெல்லம்- கொஞ்சம் ருசிக்கு
உப்பு தேவையானது.
தாளிக்க கடுகு, பெருங்காயம்- 1/4 ஸ்பூன்

செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கி கைகளால் நன்கு கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி கொண்டு, கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன் கலரில் வதக்கி,மிளகாய், மஞ்சள்தூள் சேர்க்கவும். பின் கரைத்துள்ள தக்காளியை போட்டு சுருள வதக்கவும். உப்பு, மிளகாய்பொடி, வெல்லம் சேர்த்து தேவையான எண்ணெய் ஊற்றி, கெட்டியான பின் இறக்கவும்.வெல்லம் போடுவதால் டேஸ்ட் அருமையாக இருக்கும். சீக்கிரம் செய்து விடலாம்.

Monday, January 21, 2008

பச்சை மிளகாய் ஊறுகாய்

நன்றாக காரம் சாப்பிடுபவர்கள் இந்த ஊறுகாய் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:


பச்சை மிளகாய்- 200 கிராம்
புளி- 50 கிராம்
வெல்லம்- 50 கிராம்
ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்
கல் உப்பு- 25 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மிளகாயை பொடியாக நறுக்கி வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு, வெல்லம், ஊறுகாய்பொடியை சேர்க்கவும். சிம்மில் வைத்து கொதிக்கவிட்டால் கொதிக்கம்போது தெளிக்காது. சுருள வதங்கியபின் இறக்கி ஆறியபின் பாட்டிலில் வைத்து பயன் படுத்தவும். மேலே கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வைக்கவும்.

இஞ்சி ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

இஞ்சி- 200கிராம்
புளி- 50 கிராம்
புதிய மிளகாய் பொடி 50 கிராம்
கல் உப்பு- 1/4 கப்
வெல்லம் - 25 கிராம்

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி, புளியுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்ததை போட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள், போட்டு சுருள வதங்கியபின் மிளகாய் பொடி, ஊறுகாய் பொடி-1 ஸ்பூன் போட்டு நன்கு கலந்து, சிறியகட்டி வெல்லம் சேர்த்து, தேவையான நல்லெண்ணெய் கலந்து ஆறிய பின் பாட்டிலில் வைத்து கொள்ளவும். இஞ்சி ஊறுகாய் தயார்.

ஊறுகாய் பொடி

தேவையான பொருள்கள்:

வெந்தயம்- 200 கிராம்
கடுகு- 100 கிராம்
மஞ்சள்தூள் - 50 கிராம்
பெருங்காயம் - கட்டி பெருங்காயமாக இருந்தால் ஊறுகாய் இன்னும் நன்கு
வாசனையாக இருக்கும்.

செய்முறை:

பெருங்காய கட்டியை வாங்கி சிறியதாக பிய்த்து வெயிலில் காய வைத்து வெறும் வாணலியில் போட்டு சிம்மில் எரியவிட்டு பொரிக்கவும். அதை மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொள்ளவும். புதிய மிளகாயை வாங்கி நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் ஊறுகாய் நல்ல சிகப்பு கலரில் இருக்கும். எந்த ஊறுகாய் செய்தாலும் இந்த பொடிகள் கைவசம் இருந்தால் சீக்கிரம் செய்ய வசதியாக இருக்கும்.

ஆவக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய்-10
புதிய மிளகாய் 1/4 கிலோ, [அ] மிளகாய்தூள்- 1/4 கிலோ
கடுகு- 100 கிராம்
மஞ்சள்தூள்- 50 கிராம்
பெருங்காயதூள்- 50 கிராம்
கல் உப்பு- 200 கிராம்
நல்லெண்ணெய்- 1 லிட்டர்

செய்முறை:

மாங்காயை தேவையான துண்டுகளாக உள்ளே இருக்கும் ஓடுடன் நறுக்கவும். ஒரு நாள் நிழல் உலர்த்தலில் காயவிட்டு [ மாங்காயின் உள் இருக்கும் ஈரம் காய்வதற்கு] கெட்டியான ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளாகாயாக இருந்தால் வெயிலில் நன்கு காயவிட்டு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். கடுகையும் பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் கொஞ்சம் போட்டு, கல் உப்பு கொஞ்சம் போட்டு மஞ்சள்தூளும் போடவும். கொஞ்சம், கொஞ்சமாக எல்லாவற்றையும் போட்டு, கடைசியில் வெறும் வாணலியில் பெருங்காயத்தை வறுத்து போடவும். நல்லெண்ணெய்யை 2 நாட்கள் வெயிலில் வைத்து அதன் மேல் ஊற்றி நன்கு கலந்து விடவும். தினமும் நன்கு கலந்து விடவும். 1 வாரத்தில் நன்கு ஊறி விடும். பூண்டு விருப்பபட்டால் பூண்டை உறித்து அதில் போடலாம். பச்சை கொண்டைகடலையும் அதில் ஊற வைத்து கொள்ளலாம். இதெல்லாம் சேர்க்கும்போது கொஞ்சம் கல் உப்பு சேர்க்கவும். ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் தயார்.

Sunday, January 20, 2008

மாவடு ஊறுகாய்

தேவையானவை:

சிறிய காம்புடன் உடைய மாவடு- 2 கிலோ
கல் உப்பு- 400 கிராம்
மிளகாய் பொடி- 400 கிராம்
கடுகு பொடி- 100 கிராம்
விளக்கெண்ணெய் - 50 கிராம்
மஞ்சள்தூள்- 25 கிராம்

செய்முறை :

மாவடுவை சுத்தம் செய்து, துடைத்து ஈரம் இல்லாமல் வைக்கவும். கொஞ்சம், கொஞ்சமாக மாவடுவில் விளக்கெண்ணெய் + மஞ்சள்தூள் கலந்து பிசிறி எல்லாவற்றையும் செய்யவும். கெட்டியான ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு, உப்பையும் போட்டு நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். தினமும் குலுக்கி விடவும். 3,[அ] 4 நாட்களில் நன்கு நீர் விட்டு இருக்கும். அந்த நிரில் கடுகு பொடி, மிளகாய்தூள், போட்டு கலக்கவும். மாவடு நீரிலேயே கடுகு, மிளகாயை அரைத்தும் போடலாம். வாரம் ஒரு முறையாவது குலுக்கிவிடவும். எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.

Saturday, January 19, 2008

பூண்டு இல்லாத, மசால்பொடி சேர்க்காத தக்காளி சாதம்.

தேவையான பொருள்கள்:

உங்களுக்கு பிடித்த அரிசி - 1 டமளர்
தக்காளி - 5
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

பொடி செய்ய:

கடலைப்பருப்ப, உளுத்தம்பருப்பு, தனியா- தலா- 1 ஸ்பூன், பெருங்காயம்- சிறிய துண்டு, மிளகாய்-3 தேங்காய் துறுவியது- 2 ஸ்பூன், கொஞ்சம் உப்பு. தாளிக்க- கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

ப்ரஷர் பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அதன்பின் தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி அதில் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சாறு சுண்டியபின் அரிசியைபோட்டு சிம்மில் வைத்து வதக்கவும். பொடி செய்ய கூறபட்டுள்ளதை சிவப்பாக வறுத்து பொடிசெய்து அரிசியுடன் போட்டு வறுக்கவும். தேவையான எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 2நிமிடம் கழித்து 2பங்கு தண்ணீர் ஊற்றி பேனை மூடி வைத்து சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியபின் மேலே, மல்லி இலை தூவி சாப்பிடவும். தேவையானால் 2ஸ்பூன் நெய் போடலாம்.சுவையாக இருக்கும் இந்த தக்காளி சாதம். நேரம் கிடைக்கும்போது பொடியை செய்து வைத்து கொண்டால் இன்னும் சீக்கிரம் செய்து விடலாம்.

Thursday, January 17, 2008

பொடி போட்ட தக்காளி குழம்பு

தேவையான பொருள்கள்:

தக்காளி- 6
புளி எலுமிச்சை அளவு
பூண்டு- 10 பற்கள், சிறிய வெங்காயம்-20
பச்சை மிளகாய்-5
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
தனியாதூள்- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க கடுகு, வெந்தயம், சீரகம்.
பொடிக்க: மிளகு-10, உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்,சீரகம்-1/4 ஸ்பூன், வெந்தயம்- 1/4 ஸ்பூன், கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

புளியை சுடுநீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும். தக்காளி, பூண்டு, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். இன் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து பொடி செய்து வைத்துள்ளதை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு செய்யவும். கடுகை தாளித்துபோட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி குழம்பில் ஊற்றவும். 2, 3 நாடகள் இருந்தால்கூட இந்தகுழம்பு கெடாது. கடைசியில் சிறியகட்டி வெல்லம் சேர்க்கவும். சூப்பராக இருக்கும் இந்த குழம்பு.

தக்காளி குழம்பு

தேவையான பொருள்கள்:

நன்கு பழுத்த தக்காளி- 5
சின்ன வெங்காயம்- 10
பூண்டு - 10 பற்கள்
புளி பேஸ்ட்- 1 ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
வெல்லம்- சிறிய கட்டி
உப்பு தேவையான அளவு
கடுகு, வெந்தயம், சீரகம்- தலா- 1/4 ஸ்பூன்.
எண்ணெய்- 50 கிராம்.

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். 1 நிமிடம் கழித்து பூண்டை போட்டு வதக்கவும். 1 நிமிடம் கழித்து தக்காளியை பொடியாக நறுக்கி கையால் நன்கு கரைத்து போடவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள்,உப்பு போட்டு வதக்கவும். 1/2 டமளர் தண்ணீர் ஊற்றி மசித்து விட்டு புளியை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போனபின் இறக்கி வைத்து கடுகு, வெந்தயம்,சீரகம் தாளித்து போடவும். கறிவேப்பிலை போட்டு மூடி விடவும்.

இந்த குழம்பு கொஞ்சம் தண்ணீயாகதான் இருக்கும். ஆனால் ரொம்ப ருசியாக இருக்கும். சீக்கிரமே செய்து விடலாம்.

தக்காளி பச்சடி

தேவையான பொருள்கள்

பழுத்த தக்காளி- 200 கிராம்
துறுவிய தேங்காய்- 1 மூடி
பச்சை மிளகாய்- 7
பொட்டு கடலை- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையானவை
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- 1/2 ஸ்பூன்
பெருங்காயம்- கொஞ்சம்

செய்முறை

தக்காளியை பொடியாக நறுக்கி கைகளால் கரைத்து வைத்து கொள்ளவும். தேங்காயுடன், சீரகம், பச்சைமிளகாய், உப்பு பொட்டு கடலை போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவம். கெட்டியான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து தக்காளியை ஊற்றி கொதிக்கவிடவும். கொஞ்சம் சுண்டியபின், அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி ஒருகொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி விடவும். தக்காளி பச்சடி தயார். மல்லி இலை பொடியாக நறுக்கி மேலே தூவினால் நன்றாக இருக்கும்.

தக்காளி ஜாம்

தேவையான பொருள்கள்; பெங்களுர் தக்காளி- 1/2 கிலோ
சர்க்கரை- 300 கிராம்
சிட்ரிக் ஆசிட்- 1/2 ஸ்பூன்
சிட்டிகை உப்பு- சுவைக்கு
ரெட் கலர் பவுடர்- ஒரு சிட்டிகை
விருப்பபட்டால் ரோஸ் எசன்ஸ்- 1/4 ஸ்பூன்

செய்முறை: தக்காளியை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து கொள்ளவும். அதை வடிக்கட்டவும் . அதில் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், கலந்து ஒரு கெட்டியான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் கிளறவும். கொஞ்ச நேரத்தில் பாகு பதம் வரும். அதில் ரோஸ் எசன்ஸ், கலர் போட்டு கலந்து ஆறியபின் சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்து பயன் படுத்தவும். தக்காளி ஜாம் தயார்.

Saturday, January 12, 2008

ஆலு மசாலா

தேவையான பொருள்கள்

உருளைக் கிழங்கு- 1/4 கிலோ
பெரிய வெங்காயம்-2
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
தனியாதூள், சீரகதூள்,- 1/4 ஸ்பூன்
கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
தக்காளி- 6
மிளகாய்தூள்- கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது- 1/2 ஸ்பூன்
சிறுகட்டி- வெல்லம்
உப்பு தேவையாவை
எண்ணெய்-50 கிராம்.

செய்முறை

உருளைகிழங்கை வேகவைத்து சதுரமான துண்டுகளாக செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை லேசாக வதக்கி ஆறியபின் அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை வைத்து கிழங்கை பொரித்து எடுக்கவும்.
அதிலேயே இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கி, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகதூள், தனியாதூள் போட்டு பச்சை வாசனைபோக வதக்கி தக்காளி கலவை, உப்பு போட்டு மிதமாக எரியவிட்டு வதக்கவும். சுண்டியவுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி பொரித்த கிழங்கை போட்டு கொதிக்கவிடவும். சிம்மில் அடுப்பை எரிய விடவும். எண்ணெய் மேலே வந்தபின் இறக்கி மல்லி இலை தூவினால் ஆலு மசாலா ரெடி.

பெப்பர் பீஸ் மசாலா

செய்முறை: பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 3
தக்காளி- 4
மிளகு, சீரகம், சோம்பு- தலா 1 ஸ்பூன்
கரம் மசாலாதூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய்தூள்-1 1/2 ஸ்பூன்
தனியாதூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
உப்பு- தேவையானவை
எண்ணெய்- கொஞ்சம்
செய்முறை; பட்டாணியை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்.தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். அதனுடன், மிளகு,சீரகம், சோம்பு, இவற்றை லேசாக வறுத்து அதனுடன் கறிவேப்பிலையும் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி பட்டாணியை போட்டு வதக்கவும். அரைத்த மிளகு கலவையை போட்டு உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். இதில் மிளகுகாரம் அதிகமாக இருக்க வேண்டும். அந்த வாசனை தனியாக தெரியும். கடைசியில் எண்ணெய் பிரிந்து மேலே வந்தபின் இறக்கி விடவும். இதுதான் பீஸ் மசாலா. சூப்பராக இருக்கும்.தேவையானால் மேலே 1 ஸ்பூன் வெண்ணெய் போடலாம்.

பீஸ் மசாலா

தேவையான பொருள்கள்; பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்-3
தக்காளி- 4
புளிக்காத தயிர்- 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
தனியாதூள்- 1/2 ஸ்பூன்
கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
எண்ணெய்- 25 கிராம்
உப்பு தேவையானவை

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி லேசாக வதக்கி அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைக்கவும். எண்ணெயை வைத்து அதில் இஞ்சி பூண்டை பச்சை வாசனை போக வதக்கி அரைத்த விழுது, மிளகாய்தூள்,கரம் மசாலாதூள், தனியாதூள் இதற்கு தேவையான உப்பு போட்டு வதக்கவும். பட்டாணியை சேர்க்கவும். பின் தயிர் சேர்ககவும். கடைசியில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து கிரேவி வாசனை வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். பீஸ் மசாலா தயார்.

பட்டாணி பனீர் மசாலா

தேவையான பொருள்கள்; பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி சிவப்பு கலரில்- 5
இஞ்சி, பூண்டு, முந்திரி விழுது- தலா 1- ஸ்பூன்
மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
தனியாதூள்- 1 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
கரம் மசாலாதூள்- 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை; பட்டாணியை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொஞ்சம் வெண்ணெயில் வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். ஆறியபின் அதனுடன் தனியாதூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள் மஞ்சள்தூஉள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு இஞ்சி,பூண்டு விழுதை
போட்டு வதக்கவும். உப்பு போடவும். பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுதை போட்டு வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பட்டாணி, பனிர் போட்டு கொஞ்ச நேரம் சிம்மில் வைக்கவும். கடைசியில் மேலே கொஞ்சம் எண்ணெய் [2] ஸ்பூன் ஊற்றி சுருள வந்தவுடன் கிளறி இறக்கவும். சுப்பரான பட்டாணி மசாலா ரெடி.இது சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் ஏற்றது.

Thursday, January 10, 2008

பச்சை பட்டாணி சூப்

தேவையான பொருள்கள்; பச்சை பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-2
பூண்டு- 4 பற்கள்
மிளகு- 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய்- கொஞ்சம்

செய்முறை: பட்டாணியுடன், தக்காளி,பூண்டு, வெங்காயம், மிளகு,உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். ஆறியபின் மிக்ஸியில் அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும். பட்டாணியை வேகவைத்து அரைப்பதால் கார்ன்ப்ளவர் சேர்க்கவேண்டாம். அதிலேயே மாவுபதம் இருப்பதால் சூப்பின் பதம் இருக்கும். தேவையானால் குடிக்கும்சமயம் வெண்ணெய் போட்டு கொள்ளவும். சூப்பை எப்பொழுதுமே சூடாகதான் குடிக்க வேண்டும்.

முளைகட்டிய சூப்

நமக்கு பிடித்தமான எந்த பயறையும் முதல் நாளே ஊறவைத்து நன்கு ஊறியபின் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால் அடுத்தநாள் ஊறி முளை கட்டி இருக்கும். அதை சமையலில் எந்த வகையிலாவது சேர்த்து கொள்ளலாம். அதில் நிறைய சத்து உள்ளது. வாரம் ஒரு முறையாவது சாப்பிடவும்
தேவையான பொருள்கள்; பாசிபயறு முளை கட்டியது- 100 கிராம்
பெரிய வெங்காயம்- 1
தக்காளி-3
பூண்டு-5 பற்கள்
மிளகு தூள்- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை: தக்காளியை சுடுநீரில் போட்டு தோல் எடுத்து கொள்ளவும். பயறு,பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, உப்பு போட்டு நன்கு வேகவிடவும். ஆறியபின் தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மிளகுதூள் தூவி சாப்பிடவும். காரமும், உப்பும் அவரவருக்கு தேவையானதுபோல் போட்டு கொள்ளலாம்.
விருப்பபட்டால் மேலே வெண்ணெய் கொஞ்சம் போட்டு கொள்ளலாம்.

ஹெர்பல் சூப்

தேவையான பொருள்கள்; பெரியதுண்டு சுக்கு- 1
மிளகு- 1 ஸ்பூன்
திப்பிலி- 3 குச்சி
பூண்டு- 5 பற்கள்
சாதம்- 1 கப்
பாசிபருப்பு- 1 ஸ்பூன்
உப்பு தேவையனது

செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். பாசிபருப்பை வறுத்து அதனுடன் பொடிசெய்து சுடு நீரில் ஊற வைக்கவும். 10 நிமிடம் ஊறியபின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பேஸ்ட்போல் இருக்கும். அதனுடன் சாதத்தையும் போட்டு ஒரு சுற்று சுற்றவும். அதை எடுத்து தேவையான தண்ணீர் கலந்து உப்பும் போட்டு கொதிக்கவிடவும். சிறிது நேரம கழித்து தெளிந்தபின் சூடாக குடிக்கலாம். இதில் ப்ரெட்யை துண்டுகளாக செய்து பொரித்து போட்டும் குடிக்கலாம்.

தக்காளி சூப்

தேவையான பொருள்கள்; தக்காளி- 1/4 கிலோ
பெரிய வெங்காயம்-1
பூண்டு- 5 பற்கள்
மிளகு- 2 ஸ்பூன்[அ] 1 ஸ்பூன்
கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய்- கொஞ்சம்

செய்முறை: கெட்டியான பாத்திரத்தில் வெண்ணெயை உருகவைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். தக்காளி,பூண்டு,மிளகு சேர்த்து வதக்கவும். கார்ன் ப்ளவரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைக்கவும். வதங்கியதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதில் தேவையான தண்ணீர் கலந்து கொதிக்கவிட்டு,கார்ன் ப்ளவரையும் ஊற்றி நுரைத்து வந்தவுடன் தேவையானால் வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

மஷ்ரூம் சூப்

தேவையான பொருள்கள்; மஷ்ரூம்- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 1
கார்ன் ப்ளவர்- 1 ஸ்பூன்
மிளகு பொடி-2 ஸ்பூன்
சாட் மசாலாதூள் கொஞ்சம்
உப்பு தேவையானது
வெண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை: வெண்ணெயை உருக வைத்து அதில் பெரியவெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மஷ்ரூமையும் பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் வதக்கவும். நன்கு வதங்கியபின் மஷ்ரூமில் கொஞ்சம் எடுத்து வைத்து கொள்ளவும். வதக்கியதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் எடுத்து வைத்துள்ள மஷ்ரூமை போட்டு ஒரு கொதி வந்ததும் சாப்பிடலாம். சூப் செய்ய வெண்ணெய்தான் நன்றாக இருக்கும்.

பேபி கார்ன் சூப்

தேவையான பொருள்கள்; பேபி கார்ன் - 4
கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்
மிளகு தூள்-2 ஸ்பூன்
உப்பு தேவையானது
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 ஸ்பூன் [ வெங்காயதாள்]

செய்முறை: பேபி கார்னை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கார்ன் ப்ளவரில் உப்பு போட்டு கலந்து நீர் விட்டு கரைத்து ஊற்றவும். நன்கு பொங்கிவரும் போது மிளகுதூள், வெங்காயதாள் கலந்து பரிமாறவும். தேவையானால் குடிக்கும்சமயம் வெண்ணெய் சூப்பின்மேல் போட்டு கொள்ளலாம்.

பருப்பு ரசம்

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு -1/4 கப்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 1
ரசப்பொடி- 1 ஸ்பூன்
கடா பெருங்காயம்-கொஞ்சம்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
தாளிக்க கடுகு

செய்முறை:
இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.
துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கொள்ளவும்.சுடுநீரில் ஊறவைப்பதால் வேஸ்ட் ஆகாது. சீக்கிரம் கரையும். புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தக்காளியை கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உப்பு,மஞ்சள்தூள், ரசப்பொடி,போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பருப்பு வேகவைக்கும்போதும் கொஞ்சம் மஞ்சள்தூள் போடலாம். உப்பு, புளிப்பு பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும். நுரைத்து வந்த போது இறக்கி, நெய்யில், கடுகு,கடா பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி போடவும். சூப்பரான பருப்பு ரசம் ரெடி. காரம் கொஞ்சம் தேவைஎனில் கடுகு தாளிக்கும் போது மிளகுபொடியை பொரித்து போடவும்.

Wednesday, January 9, 2008

மிளகு ரசம்

தேவையான பொருள்கள்; புளி- எலுமிச்சை அளவு
துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- சிறிது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி சிறிது

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2 நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி விட்டு சாப்பிடவும். இந்த ரசம் ஜீரண்த்துக்கு நல்லது. சளி, இருமல் தொல்லை இருந்தால் அதை கட்டுப்படுத்தும். செய்வது எளிது. ருசியாக இருக்கும்.

சீரக ரசம்

தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்

செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும். இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை
மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.இந்த ரசம் பித்தத்திற்கு மிகவும் நல்லது.சுவையும் சூப்பராக இருக்கும்.



இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்; இளசாக இருக்கும் இஞ்சி- 50 கிராம்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.


அரைத்து விட்ட ரசம்

தேவையான பொருள்கள்; துவரம்ப் பருப்பு- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.

செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.



























பைனாப்பிள் ரசம்

தேவையான பொருள்கள்; அன்னாசிப் பழம்- 1
பருப்பு தண்ணீர்- 2கப்
உப்பு- 1-1/2 ஸ்பூன்
வரமிளகாய்-5
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.
மஞ்சள்தூள்- கொஞ்சம்.

செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வரமிளகாயை கிள்ளிபோட்டு, கறிவேப்பிலையும் போட்டு 1 நிமிடம் கழித்து பைனாப்பிள் சாறை ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு 2 நிமிடம் கழித்து பருப்பு தண்ணீரை ஊற்றி , புளிப்பு,காரம் பார்த்து நுரைத்து வரும் சமயம் இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.

Tuesday, January 8, 2008

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள்: தக்காளி-5 நன்கு பழுத்து இருக்கவேண்டும்
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்

செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.

பூண்டு ரசம்

தேவையான பொருள்கள்; பூண்டு- 10 பற்கள்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.

செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு, புளியையும் ஊற்றி கொதிக்க விட்டு[2 நிமிடம்] போதும். ஏனெனில் சுடுநீரில் வெந்து இருக்கும். அதில் மிளகு,சீரகபொடி,உப்புபோட்டு பின் பூண்டும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி,
கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு இறக்கி விடவும். அடிக்கடி பூண்டு ரசம்அடிக்கடி செய்து சாப்பிட்டால் கொலஸ்ரால் சேராது வாயுவுக்கும் நல்லது

குளிருக்கு இதமாக ரசம் வகைகள்- கொத்துமல்லி ரசம்.

தேவையான பொருள்கள்; கொத்துமல்லி- 1 சிறிய கட்டு
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.

செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.

Sunday, January 6, 2008

மைக்ரோவேவ் வெண்பொங்கல்

தேவையானவை:

அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முந்திரி - 10
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு தோல் சீவி தட்டி கொள்ளவும்
தண்ணீர் - 4 [அ] 5 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - தேவைக்கு

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் ஒன்றாக கலந்து ஓவனில் சூடு செய்து செய்து கொள்ளவும்.அப்போது பொங்கல் வாசனையாக இருக்கும். ஓவன் பாத்திரத்தில் அரிசி, பருப்பை கலந்து தண்ணீர் ஊற்றி மூடி ஹையில் 5 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து நன்கு கலந்து, மூடியை திறந்து மீடியம் அல்லது ஹையில் 15 நிமிடம் வைத்து நடுவில் ஒருமுறை எடுத்து உப்பு, கலந்து ஹையில் 5 நிமிடம் வைக்கவும். நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம் கறிவேப்பிலை பொரித்துபோட்டு கலந்து விட்டால் வெண்பொங்கல் ரெடி. நெய் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம். சுவையான மணமுள்ள வெண்பொங்கல் தயார்.இஞ்சி சாதம் வேகும் சமயம் போட்டால் நன்கு வெந்து வாசனை நன்றாக இருக்கும். மிளகு, சீரகத்தை சிறிய ப்ளாஸ்டிக் கவரில் போட்டு சப்பாத்தி தேய்க்கும் குழவியில் தட்டி போட்டு பொரித்து கொள்ளலாம். முழுதாகவும் நெய்யில் பொரித்து கொள்ளலாம். அவரவர் விருப்பம்.