Wednesday, October 22, 2008

இஞ்சி லேகியம்

தேவையான பொருள்கள்:

இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி அன்று மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.

[2]

இஞ்சி சாறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம்
நெய் - தேவையானது

செய்முறை:

வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக சுத்தம் வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி சாறை சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.

Wednesday, August 20, 2008

சேனை கிழங்கு பொரியல்

தேவையானவை : சேனைக்கிழங்கு - 1/4 கிலோ,
மிளகு - 1 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு,
கடலை மாவு - 1 ஸ்பூன்

மிளகு, சீரகம், சோம்பு, உப்பு இவற்றை மைய அரைத்து கடலை மாவுடன் சேர்த்து [இது பேஸ்ட்] போல் இருக்கும்.

செய்முறை : சேனை கிழங்கை தோல் சீவி ஓரே அளவாக தடிமனாக நறுக்கி கொள்ளவும். கொதிக்கும் நீரில் கிழங்கும், உப்பும், போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்ச நேரம் ஊறியபின் அரைத்த பேஸ்டை கிழங்கின் மேல் தடவி, தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஆனவுடன் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு இருபுறமும் வேகவிட்டு மொறுமொறுப்பாக ஆனவுடன் எடுக்கவும். இது மிளகின் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

Tuesday, August 19, 2008

காலிஃப்ளவர் மிளகு பொரியல்

தேவையான பொருள்கள்
 
காலிஃப்ளவர் - 1 பெரிய வெங்காயம் -1
சிட்ரிக் ஆசிட் - 1/4 ஸ்பூன் [அ] எலுமிச்சை பழம் - 1
உப்பு - தேவைக்கு
மஞ்சள் பொடி - கொஞ்சம்
எண்ணெய் தேவைக்கு
மிளகு தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - கொஞ்சம்.

செய்முறை:

காலிஃப்ளவரை சிறியதாக கட் செய்து சுடு நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். காலிஃப்ளவரை போட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைத்து கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பாதி வெந்தவுடன் மிளகு பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். சுருள வதங்கியவுடன் இறக்கவும். மல்லி இலை பொடியாக நறுக்கி போடவும். சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய் பிஞ்சாக - 1/4 கிலோ
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - கொஞ்சம்.

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,
மல்லி[ தனியா ] - 2 ஸ்பூன்,
வர மிளகாய் - 6 [அ] 8
வெந்தயம் - கொஞ்சம்,
கட்டி பெருங்காயம் - சிறியதாக,
உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
துறுவிய தேங்காய் - 1/4 கப்
கொஞ்சம் கல் உப்பு.

செய்முறை :

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மேலே கூறி உள்ள பொருட்களை பொன் நிறமாக வறுத்து, ஆறிய பின் பொடி செய்யும் போது கல் உப்பை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். கத்தரிக்காயை நீளமாக பாதி வரை கீறி கொள்ளவும். இல்லையெனில் சுருளாகவும் கீறி கொள்ளலாம். [முழுதாக கீற வேண்டாம் ] பொடியை கத்தரிக்காயில் கொஞ்சம்மாக ஸ்பூனில் எடுத்து அடைக்கவும். எண்ணெய்யை சூடு செய்து சீரகம் தாளித்து கத்தரிக்காயை போட்டு, கொஞ்சம் மஞ்சள் பொடியை போட்டு சிம்மில் வைதது மூடி வைத்து, பாதி வெந்தவுடன் பொடி மீதம் இருந்தால் அதையும் போட்டு காய் உடையாமல் கிளறி மூடி வைத்து காய்க்கு [உப்பு] போட்டு மூடி வைத்து நன்கு வேகவிட்டு எடுக்கவும். காயின் மேல் சுருக்கமாக இருந்தால் காய் நன்கு வெந்துவிட்டது என்று அர்த்தம். தேவைக்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். கறிவேப்பிலை, மல்லி பொடியாக நறுக்கி போடவும். இந்த கத்தரிக்காய் பொரியல் சூப்பராக இருக்கும்.

Monday, August 11, 2008

ஆரோக்கியம்

  1. அஜீரணத்தை போக்க: கிராம்பு - 10 கிராம், ஓமம் - 20 கிராம், சுக்கு - 20 கிராம் இவற்றை பொடி செய்து 1/2 டம்ளர் சுடு நீரில் கலந்து குடிக்கவும். [அ] கொஞ்சம் பொடியை 1/2 ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கி, நன்கு பசி வரும்.
  2. பித்ததிற்க்கு : வேப்பம்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். பித்ததினால் வரும் தலைசுற்றலுக்கு கொத்தமல்லி [ தனியா] 100 கிராம், சிறிய சுக்கு இவற்றை மிக்ஸியில் பொடி செய்து 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியை போட்டு கொதிக்க விட்டு பனை வெல்லம் கலந்து குடிக்கவும். பால் சேர்த்தும் அருந்தலாம். காபி, டீ குடிப்பதை குறைத்து கொண்டு தினமும் 2 முறை குடிக்கலாம்.
  3. ஒற்றை தலைவலிக்கு : பாகற்இலை + சுக்கு + மிளகு + உப்பு இவற்றில் சுக்கை, மிளகை தட்டி போட்டு, இலை கிள்ளி போட்டு 1/2 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விட்டு கொஞ்சமாக சுண்டியபின் [ இதுதான் கஷாயம்] 2 ஸ்பூன் அளவு [ தேவையானால்] தேன் கலந்து தினமும் 2 முறை குடிக்க சில நாட்களிலேயே குணம் தெரியும். உப்புக்கு பதி தேன் கலந்தும் குடிக்கலாம்.
  4. குடல் புண் குணமாக : மணத்தக்காளி கீரையை 1 கைப்பிடி அளவு மிக்ஸியில் அரைத்து மோர் கலந்து 1 வாரம் சாப்பிட்டால் புண் ஆறிவிடும். அடிக்கடி கூட்டு செய்து சாப்பிடலாம். லேசாக வதக்கி மிக்ஸியில் லேசாக அரைத்து தயிரில் கலந்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். இந்த கீரையில் அதிகமாக இரும்பு சத்தும், கால்சியமும் இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.
  5. இரத்த சோகைக்கு : சிறிய வெங்காயத்தை நன்கு கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி லேசாக உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சீரகத்தை பொடி செய்து இதனுடன் கலந்தும் சாப்பிடலாம். பொடியாக நறுக்கி பாலில் வேக வைத்தும் குடிக்கலாம். வதக்கிய வெங்காயத்தில் கொஞ்சம் வெல்லம் அப்படியே சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும். உணவில் அடிக்கடி பச்சை வெங்காயத்தை கலந்து சாப்பிட வயிறு தொடர்பான நோய்கள் குணம் ஆகும்.

Tuesday, June 17, 2008

வெஜிடபுள் பொங்கல்

தேவையானவை :

சாப்பாடு அரிசி அவரவர் விரும்பி சாப்பிடும் அரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 200 கிராம்
கேரட் - பெரியதாக - 1
பீன்ஸ் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
நூல்கோல் - 1
குடமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையானவை.


தாளிக்க:

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - கொஞ்சம்.

செய்முறை :

அரிசி, பருப்பை தனிதனியாக, வறுக்க வேண்டும். வறுப்பதால் பொங்கல் வாசனையாக இருக்கும். குழைந்தாலும் கையில் எடுத்து சாப்பிடும்போது மென்மையாக இருக்கும். குக்கர் [அ] ஃப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் ஊற்றி முந்திரி, மிளகு, சீரகத்தை வறுத்து எடுத்து வைக்கவும். காய்களை பொடியாகவோ, அவரவ்ர் விருப்பம் போல் நறுக்கி கொண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதே ஃப்ரஷரில் வெங்காயத்தை போட்டு வதக்கி, இஞ்சியை, பெருங்காயம் + காய்களை போட்டு நெய் ஊற்றி வதக்கவும். அரிசி+ பருப்பை = அளந்து கொண்டு 2 டம்ளர் இருந்தால் 4-1/2 டம்ளர் நீரை ஊற்றி உப்பும் போட்டு கொதிக்க விட்டு வறுத்த, மிளகு,சீரகத்தை போட்டு நன்கு கலந்து மூடி சிம்மில் எரியவிட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். கொஞ்ச நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரியை போடவும். குடமிளகயை பொடியாக நறுக்கி கடைசியில் முந்திரி போடும்போது போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் மேலே நெய் ஊற்றி கொள்ளவும். இதற்கு கார சட்னி சூப்பராக இருக்கும்.

Saturday, June 14, 2008

உதிர்த்த வெங்காய பக்கோடா

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 2
பஜ்ஜி மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க

பஜ்ஜி மாவு இல்லையெனில் கடலை மாவு - 1 கப் என்றால் அரிசி மாவு - 1/4 கப் தேவை .

செய்முறை :

வெங்காயத்தை இரண்டாக வெட்டி கொண்டு மேல் பக்கம் கெட்டியான பகுதியை வெட்டிவிட்டு நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். அதி கொஞ்சம் உப்பு க்லந்து உதிர்த்து கொண்டு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்தூள், கறிவேப்பிலை எல்லாம் போட்டு பிசிறி, எண்ணெய்யை காயவிட்டு அதில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு மொறு மொறுன்னு வெந்ததும் எடுத்து விடவும். இதில் சிறிய கேரட்டை [ தேவைஎனில்] துருவி கலந்து பொரிக்கலாம்.இதற்கு மாவு குறைவாகவும், வெங்காயம் அதிகமாகவும் இருக்கனும். அப்போதுதான் வெங்காய வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

இட்லி மாவு போண்டா

தேவையான பொருள்கள் :

இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மைதா மாவு - 1/4 கப்
பெருங்காயம் - கொஞ்சம்
உப்பு -ருசிக்கு
தாளிக்க - கடுகு, சீரகம் - 1/4 ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அது காய்வதற்குள் பெரியவெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி இட்லி மாவுடன்+ மைதா மாவு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து பெருங்காயம்+ கடுகு, சீரகம் தாளித்து, இட்லி மாவில் உப்பு இருப்பதால் தேவையான உப்பு போட்டு நன்கு கலந்து எண்ணெய் காய்ந்தவுடன் கையில் எடுத்து கிள்ளி போடவும். சிறிய போண்டா போல் வரும். பொன் கலரில் ஆனதும் எடுத்து விடவும். மிளகாய்க்கு பதில் மிளகும் போடலாம். விருந்தினர்களோ, [அ] அவசரத்திற்க்கு நொறுக்கு தீனி வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம்.

குறிப்புகள்: பஜ்ஜி

  1. பஜ்ஜிக்கு எந்த காய்கள் போட்டும் செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே இருக்கும் காய்கள் வேகாது.
  2. மாவு கரைக்கும் போது இன்னும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கொண்டால் இது போல் மொறு, மொறு அயிட்டங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை வராது.
  3. ஆரம்பத்தில் தண்ணீர் குறைவாக ஊற்ற வேண்டும். அதிகம் ஆனால் மறுபடியும் அதில் மாவு போட வேண்டி வரும். தண்ணீர் குறைவாக இருந்தால் பரவாயில்லை. உப்பும் அதேபோல்தான்.
  4. முதலில் எண்ணெய் கொஞ்சமாக வைத்து ஒன்று மட்டும் போட்டு உப்பு, காரம் பார்த்து பின் தேவையானால் போட்டு கொள்ளலாம்.
  5. காலிஃப்ளவர், பனீர் மஞ்சூரியன் செய்வதாக இருந்தால் மாவில் அந்த பொருள்களை கலந்துஃப்ரிஜில் மதியம் தேவை எனில் காலையிலேயே ரெடி செய்து வைத்து மாலையில் எடுத்து பொரித்து கொள்ளலாம். ஆனால் அன்றே உபயோகபடுத்தி விட வேண்டும்.
  6. சிலர் ஸ்நாஸ் செய்ய வாணலியில் அதிகமாக எண்ணெய் வைத்துதான் செய்வார்கள். அந்த பொருள் முழுகும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
  7. சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த பொருள்களை போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும். சுட்டெண்ணெய் உடலுக்கு கெடுதல் ஆவதை தடுக்கலாம். பொருளும் வேஸ்ட ஆகாது.
  8. கொஞ்சம் யோசனை செய்து செய்தால் செய்யும் பொருளும் ருசியாக, சூப்பராக வரும்.

பிரெட் சில்லி டோஸ்ட

தேவையான பொருள்கள் ;

பிரெட் - 10 ஸ்லைஸ்
பால் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 [ பொடியாக நறுக்கவும்]
உப்பு - ருசிக்கு

செய்முறை:

பாலில் மிளகுதூள், பச்சைமிளகாய், உப்பு போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். ஒவ்வொரு பிரட்டின் மேலும் இந்த பேஸ்டை தடவி மூடி விட்டு அதன் மேல் வெண்ணெய் தடவி ஸாண்ட்விச் டோஸ்ட்டர் [அ] தோசைகல்லில் [அடுப்பை சிம்மில் எரியவிட்டு ] போட்டு டோஸ்ட் செய்யவும்.பேஸ்ட் நன்கு மசிந்து இருக்கனும்.அப்போதுதான் சுவையாக இருக்கும்.

Friday, June 13, 2008

ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 2 கப்
காரம் தேவைஎனில் - 2 ஸ்பூன்
கொஞ்சம் ஊப்பு
எண்ணெய் பொரிக்க

ஸ்டஃப்க்கு மாவு : 1/2 கப் கடலைமாவு, தனியா பொடி- 1/4 ஸ்பூன், கரம்மாசாலா - 1/4 ஸ்பூன், உப்பு கொஞ்சம், கொஞ்சம் சீரகம், வேக வைத்த சிறிய உருளைகிழங்குடன் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து பூரணமாக பிசைந்து வைத்து கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி உள்ளே பூரணத்தை அடைத்து வைக்கவும்.

செய்முறை :

பஜ்ஜி மாவில் கொஞ்சம் உப்பு, மிளகாய்தூள் போட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு, ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை போட்டு மிதமாக எரிய விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சூடாக சாப்பிடவும். எல்லோரும் விரும்பி சாப்பிடும் காரசாரமான பஜ்ஜி இது.

மசாலா வேர்க்கடலை

தேவையான பொருள்கள் :

வேர்க்கடலை - 200 கிராம் [ வறுக்காதது]
பஜ்ஜி மாவு - 1-1/2 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது [தேவையானால்]
எண்ணெய் பொரிக்க .

செய்முறை :

கடலையையுடன் மிளகாய்தூள், கலர்,உப்பு, பஜ்ஜி மாவையும் கலந்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறி ஊற வைக்கவும். எண்ணெய்யை காய விட்டு [ தண்ணீர் வேண்டும் எனில் இன்னும் கொஞ்சம் தெளித்து கொண்டு] கொஞ்சமாக கையில் எடுத்து உதிர்த்து போடவும். போடவுடன் கிளற கூடாது. கொஞ்ச நேரம் கழித்து திருப்பி விட்டு வெந்தபின் எடுக்கவும்.

ஸ்நாக்ஸ் வகைகள் :

குறிப்பு : உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவை தயார் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கிலோ
பச்சரிசி - 100 கிராம்
வரமிளகாய் - 30
கட்டி பெருங்காயம் - 25 கிராம்
கல் உப்பு - 2 ஸ்பூன்
இவற்றை ந்ன்கு வெய்யிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும். இந்த மாவில் சமையல் சோடா - 1 ஸ்பூன், 50 கிராம் மைதா கொஞம் [ஆரஞ்சு கலர் தேவையானால்] போட்டு கலந்து ஆற விட்டு பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும் போது பயன்படுத்தலாம். பஜ்ஜி, ப்க்கோடாவுக்கு எண்ணெய் காய விட வேண்டும் அதற்கு புகை வரும் அளவுக்கு வேண்டாம். எண்ணெய் காயாமல் போட்டால் சதசதன்னு இருக்கும். மொர, மொரப்பாக வராது.



ஆப்பிள் பஜ்ஜி


தேவையான பொருள்கள் :

ஆப்பிள் - 1
பஜ்ஜி மாவு - 1 கப்
கொஞ்சம் மஞ்சள்பொடி
இன்னும் காரம் தேவை எனில் மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

ஆப்பிளை நன்கு சுத்தம் செய்து நீளமாக, மெல்லியதாக நறுக்கி விதையை எடுத்து கொள்ளவும். மாவில் எல்லாவற்றையும் கலந்து த்ண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். எண்ணெயை காய விட்டு ஆப்பிளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். தொட்டு கொள்ள தேங்காய் சட்னி அரைத்து கொள்ளவும். இல்லை எனில் தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

Thursday, June 12, 2008

வெங்காய பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 1
பஜ்ஜி மாவு - 1கப்
மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

வெங்காயத்தை மெல்லிய வட்டமாக நறுக்கவும். காரம் தேவை எனில் போட்டு கொள்ளவும். பஜ்ஜி மாவை கரைத்து கொள்ளவும். எண்ணெய் காய விட்டு மாவில் வெங்காயத்தை தோய்த்து [ இரண்டு பக்கமும் மாவு படும்படி ] காய்ந்த எண்ணெயில் போட்டு, இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். பொன் கலர் ஆனவுடன் எடுத்து விடவும்.இந்த வெங்காய் பஜ்ஜி சூடாக சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

தக்காளி சாதம் [ 2 வகை]

தேவையான பொருள்கள் :


அரிசி - 2 கப்
தக்காளி - 300 கிராம்
புதினா - 20 இலை
மல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் [அ] கெட்டியான பாலில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும்.1 - கப்
எண்ணெய் - 50 கிராம்
பட்டை - 1,லவங்கம் - 2 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - 1
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :


தக்காளியுடன் புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு,உப்பு, பச்சைமிளகாய் அரைத்து வைக்கவும். அரிசியை நன்கு அலம்பி [ கழுவி] தண்ணீரை வடித்து தக்காளி கலவை + பாலில் ஊறவைக்கவும். 1/2 மணி நேரம் ஊறட்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின் மசாலாவில் ஊறி கொண்டு இருக்கும் அரிசியை போட்டு வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள் தேவையான த்ண்ணீர் ஊற்றி [ 4 கப்] குக்கரை மூடி விட்டு சிம்மில் வைத்து இ விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மசாலா வாசனையுடன் தக்காளி பிரியாணி ரெடி. அடுப்ப்ன் எரிச்சல் சிறியதாக எரிவதால் தீயாது. தண்ணீர் குறைவாக வைத்தாலோ, அதிகம் ஆகி போனாலோ பயப்பட வேண்டாம். பதமாக வெந்து இருக்கும்.பிரியாணி செய்ய கொஞ்சம் அதிகம் எண்ணெய் சேர்த்தால்தான் உதிராக வரும். கடைசியில் கொஞ்சம் நெய்யும் ஊற்றலாம்.

தக்காளி ரசம் - 2 ம் வகை

தேவையான பொருள்கள் :

வேக வைத்த துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
தக்காளி - 2
ரசப்பொரி - 2 ஸ்பூன்
புளி விழுது - 2 ஸ்பூன்
கடா பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மல்லி இலை - கொஞ்சம்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

புளியில் தக்காளியை நன்கு கரைத்து உப்பு, மஞ்சள்தூள் , ரசப்பொடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவேண்டும். பருப்பில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து, தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடா பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு, கரைத்து வைத்துள்ள பருப்பில் கலந்து, தக்காளி+புளியில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கிவிடவும். மல்லி இலை போடவும். பெருங்காய வாசனையுடன் ரசம் சூப்பராக இருக்கும். காரம் இன்னும் அதிகம் தேவை எனில் தாளிக்கும் போது வரமிளகாய் கிள்ளி போட்டு தாளிக்க்லாம்.

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
வர மிளகாய் - 2
மஞ்சள்தூள் - கொஞ்சம்
தண்ணீர் - 3 டம்ளர்
கல் உப்பு - ருசிக்கு
தாளிக்க ; நெய், கடுகு, கறிவேப்பிலை.
பெருங்காயம் [அ] 2 பல் பூண்டு


செய்முறை :

தக்காளியை கொஞ்சம் சுடு நீரில் போட்டு தோலை எடுத்து அதனுடன் மிளகு, சீரகம், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் நெய் [அ] பிடித்த எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயம், வரமிளகாய் போட்டு வறுபட்டதும், அரைத்த தக்காளியை ஊற்றி கறிவேப்பிலை போட்டு நுரைத்ததும் இறக்கவும். புளிப்புக்கு தகுந்தபடி உப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பருப்பு போடாமல் அவசரத்துக்கு உடனே செய்து விடலாம். தினமும் பருப்பு சேர்க்க வேண்டாம். வாரம் 2 நாட்கள் மட்டும் பருப்பு ரசம் செய்து, இது போல் சிம்பிளாக செய்யலாம். சுவையும் நன்றாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது. ரசம் செய்தவுடன் சூடாகவும் குடிக்கலாம்.பூண்டு சேர்த்தால் கடுகு தாளிக்கும் போது தட்டி சேர்க்கலாம்.

தக்காளிபழம் சாப்ஸ்

தேவையான பொருள்கள் :

தக்காளிபழம் - 300 கிராம்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1கப்
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பட்டை - 1, லவங்கம் - 1, பிரிஞ்சி இலை - 1, ஏலக்காய் - 1
எண்ணெய் - 25 கிராம்
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :

தக்காளியை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்தூள், தனியா தூள்,பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, தாளித்து மஞ்சள்பொடி போட்டு வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் கழித்து தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பின் அரைத்த விழுதுடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து தக்காளியில் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஊற்றி கொள்ளலாம். மசாலா சுவை கொண்ட இந்த குழம்பு சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்றது. எண்ணெய் பிரிந்து மேலே வந்தால் நல்ல சுவை, மணம் இருக்கும்.

தக்காளியில் கீரை மசியல்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1/4 கிலோ
பாசி பருப்பு - 50 [100 ] கிராம்
கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 6
பெருங்காயம் - கொஞ்சம்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
கல் உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன்

பூண்டு வாசனை பிடித்தவர்கள் தேவையானால் சேர்த்து கொள்ளலாம். பூண்டு சேர்த்தால் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். சமையலுக்கு பாசிபருப்பை உபயோகபடுத்தும் போது பொன் நிறமாக வறுத்தால் வேகும் போது குழைவுவாக இல்லாமல் மலர்ந்து வெந்து இருக்கும்.

செய்முறை :

கீரையை ந்ன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி,பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், ம்ஞ்சள்பொடி, உப்பு போட்டு 1 விசில் விட்டாலே நன்கு வெந்துவிடும். வாணலியில் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு வறுபட்டவுடன், வெந்த பருப்பு கீரையை நன்கு மசித்து அதில் சேர்க்கவும்.குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். இதுபோல் செய்வதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள், சீக்கிரம் ரெடி ஆகிவிடும்.

Wednesday, June 11, 2008

தக்காளி குருமா

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 100 கிராம்
சிறிய தேங்காய் - 1 [ துறுவியது 1- கப்]
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
கச்கசா - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையானது

செய்முறை :

தேங்காயுடன் இஞ்சி, பூண்டு, சோம்பு,கசகசா, மிளகாய் தூள், தனியா தூள், 2 தக்காளியும் சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள் பொடிஉப்பு சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பின் அரைத்த விழுதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விட்டு இறக்க்வும். புளிப்பு சுவை கொண்ட டேஸ்டியான குருமா. இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் தொட்டு கொள்ளலாம்.

தக்காளி பருப்பு

தேவையான பொருள்கள் :

தக்காளி- 300 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
வர மிளகாய் - 4
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள்பொடி - கொஞ்சம்
பெருங்காயம் - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - 50 கிராம்
கல் உப்பு - தேவையானது
எண்ணெய் - 25 கிராம்
காய்கள் - பிடித்த காய்கள்

செய்முறை :

துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேகவிட்டு கொள்ளவும். வாணலியில் கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம்,போட்டு தாளித்து சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும். இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மிளகாய்பொடி, உப்பு போட்டு வதக்கி வெந்த பருப்பை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மேலே நெய் ஊற்றி இறக்கவும். இந்த குழம்பை சாப்பாடு, டிபன் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.[ தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியும் ஊற்றலாம்.]

தக்காளி பொரிச்ச குழம்பு

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
சிறிய வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
புளி - கொஞ்சம்
மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
தனியா பொடி - 1 ஸ்பூன்
வெந்தய பொடி - கொஞ்சம்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
கல் உப்பு - தேவையானது
மிளகு 1 ஸ்பூன், சீரகம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்பொடி, மிளகாய்தூள், தனியாதூள்,உப்பு போட்டு வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும். இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுண்டவிட்டு, அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்கும் போது இறக்கி விடவும். உறவினர்கள் வந்த சமயத்தில் சீக்கிரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும்.பொரிச்ச குழம்பு ரெடி.

தக்காளி சூப்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1/4 கிலோ
நாட்டு தக்காளி - 1/4 கிலோ
கேரட் - 2
பெரிய வெங்காயம் மீடியம் அளவில் - 1
கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
மிளகு - 3 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
லவங்கம் - 1
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகு, லவங்கம், கேரட், கல் உப்பு போட்டு சிறிய குக்கரில் போட்டு 1 விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். தண்ணீரில் கார்ன்ஃப்ளார் [அ] மைதாமாவை கரைத்து கொள்ளவும். ஆறிய தக்காளியை மிக்ஸியில் அடித்து [ கூழ் போல் வரும்] தேவையான தண்ணீர் கலந்து கார்ன் ப்ளார் மாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் இறக்கவும். மேலே வெண்ணெய் போட்டு சூடாக சாப்பிடவும். நாட்டு தக்காளி புளிப்பு சுவைக்கு, பெங்களூர் தக்காளி கிரேவிக்கு.தேவையானால் மட்டும் கார்ன் ஃப்ளார் சேர்க்கவும். சாப்பிடும் போது கேரட்டை மிகவும் பொடியாக கட் செய்து அதன் மேல் போடலாம். சூப் கொதிக்கும் சமயம் கொஞ்சம் நூடுல்ஸ் இருந்தால் கையால் பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும். சூப் குடித்தால் உடலுக்கு நல்லது. நன்கு பசி எடுக்கும். சத்துள்ளது. இதே போல் எந்த காய்கள் சேர்த்தும் செய்ய்லாம். சீக்கிரமும் செய்து விடலாம்.


Tuesday, June 10, 2008

தக்காளி சாஸ்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
புதிய மிளகாய் பொடி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - சிறியதாக - 1
பூண்டு - 2 பற்கள் மட்டும்
உப்பு தேவையானது
சோடியம் பென்சோயேட் - 1/4 ஸ்பூன் இது போடாமலும் செய்யலாம்.

செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி, அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டும் வலையில் தக்காளியின், விதை, தோல் எல்லாம் தங்கிவிட வேண்டும். தக்காளியின் சாறு மட்டும் நுரை போல் இருக்கும். தக்காளியின் சாறை பெரிய கெட்டியான வாணலியில் கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி சுண்ட விட வேண்டும். அப்படியே ஊற்றினால் கொதிக்கும் போது வெளியில் எல்லாம் தெளித்து நிறைய வேஸ்ட் ஆகும். கொஞ்சமாக உற்றும்போது சீக்கிரமாக சுண்டி விடும். மிளகாய்தூள், உப்பு, சர்க்கரை [ தேவையானால் பிரிசர்வேட்டிவ்] போடவும். இதன் பதம் கரண்டியில் எடுத்தால் ச்ட்னிபோல் இருக்கும். ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடகூடிய ஐட்டம். அதுவும் வீட்டிலேயே செய்தால் செலவும் அதிகம் ஆகாது. ஃப்ரிஜில் எடுத்து வைத்து கொண்டு தேவையான போது பயன்படுத்தவும்.

தக்காளியில் செய்யும் ரெசிபிகள்

தக்காளி பச்சடி :

தேவையானவை
: தக்காளி - 1/2 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 10
மஞ்சள் பொடி - கொஞ்சம்
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - கொஞ்சம்


செய்முறை
:

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மஞ்சள்பொடி போட்டு தக்காளியை போட்டு வதக்கவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு 1 சுற்று சுற்றி பச்சை மிளகாய், சர்க்கரை,உப்பு போட்டு மறுபடியும் ஒரு சுற்றி அதை தக்காளியில் போடவும். கொஞ்சம் சுண்டியபின் சிறிய கரண்டி தயிர் ஊற்றவும். நன்கு கிளறவும். இது தக்காளி வாசனை,காரம், தேங்காய் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

Monday, June 9, 2008

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

பருப்பு உசிலி என்பது பருப்பை ஊறவைத்து கெட்டியாக உப்பு, காரம் போட்டு மிக்ஸியில் அரைத்து ஆவியில் வேக வைத்து, ஆறியபின் கையால் உதிர்த்து, இல்லையெனில் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் பூப்போல் உதிராக இருக்கும். இதை வேக வைத்த காய்களுடன் கடைசியாக சேர்க்க வெண்டும். இதற்கு எந்த பருப்பு வேண்டுமானாலும் சேர்க்கலாம். கடலைபருப்பு,
துவரம்பருப்பு, பட்டாணிபருப்பு, எதுவாக இருந்தாலும் அவரவர் விருப்பம். உசிலிக்கு எந்த காயில் செய்தாலும் காயை பொடி, பொடியாக நறுக்கினால் உசிலி நன்றாக இருக்கும். பொடியாக நறுக்குவதால் காய் சீக்கிரம் வேகும்.காயின் கலர் மாறாது.காயின் வாசனை அப்படியே இருக்கும். உசிலியை எல்லா வகையான காய்களிலும் செய்யலாம். கீரைகளிலும் செய்யலாம். இதற்கு தேங்காய் சேர்க்க வேண்டாம். கடைசியில் வாசனைக்கு [தேவையானால்] 1/2 தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கலாம். ஆவியில் வேக வைத்து செய்வதால் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டாம். யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஃப்ரஷர் பேனோ, சிறிய குக்கரோ இருந்தால் அதில் சிறிய கிண்ணத்தில் அரைத்த பருப்பை கீழே வைத்து அதன் மேல் நறுக்கிய காய்களை சுத்தம் செய்து பிழிந்து வைத்தாலே போதும். 1 விசிலில் வெந்துவ்டும். காய்களை தனியாகவும் வேகவிடலாம்.சீக்கிரம் சமையல் ஆக வேண்டும் என்றால் சேர்த்து வேகவிட்டு பின் தாளிக்கலாம்.


தேவையான பொருள்கள் :


கொத்தவரங்காய் - 1/4 கிலோ
பட்டாணிபருப்பு - 25 கிராம் [அ] 50 கிராம்
வரமிளகாய் - 5
கல் உப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்


செய்முறை :

பருப்பை முதலிலேயே ஊறவிட்டு நன்கு வடியவிட்டு அதனுடன் வரமிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து ஆவியில் வேக விடவும். காயை பொடியாக நறுக்கி நன்கு கழுவி வாணலியில் கொஞ்சம்மாக் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், மஞ்சள்தூள் போட்டு
காயை போட்டு லேசாக தண்ணீர் தெளித்தால் சீக்கிரம் வெந்துவிடும்.காய்க்கு கொஞ்சம் உப்பு சேர்க்கவும். நீர் சுண்டியபின் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு சிம்மில் எரியவிட்டு நன்கு கிளறி [ தேவை எனில் 1/2 தேங்காய் எண்ணெய் கடைசியில் ஊற்றி] இறக்கவும்.பருப்பு உசிலி தயார்.


இந்த உசிலியில் கொஞ்சம் தயிர், கேரட், வெள்ளரிக்காய், பெரியவெங்காயம் நீளமாக நறுக்கி காரத்துக்கு பச்சை மிளகாய், உப்பு கொஞ்சம் சேர்த்தால் சப்பாத்திக்கு, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். கலந்த சாதத்துக்கும் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

Sunday, June 8, 2008

அரைத்துவிட்ட சாம்பார்

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் - 1
சிறிய வெங்காய்ம் - 10
கத்தரிக்காய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி - 2 [அ] 4
துவரம் பருப்பு - 50 கிராம்
கல் உப்பு - தேவையானது

வறுக்க:

உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறியதாக
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 8


செய்முறை:

துவரம்பருப்பை 2 முறை கழுவி மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும். புளியை சுடு நீரில் ஊற வைக்கவும். வாணல்யில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, தனியா, இவற்றை பொன் நிறமாக வறுத்து பின் தேங்காயை போடவும். முதலிலேயே தேங்காய் போட்டால் பருப்பு வறுபடாது. தேங்காய் போட்டு வறுபடும்போது மிளகாயை போடவும்.முதலிலேயே போட்டால் மிளகாய் கறுப்பாகிவிடும்.ஆதலால் கடைசியில் போடவும். வறுத்ததை மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி [சட்னி பதத்தில்] அரைத்து கொள்ளவும். காய்களை நீளமாக நறுக்கி பருப்பு தண்ணிரில் உப்பு போட்டுவேகவைத்து தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு அதனுடன், புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி வேகவிடவும். கொஞ்ச நேரத்தில் வெந்துவிடும். வெந்தபருப்புடன், அரைத்த விழுதை கரைத்து காய்கறியில் ஊற்றவும். தேவையான கல் உப்பு போடவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். தக்காளியை பருப்புகள் வறுக்கும்போது பொடியாக நறுக்கி வதக்கியும் அரைக்கலாம்.குழம்பு கலராக இருக்கும். தக்காளியை பருப்புடன் வேகவைத்து கையால் கரைத்தும் கலந்து கொள்ளலாம். அவரவர் இஷ்டம். நன்கு கொதிக்கும் போது இறக்கி நெய் [அ] நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். மல்லியை மேலே தூவி விடவும்.

இதே சாம்பாரில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிறிய கட்டி வெல்லம் சேர்த்தால் டிபனுக்கும் பயன் படுத்தலாம்.காரம் தேவை எனில் தாளிக்கும்போது வரமிளகாய் கிள்ளி போட்டு கொள்ளலாம்.புளி புதியதாக இருந்தால் சாம்பார் நல்ல கலரில் இருக்கும். பருப்பு வேகவிடும் போது மஞ்சள்தூள் சேர்த்தாலும் கலர் வரும். இது போல் செய்யும் சாம்பாரில் எந்த காய்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம். சேப்பங்கிழங்கு சேர்ப்பதாக இருந்தால் கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கியபின் சாம்பாரில் போடவும்.இந்த அரைத்துவிட்ட சாம்பார் சூப்பராக இருக்கும்.
.


கத்தரிக்காய் வதக்கல்

தேவையான பொருள்கள் :

பிஞ்சான கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
இட்லி பொடி [அ] சாம்பார் பொடி - 2 [அ] 3 ஸ்பூன்
உப்பு தேவையானது பொடியில் உப்பு இருப்பதால் கொஞ்சமாக சேர்க்கனும்
மஞ்சள் தூள் - கொஞ்சம்
எண்ணெய் - தேவையானது

செய்முறை - :

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மஞ்சள்பொடி சேர்த்து வெங்காயத்தை மெல்லியதாகவோ [அ] அவரவர் விருப்பம்போல் நறுக்கி வதக்கவும்.கத்தரிக்கயை நறுக்கும் போது உள்ளே சொத்தையாகவோ புழு இல்லமலோ பார்த்து கொள்ளவும். மெல்லியதாக நறுக்கி வெங்காயத்தில் போட்டு வதக்கவும். கொஞ்சம், உப்பு, எண்ணெய் சேர்த்து மூடி விட்டு சிம்மில் வைக்கவும்.தண்ணீர் சேர்க்ககூடாது. கத்தரிக்காயை மூடி வைக்கும் போது லேசாக தண்ணீர் விடும் அதிலேயே வெந்து விடும்.கடைசியாக பொடியை சேர்த்து வதக்கி இறக்கவும்.


வெள்ளரிக்காய் பச்சடி

தேவையான பொருள்கள் :

பெரிய வெள்ளரிக்காய் - 1
புளிக்காத தயிர் - 200 கிராம்
பச்சை மிள்காய் - 5
தாளிக்க கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
கொஞ்சம் எண்ணெய்.

செய்முறை :

வெள்ளரிக்காயை துருவி பிழிந்தால் நீர் வந்து விடும். அதை கீழே ஊற்ற வேண்டாம். மோர் கலந்து குடிக்கலாம். வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், பச்சைமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து வெள்ளரிக்காய், தயிர் ஊற்றி கறிவேப்பிலை, மல்லி போட்டு, உப்பு போட்டு நன்கு கலந்துவிட்டால் வெள்ளரிக்காய் பச்சடி ரெடி. சப்பாத்தி, கலந்த சாதம், எல்லாவற்றுக்கும் ஏற்றது. பச்சை வெங்காயவாசனை பிடித்தவர்கள் மெல்லியதாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம். சிறிய கேரட்டை துருவி சேர்த்தால் கலராக இருக்கும். ச்த்துள்ளது. அவரவர் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.

ருசியான சமையலுக்கு சில குறிப்புகள்

சமையல் ருசியாக இருக்க, செய்யும் குழம்பு, பொரியல், கூட்டு, கிரேவி,சட்னி,எதுவாக இருந்தாலும் செய்யும் அளவுக்கு தகுந்த படி மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும். அதிகமாக போனாலோ, குறைவாக இருந்தாலோ அதன் ருசி மாறிப் போகும். எல்லாவற்றுக்கும் இஞ்சிம் பூண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மசாலா பொருட்கள் பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலே ருசியாக செய்யலாம். சமையல் ஒன்றும் பெரிய விஷயமிலை. செய்ய தெரியாதவர்கள் கூட பயப்படாமல் தைரியமாக செய்தால் சமையல் ரொம்ப ஈஸி தான். செய்ய, செய்யதான் சமையல் வரும்.

அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும் பாத்திரத்திற்க்கு மேல் தீ எரிய கூடாது.தீ அதிகமானால் செய்யும் பொருட்கள் வேஸ்ட் ஆகிபோய்விடும்.ரொம்ப சிறியதாக எரிந்தாலும் சீக்கிரம் வேகாது.

செய்யும் பதார்த்தங்களை பொருத்து அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.

குக்கரில் காய்கள் வேகவைப்பதாக இருந்தால் மிதமாக எரியவிட்டு விசில் வரும்முன்பு [ அதாவது 1 நிமிடம்] காய்களின் அளவுகளை பொருத்து அடுப்பை அணைத்துவிட்டால் அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

கீரைகள் செய்யும்போது கீரைகளை நன்கு கழுவி, பிழிந்து தேவையான வெந்தபருப்புடன், பச்சைமிளகாய்,வெங்காய், [தக்காளிபோடுவதாக இருந்தால்] கலந்து 1நிமிடம் விசில் வராமல் அடுப்பை அணைத்துவிட்டு திறந்தால் அதன் பச்சைகலரும் மாறாது. சத்தும் அப்படியே இருக்கும். சீக்கிரமே வெந்து இருக்கும்.

சாம்பாருக்கு சேர்க்கும் காய்களையும் பருப்பு தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு சிறிய குக்கர் [அ] ஃப்ரஷர் பேனில் வைத்தாலும் ஹையில் வைத்து விசில் வரும் முன்பே [1நிமிடம் போதும் ] அணைத்து விட்டால் வெந்துவிடும்.

குறைவான நபர்கள் இருக்கும் வீட்டில் மசாலா பொருட்களை கொஞ்சமாக போடனும். அதிகமானால் கசக்கும். ருசியும் மாறி போகும்.பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலேயே செய்யலாம். ருசி வரும்.

கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல் செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக வரும். எதுவுமே நம் கையில்தான் இருக்கு. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையல் ரகசியம்.

உப்பு எப்போதுமே குறைவாக போட்டு பின் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். அதிகமானால் அதற்கு எதையாவது கலந்தால் அதன் ஒரிஜனல் தன்மை போய் விடும். கொஞ்ச நாளில் சமையல் செய்ய அதுவும் சரியாகிபோகும். எந்த சமையல் செய்தாலும் அதுக்கு என்ன பொருட்கள் சேர்க்கவேண்டுமோ அதை மறக்காமல் சேர்த்தால் எல்லார் வீட்டு சமையலும் சூப்பர்தான்.

ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
கேரட் - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன் [மட்டும்]
பீன்ஸ் - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன் [ மட்டும்]
அஜினமோட்டோ - 1 ஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - 2 ஸ்பூன்
உப்பு தேவையானது.

செய்முறை
:

சாதத்தை உதிராக வடித்தும் செய்யலாம். குக்கரில் நேரடியாகவும் [தம்] செய்யலாம். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், 1 பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதக நறுக்கி, பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பும் போட்டு கொதி வரும் சமயம் அரிசியை போட்டு சிம்மில் வைத்து 1 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து காய்கள், வெள்ளை மிளகுதூள்,அஜினமோட்டோ கலந்து மூடி வைத்து விடவும். சாப்பிடும் போது எடுத்தால் நன்கு பதமாக இருக்கும். மேலே வெங்காயதாள் போட்டு அலங்கரித்து சாப்பிடவும்.

Saturday, June 7, 2008

தயிர் சாதம்

தேவையான பொருள்கள் :

பச்சரிசி - 200 கிராம்
பால் - 1/2 லிட்டர்
தயிர் - 100 கிராம்
உப்பு - கொஞ்சம்

தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மாதுளை முத்துக்கள் - 10 கிராம்
திராக்‌ஷை - கருப்பு , வெள்ளை - கொஞ்சம், முந்திரி - 10, ஆப்பிள் துண்டுகள் - சிறியதாக - 10

செய்முறை :

அரிசியை நன்கு கழுவி பாலுடன் 1 கப் தண்ணீர் கலந்து குக்கரில் குழைய வேக விடவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து ஆறிய சாதத்தில் உப்பு, தாளிதம் செய்ததை போட்டு நன்கு கலந்து, பின் தயிர் ஊற்றி பழதுண்டுகளை போட்டு கலக்கவும். தேவையானால் வெள்ளரி துண்டுகளும் சேர்க்கலாம். செய்து உடனே சாப்பிடலாம்.வெங்காய வாசனை பிடித்தவர்கள் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். உடல் சூட்டை தணிக்கும்.காரத்திற்க்கு பச்சை மிளகாயை + இஞ்சியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருள்கள் :

கறிவேப்பிலை - உதிர்த்தது - சிறிய கப் அளவு
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய கட்டி
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,மிளகு, சீரகம், கட்டி பெருங்காயம்,இவற்றை பொன் நிறமாக வறுத்து, கடைசியில் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து ஆறிய பின், கல் உப்பை போட்டு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். உதிரான சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி நன்றாக கலக்கவும். கறிவேப்பிலை வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

பூண்டு சாதம்

தேவையான பொருள்கள் :

சிறிய வெங்காயம் [அ] பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல் [ பெரியதாக]
வரமிளகாய் - 7
புளி - எலுமிச்சை அளவு [அ] சிட்ரிக் ஆசிட் 1/2 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிராக வடித்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, வரமிளகாயை லேசாக வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு, தாளித்து கொஞ்சம் மஞ்சள்பொடி போட்டு வதக்கவும்.பின் அரைத்ததை போட்டு [ தண்ணீர் ஊற்றாமல் சிறிய ஜாரில் போட்டு விட்டு, விட்டு அரைத்தால் மசிந்துவிடும்.சுருள வதக்கி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

உளுந்து பொடி சாதம்

தேவையான பொருள்கள் :

சாதம் - 3 கப்
சிட்ரிக் ஆசிட் - 1/4 ஸ்பூன் [அ] எலுமிச்சை பழம் - 1
உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயம் சிறிய கட்டி
கல் உப்பு - தேவையானது

செய்முறை:

உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கல் உப்பு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொஞ்சம் மஞ்சள்பொடி சேர்த்து சாதத்தை போட்டு கிளறி பொடி செய்துள்ளதை போட்டு கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு [அ] சிட்ரிக் ஆசிட் கலந்து விடவும். உளுந்து பொடி சாதம் ரெடி.

எள் சாதம்

தேவையான பொருள்கள் :

சாதம் - 3 கப் [அ] அவரவருக்கு தேவையானது
வெள்ளை எள்- 5 ஸ்பூன்
வரமிளகாய்-6 [அ] 8
கல் - உப்பு கொஞ்சம்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் பொரியும்படி வறுத்து கொள்ளவும். பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், உப்பு வறுத்து ஆறியபின் மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து, கடைசியில் எள்ளை அதனுடன் போட்டு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை சாதத்தில் போட்டு சாதம் உடையாமல் கலக்கவும். கொஞ்சம் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் போடவும். எள் வாசனையுடன் சாதம் சூப்பராக இருக்கும்.

புதினா சாதம்

தேவையான பொருள்கள்:

புதினா _ சிறிய கட்டு
சிறிய வெங்காயம் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 7
பெருங்காய தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையானது

செய்முறை :

சாதத்தை உதிராக வடித்து கொள்ளவும். புதினா, வெங்காயம், இஞ்சி, மிளகாய், இவற்றை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்ததை போட்டு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும். சீக்கிரமே சுண்டி விடும். சாதத்தை அதில் போட்டு உடையாமல் கிளறவும். தேவையானால் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பூண்டு வாசனை தேவைபட்டால் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். பூண்டு சேர்க்கும் போது பெருங்காயம் சேர்த்தால் அதன் வாசனை தெரியாது.

பூண்டு சாதம்

தேவையானவை :

உதிராக வடித்த சாதம் - 3 கப்
பூண்டு - 20 பற்கள்
வெங்காயம் - 2 - பொடியாக நறுக்கவும்
இஞ்சி - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்
மிளகு, சீரக பொடி- 2 ஸ்பூன்
உப்பு - தேவையானவை

செய்முறை:

வாணலியில் எண்ணெய் [அ] நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, பூண்டை பொடியாகவோ, தட்டி போட்டோ வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, மிளகு சீரகபொடி போட்டு வறுத்தபின் அடுப்பை சிம்மில் எரியவிடவும். சாதத்தை போட்டு மெதுவாக கிளறவும்.கடுகு தாளிக்கும்போதே கறிவேப்பிலை போட்டால் கலர் மாறாது. தேவையானால் கேரட் துறுவி போட்டு கொள்ளலாம்.

தக்காளி சாதம்

தேவையான பொருள்கள்:


உதிராக வடித்த சாதம் - 3 கப்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையானது
இஞ்சி - சிறிய துண்டு


செய்முறை:

கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியாதூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுருள வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயம் சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும். சீக்கிரம் செய்து விடலாம். வேலைக்கு செல்பவர்கள் லஞ்சுக்கு எடுத்து செல்ல இது போல் செய்து கொள்ளலாம். ஆறிய பின் டிபன் பாக்ஸில் போடனும்.ஹாட் பாக்ஸில் எடுத்து செல்வதானால் சூடாகவே போட்டு கொள்ளலாம்.

வெங்காய சாதம்

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பெரிய வெங்காயம் [அ] சிறிய வெங்காயம்- 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 7
தாளிக்க - கடுகு, சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - 5 ஸ்பூன் [அ] நெய்


செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். வெங்காயத்தை பொடி, பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயையும் பொடியாகவோ [அ] கீறி போட்டோ வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியபின் சாதத்தை சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கிளறவும்.மேலே கறிவேப்பிலை போட்டு கொள்ளவும். சீக்கிரம் செய்து விடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் கொடுக்க இதுபோல் செய்து கொடுக்கலாம்.

Friday, June 6, 2008

சீரக சாதம்

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பாசுமதி அரிசியாக இருந்தால் சுவை சூப்பராக இருக்கும்
முந்திரி - 10 கிராம்
சீரகம் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரகத்தை உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, முந்திரியை சிறியதாக உடைத்து வறுக்கவும். கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும். மேலே கறிவேப்பிலை போட்டு சாப்பிடவும். பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு கிளறவும். சீரக சாதம் ரெடி.

காளான் சாதம்

தேவையானவை:

உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி - பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு - பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு - தேவையானவை
நெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் - 200 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் [அ] நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும். அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார். மசாலா வாசனை வேண்டும் என்றால் காளானை போடும் போது 1 ஸ்பூன் தூவிகொள்ளலாம். சாப்பிடும்போது (தேவையானால்) பூந்தியோ, மிக்ஸரோ தூவி சாப்பிடவும். இல்லையெனில் கேரட்டை துறுவி மேலே போட்டு கொள்ளலாம். அவரவர் இஷ்டம் போல் சாப்பிடலாம்.

Tuesday, June 3, 2008

கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை:

கத்தரிக்காய்- 200 கிராம்,
சிறிய வெங்காயம்- 10,
தக்காளி-5 ,
புளி பேஸ்ட்- 1 ஸ்பூன்,
பூண்டு- 10 பல், (தேவையானால்)
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்,
உப்பு. தேவைக்கு,
பச்சை மிளகாய்-5
எண்ணெய்- 5 ஸ்பூன்.

செய்முறை:

தக்காளியுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.கொஞ்சம் வதங்கும்போது சாம்பார்பொடி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கத்தரிக்காயை காம்பை எடுத்துவிட்டு மேலே மட்டும் கொஞ்சம் கீறியபடி நறுக்கி கொண்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும்.புளி மஞ்சள் பொடி, உப்பு போட்டு அரைத்து வைத்ததில் 2 டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் எரிய விடவும். 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். குழம்பு ரெடி.

தக்காளி குழம்பு

தேவையானவை:

தக்காளி- 10,
சிறிய வெங்காயம்- 100 கிராம்,
மிளகாய் தூள்-2 ஸ்பூன்,
தனியா தூள்-1 ஸ்பூன்,
தேங்காய் துறுவல்- 3 ஸ்பூன்,
சோம்பு-1 ஸ்பூன்,
கார்ன் ஃப்ளார்- 1 [அ] 2 ஸ்பூன்,
உப்பு தேவையானவை.
எண்ணெய்- 50 கிராம்.

செய்முறை:

மேலே கூறி எல்லா பொருட்களையும் வெறும் வாணலியில் வதக்கி ஆறியபின் மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். வாணலியில் அரைத்த விழுதில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கார்ன்ஃப்ளார்ரை ஊற்றி (தேவையானால் தண்ணீர் ஊற்ற)கொதிக்கும் போது இறக்கி விடவும். இந்த குழம்பை சீக்கிரம் செய்து விடலாம்.சுவையும் சூப்பராக இருக்கும். மசாலா வாசனை வேண்டும் எனில் குழம்பு கொதிக்கும் போது கறிமசால் பொடி சேர்க்கலாம்.

பூசணிக்காய் குழம்பு

தேவையானவை:

பூசணிக்காய்- 1/4 கிலோ,
புளி- எலுமிச்சை அளவு,
தக்காளி- 3
சின்ன வெங்காயம்-20,
பச்சை மிளகாய்-4,
உப்பு- தேவையான்வை.

அரைக்க:

கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெந்தயம் கொஞ்சம், சிறிய கட்டி பெருங்காயம் வறுத்து, கடலைபருப்பு- 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன், தனியா- 3 ஸ்பூன், வரமிளகாய்-6, 3 ஸ்பூன் தேங்காய் துறுவல் சேர்த்து பொன் நிறத்தில வறுத்து கொண்டு மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை எடுத்து விட்டு அதிலேயே தக்காளியை அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். பின் காயை தேவையான அளவில் கட் செய்து வதக்கவும். மஞ்சள்பொடி, உப்பு,புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். பின்னர் தக்காளியை சேர்த்து கொதிக்கவிட்டு சுண்டியபின் அரைத்து வைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் எரியவிட்டு கொதிக்க விடவும். இந்த குழம்பு, தண்ணீயாகவும் இருக்க கூடாது, கெட்டியாகவும் இருக்க கூடாது. கறிவேப்பிலை, மல்லி இலை போடவும்.

மெக்ரோனி புளிகுழம்பு

தேவையானவை:

மெக்ரோனி- 200கிராம்,
பெரிய வெங்காயம்- 2,
தக்காளி-5,
புளி விழுது- 1 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,
மல்லி தூள்- 1/2 ஸ்பூன்,
உப்பு தேவையானவை.
வெந்தயம், சோம்பு, - 1/4 ஸ்பூன்.
எண்ணெய்- 50 கிராம்.

செய்முறை:

மெக்ரோனியை சுடுநீரில் போட்டு கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும். வெந்தயத்தை லேசாக வறுத்து, சோம்பு, தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது,மஞ்சள் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது மிளகாய்பொடி, மல்லிபொடி,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வதக்கி, புளி விழுதை சேர்க்கவும். சிறிய கட்டி வெல்லம் சேர்க்கவும். 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வரும் போது வடித்து வைத்துள்ள மெரோனியை போட்டு சிம்மில் வைத்து மூடிவிட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கொஞ்ச நேரத்தில் குழம்பு பதம் வந்து விடும். மசாலா வாசனையுடன் குழம்பு சூப்பராக இருக்கும். மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இது சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் ஏற்றது. தேவையானால் இன்னும் தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.மெக்ரோனி தண்ணீரை உறிந்து கொள்ளும்.

Thursday, May 29, 2008

சேமியா மசாலா உப்புமா

தேவையானவை:

மெல்லிய (அணில்) சேமியா - 1 பாக்கெட் - 200கிராம்
பெரிய வெங்காயம் - 3
பட்டை- 1, லவங்கம்- 2, ஏலக்காய்-2
தக்காளி - சிறியதாக இருந்தால்-5,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 ஸ்பூன்
பிடித்த காய்கள் - மெல்லியதாக நீளமாக நறுக்கியது- 100 கிராம்,
குடமிளகாய்- 1
உப்பு- தேவையானது,
எண்ணெய்-தேவையானது

செய்முறை:

வறுத்த சேமியாவே கிடைக்குது, சேமியா 1பங்குக்கு 2 பங்கு தண்ணீர் தேவை. வாணலியில் கடுகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு லேசாக வறுபட்டபின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் வதங்கிய பின் காய்களை போட்டு 1 நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பும் போட்டு கொதி வரும்போது சேமியாவை போட்டு கிளறவும். சேமியா வேகும்போது காய்களும் நன்கு வெந்துவிடும். தண்ணீர் தேவையான அளவு மட்டுமே ஊற்ற வேண்டும். ஜாஸ்தி ஆனால் கொஞ்சம் சேமியாவை போட்டு கிளறவும். இல்லையெனில் தண்ணீர் கொதிக்கும் சமயம் கொஞ்சம் எடுத்து வைத்து தேவைஎனில் ஊற்றி கொள்ளலாம். அதிகம் ஆனால் சேமியா இல்லையெனில் கொஞ்சம் ரவை இருந்தால் போட்டு கொள்ளலாம். தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம். இல்லையெனில் மிக்ஸியில் 1 நிமிடம் அரைத்தும் போடலாம்.

அரிசி ரவை உப்புமா

தேவையானவை:

பச்சரிசி/புழுங்கல் அரிசி- 1 டம்ளர்,
துவரம் பருப்பு- 25 கிராம்,
கடலை பருப்பு- 25 கிராம்,
மிளகு- 1/2 ஸ்பூன், சீரகம்- 1/2 ஸ்பூன்,
கல் உப்பு- 1 ஸ்பூன், தேவைஎனில் சேர்த்து கொள்ளலாம்.
வர மிளகாய்-2,
எண்ணெய்- கொஞ்சம்,

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்கள் +அரிசி, பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து [ குருனையாக] கொள்ளவும். குருனை 1 பங்குக்கு 2-1/2 பங்கு தண்ணீர் வேண்டும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து [தேவை எனில்] 3 ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது குருனை தூவியபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விட்டு நன்கு வேக விடவும். சிறிய குக்கரில் செய்வதாக இருந்தால் ரவையை போட்டபின் மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். மிளகு, சீரக வாசனையுடன் உப்புமா சூப்பராக இருக்கும். தேவை எனில் 1 ஸ்பூன் நெய் விட்டு கொள்ளலாம்.

ரவா கிச்சடி

தேவையானவை:

ரவை- 200 கிராம்,
மெல்லிய [அணில்] சேமியா- 200 கிராம்,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-6 [அ] 8,
கேரட்-1, பீன்ஸ்-10, பீட்ரூட்- 1, குடமிளகாய்-1,பச்சை பட்டாணி- 25 கிராம்,
காலிஃப்ளவர்- சிறிய பூக்களாக - 50 கிராம்,
உப்பு- தேவைக்கு.
எண்ணெய்- 50 கிராம்,

செய்முறை:

ரவை மட்டும் வறுத்து கொள்ளவும். சேமியா வறுத்ததே கிடைப்பதால் வறுக்க வேண்டாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து [ காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.] மேலே கூறி உள்ளதை போட்டு நன்கு வதக்கி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது சேமியாவை போட்டு 1 நிமிடம் கழித்து ரவை போட்டு கட்டி விழாமல் கிளறவும். [பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.] சிம்மில் வைத்து மூடி வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.

தக்காளி பாத்

தேவையானவை:

ரவை- 2 கிராம்,
தக்காளி- 3[அ] 5,
பெரிய வெங்காயம்-1,
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
சீரகம்- 1/4 ஸ்பூன்,
பட்டை-1, லவங்கம்-2 ஏலக்காய்-2,
மஞ்சள்பொடி- 1/4 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

செய்முறை:

ரவை பொன் கலரில் வறுத்து கொள்ளவும். தக்காளியை சுடு நீரில் போட்டு ஆறிய பின் அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் தண்ணீரும் கலந்தால் 2 பங்குதான் இருக்கனும். வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, லவங்க,ஏலக்காய்,மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி தக்காளி+ தண்ணீர் சேர்த்து கொதி வரும்போது ரவையை போட்டு கிளறவும். சிம்மில் வைத்தால் 2 நிமிடத்தில் நன்கு வெந்து விடும். மேலே குடமிளகாய், மிக்ஸர் தூவி சாப்பிடலாம். சுவையாக இருக்கும். உப்புமாவுக்கு 2 பங்கு தண்ணீர் தான் வேண்டும். அப்போதுதான் உதிராக இருக்கும்.

Wednesday, May 28, 2008

அவல் உப்புமா

தேவையானவை:

கெட்டியான அவல்- 1 கப்,
பெரிய வெங்காயம்-2,
பச்சை மிளகாய்-5,
இஞ்சி- சிறிய துண்டு,
தேவையான காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும்-1 கப்
தக்காளி-2, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்பு- தேவையானவை.
எண்ணெய்- தேவையானது.

செய்முறை:

அவலை மிக்ஸியில் ரவையாக உடைத்து 2 முறை கழுவி உடனே சுத்தமாக தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். அதனுள் இருக்கும் நீரே ஊற போதும். கொஞ்ச நேரத்தில் ஊறி கையில் எடுத்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து பொன் கலர் ஆனவுடன் மேலே கூறி இருக்கும் எல்லாவற்றையும் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதனுடன் அவலையும் சேர்த்து வதக்கவும்.தண்ணீரை வடியவிட்டு ஊற வைப்பதால் ரவை ஊறும் அளவுக்குதான் தண்ணீர் இருக்கும். மூடி வைத்து 1 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து இருக்கும்.

இட்லி உப்புமா

தேவையானவை:

இட்லி- 10,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்
உப்பு- கொஞ்சம்,

செய்முறை:

இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1 நிமிடம் வதக்கவும். கொஞ்சநேரம் வதங்கினால் போதும். பின் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கவும். முதலிலேயே இட்லி வெந்து இருப்பதால் அதிக நேரம் விட வேண்டாம். இட்லி கையில் ஒட்டாமல் இருக்க கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டு உதிர்க்கலாம்.

Tuesday, May 27, 2008

ரவா உப்புமா

தேவையான பொருள்கள்:

ரவை - 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 ,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-5,
உப்பு- தேவையானவை,
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.

செய்முறை:

ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச நேரத்தில் வதங்கி விடும். 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவைபோட்டு சிம்மில் வைத்து கட்டி விழாமல் கிளறி தீயை குறைத்து 5 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து விடும். கடைசியில் கறிவேப்பிலை, மல்லி போட்டு சாப்பிடவும். சுவையான, மணமுள்ள ரவா உப்புமா ரெடி.

அரிசி ரவை மிளகு உப்புமா

தேவையான பொருள்கள்:

பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
கடலைபருப்பு-2 ஸ்பூன்,
சீரகம்-1/4 ஸ்பூன்,
மிளகு--1 ஸ்பூன்,
வரமிளகாய்- 4,
துறுவிய தேங்காய்- கொஞ்சம்,
உப்பு- தேவையான அளவு.
பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,
கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.

செய்முறை:

அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும். அதை அளந்து கொண்டு 1 கப்புக்கு, 2 கப் தண்ணீர் ஊற்றனும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் தேங்காய்,உப்பு சேர்த்து வதக்கவும். ரவையின் அளவுக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவையை போட்டு கட்டி தட்டாமல் கிளறி சிம்மில் மூடி வைத்து 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்து இருக்கும். மேலே கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடவும். வறுத்து செய்வதால் நல்ல வாசனையுடன் இருக்கும். ப்ரஷர் பேனில் செய்வதாக இருந்தால் 1 விசில் விட்டு இறக்கவும்.

Monday, May 26, 2008

வெஜிடபுள் உப்புமா

தேவையானவை:

ரவை- 1 கப் பொன் கலரில் வறுத்துகொள்ள வேண்டும்
பிடித்த காய்கள் எல்லாவற்றையும் சேர்க்கலாம்.
பட்டை-1
லவங்கம்-2
ஏலக்காய்-2
இஞ்சி- பொடியாக 1 ஸ்பூன், பூண்டு - 10 பற்கள்
சோம்பு-1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
உப்பு- தேவையானது, எண்ணெய் தேவையானவை.

செய்முறை:

மசாலா பொருள்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொண்டு, வாணலியில் கடுகு போட்டு வெடித்தபின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி காய்கள்,பச்சை மிளகாய், உப்பு,இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கியபின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் சமயம் ரவைபோட்டு நன்கு கிளறி மூடி வைத்து சிம்மில் அடுப்பை எரியவிட்டால் 5 நிமிடத்தில் எல்லாம் நன்கு வெந்துவிடும்.கம, கம வாசனையுடன் வெஜிடபுள் உப்புமா தயார்.

ரவா குஸ்கா

தேவையானவை:

ரவை- 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 நீளமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்,
இஞ்சி, பூண்டு விழுது- 2 ஸ்பூன்,
பச்சை மிளகாய்- 5 கீறி கொள்ளவும்,
பட்டை-1 லவங்கம்-2
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
தேங்காய் பால் -2 கப், [அ] சாதாரணபாலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின் பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு விழுது போட்டு நன்கு வதங்கியபின் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியபின் தேங்காய் பால் ஊற்றி கொதி வரும்போது உப்பும் ரவையும் போட்டு கிளறவும். 2 நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். ரவை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்து கொண்டு விடவும். வறுப்பதால் வாசனையாகவும். குழையாமலும் வரும். 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.ரவை குஸ்கா ரெடி.

மிளகு, சீரக உப்புமா

தேவையானவை:

ரவை- 1 கப் [ ரவை எண்ணெய் விடாமல் வறுத்து கொள்ளவும்]
பெரிய வெங்காயம்- 1
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம்- தலா- 1 ஸ்பூன்
தண்ணீர்- 2 கப்
உப்பு கொஞ்சம்
தாளிக்க கடுகு, எண்ணெய்.

செய்முறை:

மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவேண்டும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் மிளகு, சீரகப் பொடியை போட்டு உப்பு போடவும். பின் தண்ணீர் ஊற்றி கொதி வரும் சமயம் ரவை தூவினபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறி தட்டை போட்டு மூடி வைத்து விட்டால் 5 நிமிடத்தில் வெந்துவிடும்.இந்த உப்புமா மிளகு, சீரகபொடி வாசனையுடன் சூப்பர் சுவையாக இருக்கும்.

உப்புமா வகைகள்

உப்புமாவை ருசியாக செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை ருசியாக செய்யகூடிய பக்குவம் தெரியாததால் பலரும் செய்வது இல்லை. உப்புமா என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதை சரியானபடி, வெவ்வேறு சுவைகளில் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவை உதிராக சாப்பிடுபவர்களும் உண்டு. கொஞ்சம் குழைவாக சாப்பிடுபவர்களும் உண்டு. உதிராக வேண்டும் என்றால் 1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குழைவாக வேண்டும் எனில் 2, 1/2 பங்கு என்ற அளவில் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதி வரும்போது அடுப்பை சிறியதாக எரியவிட்டு ரவைபோட்டு கிளறினால் கட்டி தட்டாது.இறக்கியபின் 1 ஸ்பூன் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறினால் சூப்பர் வாசனையுடன் இருக்கும்.

கோதுமை ரவை உப்புமா



தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பிடித்த காய்கள் பொடியாக நறுக்கியது- 1 கப்
பச்சை மிளகாய்-4, பெரிய வெங்காயம்- 1 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
எண்ணெய்- கொஞ்சம்
உப்பு தேவையானது

செய்முறை:

ப்ரஷர் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கியபின் காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் உப்பு போட்டு ரவையை தூவியபடி போட்டு கிளறி ப்ரஷர் பேனை மூடி வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, சிறிது நேரம் கழித்து திறந்து மேலே கொஞ்சம் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

உப்புமா வகைகள்

திடீரென்று விருந்தாளிகள் வந்தாலோ, நமக்கே பசித்தாலோ உப்புமாவை உடனடியாக செய்யலாம். சில பேர் அதை பக்குவமாக செய்ய தெரியாதலால் உப்புமாவை பலரும் விரும்புவதில்லை. ருசியாக செய்தால் பலரும் விரும்பி சாப்பிடகூடிய உணவு. அதை ஒரே மாதிரியாக செய்யாமல் பல வகையாக செய்யலாம். செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உப்புமா உதிராக வர ரவையை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்துக் கொள்ளவேண்டும்.

ரவை ஒரு பங்கு எனில் தண்ணீர் 2 பங்கு என்ற அளவில்தான் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதி வந்ததும் ரவை தூவினபடி போடனும். அப்போதுதான் கட்டி தட்டாது. ரவையை போடும் போது அடுப்பை சிறியதாக எரியவிடவும். இதுபோல் செய்தால் கட்டி தட்டாமல் வரும். இறக்கும்போது 1 ஸ்பூன் நெய், [அ] தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் சுவையாக இருக்கும். உப்புமாவை விரும்பாதவர்கள் கூட ருசியாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

1.அரிசி புளி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு [ புழுங்கல்,பச்சை அரிசி] எதுவாக இருந்தாலும் பரவாயில்லை - 2 கப்
தண்ணீர்-2கப்
புளி கரைசல்- 1/2 கப்
நல்லெண்ணெய்-தேவையான அளவு
கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு- தலா- 1 ஸ்பூன்
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவைனயானது
மோர் மிளகாய்-6
கறிவேப்பிலை- கொஞ்சம்

செய்முறை:

அரிசி மாவை புளி, தண்ணீரில் [ மேலே கூறிஉள்ளபடி அளவில்] கரைத்து கொண்டு, கெட்டியான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் சேர்த்து பொன் நிறமாக ஆனதும் மோர் மிளகாய் போட்டு உப்பும் போட்டு கலந்து கரைத்துவைத்துள்ள மாவை கொட்டி கிளறவும். சிம்மில் வைத்து கிளறவேண்டும்.அப்போதுதான் தீயாது. சிம்மில் வைத்து மூடி வைத்து 2 நிமிடத்துக்கு ஒருமுறை கிளற வேண்டும்.நன்கு வெந்து பொன் கலரில் உதிராக வெந்து இருக்கும் போது இறக்கி விடவும்.கடைசியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். சூப்பராக இருக்கும்.

2.கோதுமை ரவை மசாலா உப்புமா

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பெரிய வெங்காயம்- 1
விருப்பபட்ட காய்கள்- 1 கப்
பட்டை-1, லவங்கம்-2
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/4 ஸ்பூன்
பூண்டு- பொடியாக நறுக்கியது-1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய்-4
எண்ணெய் தேவையானது.
உப்பு தேவையானவை.

செய்முறை:

ப்ரஷர் பேன் [அ] கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடுகு, கடலைபருப்பு, பட்டை, லவங்கம்,போட்டு சிவந்ததும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். 2 கப் ஊற்றி உப்பு போட்டு கொதி வரும்போது ரவைபோட்டு, 1நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய காய்களை போட்டு நன்கு கலந்து சிம்மில் வைத்து ப்ரஷர் பேனை மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். ப்ரஷர் பேனில் செய்தால் எண்ணெய் குறைவாகதான் ஆகும். காய்கறிகள் சேர்வதால் உடலுக்கு சத்துள்ளது.

3.பொடி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி- 1 டம்ளர்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-2 ஸ்பூன்,
வரமிளகாய்-5
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

தாளிக்க -கடுகு,கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு தலா-1/4 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாக உடைத்து கொண்டு, ப்ரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் தாளித்து, உடைத்த ரவையை அளந்து அதில் 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதிவந்தபின் அடுப்பை சிம்மில் எரியவிட்டு ரவைபோட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.தேவையானால் தேங்காயை துறுவி போட்டு கொள்ளலாம். முதலிலேயே வறுத்து கொள்வதால் சீக்கிரம் வெந்துவிடும். வறுத்து செய்வதால் வாசனையாக இருக்கும்.

Monday, May 12, 2008

ரைஸ் கிரேவி

தேவையானவை:

கேரட்- 100 கிராம்,
சாதம்- 1 கப்,
தக்காளி-6,
பெரிய வெங்காயம்-2 ,
சோயா சாஸ்- 1 ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார்- 2 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது-1 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு,
பச்சை மிளகாய் - 6 [அ] 8,
பட்டை -1,
லவங்கம், ஏலக்காய் -2

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அதில் பாதியை எடுத்து கொண்டு மீதியில் கேரட்டையும், தக்காளியையும் வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் , பச்சைமிளகாயை கீறி போட்டு வதக்கி, மீதி ஊள்ள வெங்காயத்தையும் போட்டு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். அரைத்த கிரேவியை ஊற்றி உப்பு போட்டு பச்சைவாசனை போக கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் எரியவிடவும். சாதத்தை சிறிய உருண்டைகளாக உருட்டி கிரேவியில் போடடு மூடி வைத்து விடவும். கொஞ்ச நேரத்தில் உப்பு, காரம் பிடித்து இருக்கும். மேலே மல்லி இலை போடவும். 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு சாப்பிடவும். இந்த குழம்பு கொஞ்சம் தண்ணியாக இருக்கனும். அதற்கு ஏற்றபடி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

Saturday, May 10, 2008

மீல் மேக்கர் (சோயா) சப்ஜி

தேவையானவை:

சோயா- 100 கிராம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-4
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு-10 பல்
மிளகாய்பொடி-2 ஸ்பூன்
சிறிய பட்டை, கொஞ்சம்- சோம்பு, 1 ஏலக்காய்
உப்பு தேவையானவை.

செய்முறை:

சோயாவை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊறியபின் பிழிந்தெடுத்து பின் 2[அ] 3 முறை பச்சை நீரில் நன்கு அலசி பிழிந்து எடுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோலை நீக்கி விழுதாக அரைத்து கொள்ளவும். மற்ற பொருட்களை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து கொண்டு வாணலியில் சீரகம் தாளித்து விழுதைபோட்டு வதக்கவும். அதனுடன் சோயாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுருள வதங்கியபின் மல்லி இலை தூவி இறக்கவும்.தேவையெனில், கடைசியில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு இறக்கலாம். சோயாவை சுடுநீரில் போடும் போது உப்பு கொஞ்சம் போடவும். வதங்கும் போது கொஞ்சம் போடவும். (Divide and rule ;-)

உருளை சப்ஜி

தேவையானவை:

சிறியதாக உள்ள உருளைகிழங்கு- 1/4கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி- 1
தயிர்- 1/4 கப்
பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1.5 ஸ்பூன்
கறிமசால்பொடி-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையானவை.

செய்முறை:

உருளைகிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து,இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயத்தைபோட்டு வதக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வதக்கவும். மஞ்சள்பொடி, கறிமசால்பொடி, மிளகாய்பொடி உப்பு போட்டு நன்கு வதக்கவும். பின் உருளைகிழங்கையும் போட்டு நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது தயிரை ஊற்றி மல்லி இலை போட்டு கிளறி இறக்கவும். உருளை சப்ஜி தயார்.

தக்காளி சப்ஜி

தேவையானவை:

தக்காளி பழமாக- 1/4 கிலோ, பெரிய வெங்காயம்- 1/4 கிலோ, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு- 10 பற்கள, மிளகாய் தூள்- 2 ஸ்பூன், கறி மசால் பொடி- 1/4 ஸ்பூன் உப்பு- தேவையானது.

செய்முறை:

தக்காளியை சுடு நீரில் போட்டு தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி வதக்கவும். அதில் கொஞ்சம் எடுத்து தக்காளி விழுதுடன் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கி வதக்கவும்.

மீதம் இருக்கும் வெங்காயத்தையும் போடவும். அடுப்பை சிம்மில் எரியவிடவும். அரைத்தவிழுது, மசால்பொடி, மிளகாய்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு, கடைசியில் 1/2 [ தேவையெனில்] கார்ன்ப்ளார் மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து விட்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மிளகு பொடி

தேவையான பொருட்கள்:

மிளகு- 50 கிராம்
சீரகம்- 50 கிராம்
தனியா- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 20 இலைகள்
பெருங்காயம்- சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்.

செய்முரை:

பெருங்காயத்தை கல்லில் தட்டினால் தூளாகிவிடும். அதை வாணலியில் போட்டு பொரித்து, அதனுடன் எல்லாவற்றையும் கலந்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்[அ] அவரவர்க்கு பிடித்த எண்ணெய் ஊற்றி இந்த பொடியை போட்டு சாப்பிடவும். தொண்டை சம்பந்தபட்ட கோளாறுகள் வராது. சளி, கபம் கட்டாது.

சத்து மாவு

தேவையான பொருட்கள்:

கோதுமை, கம்பு, பாசி பயறு, உளுந்து, சோயா, கேழ்வரகு, பொட்டு கடலை - தலா - 100 கிராம்
பாதாம், முந்திரி, பிஸ்தா- தலா 25 கிராம்
சாப்பாட்டு புழுங்கல் அரிசி - 1/2 கிலோ

செய்முரை:

பயறுகளை முதல் நாளே சுத்தம் செய்து ஊற விட்டு இரவில ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால் நன்கு முளைவிட்டு இருக்கும். அரிசியை கழுவி சுத்தம் செய்து எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து வெயிலில் காய விட்டு மிஷினில் அரைத்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும்போது 1- ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு பின் பால், சர்க்கரை கலந்து குடிக்கவும. இல்லையெனில் பாலுக்கு பதில் போர் கலந்தும் குடிக்கலாம். சர்க்கரை கலந்து குடிப்பவர்கள் 5 ஏலக்காய் கலந்து அரைத்து கொள்ளலாம். வெயில் காலத்தில் உப்பு போட்டு மோர் கலந்து குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். சத்துள்ளதுகூட.

வேப்பம்பூ பொடி

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ- 1 கப்
கடலைபருப்பு- 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்- 10
பெருங்காயம்- சிறிய துண்டு
உப்பு- 1 ஸ்பூன். 

செய்முரை:

எல்லா பொருள்களையும் தனிதனியாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடி செய்யவும். உடலுக்கு நல்லது. [ தேவையெனில் புளிப்புக்கு 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் போட்டு பொடி செய்து கொள்ளவும்]

வேப்பிலைக் கட்டி

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை இலை-20
நார்த்தம் இலை-20
வரமிளகாய்-10
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம்- சிறியதுண்டு
சிறிது உப்பு.

செய்முரை:

புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து கொண்டு, மிளகாய், இலைகளை நன்கு வெயிலில் காய விட்டு மிக்ஸியில் பொடிசெய்து அதனுடன் புளி,பெருங்காயம் போட்டு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பாட்டிலில் போட்டு வைத்து வேண்டும் போது அந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் போட்டு சாப்பிடவும்.

சுக்கு பொடி

தேவையான பொருட்கள்:

சுக்கு- 10 கிராம்
பெருங்காயம் - சிறிய துண்டு
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 20 இலைகள்
கல் உப்பு - 2 ஸ்பூன். 

செய்முரை:

சுக்கு, பெருங்காயத்தை சிறியதாக தட்டி வைத்து கொண்டு, மற்ற பொருள்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து கொண்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சுக்கு பொடி வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. வாயு சேராது. சூடான சாதத்தில் சாப்பிடவும். புளிப்பு தேவை எனில் 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட்டை பொடி செய்யும் போது போட்டு அரைத்து கொள்ளவும்.

கொப்பரை பொடி

தேவையான பொருட்கள்:

நன்கு முற்றிய தேங்காய் - 1
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்-10
கல் உப்பு- 2 ஸ்பூன்

செய்முரை:

தேங்காயை கேரட் துருவியில் துருவி கொண்டு, உளுந்துடன், பெருங்காயத்தையும் சேர்த்து, எண்ணெய் விடாமல் வறுத்து அதனுடன் தேங்காயை சேர்த்து வறுத்து கொண்டு 2 ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

துவரம்பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு- 1- கப்
உளுத்தம்பருப்பு- 1ஸ்பூன்
கடலைபருப்பு- 1 ஸ்பூன்
வரமிளகாய்- 20
பெருங்காயம் - சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்

செய்முரை:

பெருங்காயத்தை சிறியதாக உடைத்து கொண்டு, எல்லா பருப்புகளையும் வறுக்கும் சமயம் பெருங்காயத்தையும் போட்டால் பொரிந்து விடும். ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை இட்லிக்கு தொட்டு கொள்ளலாம். பொரியல் செய்யும் போது இந்த பொடியை கடைசியில் தூவி இறக்கலாம்.

Friday, May 9, 2008

டிப்ஸ்

எந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]

அடை மாவு

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 கப்
பட்டாணிப் பருப்பு, துவரம்ப் பருப்பு - தலா 1 கப்
இட்லிக்கு போடும் புழுங்கல் அரிசி - 2 கப்
வரமிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கல் உப்பு- கொஞ்சம். 

செய்முரை:

இவற்றை ஒன்றாக கலந்து வெயிலில் காய வைத்து மிஷினில் குருனையாக அரைத்து [ ரவைபோல்] வைத்து கொண்டு தேவைபடும் சமயம் பெருங்காயம், கறிவேப்பிலை,பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கொஞ்ச நேரம் ஊறவைத்து அடைகளாக ஊற்றவும். மெல்லியதாக வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தண்ணியாக கரைத்து கொள்ள வேண்டும். புளிப்பாக அடை வேண்டும் எனில் மோர் கலந்து [தண்ணீருக்கு பதில்] ஊறவிட்டு அடைகளாக ஊற்றவும்.

எல்லா பயறு வகைகள் கலந்தும் அடை வார்க்கலாம். உளுந்து கலப்பதால் அடை பிய்ந்து போகாமல் அழகாக வரும். மொறுகலாகவும் வரும். எல்லா பயறுகளையும் முதல் நாள் ஊற விட்டு மறுநாள் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்து 1 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு முளைவிட்டு இருக்கும் . அரிசியை மட்டும் ஊற வைத்து [ மேலே சொன்ன அதே அளவு] பயறுகளை மிக்ஸியில் அரைத்து,சீக்கிரம் மாவாகிவிடும். பின்அரிசியுடன், 10 வர மிளகாய், உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை இஞ்சி ஒரு துண்டு போட்டு குருனையாக அரைத்து அந்த மாவில் 2- ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கல்ந்து அடைகளாக ஊற்றவும்.

Thursday, May 8, 2008

ரெடி மாவு தயாரிக்க

ரெடி மாவு தயாரிக்க: கடலை பருப்பு- 1/2 கிலோ, அரிசி- 100 கிராம், வரமிளகாய்-20, கல் உப்பு- கொஞ்சம், கட்டி பெருங்காயம்-சிறியது. இவற்றை வெய்யிலில் நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து வைத்து கொள்ளவும். தேவையான போது மாவுடன் ஒருசிட்டிகை- சமையல் சோடா கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொண்டு செய்யவும்.காரம் தேவை எனில் மிளகாய் பொடி கலந்து கொள்ளவும்.

மெதுவடை செய்ய: உளுந்து 1 - கிலோ, புழுங்கல் அரிசி- 250 கிராம், உப்பு கொஞ்சம் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து கொண்டு தேவையான போது மாவை எடுத்து சப்பாத்திக்கு பிசைவதுபோல் கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விட்டு, அதனுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
கறிவேப்பிலை, மல்லி இலை, கேரட்[ தேவையானால்] சேர்த்து வடைகளாக பொரித்து எடுக்கவும். புழுங்கல் அரிசி போடுவதால் வடை மொறு, மொறுப்பாகவும், சாப்டாகவும் இருக்கும். எண்ணெயும் அதிகம் குடிக்காது.

போண்டா மிக்ஸ்: கடலைபருப்பு- 1 கிலோ, புழுங்கல் அரிசி-100 கிராம், வர மிளகாய்-20 கொஞ்சம் கல் உப்பு சேர்த்து நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து கொள்ளவும். தேவையான மாவை எடுத்து 2 ஸ்பூன் எண்ணெய் காயவிட்டு மாவில் ஊற்றி,பெரியவெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இஞ்சி, பிடித்தமான கீரை ஏதாவது சேர்த்து தளர்வாக பிசைந்து 1நிமிடம் ஊற விடவும். உப்பு போட மறக்க வேண்டாம். மாவை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

புளியோதரை மிக்ஸ்: புளியை சுடு நீரில் ஊறவைக்கவும்.இதனால் பேஸ்ட் அதிகம் வரும்.வேஸ்ட ஆகாது. புளி-1/2 கிலோ, கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் கடலைபருப்பு, 2 - ஸ்பூன் உளுத்தம்பருப்பு, தனியா-5 ஸ்பூன், வரமிளகாய்-25, கட்டி பெருங்காயம் போட்டு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொண்டு,புளியை நன்கு கரைத்து கெட்டியாக சுண்டும் வரை கொதிக்க விட்டு அதில் 1/4 ஸ்பூன்- மஞ்சள்பொடி,கல் உப்பு , பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.கடைசியில் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கடைசியில் 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கவும். தேவையானபோது சாதத்தை வடித்து இந்த புளிகாய்ச்சலை போட்டு கலந்தால் புளியோதரை ரெடி.

Wednesday, May 7, 2008

சேமியா உணவு வகைகள்

இப்போது எல்லாம் வறுத்த சேமியாவே கிடைக்குது. முதலில் தேவையான தண்ணீர் கொதிக்க விட்டு கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சேமியாவைபோட்டு 1 நிமிடம் போட்டு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள மாவு வாசனை போகும்.மெல்லியதாக இருப்பதால் 1 நிமிடம் போதும். அதை தட்டில் போட்டு ஆற விடவும். இதை வைத்து பலவகை டிஷ் செய்யலாம்.

1. தேங்காய் சேமியா: கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பச்சைமிளகாய்,போட்டு நன்கு சிவந்தபின் பொஞ்சம் பெருங்காயம் போட்டு,தேவையான தேங்காய் துறுவி போட்டு வதக்கவும். இதற்குதகுந்த உப்பு சேர்க்கவும். பின் வடிய விட்ட சேமியாவை போட்டு கிளறி, மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும். 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கடைசியில் சேர்க்கவும்.

2. எலுமிச்சை சேமியா: தேவையான எலுமிச்சைபழத்தை [நறுக்கி தண்ணீரில் போட்டு பிழிந்தால் கசப்பு வராது] கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து சிவந்தவுடன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்போட்டு வதக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து,உப்பு போட்டு வதக்கி அதில் சேமியாவை போட்டு கிளறவும.மேலே கொஞ்சம் பெருங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால எலுமிச்சைசேமியா ரெடி.

3. தக்காளி சேமியா: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெடித்தவுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் தேவையான தக்காளி, பச்சைமிளகாயைபொடியாக நறுக்கி போட்டு,கொஞ்சம் மஞ்சள்பொடி, உப்பும் போட்டு, தக்காளியின் நீர் சுண்டியபின் தேவையான அளவு சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.

4. மசாலா சேமியா:வாணலியில் எண்ணெய் விட்டு 1- பட்டை, 2- லவங்கம், 2-ஏலக்காய்,மராட்டிமொக்கு-1, பிரிஞ்சி இலை போட்டு வறுபட்டபின், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/4 ஸ்பூன்- மல்லிபொடி, 1/4 ஸ்பூன் -மிளகாய்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி சேமியாவை போட்டு நன்கு கிளறவும். மேலே மல்லி இலை போடவும்.
கடைசியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.

5. சேமியா பிரியாணி: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி 2-ப்ட்டை, 2-லவங்கம்- 2- ஏலக்காய், சிறியதாக கடல் பாசியை உதிர்த்துபோட்டு தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி போட்டு வதக்கவும். இதில் காளானை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து போட்டு கொள்ளலாம். உப்பு போட்டு கொஞ்ச நேரம் வதங்கியபின் சேமியாவை போட்டு கிளறவும். இதில் மசாலா போருள்களை மிக்ஸியில் அரைத்து காய்கள் வேகும்போதும் போட்டு கொள்ளலாம்.அரைத்து போடுவதாக இருந்தால் 5- சிறிய வெங்காயம், 2பல் புண்டு, 1 துண்டு இஞ்சி போட்டு அரைத்து வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வந்த சமயம் சேமியாவை போடனும்.


6. புளியோதரை சேமியா: வாணலியில் எண்ணெய் ஊற்றி சேமியாவை போட்டு கிளறி, புளியோதரையை போட்டு அதற்கு தேவையான உப்பு போட்டு நன்கு கலந்தால் சேமியா புளியோதரை தயார்.

7. பிஸிபேளாபாத் சேமியா: பாசிபருப்பை சிவக்க வறுத்து வேக வைத்து கொள்ளவும்.
பொடிசெய்ய: 2- ஸ்பூன் கடலை பருப்பு, 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,2- ஸ்பூன் தனியா, கொஞ்சம் கட்டி பெருங்காயம், கொஞ்சம் வெந்தயம், 4 வர மிளகாய்.
இவற்றை எண்ணெய் ஊற்றி வறுத்து, கொஞ்சம் கொப்பரை தேங்காயை துறுவி போட்டு அதனுடன் வறுத்து பொடியாக செய்து கொண்டால் பிஸிபேளாபாத் பொடி ரெடி. வெந்த பருப்புடன் இந்த பொடியை போட்டு கிளறி உப்பும் போட்டு, சேமியாவை போட்டு கிளறி எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கிளறினால் பிஸிபேளாபாத் சேமியா ரெடி.

8. தயிர் சேமியா: கொஞ்சம் தேங்காய்,பச்சைமிளகாய்-2 , 10 கறிவேப்பிலை இலை இவற்றை மிக்ஸியில் அரைத்து கெட்டியான தயிரில், கொஞ்சம் உப்பு கலந்து அதில் [வெந்த]சேமியாவை கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் தாளித்தால் ரெடி, மல்லி இலை போட்டு சாப்பிடவும். அதில் கேரட்டை துருவி மேலே போட்டு, சாப்பிடலாம். வெள்ளரிக்காயை துருவி போட்டும் சாப்பிடலாம். காராபூந்தி தூவி சாப்பிடலாம்.

9. பொடி சேமியா: இதற்கு எந்த பொடியாக இருந்தாலும், பூண்டு பொடி, கொள்ளு பொடி, கறிவேப்பிலைபொடி, மல்லி பொடி, சாம்பார் பொடி, எதுவாக இருந்தாலும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேமியாவை போட்டு வதக்கி உப்பு சேர்த்து விருப்பபடும் பொடி சேர்த்து கிளறி சாப்பிடவும். இதை உடனே செய்து விடலாம். இதற்கு வெங்காய தயிர் பச்சடி தொட்டு கொள்ளலாம்.

Tuesday, May 6, 2008

பலவகை இட்லி

முதலில் இட்லி பூப்போல் வர இட்லி மாவில் [இட்லி ஊற்றும் போது தேவையான மாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் அதில் கொஞ்சம் [Eno salt ] போட்டு மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றினால் மிகவும் சாப்டாக வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும் சமயம் Eno salt கலக்க வேண்டும். மாவின் பதம் மாறி போயிருந்தால் கூட இட்லி மென்மையாக இருக்கும்.

1. தயிர் இட்லி: இட்லி தேவையானதை செய்து கொண்டு, கொஞ்சம் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து,தேவையான தயிரில் கலந்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,கொஞ்சம் பெருங்காயம், தாளித்து கறிவேப்பிலை போட்டு அதில் இட்லிகளை போட்டு மேலே மல்லி இலை போட்டு சாப்பிடவும்.

2.பொடி இட்லி: தேவையான இட்லிகளை ஊற்றி கொண்டு அந்த இட்லிகளை ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, அதன் மேல் இட்லி பொடியை தூவி கொஞ்சம் நேரம் ஊறியபின் சாப்பிடவும்.

3.காய்கறி இட்லி: தேவையான காய்களை பொடியாக நறுக்கி கொண்டு வாணலியில் கடுகு,உளுத்தம்பருப்பு,1 பட்டை, 2 லவங்கம்,4 பல்பூண்டு,கொஞ்சம் பொடியாக நறுக்கிய இஞ்சி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,பின் காய்களை போட்டு வதக்கி [ பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்துவிடும்.] 1 நிமிடம் போதும் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும்.பின் உப்பு போட்டு,
இட்லிகள தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு கொஞ்சம் தேவையான எண்ணெய் ஊற்றி வதக்கவும். இப்படி செய்யும் போது அது இட்லிமாதிரியே தெரியாது. ஏதோ புது வகை டிஷ் போல் இருக்கும்.

4.தக்காளி இட்லி: நன்கு பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி கொண்டு, வாணலியில் கடுகு,1-ப்ட்டை, 3 லவங்கம்-1 ஏலக்காய்-4 பச்சைமிளகாய்பொடியாக நறுக்கி கொள்ளவும் இல்லையெனில் நீளமாக கீற்றி கொள்ளவும். உப்பு போட்டு நன்கு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கி,1/4 ஸ்பூன் கறிமசால்பொடி சேர்த்து இட்லியை தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு 1 நிமிடம் வதக்கினால் போதும். தக்காளியை நன்கு வதக்கியபின் இட்லியை சேர்க்கவும்.பின் கறிவேப்பிலை, மல்லி இலை தூவி விடவும்.

5.இட்லி மஞ்சூரியன்: இட்லிகளை தேவையான ஷேப்பில் கட் செய்து வைக்கவும். அதில் 1-ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,கார்ன்ஃப்ளார் கொஞ்சம்,அரிசிமாவு கொஞ்சம்,மிளகாய்தூள்கொஞ்சம்[காரம் தேவையான அளவு] உப்பு,கரம் மசாலாபொடி கொஞ்சம் இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு அதில் கட் செய்து வைத்துள்ள இட்லியை மாவில் தோய்த்து [டிப் செய்து ]
பொரித்து எடுக்கவும்.

6.மிளகு இட்லி: இதற்கு மினி இட்லியாக ஊற்றி கொண்டு, வாணலியில் கடுகு, தாளித்து,இட்லிகளை போட்டு வதக்கி, 1- ஸ்பூன் நெய் சேர்த்து மிளகுதூள், சீரக தூள், உப்பு போட்டு வதக்கினால் பெப்பர் இட்லி தயார்.அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிடலாம்.

7.பிரியாணி இட்லி: தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி, கொண்டு, எண்ணெய் காய வைத்து 2-பட்டை, 2 லவங்கம்,2- ஏலக்காய்-பிரிஞ்சி இலை,பச்சைமிளகாய் நீளமாக கீறி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு விழுது-2 ஸ்பூன் உப்பு கொஞ்சம் போட்டு வதக்கி[இதுக்கு கொஞ்சம் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.] பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கி வதக்கியபின் காய்களைபோட்டு வதக்கி,இட்லிகளை தேவையான படி கட் செய்து அதில் போட்டு வதக்கினால் பிரியாணி இட்லி தயார்.மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

8. சாம்பார் இட்லி: 1-பெரிய வெங்காயம், 4- தக்காளி, தேவையான சாம்பார்பொடி, கொஞ்சம்,மஞ்சள்தூள்,உப்பு , 1 ஸ்பூன் பொட்டுகடலை போட்டு 2-நிமிடம் வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்ததை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிய வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டால் அதிரடி சாம்பார் தயார். நன்கு சுவையாக இருக்கும்.இதில் இட்லிகளை போட்டு ஊறவைத்தும் சாப்பிடலாம்.தொட்டும் சாப்பிடலாம்.

Wednesday, April 30, 2008

வெயில் காலத்திற்க்கு பயன்படும் டிப்ஸ்

1. கோசாப்பழம்[ தர்பூசணி] வெயில் காலத்தில் நிறைய சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் யூரினரி ட்ராக் இன்ஃபெக்‌ஷனில் கொண்டுவிடும். ஒரு நாளைக்கு 2 பீஸ் சாப்பிட்டால் பிரச்சனை வராது.

2. முலாம்பழம், கிர்ணிபழம் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

3. வெள்ளை பூசணிக்காயை நிறைய சாப்பிடலாம். தோல் சீவி , அதனுடன், கொஞ்சம் கேரட், கொஞ்சம் வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுதூள் கலந்து,உப்பு போட்டு சாலட் செய்து சாப்பிடவும். கடுகு தாளித்து, கொஞ்சம் தயிர் போட்டு கலந்து தயிர் பச்சடியாக சாப்பிடவும். மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

4.வெயில் காலத்தில் அடிக்கடி சூடு பிடிக்குதா தண்ணீரை சூடு செய்து கொஞ்சம் காசி கட்டியை கலந்து ஆற வைத்து குடித்தால் எல்லா இன்ஃபெக்‌ஷனும் ஓடி போய் விடும். இது நல்ல மருத்துவகுணம் உள்ளது. தலைவலி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களும் இந்த தண்ணீரை குடிக்கலாம்.

5. வெள்ளரிக்காயை துறுவி கொண்டு அதில் மிளகுதூள், ஏலக்காய்பொடி கலந்து சாப்பிட்டாலும் நீர்கடுப்பு வராது.

6. வெள்ளரிக்காய்= மாதுளைதோல் இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்தாலும் நீர்கடுப்புக்கு நல்லது.

7.வெயில் காலத்தில் மோர் குடிக்கும்போது அடிக்கடி பச்சைமிளகாயை சேர்த்தால் சூடு அதிகம் ஆகும். அதற்குபதில் இஞ்சி,கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம்,உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கலாம்.

8. வெயில் காலத்தில் கத்தரிக்காய் சாபிட்டால் உடல் சுடு அதிகம் ஆகும்.கீரை அதிகம் சேர்த்து கொள்ளவும். கூடிய வரை மசாலா பொருட்களை கோடை காலத்தில் அதிகம் சேர்க்கவேண்டாம்.

9. வெயிலில் வரும் வேனல் கட்டிகளுக்கு சந்தனமும்+மஞ்சளும் கலந்து பூசி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.நல்ல நிவாரணம் கிடைக்கும்.

10. காலையில் 4-பேரிச்சைபழம்,கிஸ்மிஸ் பழம்-4,1-ஸ்பூன் கசகசா இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு இன்னும் தேவைஎனில் பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம்.

11. குடி நீர் இருக்கும் பாத்திரத்தில் குறுமிளகு,கொஞ்சம் வெட்டிவேர்,சீரகம், பனங்கல்கண்டு போட்டு சூடு செய்து அதையே அன்று முழுவதும் குடிக்கலாம். [வெறும் தண்ணீருக்கு பதிலாக] அந்த நீர் அன்றன்று புதியதாக போட்டு கொள்ளனும்.முதல் நாள் தண்ணீர் இருந்தால் கீழே கொட்டி விடவும்.

12.முட்டை கோஸ் அதிகமாக சாப்பிடவும். பொடியாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய்+உப்பு+ மிளகுதூள் போட்டு சாலட் போல் சாப்பிடவும். தக்காளி, பெரிய வெங்காயமும் சேர்த்து சாப்பிடலாம்.

13.சோப் தேய்த்து குளிப்பதற்க்கு பதிலாக மஞ்சள்+சந்தனதூள்+பன்னீர்[அ] கடலைமாவு+பன்னீர்+தயிர் இதில் ஏதாவது ஒன்றை கலந்து தேய்த்து கொஞ்ச நேரம் ஊறியபின் குளிக்கவும்.

14.சந்தனம் + மஞ்சள் + பன்னீர் பேஸ்ட் அருமையான சன்ஸ்க்ரீனும் கூட. இதை தடவி குளித்து விட்டு வெளியில் போனாலும் சூரியனின் சூடு தெரியாது.
வியர்குருவின் மேல் இந்த பேஸ்டை போட்டு சில நாள் குளித்தால் வியர்க்குரு மறைந்துவிடும்.

15.குளிக்கும் நீரில் கொஞ்சம் தினமும் பன்னீர் கலந்து குளித்தால் உடம்பு வாசனையாக இருக்கும்.வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 2[அ] 4 முறைகூட குளிக்கலாம். வேர்வை நாற்றம் வராது. வெட்டி வேரை கொஞ்சம் முதல் நாளே குளிக்கும் நீரில் போட்டு வைத்தும் குளிக்கலாம்.

மசாலா மோர்

செய்முறை: மோர்- தேவையான அளவு, பூண்டு- 2 பற்கள், சிறிய வெங்காயம்-5,கறிவேப்பிலை -10 இலை, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-2 உப்பு- தேவைக்கு ஏற்ப. தாளிக்க கடுகு- 1/4 ஸ்பூன்.
செய்முறை: மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டி, கடுகு தாளித்து குடிக்கலாம். ஜில்லுன்னு வேண்டும் எனில் ஐஸ் கட்டிகளை மேலே மிதக்கவிட்டு குடிக்கவும். கொஞ்சநேரம் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். கோடைகாலத்தில் அதிகமாக குடிக்கலாம்.உடலுக்கு ரொம்ப நல்லது.

பாதாம் கீர்

தேவையான பொருட்கள்; பாதாம் பருப்பு-200 கிராம்
சர்க்கரை-150 கிராம்
லெமன் எல்லோ- கொஞ்சம்
பாதாம் எசன்ஸ்- 2 ஸ்பூன்
தனண்ணீர்-1/4 டம்ளர்
சிட்ரிக் ஆசிட்- கொஞ்சம்
செய்முறை: பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தண்ணீரில் சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு ஆறியபின் பாதாம்விழுது, மற்ற மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளை மேலே போட்டு ஜில்லுனு குடிக்கவும். கொஞ்ச நேரம் கழித்து குடிக்க வேண்டும் என்றால் ஃப்ரிஜில் வைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்பவும் நல்லது.

மசாலா மில்க் ஷேக்

தேவையான பொருள்கள்; கெட்டியான பாலை காய்ச்சி ஆற வைத்து குளிர வைக்கவும். [ தேவையான அளவு] சிறிய பட்டை, 1 லவங்கம், ஏலக்காய்-2 வெள்ளை மிளகு-2 பனங்கல்கண்டு- 4 ஸ்பூன், தேவையான [Ice] கட்டிகள்
செய்முறை: பாலுடன் எல்லா மசாலா பொருட்களையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து நுரைத்து வரும் சமயம் டம்ளரில் ஊற்றி மேலெ [Ice]கட்டிகளை போட்டு குடிக்கவும். வெயில் காலத்தில் வரும் அஜிரணத்துக்கு நல்லது.

ரோஸ் சிரப்

தேவையான பொருட்கள்; கெட்டியான ரோஸ் எசன்ஸ்- 3 ஸ்பூன், சர்க்கரை-150 கிராம், தண்ணீர்- 2, கப், ரோஸ் கலர்- கொஞ்சம், எலுமிச்சை பழம்-2, எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் நன்கு அடித்து [எல்லாம் ஒரே மாதிரி கலக்க] டம்ளரில் ஊற்றி [Ice] கட்டிகளை மேலே போட்டு குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்துதேவைபடும் போது குடிக்கலாம்.பன்னீர் வாசனையுடன் சூப்பராக இருக்கும். வெயில் காலத்திற்க்கு ஏற்றது.

Tuesday, April 29, 2008

கம்பு கூழ்

தேவையான பொருள்கள்:

சுத்தம் செய்த கம்பு- 1/4 கிலோ
தண்ணீர்- 2 டம்ளர்
மோர்- 2 டம்ளர்
சிறிய வெங்காயம்-10
உப்பு- கொஞ்சம்
மோர் மிளகாய்- வறுத்தது=2[அ]4

செய்முறை:

சுத்தம் செய்த கம்பை நன்கு கழுவி வடிகட்டி துணியில் போட்டு நன்கு காய விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கம்பு மாவை போட்டு நன்கு கிளறவும். [பச்சை தண்ணீரில் மாவை கலந்தால் கட்டி தட்டாமல் வரும்.] அடுப்பை சிம்மில் எரியவிடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும். தண்ணீரில் கையை தொட்டு வெந்த மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். அது கெட்டியான களியாக இருக்கும்.நன்கு ஆறிய பின்போ[அ] அடுத்த நாளோ அதில் சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிபோட்டு மோர்மிளகாயை கலந்து உப்பு, மோரை நன்கு தண்ணியாக கடைந்து அதில் ஊற்றி சாப்பிடலாம். உடலுக்கு வெயில் காலத்தில் குளிர்ச்சியை தரும் இந்த கம்பு கூழ்.

புதினா, சீரக ஜூஸ்

தேவையான பொருட்கள்; புதினா- 1 சிறிய கட்டு
சீரகம்- 3 ஸ்பூன்
சர்க்கரை- 100 கிராம்
சிறிய மாங்காய் நறுக்கியது- 10 துண்டுகள்
தண்ணீர்- 2 டம்ளர்
உப்பு- ருசிக்கு கொஞ்சம்

செய்முறை: புதினாவில் இலைகளை மட்டும் ஆய்ந்து அதில் சீரகபொடி,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மாங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதன் சாறையும் கலந்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்கு கலந்து அப்படியே குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்து சில்லென்றும் குடிக்கலாம். அவரவர் விருப்பம்.

கேரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்;
கேரட்-1/4 கிலோ
கெட்டியான காய்ச்சிய பால்-2 டம்ளர்
சர்க்கரை-50கிராம்
ஏலக்காய் பொடி- கொஞ்சம்

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் ஆறிய பால், ஏலக்காய், சர்க்கரை போட்டு நன்கு கலந்து [Ice] கட்டிகளை போட்டு கப்புகளில் ஊற்றி குடிக்கலாம்.

நுங்கு கீர்

தேவையானவை: பால்- 1/2 லிட்டர்
இளசான நுங்கு- 20
சர்க்கரை- 200கிராம்
ஏலக்காய்தூள்- கொஞ்சம்
செய்முறை: நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை தவிர்க்க வேண்டும்.

பானகம்.

தேவையானவை; வெல்லம்- 100கிராம்
எலுமிச்சை பழம்- 2
ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்
சுக்கு தூள்-1/2 ஸ்பூன்
தண்ணீர்- 3 கப்
கொஞ்சம்-உப்ப [ 1சிட்டிகை]
செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரையவிட்டு,அதில் எலுமிச்சை பழத்தை பிழியவும். ஏலக்காய்பொடி, சுக்குபொடி, உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கவும். தேவையானால் [ice ] கட்டிகள் போட்டும் குடிக்கலாம். வெயிலுக்கு இதமாக இருக்கும்.

கோடைக்கு ஏற்ற பானங்கள்

கேரட், வெள்ளரி ஜுஸ். [100 கிராம் சீரகத்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இது ஜுஸுக்கு தேவை, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளுக்கு நல்லது.]

தேவையானவை: தயிர்- 2-கப்
கேரட்- 2
வெள்ளரி காய்-பிஞ்சாக- 2
இஞ்சி- சிறிய துண்டு
உப்பு- தேவையானவை.

செய்முறை: கேரட், வெள்ளரியை நன்கு கழுவி கொண்டு பொடியாக நறுக்கி, இஞ்சி, உப்பு, சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிகொள்ளவும். அதனுடன் தயிரையும் நன்கு கடைந்து கலந்து சீரகதூள் சேர்த்து அப்படியே குடிக்கலாம். குளிரவைத்தும் குடிக்கலாம்.

Monday, April 28, 2008

மோர் குழம்பு பொடி

தேவையானவை:

கொப்பரை தேங்காய் - 1
பச்சை மிளகாய்- 20
சீரகம் - 25கிராம்
இஞ்சி - 10கிராம்
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

தேங்காயை துறுவி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, இதனுடன் சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும். இதை ஃப்ரிஸரில் வைத்து தேவையான போது எடுத்து செய்யவும். தேவையான காய்கறிகள் போட்டு வெந்தபின் மோரில் இந்த பொடியை கலந்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மோர் குழம்பு தயார்.

தந்தூரி மசாலா பொடி

தேவையானவை:

புதிய மிளகாய் தூள் பொடி - 100 கிராம் (நன்கு சிகப்பாக இருக்கனும்)
தனியா பொடி- 50 கிராம்
சீரகபொடி-25 கிராம்
கரம் மசாலா- 25 கிராம்
கருப்பு உப்பு -[ இந்துப்பு] 10 கிராம்
அஜினமோட்டோ- 25 கிராம்
லைம் சால்ட்- 10 கிராம்
ஆரஞ்சு கலர் - 1/2 ஸ்பூன்

செய்முரை:

இந்த போருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொண்டு நன்கு கலந்த பின் உபயோகிக்கவும்.

காலிஃப்ளவர் கறி, உருளைகறி, பனீர் கறி[அ] மசாலா செய்யும் போது இந்த பொடியை போட்டு இறக்கினால் சுவை சூப்பராக இருக்கும். [உப்பு தனியாக இதற்கு சேர்த்து கொள்ளவும்.]

செட்டி நாடு மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

வர மிளகாய்- 1/4 கிலோ (நன்கு சிகப்பாக இருக்க வேண்டும்)
சீரகம்- 25 கிராம்
மிளகு-25கிராம்
சோம்பு-25 கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பவுடராக செய்து கொள்ள வேண்டும். சல்லடையில் சலித்து, (சலித்து செய்தால் நன்கு பவுடராக வரும். ஒரே மாதிரியாக இருக்கும்.) ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைக்கவும். மிஷினில் அரைத்தால் ஒரிஜினல் வாசனை வராது.

வறுவல் பொடி

தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்
சிகப்பு மிளகாய் - 50கிராம்
பட்டை-1 [சிறிய துண்டு]
லவங்கம்- 2 மட்டும் போதும்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
கல் உப்பு - 1 ஸ்பூன்

செய்முரை:

மிளகாயை தவிர எல்லா பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிளகாயும் கலந்து நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். எந்த காய்கறிகளை வதக்கி பொறியல் செய்யும் போது கடைசியில் 1/2 ஸ்பூன் போட்டுவதக்கி இறக்கினால் சுவையாக இருக்கும். காய்களுக்கு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

சாட் மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

இந்துப்பூ- 50கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

மேலே கூறிய கரம் மசாலா பவுடருடன் [50] மிக்ஸியில் போட்டு இரண்டையும் போட்டு பொடி செய்து நன்கு கலந்து கொள்ளவும். இதுதான் சாட் மசாலா.

கரம் மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

பட்டை- 50 கிராம்
லவங்கம்- 50 கிராம்
ஏலக்காய்- 5 கிராம்
சோம்பு-10 கிராம்
மல்லி-[தனியா] 100 கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருள்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடிசெய்து சலித்து பவுடராக இருக்கனும். அப்போதுதான் வாசனையாக இருக்கும். பிரியாணி செய்யும்போது காய்களை வதக்கியபின் இந்த பொடி 1/2 ஸ்பூன் போட்டு செய்யவும்.

சைனீஷ் ஃபிரைடு ரைஸ் மசாலா

தேவையான பொருள்கள்:

வெள்ளை மிளகு தூள்- 50 கிராம்
அஜினமோட்டோ -30 கிராம்
கல் ஊப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பவுடராக செய்து கொள்ளவும். ஃபிரைடு ரைஸ் செய்யும் போது சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவேண்டும். தேவையான காய்கறிகளை அவரவர் விருப்பபடி நறுக்கிக்கொண்டு எண்ணெய் விட்டு வதக்கி 1/2 நிமிடம் மட்டும் காய் வதங்க வேண்டும். பின் மேலே கூறிஉள்ள பொடியை போட்டு கொஞ்சம் நெய்[அ] அவரவர் விருப்பபடும் எண்ணெய் ஊற்றி சாதத்தை போட்டு தேவைபட்டால் உப்பு
போட்டு கொள்ளவும். கடைசியில் ஸ்பிரிங் ஆனியன் பொடியாக தூவி க் கொண்டால் அழகாக இருக்கும்.

பிரியாணி பொடி

தேவையான பொருள்கள்:

பட்டை- 10கிராம்
லவங்கம்-10கிராம்
கசகசா- 20-கிராம்
மிளகாய்-50கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து கொண்டு பிரியாணி செய்யும்போது செய்யவும். கல் உப்பு போட்டு அரைப்பதால் வண்டு வராது.

Saturday, March 1, 2008

பிரேட் கோஃப்தா

தேவையானவை:

சால்ட் பிரேட்- 1 பாக்கெட்
உருளைகிழங்கு - 2
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
கறிமசால் பொடி - 1/2 ஸ்பூன்
சீரகபொடி - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

உருளைகிழங்கை உப்பு போட்டு வேக வைத்து நன்கு மசித்து அதனுடன் பிரெட்டையும் மசித்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு அதனுடன் தக்காளியை போட்டு வதக்கி ஆறியபின் மிக்ஸியில் கிரேவியாக அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து மசால் பொடி, இஞ்சி,பூண்டு விழுது போட்டு பொரிந்தபின் அரைத்த கிரேவியை ஊற்றி, மிளகாய்தூள், சீரகபொடி, உப்பு போட்டு கொதிக்கவிட்டு சாப்பிடும்போது பொரித்த கோஃதாக்களை அதில் போட்டு சாப்பிடவும். இதற்கு 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.

பிரெட் டோஸ்ட்

தேவையான பொருள்கள்:

சால்ட் பிரெட்- 1 பாக்கெட்
உருளைக்கிழங்கு- 1/2 கிலோ
இஞ்சி- சிறிய துண்டு
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-5 [அ] 8
வெண்ணெய்[ அ] எண்ணெய்

செய்முறை:

உருளைகிழங்கை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு,சீரகம் தாளித்துஇஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். உருளை கிழங்கில் உப்பு போட்டு வேக வைப்பதால் அதனால் ஏற்படும் வாய்வு தொல்லை வராது. கிழங்கை தோல் உரித்து நன்கு மசித்து அதனுடன் சேர்க்கவும். இதை ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு பிரெட்டில் தடவி மற்றொரு பிரெட்டை மூடி தோசைகல்லில் போட்டு வெண்ணெய்[அ] எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு பொன் கலரில் எடுத்து சாப்பிடவும். மைக்ரோ அவன் இருந்தால் அதில் 2 நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.

ப்ரெட் பீட்ஸா

வெளிநாட்டில் இருப்பவர்கள், அங்கு வேலைக்கு செல்பவர்கள், நம் நாட்டில் இருவரும் வேலைக்கு சென்று களைப்பாக வரும் போது சீக்கிரமாக சிம்பிளாக சுவையாக செய்ய கூடிய ரெசிபிக்களை சொல்கிறேன். செய்து சுவைத்து பார்க்கவும்.

தேவையானவை:

சால்ட் பிரெட் 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் -2
பெங்களுர் தக்காளி - 4
குட மிளகாய் -2
கேரட் பெரியதாக - 1
பச்சை மிளகாய் -5 [காரம் தேவையானால் சேர்த்து கொள்ளலாம்]
தக்காளி சாஸ், சில்லி சாஸ் - தலா 4 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
வெண்ணெய் - டோஸ்ட் செய்ய

செய்முறை:

கெட்டியான வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொண்டு அதனுடன் சேர்க்கவும். கேரட் துருவியில், கேரட்டையும், குடமிளகாயையும் மெல்லியதாகவும், தக்காளியையும் மெல்லியதாக நறுக்கி அதனுடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கினால் போதும். ஏனெனில் பிரெட்டில் வைத்து டோஸ்ட் செய்யனும். இறக்கியபின் சாஸ்களை சேர்த்து மல்லி த்ழை இருந்தால் பொடியாக நறுக்கி உப்பும் போட்டு நன்கு கலந்து விட்டு, பிரெட்டில் கொஞ்சம் வெண்ணெய் தடவி இந்த கலவையை வைத்து ,அதன் மேல் இன்னொரு பிரெட்டை வைத்து அழுத்தி, தோசைகல்லில் போட்டு சிம்மில் எரியவிட்டு வெண்ணெய் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு பொன் கலரில் வந்ததும் எடுக்கவும். மசால் வாசனை வேண்டும் என்றால் வெங்காயம் வதங்கும் போது 1/2 ஸ்பூன் கறி மசால் பொடி சேர்க்கவும்.

Tuesday, February 26, 2008

வெல்ல சீடை

தேவையானவை:

(மாவு பதம் உப்பு சீடைக்கு சொன்னது போலதான் .)
வெல்லம் - மாவு 2 கப் என்றால் வெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 4
எள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கொஞ்சம் முற்றிய தேங்காய் என்றால் வாசனையாக இருக்கும்
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

வெல்லத்தை தூள் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைந்தபின் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பிசுகென்று வரும் போது மாவை போட்டு மற்ற எல்லா பொருள்களையும் போட்டு கெட்டியாக பிசைந்து துணியில் ஊருட்டி போட்டு பொரித்து எடுக்கவும். கண்டிப்பாக மாவை வறுத்துதான் செய்ய வேண்டும். இல்லையெனில் உருண்டைகளை போட்டவுடன் கரைந்து விடும். மாவின் பதமும் கெட்டியாகதான் இருக்கவேண்டும். அதற்கு தகுந்தபடி மாவில் கொஞ்சம் , கொஞ்சமாக வெல்லம் ஊற்றி பிசைவும். உருட்டும் பதம் வராவிட்டால் அதில் கொஞ்சம் கோதுமை மாவு கலந்து அப்பமாக பொரித்துக் கொள்ளலாம். கலந்த மாவை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

சீடை [உப்பு சீடை]

தேவையானவை:

மாவு பச்சரிசி - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 50 கிராம்
கல் உப்பு, பெருங்காயம் - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்.
கடலைப் பருப்பு [அ] பாசிப்பருப்பு ஊறவக்கவும் [3 ஸ்பூன்]

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி நிழலில் காய வைத்து அரைத்து கொள்ளவும். மாவு ஈரமாக இருக்கும். நன்கு சலித்து கொள்ளவும். இல்லையெனில் சீடை வெடிக்கும். ஊளுத்தம்பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசிமாவை கெட்டியான வாணலியில் போட்டு கோலம் போடும் பதத்திற்கு வறுக்கவும். அதனுடன் எல்லாவற்றையும் சேர்த்து [ பெருங்காயம்,உப்பு ஊறவைத்து அந்த நீர், மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு கொஞ்ச நேரம் காய்ந்தபின் எண்ணெயில் பொட்டு பொரித்து எடுக்கவும். காரம் தேவைபடுபவர்கள் மிளகாய்தூள் [அ] மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் சேர்க்கும் போது ஈரம் இருப்பதால் தண்ணீர் தெளித்து பிசையவும். முதலிலேயே தண்ணீர் அதிகமாக போனால் ஒன்றும் செய்ய முடியாது. கவனமாக செய்யவும். மாவை வறுக்காமல் போட்டால் சீடை வெடிக்கும்.