Friday, December 21, 2007

புளி பேஸ்ட்

தேவையான அளவு புளியை சுடுநீரில் ஊறவைத்து,மிக்ஸியில் அரைக்கவும் ஓடு, நார் எதுவும் இல்லாமல் வடிகட்டி மைக்ரோ-ஹையில் மூடாமல் 10 நிமிடம் வைத்து நடுவில் ஒரு முறை கலந்து விடவும். தேவையான உப்பை போடவும். கெட்டியாக இருக்க வேண்டும். இதுதான் புளி பேஸ்ட் ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும்.

மைக்ரோவேவ் சமையல் உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை - 1 கப்
சுடு நீர் - 2.5 கப்
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறியதுண்டு
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, பருப்புகளை கலந்து, ஓவன் பாத்திரத்தை கொஞ்சம் மூடி, ஹையில் 2 நிமிடம் வைக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் ஹையில் வைக்கவும். பின் வெளியே எடுத்து சுடுநீர் சேர்த்து, உப்பும் சேர்த்து ரவையும் போட்டு கலந்து மூடாமல் ஹையில் 8 நிமிடம் வைக்கவும். பின் வெளியே எடுத்து கொஞ்சம் எண்ணெய், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்க்கவும். பின் 1 நிமிடம் ஒவனில் வைத்து எடுத்து சாப்பிடலாம்.

Tuesday, December 18, 2007

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்:

1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.

2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.

3. சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும். சுடு நீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவு.

4. புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க பச்ச்சரிசியில் வைப்பதுபோலவே நேரம் அளவு வைக்கவேண்டும்.

5. பாசுமதி அரிசியில் சமைக்கும் போது அரிசியும்,தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் ஹையில் வைக்கவும்.

6. பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும்,நீரும் பாதி அளவுதான் இருக்கவேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

7. அதிக எண்ணெய் உபயோகபடுத்தி செய்யும் சமையலுக்கு 300 டிகிரி சென்டி கிரேட் தாங்கும் பாத்திரத்தைதான் உபயோகிக்கவேண்டும்.' மைக்ரோ-வேவ் ப்ரூஃப் ' என்று எழுதி இருக்கும் பாத்திரத்தை பார்த்து வாங்கவேண்டும்.

8. குழம்பு,மற்றும் கிரேவிகள் சமைத்தவுடன் வெளியே எடுத்தவுடன் குனிந்து பார்க்ககூடாது. அதிக சூட்டின் காரணமாக முகத்தில் படும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

9. மூடியைத் திறக்கும் சமயம் மிகவும் கவனமாக மெதுவாக கொஞ்சம், கொஞ்சமாக திறக்கவும். அவசரமாக திறக்கும் சமயம் நீராவி வெளிவரும்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

10. ஓவனில் இருந்து பாத்திரத்தை வெறும் கைகளால் எடுக்ககூடாது.க்ளவுஸ் [அ] பிடித் துணியை பிடித்தோதான் எடுக்க வேண்டும்.ஏனெனில் ஓவனில் அலைகள் அதிகமாக இருக்கும்.கை சிறிது தவறினாலும் காயம் ஏற்படும்.

11. ஒவ்வொரு அவனிலும் ஒவ்வொரு மாதிரியான மின்சக்தியின் அளவுகள் குறிக்கபட்டு இருக்கும். அதில் இருக்கும் குறிப்பீட்டு முறையை படித்து புரிந்து கொண்ட பிறகே ஓவனை பயன்படுத்த வேண்டும்.

12. கேஸ்ஸில் சமைப்பதுபோலவே 1,2,3,4,5. இருப்பதுபோல் ஓவனிலும் மின் சக்தி 100 '/. 75 ./. 50 ./. 25 ./. என்று உள்ளன. அதிலும் ஓவனுக்கு ஓவன் மின் சக்தி குறியீடுகள் வித்யாசம் இருக்கும்.அதனால் நாம் உபயோகபடுத்தும் உணவின் அளவு, அதன் தன்மை, ஈரப்பதம் ஆகியவற்றை பொருத்தும் சமைக்கும் நேரம் வித்யாசப்படும்.

13. சப்பாத்திகளை மறுபடியும் சூடுசெய்யவேண்டுமானால் அவற்றை சுத்தமான துணியில் சுற்றி 30, முதல் 30 வினாடிகள் வைக்கவும். இட்லிகளை மறு சூடு செய்ய இட்லிகளை நீரில் நனைத்து அவன் பாத்திரத்தில் போட்டு மூடி, 10, 15 நிமிடம் வைக்கவும்.

14. உப்புமா, சாதம், பொரியலோ, பிரியாணியோ மறுசூடு செய்ய விரும்பினால் அவனில் வைக்கும் பாத்திரத்தில் அதை போட்டு சிறிதளவு நீரைத் தளித்து சூடு செய்தால் வறண்டு போகாமலும், அப்போதுதான் செய்தது போல் இருக்கும்.

15. ஒவனுக்கு பாத்திரங்கள் வாங்கும்போது அதற்காகவே தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் மைக்ரோ-சேஃப் என்று போட்டு இருந்தால் அவற்றை மறு சூடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றையும் 3 நிமிடங்களுக்கு மேல் ஓவனில் வைக்க கூடாது. 110 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்கும் என்று கூறி கடைகளில் விற்கப்படும் பாத்திரங்களை வெறும் தண்ணீரில் வேகவைக்கும் உணவு பொருள்களை மட்டுமே தயாரிக்க முடியும்.

16. ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்து சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்ப்டும். உலோகபாத்திரங்களை ஓவனில் வைத்து சமைக்ககூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து,ஓவனின் உட்புற உலோக தகட்டில் பட்டு பக்க விளைவுகள் ஏற்படும்.

17. அப்பளம் சுடும்போது, அப்பளத்தை சிறியதாக ஒடித்து கூரான முனை சுழலும் தட்டின் நடுபாகத்தை பார்ப்பதுபோல் வைத்தால் அப்பளம் சீராக சுடும். ஒன்றன் மேல் ஒன்றாக கூட வைத்து சுடலாம்.ஓவனில் வைக்கும் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலினால் முழுவதுமாக மூடி வைக்க கூடாது. அதிக அளவு வேககூடாது என்ற பகுதியை மட்டும் ஃபாயிலினால் மூட வேண்டும். அந்த அலுமினியம் ஃபாயில் ஓவனின் உட்புற உலோகதகடு உள்ள எந்த பாகத்தையும் தொடகூடாது. அப்படி தொட்டுகொண்டு இருந்தால் ஒவன் சீக்கிரம் ரிப்பேராகிவிடும். அதனால் தீ விபத்தும் ஏற்படலாம்.

18. உப்புமா செய்யும் போது, மிக குறைந்த எண்ணெயில் தயாரித்தபின், வெளியே எடுத்தபிறகு தேவையான எண்ணெய்ச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும். எண்ணெயின் கொதிநிலை 300 டிகிரி சென்டிகிரேட் என்பதால் முதலிலேயே முழு எண்ணெய் சேர்க்ககூடாது.

19. காய்களை ஒரே அளவாக நறுக்கிகொண்டுதான் வேகவைக்கவேண்டும். வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும். உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கள் வறண்டுவிடும்.ஆதலால் வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

20. உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்,சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள் கரண்டியால் குத்தியோ, அல்லது துண்டாகவோ செய்துதான் ஓவனில் வைக்க வேண்டும்.தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம்மூடி வைக்கவும். பின் வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

21. ஓவனின் உள் பக்கத்தையும்,வெளிபக்கத்தையும் துடைத்து சுத்தமாக ஈர துணியால் துடைக்கவும். அதிக நாட்கள் உழைக்கும். மைக்ரோவேவ் சமையலில் உள்ளே வைக்க அகன்ற பாத்திரங்களையே உபயோகிக்க வேண்டும்.

Thursday, November 15, 2007

டிப்ஸ்

எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் 1+1 என்ற அளவில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் பலப்படும்.

1 ஸ்பூன் தேனில் கடுகு அளவு லவங்கபொடியை குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம்பெறும்.

சிறிய வெங்காயத்தின் சாறு 1 ஸ்பூன்,தேன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட உடலின் சக்தி கூடும். இஞ்சியை தோல் நீக்கி, துண்டாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு துண்டுகள் 4 முறை சாப்பிட சக்தி கூடும்.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து உண்டால் சளி, கபகட்டு, வயிறு சம்பந்தபட்ட நோய்கள் தீரும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் தலைசுற்றலுக்கு நல்லது.

சிறிது சுக்கை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வாயு,விக்கல் போகும். சூட்டினால் வயிற்றில் வலி இருந்தால் சுடுநீரில் [1கப்] பெருங்காயம், துளி உப்பு கலந்து மெதுவாக குடித்தால் குணம் தெரியும். 1ஸ்பூன் சீரகத்தை நன்றாக மென்று தின்று 1 டம்ளர் சுடுநீர்[ வெந்நீர்] மெல்ல குடித்தாலும் குணம் தெரியும்.

பேரிச்சம்பழம் 5 தினமும் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடி நரம்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.பாசி பயறை முளைகட்டி சாப்பிட, வெந்நீரில் தினசரி தேன் கலந்து சாப்பிட, நெல்லிக்காயை[அ] நெல்லி பொடியை தேனில் கலந்து சாப்பிட, வாரம் ஒரு தடவையாவது சுண்டைக்காயை சமையலில் சேர்த்துகொள்ளலாம். வசம்பு பொடியை காலை,மாலை 1/4 ஸ்பூன் சுடுநீரில் கலந்து குடித்தாலும் நரம்பு தளர்ச்சி நீங்கும்.

ஃபிரிட்ஜ் இருக்கிறதே என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம். மலிவாக கிடைக்கிறது என்றும் ஃப்ரிட்ஜில் காய்களை அடைக்க வேண்டாம். 2 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் வைக்கும் கவர்களை மாற்ற வேண்டும். பார்க்காமல் விட்டால் எல்லாம் அழுகி போய்விடும். தினமும் அரிசி உணவை குறைத்து காய்கள்,பழங்கள், சூப்,சாலட், என்று சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும்.

தேங்காய் நிறைய இருந்தால் துருவி ஃப்ளாஸ்டிக் பாக்ஸில் போட்டு ஃப்ரிசரில் வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அப்போதுதான் துருவியதுபோல் இருக்கும். ஆனால் 2 நிமிடம்முன்பே தேவையானதை எடுத்து வெளியில் வைத்து கொள்ள வேண்டும். சட்னிக்கு தேவைஎனில் அதில் கொஞ்சம் சுடுநீர் ஊற்றி ஆறியபின் உபயோகபடுத்தலாம்.

முட்டைகோஸ் வாங்கும்போது இலைபிரியாமலும்,பச்சையாகவும் இருந்தால் புதியது. கீரைகள் மஞ்சளாக இருந்தாளோ, பூத்து இருந்தால் அது பழையது.

கோதுமை ரவை வெஜிடபுள் உப்புமா

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை-1/4கிலோ,
காய்கறிகள் (அளவுகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப)
இஞ்சி- சிறிய துண்டு,
பெரியவெங்காயம்-2,
பச்சைமிளகாய்-8,
தாளிக்க எண்ணெய்-25கிராம்,
ஊப்பு தேவையான அளவு,
தண்ணீர்- 4.1/2 டம்ளர்,

செய்முறை:

ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,1/4 ஸ்பூன்பெருங்காயம் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பொடியாக நறுக்கிய காய்கறிகளை போட்டு,உடனே தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கலந்து ஒரு கொதிவந்ததும் மிளகாயைபோட்டு குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.கொஞ்சநேரம் கழித்து திறந்து 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். மணம் உள்ள உப்புமா தயார். இதிலேயே பட்டை, லவங்கம், ஏலக்காய், பூண்டு சேர்த்தால் மசாலா உப்புமா. குக்கரில் வைப்பதால் காய்கள், ரவை எல்லாம் நன்றாக வெந்து இருக்கும். 1 விசில் விட்டால் உதிராக இருக்கும். குழைய வேண்டுமானால் கொஞ்சம் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டால் போதும்.எல்லாம் ரெடி செய்துவைத்து கொண்டு ஆரம்பித்தால் 5 நிமிடத்தில் உப்புமா ரெடி.

Wednesday, November 14, 2007

சீரகப் பொடி

தேவையானவை:

சீரகம் - 1 கப்
பெரிய எலுமிச்சை பழம் - 5
இஞ்சி - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
சிறிய கட்டி - பெருங்காயம்
உப்பு - தேவையானது

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து இந்த சாறுடன் இஞ்சி சாறையும் கலந்து உப்பும்போட்டு மிளகு, சிரகத்தை ஊற வைக்கவும். இந்த இரு சாறுகளிலும் நன்கு முழ்கி ஊற வேண்டும். அடிக்கடி நன்குகலந்து, சாறுகளில் நன்றாக ஊறியபின் தினமும் எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து சாறு இருக்கும் வரை இரவில் ஊறவைத்து காலையில் வெயிலில் காய வைக்கவேண்டும். வெயில் படுவதால் விட்டமின் C கிடைக்கும் தேவையானால் இதனுடன் 2 -ஸ்பூன் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியபின் ஒன்றாக கலந்து பொடி செய்து கொண்டால் சீரகபொடி தயார். இந்த பொடியை சூடான சாதத்தில் பிசைந்து தேவையானால் நெய் ஊற்றி கொள்ளலாம்] சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிறு சம்பந்தபட்ட அனைத்து உபாதைகளுக்கும் இந்த பொடி நல்ல மருந்தாகும். இதே பொடியில் மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்க்கும் முன்பு, பனங்கற்கண்டு, 4 ஏலக்காய் போட்டு பொடி செய்து கலந்து கொள்ளலாம்.

இனிப்பு பிடித்தவர்கள் இதை சாப்பிடலாம். காரம் பிடித்தவரகள் அந்த பொடியை சாப்பிடலாம். இரண்டுமே நல்லா இருக்கும். பித்தம், ஏப்பம், தலைசுற்றல் போன்றவற்றையும் குணபடுத்தும் ஆற்றல் இந்த
பொடிக்கு உண்டு.

Thursday, November 8, 2007

இஞ்சி ரசம்

தேவையான பொருள்கள்:

இஞ்சி- 50 கிராம், தோல் சீவி நன்கு
நசுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய்- 4,
மிளகு- 1ஸ்பூன்,
சீரகம்-1 ஸ்பூன்,
துவரம்பருப்பு-1 ஸ்பூன்,
தனியா- 1 ஸ்பூன்,
எலுமிச்சம் பழம்-2,
தாளிக்க கடுகு,நெய்,

செய்முறை:

மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்,கீறிய பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும். பாதி சுண்டிய பின் நசுக்கிய இஞ்சி போட்டு ஒரு கொதி வந்த பின் பொடி செய்து வைத்துள்ளதை போட்டு புளிப்புக்கு தகுந்த மாதிரி தண்ணீர் விட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்து மூடி வைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைபழம் பிழிந்து கலக்கி கொள்ளவும். இந்த ரசம் பித்தத்தை போக்கும். இந்த ரசத்திற்க்கு புளி, தக்காளி போட கூடாது. ஏனெனில் இஞ்சியின் குணம் தெரியாது.

கண்டந்திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள்:

கண்டந்திப்பிலி - 10 கிராம்,
அரிசி திப்பிலி- 10 கிராம்,
தனியா- 1 ஸ்பூன், சீரகம்-1 ஸ்பூன்,
மிளகு- 1/4 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-4,
புளி- எலுமிச்சை அளவு,
தாளிக்க- கடுகு- 1/2 ஸ்பூன்,
தாளிக்க நெய்- 1 ஸூன்,
உப்பு- சுவைக்கு ஏற்ப .

செய்முறை:

கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலியை நெய்யில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து கொண்டு பின், அதனுடன் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தயும் பச்சையாகவே போட்டு அரைக்கவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். ஒரு கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, மிளகாய் தாளித்து, கொஞ்சம் மஞ்சள்தூள் போட்டு புளி கரைசலை ஊற்றி, உப்பும் போட்டுகொதிக்க விடவும். பாதி சுண்டிய பின் அரைத்த விழுதை போட்டு நுரைத்து வந்ததும் இறக்கி விடவும். இதற்கு தக்காளி சேர்க்க கூடாது. சேர்த்தால் கண்டந்திப்பிலியின் குணம் கிடைக்காது. இந்த ரசத்தை சூடாக குடித்தால் தலைவலி, ஜலதோஷம்,உடம்புவலி நீங்கும்.

வெந்தயம் தரும் வனப்பு

1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம். ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

3. வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட் சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.

5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். இது என் அனுபவம்.

7. சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து செல்லவும்.

8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்.

9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

10.வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர்.

11. எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.

12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

13. 3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பது நல்லது.

14. தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

Monday, November 5, 2007

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்,
உளுத்தம்ப்ருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்,
மல்லி விதை - 2 ஸ்பூன
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்,
காய்ந்த ம்ளகாய் - 10,
சீரகம் - 1/2ஸ்பூன்,
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
புளி - கொஞ்சம் ருசிக்கு,
உப்பு தேவையான அளவு.
கறிவேப்பிலை உதிர்த்தது - 2 கப்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடாமல் மேலே கூறி உள்ள பொருட்களை தனிதனியாக வறுத்து, இறுதியில் 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு புளியை கறுக விடாமல் வறுத்து, எல்லாவற்றையும், நன்றாக கலந்து மிக்ஸியில், பொடி செய்துச் செய்து கொள்ளவும், கடைசியில் 1 ஸ்பூன் சர்க்கரை தேவையானல் கலந்து கொள்ளலாம், இந்த பொடியை, சாதம் உதிராக வடித்து அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து, இந்த பொடியை தேவையான அளவு கலந்தால் கறிவேப்பிலை சாதம் ரெடி. மேலே நமக்கு தேவையான, மல்லியோ, தக்காளியோ, வெங்காயமோ, காராபூந்தியோ கலந்து சாப்பிடலாம்.

சுண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் பிஞ்சானது - 1 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 6
புளி விழுது - 2 ஸ்பூன்
பெருங்காயம், மஞ்சள்தூள், 1/4, ஸ்பூன்,
தாளிக்க கடுகு, உப்பு தேவையான அளவு,

செய்முறை:

துவரம்பருப்பை லேசாக வறுத்து குழைய வேகவிடவும். சுண்டைக்காயை பளாஸ்டிக் கவரில் போட்டு குழவிக்கல்லால் தட்டினால் விதை தனியாக வந்துவிடும்.அதை புளி விழுதில் கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி வைக்கவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, ஊளுத்தம்பருப்பு,பெருங்காயம், கீறிய மிளகாய், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதங்கியதும், தக்காளியை போட்டு, உப்பு சேர்த்து வதங்கியபின் சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும. பச்சை வாசனை போன பின் வேகவைத்த பருப்பை சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

சுண்டைக்காயை பொடியாக நறுக்கியும் செய்யலாம். கொஞ்சம் பொறுமை வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும், ஆரோக்கியம் தரும் அருமையான பச்சடி. அடிக்கடி செய்து சாப்பிட்டால் வயிறு கோளாறுகள் ஏதும் வராது.

வெண்டைக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:

புளிக்காத தயிர் - 1 கப்
வெண்டைக்காய் - 100 கிராம்
தேங்காய் துறுவியது - 1 கப்
பச்சை மிளகாய் - 6
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க கடுகு, சீரகம், ஊளுத்தம் பருப்பு, பெருங்காயம் - தலா 1/4 ஸ்பூன்,

செய்முறை:

நறுக்கும் முன்பே தண்ணீரில் வெண்டைக்காயை அலம்பி பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் 2-ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, ஊளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கவும். தேங்காய், பச்சைமிளகாயை அரைத்து தயிரில் கலந்து, அதில் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, போட்டு, நன்கு கலந்து வாசனைக்கு 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து மல்லி தழை தூவி கலந்து பரிமாறவும். ருசியான தயிர் பச்சடி ரெடி.

குட மிளகாய் குழம்பு

தேவையானவை:

துவரம் பருப்பு - 1/2 கப்
குடமிளகாய் பெரியதாக இருந்தால் - 2 அல்லது 3
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய்-6
மிளகு - 2 ஸ்பூன் தட்டி வைக்கவும்
உப்பு - தேவையானது
தாளிக்க கடுகு, சீரகம்-1/2 ஸ்பூன்,

செய்முறை:

பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி தக்காளியை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி குட மிளகாயை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கி, பின் வெந்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, மல்லி இலை தூவி விடவும். இதில் மிளகாய் எண்ணெயில் வதங்கும் வாசனைதான் குழம்புக்கு ருசி தரும்.பச்சை மிளகாயை பருப்பில் வேகவைத்தும் சேர்க்கலாம், பச்சை மிளகாய் வேண்டாம் என்று நி்னைப்பவர்கள் மிளகை தட்டி சேர்க்கலாம்.

வாழைக்காய் குழம்பு

தேவையானவை:

பாசிபருப்பு - 1/4 கப்
வாழைக்காய் பெரியது - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 5
புளி சிறிய எலுமிச்சை அளவு [அ] எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க, கடுகு, சீரகம்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

பாசிபருப்பை லேசாக வறுத்து மலர வேக வைத்து கொள்ள வேண்டும். வறுப்பதால் குழம்பு, வாசனையாகவும், அதிக நேரம் இருந்தாலும் கெடாமலும் இருக்கும். வாழைக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். கெட்டியான் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு,சீரகம் தாளித்து மஞ்சள்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து வதக்கவும். பின் புளி கரைசலை ஊற்றி சாம்பார் பொடியையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, வேக வைத்துள்ள பருப்பை கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதாக இருந்தால் குழம்பை இறக்கும் சமயம் சேர்க்கவும். இந்த குழம்பு கொஞ்சம் தண்ணீயாக இருந்தால்தான் ருசியாக இருக்கும். இறக்கிய பின் கறிவேப்பிலை, மல்லி பெருங்காயம் சேர்க்கவும். வாழைக்காயில் வித்யாசமான டிஷ் இது.

இஞ்சி சட்னி

தேவையானவை:

இஞ்சி - 100 கிராம்,
கடலைபருப்பு -1 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு - 1 ஸபூன்,
புளி - கொஞ்சம்
வர மிளகாய் - 8
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
தாளிக்க கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி நார் இல்லாமல் இருக்க வேண்டும், அப்போதுதான் சட்னி சுவையாக இருக்கும். இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக ந்றுக்கி, வாணலியை காய வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி இஞ்சியை வதக்கவும். அதை எடுத்துவிட்டு உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம், தேங்காய், புளி, வரமிளகாய் இவற்றை வறுத்து ஆறவைத்து அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சுவைக்கு (தேவைப்பட்டால்) கொஞ்சம் வெல்லம் சேர்ககலாம். இஞ்சி சட்னி சாப்பிடுவதால் பித்தம் குறையும. நன்கு பசி எடுக்கும்.

தக்காளி சட்னி

தெவையானவை:

தக்காளி - 10
சாம்பார் பொடி-3ஸ்பூன்
உப்பு
புளி - கொஞ்சம்

செய்முறை:

தக்காளியை நீர் சுண்டும் வரை நன்கு வதக்கி,அதனுடன் புளி சேர்த்து சாம்பார் பொடி, உப்பும் சேர்த்து ஆறியபின் கெட்டியாக அரைக்கவும். சிறிய வாணலியை எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். விரைவில் செய்ய கூடிய சட்னி இது.

எள் சட்னி

தேவையானவை:

கறுப்பு எள் - 1 கப்
கறுப்பு உளுந்து - 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல்- 1ஸ்பூன்
புளி - கொஞ்சம்
உப்பு தேவையானவை
எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் தீய விடாமல் வறுத்து கொள்ளவும். பட, படவென்று. எண்ணெய் காய வைத்து உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, தேங்காய், உப்பு போட்டு வறுத்து ஆறியதும், எள் சேர்த்து மிக்ஸியில் கர, கரவென்று அரைக்க்கவும். எள் சட்னி தயார்.

பூசணிக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 100 கிராம்
பாசி பருப்பு வறுத்தது - 1 கப்
பச்சை மிளகாய் - 7
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தாளிக்க - கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு

செய்முறை:

காயை தோல் சீவி பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். தேங்காயுடன், சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். காய் வெந்ததும் அரைத்ததை போட்டு 2 நிமிடம் கழித்து வெந்த பாசிபருப்பை சேர்த்து நன்கு கொதி வந்ததும் இறக்கி தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். சத்துக்கள் நிறைந்த இந்த கூட்டு சூப்பராக இருக்கும்.

கோஸ்மல்லி

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு - 1 கப்,
துருவிய கேரட் - 1 கப்,
பச்சை மிளகாய் - 5,
எலுமிச்சம் பழம் - 1 [அ] சிட்ரிக் பவுடர்- 1/4 ஸ்பூன்,
மல்லி இலை - 1 கைப்பிடி,
கறிவேப்பிலை - 10.
உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

பாசி பருப்பை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பின் நன்கு தண்ணிரை வடித்து விட்டு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் உப்பு, எலுமிச்சை சாறு , மல்லி இலை போட்டு நன்கு கலந்து கடுகு தாளிக்கவும். இதற்கு பருப்பை பச்சையாகதான் போடவேண்டும்.அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு தரும்.

பாகற்காய் பிட்ளை

தேவையானது:

பாகற்காய் - 300 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - 25கிராம்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்,
தனியா - 3 ஸ்பூன்,
வரமிளகாய் - 8,
பெருங்காயம் - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,

செய்முறை:

பாகற்காயை பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு கொஞ்சம் சேர்த்து பிசிறி வைக்கவும. வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காய்த்தை பொரித்து எடுத்து கொண்டு உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, தனியா, இவற்றை சிவக்க பொன் கலரில் வறுத்து பின் தேங்காய், மிளகாய் போட்டு வறுத்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் கர கரவென்று அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, தாளித்து பாகற்காயை போட்டு நன்கு வதக்கவும். பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். நன்கு வெந்த காயுடன், பருப்பு, அரைத்த விழுது, புளி, உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். தேவைபட்டால் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து கொள்ளலம். சுவையான மணக்கும் பாகற்காய் பிட்ளை தயார். கடைசியில் மல்லி, கறிவேப்பிலை போடவும்.

சுண்டைக்காய் குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய்-1-கப்,
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது- 1,
தக்காளி-4,
மிளகாய்தூள்-1.1/2 ஸ்பூன்,
தனியாதூள்-1/4 ஸ்பூன்,
புளி விழுது-1 ஸ்பூன்,
பட்டை-1,
லவங்கம்-2,
இஞ்சி,பூண்டு விழுது-1 ஸ்பூன்,
உப்பு தேவையானது.

செய்முறை:

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி கொள்ளவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு,சீரக்ம்,பட்டை,லவங்கம் தாளித்து இஞ்சி,பூண்டை போட்டு வதக்கி மஞ்சள்தூள் சேர்த்து சுண்டைக்காயை போட்டு நன்கு வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் கழித்து தக்காளியை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து மேலே வரும்வரை வதக்கவும். பின் உப்பு,புளி சேர்த்து , 1-கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.தேவை எனில் இன்னும் தண்ணிர் சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, மல்லி சேர்க்கவும்.சுண்டைக்காய் குழம்பை அடிக்கடி செய்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் வராது.

முளை கட்டிய பாசிபயறு குழம்பு

தேவையானவை:

பாசிபயறு - 300 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
பெங்களுர் தக்காளி -4. [இதற்கு பெங்களுர் தக்காளிதான் நன்றாக இருக்கும். அதில்தான் குழம்பு கிடைக்கும். பெரியதாக இருக்கனும்]
கறிமசால் பவுடர் - 2 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்,
மிளகாய்தூள் -2 ஸ்பூன்,
தனியாதூள் - 1 ஸ்பூன்,
உப்பு தேவையானது

செய்முறை:

பாசிபயறை முதல் நாளே நன்கு கழுவி ஊற வைத்து இரவில் தண்ணீரை வடித்துவிட்டு ஹாட் பேக்கில் போட்டு வைத்தால் அடுத்தநாள் முளை கட்டிவிடும். தக்காளி, வெங்காயத்தை பச்சையாக மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, சீரகம் தாளித்து இஞ்சி,பூண்டு விழுதை போட்டு கொஞ்சம் வதங்கியபின் தக்காளி விழுதை போட்டு கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் மசால்பொடி, தனியா தூள், மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி முளைகட்டிய பயறை போட்டு நன்கு கலந்து சிம்மில் அடுப்பை எரிய விட்டால் கொஞ்ச நேரத்தில் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் மேலே வரும். கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். [பயறை போட்டபின் குக்கரில் 1 விசில்விட்டு இறக்கலாம.] இந்த குழம்பு சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் சூப்பர் சைட் டிஷ்.

கொட்டு ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு - 2 ஸ்பூன்,
தனியா - 1 ஸ்பூன்,
மிளகு, சீரக்பொடி - 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
தாளிக்க கடுகு, சீரகம்
உப்பு தேவையானது
2- ஸ்பூன் நெய்

செய்முறை:

புளியை 5நிமிடம் முன்பு சுடுநீரில் ஊறவைக்கவும். மேலே கொடுத்துள்ள பொருள்களை எண்ணெய் விடாமல் வறுத்து கரகர வென்று பொடி செய்து கொள்ளவும். புளியை நன்கு கரைத்து இந்த பொடியை கலந்து கொதிக்க வைத்து புளிப்புக்கு தகுந்த தண்ணீர், உப்பு சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி வைத்து நெய்யை காய வைத்து கடுகு, சீரகம் பெருங்காயம் தாளிக்கவும். கடைசியில் மிளகு, சீரகபொடி, கறிவேப்பிலை,மல்லி சேர்க்கவும்.

இந்த ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இந்த ரசம் செய்து சாப்பிட்டால் சீக்கிரம் குணமாகும். சீக்கிரம் செய்து விடலாம்.நெய்யில் தாளித்தால்தான் இந்த ரசம் ருசியாக இருக்கும்.

கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்:

கொள்ளு-1-கப்,
புளி பெரிய எலுமிச்சை அளவு,
கிளகு,சீரகம்- 2ஸ்பூன்,
பெருங்காயம்-கொஞ்சம்,
ரசபொடி- 3ஸ்பூன்,
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்,
கடுக்கு, சீரகம்-1/2 ஸ்பூன்,
உப்பு தேவையானது,
தாளிக்க நெய்-2ஸ்பூன்

செய்முறை:

கொள்ளை வெடிக்கும்படி வறுத்து ஊற வைத்து நன்கு குழைய வேகவிட்டு கொள்ளவும். கெட்டியான வாணலியில் புளியை கரைத்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். புளி பச்சை வாசனை போன பின் வேக வைத்துள்ள கொள்ளுடன், மிளகு, சீரகபொடி,ரசபொடி இவற்றை போட்டு நன்கு மசித்து தேவையான தண்ணீர் கலந்து கொதித்து கொண்டு இருக்கும் புளியில் விட்டு நன்கு கலந்து எல்லாம் நன்கு நுரைத்து வரும் சமயம் இறக்கி வைத்து நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி தூவிவிடவும்.இந்த ரசம் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க செய்யும். பூண்டு வாசனை பிடித்தவர்கள் கடைசியில் 4பல் பூண்டை தட்டி சேர்த்து கொள்ளலாம். ரசம் செய்த உடன் டம்ளரில் ஊற்றி குடித்தால் உடம்புக்கு தெம்பு வந்ததுபோல் இருக்கும்.குளிர்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

தனியா பொடி

தேவையான பொருட்கள்:

தனியா[ மல்லி விதை]- 1-கப்
உளுத்தம்பருப்பு- 2ஸ்பூன்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-1/2 ஸ்பூன்,
மிளகாய்- 20,
மிளகு-1/2 ஸ்பூன்,
புளி- சிறிய எலுமிச்சை அளவு, சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனிதனியாக பொன் கலரில் வறுத்து, கடைசியில் கல் உப்பையும் வறுத்து, புளியையும் சிறியதாக பிய்த்து வறுத்து கொள்ளவும். நன்கு ஆறியபின் கரகரவென்று பொடிசெய்து ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

இந்த பொடியில் தனியாவை அதிகம் சேர்த்து பருப்பு வகைகளை மிகவும் கொஞ்சமாக போடனும். தனியா பித்தத்தை தணிக்கும். நன்கு பசி எடுக்கும். டூी செல்பவர்கள் இந்த பொடியில் நல்லெண்ணெய் கலந்து அதில் சாதத்தை கலந்து எடுத்து சென்றால் 2 நாட்கள் வரை சாதம் கெடாது. சாதம் கலக்கும் போது உப்பு சேர்த்து கொள்ளவேண்டும். எளிதில் செய்து விடலாம்.

அங்காயப் பொடி

தேவையானவை:

சுண்டைக்காய்-1/2 கப்,
வேப்பம்பூ- 1/4 கப்,
மணத்தக்காளி-1/4 கப்,
சுக்கு-1 சிறிய துண்டு,
மிளகு-1/2 ஸ்பூன்,
சீரகம்-1/2 ஸ்பூன்,
கல் உப்பு- தேவையானது,

செய்முறை:

மேலே கூறியுள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடி செய்து, தினமும் (சாப்பிடும் முன்பு) ஒரு பிடி சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்ட பின், மற்ற சாதம் சாப்பிடவும். இந்த பொடி வயிற்று சமபந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சின்ன வெங்காய ஊறுகாய்

தேவையானவை:

சின்ன வெங்காயம்-1/4 கிலோ,
புதிய புளி- 100கிராம்,
வெந்தயம்-1/4 ஸ்பூன்,
புதிய மிளகாய்ய்தூள்-100கிராம்,
சிறிய கட்டி வெல்ல்லம்,
உப்பு தேவையானது,
பெருங்காயம்-1/4 ஸ்பூன்,
தேவையான அளவு நல்லெண்ணெய்

செய்முறை:

வெந்தயம், பெருங்காயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும். புளியை நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்து கொண்டு அதிலேயே வெங்காயத்தை வதக்கி கொள்ளவும். ஆறியபின் கெட்டியாக அரைத்து கொண்டு, கெடடியாக உள்ள வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, தாளித்து 1/4 மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துள்ள விழுதை போட்டு, உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும். கொஞ்சம், கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து கிளற வேண்டும். நிறம் மாறியவுடன் மிளகாய்தூள், வெந்தய பொடி, பெ ருங்காயதூள், வெல்லம் சேர்த்து கிளறி சுண்டியபின் இறக்கி விடவும். முதலிலேயே புளியுடன் வெங்காயத்தை வதக்கி விடுவதால் சீக்கிரம் வதங்கி விடும். ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து கொண்டால் எத்தனை நாட்கள் ஆனாலூம் கெடாது. அதுக்குதான் வெல்லம் சேர்க்கிறோம். ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. சூப்பராக இருக்கும்.

பூண்டு தொக்கு

தேவையானவை:

பூண்டு-1/2 கிலோ,
புதியப்புளி-1/4 கிலோ,
மிளகாய்தூள்-200கிராம்,
உப்பு தேவையானது,
வறுத்த வெந்தயம், பெருங்காயம்- 1/4 ஸ்பூன்,
வெல்லம்- சிறியகட்டி,
எண்ணெய் தேவையானது,

செய்முறை:

பூண்டை தோல் நீக்கி பாதியை, சுத்தபடுத்திய புளியுடன்,உப்பும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி காய்ந்த பின் கடுகை போட்டு வெடித்தபின் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து பூண்டை போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து அரைத்த விழுதை போட்டு நன்கு சுருள வதக்கவும். நன்கு வதங்கிய பின் மிளகாய்தூள், வெந்தயபொடி, பெருங்காயதூள், வெல்லம், சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயம் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். புளிப்பும், காரமுமாக இந்த தொக்கு லேசான தித்திப்பு சுவையுடன் சூப்பராக இருக்கும்.

ஆரோக்கியம் காக்க

1. முருங்கைக்கீரை: வைட்டமின், ஏ, பி, சி, இரும்பு சத்து, 2 வாரத்துக்கு 1 முறை யாவது சாப்பிட்டால் மலகுடல்களில் சேரும் பூச்சிகள் வெளியேறும்.ஜீரண சக்தி குறைந்தவர்கள் [மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று சுற்றி] சாப்பிடலாம். கண் பார்வைக்கு நல்லது.

2. சிறுகீரை: இதில் கால்சியம் உள்ளது. அனைவருமே சாப்பிடலாம். மற்ற மருந்துகள் சாப்பிட்டு கொண்டு உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனையின் படிசாப்பிடலாம். நீரழிவு நோய் உள்ளவ்ர்கள் அடிக்கடி சாப்பிடலாம்.

3. மணத்தக்காளி: இதில் வைட்டமின் ஏ, பி, அதிக அளவில் உள்ளது. வயிற்றில் புண்,வாயில் புண் உள்ளவர்கள் தொடர்ந்து 2 நாட்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணம் தெரியும். உடலின் சூட்டை தணித்து, உடலின் உள் உறுப்புகளில் புண் இருந்தால் அடிக்கடி சாப்பிட்டால் நன்கு குணம் அடையும். வயிற்றில் பூச்சிகள் வராது தடுக்கும் ஆற்றல் இந்த கீரைக்குமட்டும்தான் உண்டு.

4. கேரட்: இதில் விட்டமின் ஏ, நிறைய உள்ளது. கார்போஹைட்ரேட், தாது உப்புகள் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. தினமும் 1 டம்ளர் கேரட் ஜுஸ் இடிக்கலாம். சர்ககரை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்லது. தினமும் 2 கேரட் சாப்பிட்டால் உடல் வெயிட் போடாது. கேரட் சூப் வைத்து குடிக்கும்போது மிளகு,சீரகதூள் சேருவதால் உடல் கழிவுகள் வெளியேறும்.

5. சுண்டைக்காய்: இதை எல்லோருமே சாப்பிடலாம். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட மூச்சு திணறல் குறையும். இதில் விட்டமின் சி, உள்ளது. வயிற்றில் சேரும் கிருமிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல்திறன்கூடும். சளியை கரைக்கும். இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, விட்டமின் ஏ, இந்த கீரையை எல்லோரும் சாப்பிடலாம். மூல சூடு உள்ளவர்கள், அதிக வெள்ளை பாடு உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 1 கப் சாப்பிடலாம். உடல் சூட்டை தணித்து உடலுக்கு வலிமை தரும்.

6. முடக்கத்தான் கீரையில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. மூட்டுவலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. எலும்புகளுக்கு இடையில் உள்ள திசுக்களுக்கு வலு தரும். வாயு, வாதத்தினால் வரும் வாத வீக்கம்,வலி, குடைச்சல் இவற்றை போக்கும்.

7. வெண்டைக்காயில் பாஸ்பரஸ், விட்டமின் ஏ, பி, சி, கொஞ்சம் அயன் சத்து. எலும்புகளுக்கு பலம் தரும். மூளைக்கு நல்லது. ஞாபக சக்தியை தூண்டும்.

8. பாகற்காயில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் பாலிபெப்டுடைட் என்ற வேதிபொருள் நிறைய உள்ளது. சர்க்கரை உள்ளவர்கள் தினமும் சாப்பிட நல்லது. தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும். வேறு உபாதைகளுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் கேட்டு சாப்பிடவேண்டும். ஏனெனில் அந்த மருந்தின் வீரியத்தை முறியடிக்கும்.

கார்ன் ப்ளார் அல்வா

தேவையான பொருட்கள்:

கார்ன் ப்ளார் -200கிராம் [1 டம்ளர்]
சர்க்கரை-400 கிராம்,
நெய்-500 கிராம்,
முந்திரி-50கிராம்,
பாதாம் பருப்பு-10 பொடியாக ஒடித்து கொள்ளவும்,
பிஸ்தா - 6 சிறியதாக் ஒடித்து கொள்ளவும்,
ஏலக்காய் -10,
சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும்,
விருப்பமான கலர்- கொஞ்சம்,
தண்ணீர்- 2 டம்ளர்,

செய்முறை:

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,பாதாம்,பிஸ்தா இவற்றை பொன் கலரில் வறுத்து எடுத்து கொண்டு 2 ஸ்பூன் நெய் விட்டு மாவை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.வறுப்பதால் அல்வா கட்டி தட்டாது, வாசனையாகவும் இருக்கும். அந்த வாணலியை அடுப்பில் வைத்து 2 டம்ளர் நீர் ஊற்றி கொதி வரும் சமயம் வறுத்த மாவை கொஞ்சம், கொஞ்சமாக தூவி நன்கு கிளறவும். கொஞ்சம் நெய்யை ஊற்றவும். கை விடாமல் நன்கு கிளறவும். இப்போது சர்க்கரை போட்டு கை விடாமல் கிளறவும்.அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்யவும்.கலரை சேர்க்கவும். நடுவில் நெய்யை ஊற்றி கிளறிகொண்டே இருக்கவும். மாவை வறுத்து செய்வதால் சீக்கிரமே ரெடி ஆகிவிடும். கடைசியில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஏலக்காய்தூள் சேர்த்து கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கவும். இந்த அல்வா செய்வது எளிது, டேஸ்ட் சூப்பராக இருக்கும். தேவையான பொருட்களை அருகில் வைத்து கொண்டு செய்யவும்.தேவையானால் வாசனைக்கு ரோஸ் எசன்ஸ் விடலாம்.

பெங்கால் ஸ்வீட்

தேவையான பொருட்கள்:

கெட்டியான பால்-1/2 லிட்டர்,
சர்க்கரை-1/2 கிலோ,
தேங்காய்-1,
முந்திரி-200கிராம்,
நெய்-100கிராம்,
ஏலபொடி-கொஞ்சம்,

செய்முறை:

தேங்காயை துருவி ,கொஞ்சம்பால், முந்திரியை சேர்த்து அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை,ஏலத்தூள், அரைத்த விழுது, மீதி பால் ஊற்றி கிளறவும். கெட்டியாக வந்தபின் நெய்யை ஊற்றி கிளறவும். கொஞ்ச நேரத்தில் நன்கு சுருண்டு வரும்போது இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் போட்டு, ஆறியபின் துண்டுகள் போடவும்.

கேரட் லட்டு

தேவையான பொருட்கள்:

கேரட்-1/2 கிலோ,
ரவை- 1/4 கிலோ,
கடலை மாவு- 2 ஸ்பூன்,
பால் கோவா- 1/4 கிலோ,
சர்க்கரை-3/4 கிலோ,
முந்திரி,பாதாம்,பிஸ்தா-சிறியதாக உடைத்து வைத்து கொள்ளவும்.
ஏலக்காய் பொடி கொஞ்சம்,
நெய்-1/2கிலோ,

செய்முறை:

கெட்டியான வாணலியில் 1 ஸ்பூன் நெய்விட்டு ரவையும்,கடலை மாவையும் பொன் நிறமாக வறுத்து கொள்ளவும். கேரட்டை துருவி அதோடு பால் கோவாவையும் சேர்த்து கொஞ்சம் நெய்விட்டு வதக்கி கொள்ளவும். சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவை, கேரட் உடைத்து வைதுள்ள முந்திரி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கெட்டியான பின் இற்க்கி வைத்து ஆறியபின் ல்ட்டுகளாக பிடிக்கவும்.

பாதாம் கீர்

தேவையான பொருட்கள்:

கெட்டியான பால்-1/2 லிட்டர்,
பாதாம்பருப்பு- 30,
சர்க்கரை- 1/2 கிலோ,
அரிசி மாவு- சிறிய ஸ்பூனில் 2,
தேங்காய்- 1,
ஏலக்காய்-2,
வெனில்லா எச்ன்ஸ்- 5 சொட்டுகள்.

செய்முறை:

தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து வைத்துகொள்ளவும். பாதாம்பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி பாதாம் விழுதுடன், அரிசிமாவு, சர்க்கரையை நன்கு கலந்து கை விடாமல் கிளறவும். கட்டி தட்ட கூடாது. இறக்கும் சமயம் தேங்காய்பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இற்க்கி, ஏலக்காய், எசன்ஸ் போடவும். சூடாகவும் குடிக்கலாம் . ஆறிய பின் ஃ ப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். அது அவரவர் விருப்பம் போல் செய்யலாம். கலர் வேண்டுமானால் குங்குமப்பூ போட்டு கொள்ளலாம். வாசனையாக இருக்கும்.

கேரட் அல்வா

தேவையான பொருட்கள்:

கேரட் துருவல்- 1 கப்
கெட்டியான பால்- 1 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - 200கிராம்
முந்திரி - 10
ஏலக்காய்-2

செய்முறை:

கேரட் துருவலுடன் ஏலக்காய் போட்டு, கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறி கொண்டே சர்க்கரை போட்டு கிளறவும்.முந்திரியையும் போட்டு நன்கு கிளறி கெட்டியான பின் மீதி நெய்யும் ஊற்றி பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான் கேரட் அல்வா தயார்.

நிலக்கடலை முறுக்கு

தேவையானவை:

அரிசி மாவு - 2 கப்
வறுத்த நிலகடலை - 1 கப்
உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்தது - 2 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - ருசிகேற்ப
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

நிலகடலையை மிக்ஸியில் பவுடர் செய்து, அதனுடன் அரிசி மாவு, எள், மிளகாய்தூள், உளுந்து பொடி, பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொண்டு, எண்ணெயை காய வைத்து சிறிய முறுக்குகளாக பிழிந்து வெந்தபின் எடுக்கவும். செய்வது எளிது.

தக்காளி சூப்

தேவையான பொருள்கள்:

தக்காளி-1/2கிலோ
பட்டை-1,
லவங்கம்-2,
ஏலக்காய்-2
நறுக்கிய வெங்காயம்- 1கப்,
பூண்டு-10 பல்,
இஞ்சி- சிறு துண்டு,
சிறிய கேரட்,
பீட்ரூட்-1 கலருக்கு,
தேவையான அளவு மிளகுதூள்,
ப்ரஷ் கீரிம்,
கொஞ்சம் வெண்ணெய்,
உப்பு சுவைகேற்ப.

செய்முறை:

ப்ரஷர் பேனில தக்காளி,வெங்காயம், பட்டை, லவங்கம்,ஏலக்காய், பூண்டு, இஞ்சி, கேரட்,பீட்ரூட், இவற்றுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ப்ரஷரில் ஒரு விசில் விட்டு இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும். பரிமாறும் சமயம் மிளகுதூள், போடவும். சாப்ப்பிடும்போது கப்புகளில் ஊற்றி மேலே வெண்ணெய் போட்டு கலந்து குடிக்கவும். பண்டிகை காலங்களில் இந்த சூப் செய்து சாப்பிட வயிற்றுக்கு நல்லது. சூப் கெட்டியாக வேண்டும் எனில் 1 உளுளைகிழங்கை வேக வைத்து, தக்காளியை அரைக்கும் போது அரைக்கவும். சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

மஷ்ரூம் சூப்

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம்- 200 கிராம்,
ப்ரஷ் கிரீம்-2 ஸ்பூன்,
மிளகு தூள் தேவையான அளவு,
உப்பு தேவையானது,
வெண்ணெய்- 2 ஸ்பூன்,

செய்முறை:

ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து மஷ்ரூமை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேக வைத்து, ஆறியபின் மிக்ஸியில் அரைத்து, அதை மறுபடியும் அடுப்பில் வைத்து மிளகுதூள், உப்பு, ப்ரஷ்கிரீம் சேர்த்து குடிக்கும் கப்புகளில் ஊற்றி, குடிக்கும்போது வெண்ணெய் மேலே போட்டு ருசித்து குடிக்கவும்.

கேரட் சூப்

தேவையான பொருட்கள்:

கேரட்- 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகுதூள் - 2 ஸ்பூன்
வெண்ணெய் - கொஞ்சம்
பூண்டு - 5 பற்கள்
உப்பு தேவையானது

செய்முறை:

கேரட்டை சுத்தம் செய்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தக்காளி, பூண்டு, வேக வைத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதி வந்த பின் இறக்கி பெரிய வெங்கயத்தை பொடியாக நறுக்கி தூவி,மேலே வெண்ணெய் போட்டு பரிமாறபடும் படும் கப்புகளில் ஊற்றி குடிக்கவும். சுவையான சூப் ரெடி.

பாசி பருப்பு பர்ஃபி

தேவையான பொருட்கள்:

1- கப் பாசிபருப்பை லேசாக வறுத்து மிக்ஸியில் பவுடர் செய்து கொள்ளவும்.
சர்க்கரை இல்லாத கோவா -50கிராம்,
சர்க்கரை- 2. 1/2கப்,
நெய்- 2. 1/2 கப்,
அழகுக்கு முந்திரி-10,

செய்முறை:

கெட்டியான வாணலியில் சர்க்கரை போட்டு அது முழ்கும் அளவுக்கு நீர் விட்டு கம்பி பதம் வரை கொதிக்க விடவும். மாவுடன் கோவாவை கலந்து வைத்து கொள்ளவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் மாவை கொஞ்சமாக தூவி கொண்டே கிளறவும். நடுவில் நெய்யை ஊற்றவும். எல்லாம் சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் வந்த சமயம், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் தேவைபடும் அளவில் கட் செய்து ஒவ்வோரு துண்டிலும் ஒரு முந்திரியை வைத்து அழகு செய்யவும். உடலுக்கும் நல்லது. சுவையும் சூப்பர்.

பிரெட் குலோப் ஜாமுன்

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் - 8
கோவா - 25 கிராம்,
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் - 2 ஸ்பூன்,
ஏலக்காய்தூள் -1/4 ஸ்பூன்,
பால்- 1/4-கப்,
ரோஸ் எசன்ஸ்- 1/4 ஸ்பூன்,
கேசரி கலர்- கொஞ்சம்,
பாகுக்கு சர்க்கரை- 1. 1/2 கப்,
ஜாமுன் பொரிக்க தேவையான நெய்[அ] எண்ணெய்.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி, பிரட்டின் ஓரங்களை நீக்கி விட்டு பிசையவும். வேறு கிண்ணத்தில் கோவா, 1 ஸ்பூன் சர்க்கரை, பருப்புகள், ஏலக்காய்,சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்ட, நடுவில் பருப்புகளை வைத்து மூடி உருட்டவும். ஒரு கெட்டியான பாத்திரத்தில் சர்க்கரை, 1 டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். வேறு கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்[அ] நெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன் கலரில் பொரித்து எடுத்து, இறக்கி வைத்துள்ள பாகில் போடவும். மாவை விரல்களால் மெதுவாக பிசையவும். ஜாமூன் மிருதுவாக இருக்கும். சுவையும் சூப்பராக இருக்கும்.

பிஸிபேளா பாத் பொடி

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு- 1 கப்,
தனியா[மல்லி] - 2 கப், துவரம் பருப்பு-3 ஸ்பூன்,
வெந்தயம்- 1 ஸ்பூன்,
கட்டி பெருங்காயம்- 10 கிராம்,
வர மிளகாய்- 150 கிராம்,
உளுத்தம்பருப்பு- 1/2 ஸ்பூன்
உப்பு- 3 ஸ்பூன்,
புளி- 200 கிராம்,
கொப்பரை தேங்காய்- 1 மூடி.
மஞ்சள் தூள்- 10 கிராம்,

செய்முறை:

புளியை சுத்தம் செய்து சிறியதாக எடுத்து வைக்கவும். மேலே கூறி உள்ள பொருட்கள் அனைத்தையும் தனி,தனியாக வறுத்து, பின் எல்லாவற்றையம் கலந்து மீண்டும் கலந்து வறுத்து[ பொன் நிறமாக] கடைசியில் புளியையும் வறுத்து கொண்டு ஆற வைத்து மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். இதுதான் பிஸிபேளாபாத் பொடி. அரிசியும்,பருப்பும் வேக வைத்து, [இதற்கு தகுந்த உப்பு போடவும்] இந்த பொடியை கலந்து, கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து விட்டால் பிஸிபேளாபாத் ரெடி.மசால் வாசனை தேவை படுபவர்கள் 1,பட்டை, லவங்கம்-2, முந்திரி-5 கடைசியில் வறுத்து போட்டு கொள்ளலாம். நல்ல மணத்துடன், சூப்பராக இருக்கும் இந்த பாத்.

சூப் பொடி

தேவையான பொருட்கள்:

கார்னஃப்ளார்- 100 கிராம்,
மிளகு- 50 கிராம்,
பட்டை-2, லவங்கம்- 4,
இஞ்சி- சிறிய துண்டு,
பூண்டு- 10 பற்கள்,
உப்பு- 2 ஸ்பூன்,

செய்முறை:

மிளகு,பட்டை,லவங்கம், பூண்டு, இஞ்சி இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து கார்ன்ஃப்ளார் மாவில் கலந்து வைத்து கொள்ளவும்.எந்த வகை சூப் செய்தாலும், இந்த போட்டு செய்யவும். சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த பொடி இருந்தால், 5 நிமிடத்தில் சூப் ரெடி செய்து விடலாம். எல்லா வகை சூப்புக்கும் ஏற்ற பொடி இது.காரம் அதிகம் தேவைஎனில் மிளகுதூளை கடைசியில் போட்டு கொள்ளலாம்.

ரவா வடை

தேவையானவை:

ரவை- 1 கப்,
தயிர்- கொஞ்சம், ரவையில் போட்டு பிசைந்தால் கெட்டியாக
இருக்க வேண்டும்,
இஞ்சி- சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-4,
கறிவேப்பலை,மல்லி இலை கொஞ்சம்,
உப்பு- 1ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்.

செய்முறை:

ரவையில் தயிரை ஊற்றி வைக்கவும் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,மல்லி, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து, எண்ணெய் காய வைத்து வடைகளாக தட்டி எடுக்கவும். 5 நநிமிடத்தில் மொறு,மொறுப்பான வடை ரெடி. அடுப்பை சிம்மில் எரிய விடவும். அப்போதுதான் உள்ளே வெந்து மேலே கரகரவென்று இருக்கும்.

சேமியா வடை

தேவையான பொருட்கள்:

சேமியா-100கிராம்,
கடலை மாவு-50 கிராம்,
பெரிய வெங்காயம்-1,
சிறிய கேரட்-1,
இஞ்சி- 1துண்டு,
பச்சை மிளகாய்-6,
கறிவேப்பிலை,மல்லி, உப்பு தேவையானது,

செய்முறை:

சேமியாவை 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். கேரட்டை துருவி,வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி, கடலைமாவு,ஊறவைத்த சேமியாவுடன் கலந்து,உப்பு போட்டு, எல்லாவற்றையும் போட்டு கெட்டியாக பிசைந்து, உருட்டி வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மசால் வடை

தேவையான பொருள்கள்:

கடலைபருப்பு- 1 கப்,
துவரம்பருப்பு- 2 ஸ்பூன்,
பட்டாணிபருப்பு-1 கப்,
வரமிளகாய்-10,
இஞ்சி-சிறிய துண்டு,
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/4 கப்,
கறிவேப்பிலை சிறிது,
உப்பு தேவையானது,

செய்முறை:

எல்லா பருப்புகளையும் கலந்து 30நிமிடம் ஊற வைத்து, மிளகாய், கல் உப்பு , இஞ்சி போட்டு கரகரப்பாக அரைக்கவும்.அரைத்தபின் வெங்காயத்தையும் போட்டு நன்கு கலந்து, வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அரைக்கும் மாவு கெட்டியாக இருந்தால்தான், வடை ரொம்ப நேரம் இருந்தாலும் மொறு,மொறுப்பாக இருக்கும்.

மெது வடை

தேவையான பொருள்கள்:

வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ,
ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி,
இஞ்சி- சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-10,
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொஞ்சம்,
உப்பு தேவையானது,[கல் உப்பு]
கல் உப்பு போடுவதால் எண்ணெய் குடிக்காது,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-1/2 கப்,

செய்முறை:

பருப்பு, அரிசி,ஊற வைத்து, வடித்து கெட்டியாக அரைத்து கொண்டு மாவை எடுத்தால் பந்து மாதிரி கையில் ஒட்டாமல் வர வேண்டும். அதில் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, போட்டு கலந்து, உப்பை மாவை எடுக்கும் சமயம் போட்டு அரைத்து எடுக்கவும்] எண்ணெய் காய வைத்து வடைகளாக தட்டி எடுக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் கொஞ்சம் ரவை சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பை மிதமாக எரிய விட வேண்டும். பொன்கலரில், மொறு, மொறுப்பான வடை ரெடி. தயிர் வடை வேண்டும் எனில் தேவையான தயிரில் கொஞ்சம் கேரட்டை துருவி போட்டு, 1 ஸ்பூன் தேங்காய், 2 பச்சைமிளகாய் அரைத்து கலந்து கொஞ்சம் உப்பு தூவி, கடுகு தாளித்தால் தயிர் வடை ரெடி. மேலே மல்லி தழை தூவி அலங்கரிக்கவும். தயிர் புளிக்காமல் இருக்க வேண்டும்.

டிப்ஸ் [பாயசம் சுவை அதிகரிக்க]

1. தீயை மிதமாக எரியவிட்டு பாலை சுண்டவிட்டால் பாயசம் திரட்டுபால் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

2. பாலில் வேக வைத்து செய்ய கூடிய பாயசங்களை தீயை குறைத்து வேக வைத்தால் நாம் மறந்து வேறு வேலையாக இருந்தால்கூட தீய்ந்து போய்விடாது. மிதமாக எரிவதால் சுவை கூடும்.

3. பால் கெட்டியாக இருந்து, பால் சுண்டும் நிறம் தேவை எனில் [லைட் ப்ரவுன்] வெறும் வாணலியில் காய்ந்தபின் 2 ஸ்பூன் சர்க்கரை போட்டு குறைந்த தீயில் வைத்து கரைய விட்டால் அந்த கலர் வரும். அதில் செய்த பாயசத்தை கலந்தால் பாலை சுண்ட வைத்த எஃபெக்ட் கிடைக்கும்.

4. சூடாக பரிமாறும் பாயசங்களை விட, குளிர வைத்துப் பரிமாறும் பாயசங்களுக்கு கூடுதலாக சர்க்கரை போடனும். [ சிலர் பாயசம் செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடுபவர்களுக்கு]

5. பாயசத்துக்கு ஏலக்காய் பொடி செய்பவர்கள் ஏலக்காயை லேசாக வறுத்து கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் மிகவும் செளகரியமாக இருக்கும். ஏலக்காய் போட்டு செய்யும் ஸ்வீட்களுக்கு போட்டு கொள்ளலாம்.

6. கண்டென்ஸ்ட்டு மில்க் வாங்கி சேர்க்க முடியாத நிலையில், பாலையே அதிகமாக சேர்த்து காய்ச்சும்போது சிறிய தட்டை பால் காய்ச்சும் பாத்திரத்தில் போட்டுவிட்டால் பால் பொங்காமல் சீக்கிரம் சுண்டி விடும். பால் பாதி சுண்டிய பின் தட்டை எடுத்து விடலாம்.

7. எந்த பாயசம் செய்தாலும் 10,முந்திரி, பாதாம்பருப்பு,பிஸ்தா பருப்பு, இவற்றையும் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டு கடைசியில் இறக்கும் சமயம் சேர்த்தால் சுவைகூடும். சில பேர் பருப்புகளை எறிந்து விடுவார்கள். இது தவிர்க்கப்படும். ஏனெனில் இந்த பருப்புகள் எல்லாம் விலை அதிகம்.

மசாலா பொங்கல்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி-2 கப் (இதில் செய்வதால் நல்ல மணம் கிடைக்கும்).
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேவையான பிடித்த காய்கள் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் - 4
ஏலக்காய் - 3
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சமைக்க 1/2 மணி முன்பு அரிசி, பாசிப்பருப்பை, லேசாக வறுத்து ஊற வைக்கவும். வறுப்பதால் வாசனையாக இருக்கும். ப்ரஷ்ர் பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஆனதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு நறுக்கிய வெங்காய்த்தை போட்டு வதங்கியதும், தக்காளி போட்டு 2 நிமிடம் கழித்து, நறுக்கிய காய்களை போட்டு கிளறி 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதி வந்ததும், அரிசி, பருப்பை போட்டு பேனை மூடிவிட்டு சிம்மில் வைத்து 2 விசில் விட்டு இறக்கவும் தாளிப்பு கரண்டியை போட்டு மிளகு,சீரகத்தை பொடி செய்து பொரித்து அதனுடன், கீறிய பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி பொங்கலில் போடவும்.மல்லி இலை பொடியாக தூவி விடவும்.ம்ணம்,சுவை உடைய மசாலா பொங்கல் தயார்.

பானி பூரி

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
மைதா - 2 ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு துளி
உப்பு - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்

பானி செய்ய:

புதினா, மல்லி இலை - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 8
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வறுத்த சீரகம் - 1.5 ஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1.5 ஸ்பூன்
உப்பு கொஞ்சம்

இனிப்பு சட்னி:

கொஞ்சம் புளி, பேரிச்சம் பழம், சிறிது வெல்லம், மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து கொண்டால் இனிப்பு சட்னி ரெடி. தேவைப்படுபவர்கள் இந்த சட்னியை கலந்து கொள்ளலாம்.இல்லையேனில் பானி மட்டும் போதும். புளியை 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் அந்த புளி தண்ணீரில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவையான தண்ணீர் கலந்து வைத்து கொள்ளவும்.

பூரி செய்முறை:

ரவை,மைதா,சோடா,உப்பு கொஞசம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி இடுவது போல் தேய்த்து, சிறிய பாட்டில் மூடியை வைத்து ஒரே மாதிரி கட் செய்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடு செய்து பூரியை பொரிக்கவும்.

சாப்பிடும் முறை:

(இது அனைவரும் அறிந்ததே, இருப்பினும் கோப்புக்காக ;-)
பொரித்து வைத்துள்ள பூரியில் நடுவில் ஓட்டை போட்டு பானி தண்ணீர் கொஞ்சம், இனிப்பு சட்னி கொஞ்சம், ஊற்றி சாப்பிடவும். பச்சை வெங்காயம் பிடித்தவர்கள் பொடியாக நறுக்கி மேலே தூவி சாப்பிடவும். கேரட், பீட்ரூட்டையும் துருவி மேலே போட்டும் சாப்பிடலாம். அப்போது சட்னி கொஞ்சம் அதிகமாக ஊற்றி கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், புளிப்பு எல்லாம் சேர்ந்து சூப்பர் சுவையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன். டைம் கிடைக்கும் போது பூரியை செய்து வைத்து கொண்டு சைட் டிஷ்ஷை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.ஆனால் என்னதான் சொல்லுங்கள், இது சத்தான உணவு அல்ல!! தமிழ் உணவு இல்லை!! அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

வெண்டைகாய் மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் பிஞ்சாக -150கிராம்,
தக்காளி பழம்-4,
வரமிளகாய்-8,
மிளகு-1,ஸ்பூன்,
தேங்காய் துருவல்-1-கப்,
புளித்தண்ணீர்-1//2 கப்,
வெல்லம் சிறியக்கட்டி,
கடுகு,பெருங்காயம்,1/4 ஸ்பூன்,
உப்பு தேவையான அள்வு.

செய்முறை:

வெணடைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் தேங்காயை சிவப்பாக வறுத்து அதனுடன் மிளகாய், மிளகு இவற்றையும வறுத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் 1-ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெண்டைகாயை வதக்கி சிறிது நேரம் கழித்து தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி கொண்டு உப்பை சேர்த்து வதக்கவும். பின், அரைத்து வைத்துள்ளதை போட்டு கொஞ்ச நேரம் வதக்கி புளித்தண்ணீரை ஊற்றி, வெல்லம் போட்டு நன்கு கொதித்த பிறகு இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துவிட்டு, கறிவேப்பிலை, மல்லி இலை போடவும்.

பாம்பே சட்னி

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் பெரியதாக - 2
பச்சை மிளகாய் - 7,
இஞ்சி பெரிய துண்டு
தக்காளி தேவையானால் - 2.
கறிவேப்பிலை,மல்லி இலை கொஞ்சம்,
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கியபின் இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளியையும் பொடியாக நறுக்கி போட்டு, வதங்கியபின் 2 ஸ்பூன் கடலை மாவில், 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை,மல்லி போடவும். இந்த சட்னி தண்ணியாக இருந்தால் இட்லி, தோசைக்கும், கெட்டியாக இருந்தால் பூரி, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். இதை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.

வெந்தய களி

தேவையான பொருட்கள்:

வெந்தயம் -1 கப்
பனை வெல்லம் [எ] கருப்பட்டி தூள் செய்தது - 2 .5 கப்
நல்லெண்ணெய் - 1 கப்

செய்முறை:

வெந்தயத்தை [2,3] முறை நன்கு மண் போக கழுவிமுதல்நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.காலையில் வடிக்கட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக [வடைக்கு அரைப்பதுபோல்] அரைக்க வேண்டும். தூள் செய்த பனை வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து, அதனுடன் அரைத்த வெந்தயத்தை போட்டு அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அதில் வெந்தய விழுது, வெல்லபாகு ஆகியவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.வாணலியில் ஒட்டாத பதம் வரவெண்டும். இதை சூடாகவே சாப்பிடலாம். இதை சாப்பிட்டால் பல நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல் வரவே வராது. வெந்தயத்தில் உள்ள வழுவழுப்பான பொருள் எலும்புகள் தேயாமல், மூட்டு வலிகள் வராமலிருக்கும். இடுப்புக்கு வலு கொடுக்கும். தோல் சுருக்கம் வராது. ஊளை சதை குறையும். இன்னும் பல நன்மைகள் வெந்தயகளிக்கு உண்டு.

வெந்தயப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

சாப்பாடு அரிசி [பச்சை/புழுங்கல்] எதுவாக இருந்தாலும் - 1 டமளர்
வெந்தயம் - 2 ஸ்பூன்,
பூண்டு உரித்தது - 20 பற்கள்,
இஞ்சி - 1 துண்டு
தாளிக்க - கடுகு, சீரகம், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு சிவந்தபின் வெந்தயம் போட்டு லேசாக சிவந்த உடன் பூண்டை போட்டு, 5 டமளர் தண்ணீர் விட்டு உப்பும் போட்டு நன்கு கொதி வந்ததும் ப்ரஷர் பேனை முடி விடவும். சிம்மில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி கொஞ்ச நேரம் கழித்து பேனை திறந்து சாப்பிடலாம். உஷ்ண உடல் உள்ளவர்கள் அடிக்கடி செய்து சாப்பிடலாம். மலர்ச்சிக்கலை போக்கும். வயிற்று வலி, வயிற்று போக்கு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உடனே சரியாகவிடும். பச்சை வெங்காயம் சாப்பிடுபவர்கள் இதனுடன் பொடியாக நறுக்கி போட்டு சாப்பிடலாம்.

ஸ்டஃப்டு பன்

தேவையான பொருள்கள்:

தேவைக்கு ஏற்ப - பன்
பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - 1 கப்
பீன்ஸ்,கேரட்,கோஸ்-தலா,-1/2 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
மிளகாய்தூள் - 1ஸ்பூன்,
தக்காளி பொடியாக நறுக்கியது - 2
வெண்ணெய் தேவையான அளவு
உப்பு சுவைக்கு ஏற்ப

செய்முறை:

காய்களை பொடியாக நறுக்கி,வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் விட்டு பெரிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வதக்கி காய்களை போட்டு நிறம் மாறாமல் வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும். பன்னை நடுவில் பள்ளமாக செய்து, அதனுள் வதக்கிய காய்களை வைத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமாக எரிய விட்டு பன்னை சுற்றிலும் வெண்ணெய் போட்டு பொன் கலரில் மொறு, மொறுன்னு ஆனதும், எடுத்து மேலே தக்காளியை பச்சையாக வட்டமாக நறுக்கியோ, தக்காளி சாஸோ விட்டு சாப்பிடலாம். காரம் அதிகம் தேவை எனில் சில்லி சாஸ் சேர்த்து கொள்ளலாம். இதற்கு வெண்ணெய் தான் போட வேண்டும்.

வாழைப்பூ கார குழம்பு

தேவையான பொடுட்கள்:

கசப்பு இல்லாத பூ-1, [நடுவில் உள்ள காம்பை ஆய்ந்து பெரிய இதழ்களை வைத்து கொள்ளவும்.]
கடலை மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 5 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய் - 100 கிராம்
தக்காளி சாறு - 100 கிராம்
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
குழம்பு பொடி - 2 ஸ்பூன்

செய்முறை 1:

இரண்டு மாவுகளையும் சிறிது சமையல் சோடா சேர்த்து 2 ஸ்பூன் மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து ஒரு, ஒரு பூவாக எடுத்து மாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

செய்முறை 2:

அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 2 ஸ்பூம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு பொடி, தக்காளிசாறு, உப்பு எல்லாம் பச்சை வாசனை போக வதக்கி பின், 1-டம்ளர் தண்ணீர் ஊற்றி சாப்பிடும் போது பொரித்த வாழைப்பூக்களை சேர்த்து இறக்கவும். முதலிலேயே பூவை சேர்த்தால் குழம்பின் சாறு ஊறி போய் குழம்பு கெட்டியாகிவிடும். ஊறி சாப்பிட விரும்புபவர்கள் இன்னும் 1-டமளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு பின் பொரித்ததை போட்டால் சரியாக இருக்கும். சாப்பிடும் போது பொரித்ததை போட்டு இறக்கவும்.

ரவா பொங்கல்

தேவையானப் பொருள்கள்:

பாசுமதி அரிசி - 200 கிராம்
பாசிபருப்பு - 50 கிராம்
முந்திரி - 10
மிளகு - 10
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - பெரிய துண்டு
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

அரிசியையும், பாசிபருப்பையும் வறுத்து ரவையாக உடைத்து கொள்ளவும். வறுத்து போடுவதால் வாசனையாகவும்,மிருதுவாகவும் இருக்கும். ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து முந்திரி, மிளகு, சீரகபொடி, பெருங்காய தூள், வறுத்து எடுத்து கொண்டு, அதில் 3 டம்ளர் த்ண்ணீர் விட்டு நன்கு கொதித்து வரும் சமயம் உடைத்த ரவையை போட்டு 2 விசில் விட்டு இற்க்கி மிளகு, சீரகபொடி, முந்திரி, பெருங்காயம் போட்டு, கொஞ்சம் நெய் ஊற்றி கறிவேப்பிலை, மல்லி இலை போடவும். மணமுள்ள ரவா பொங்கல் தயார்.

பச்சரிசி தட்டை

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு- 1கப்,
உளுத்தம் மாவு- 1 ஸ்பூன்,
கடலைபருப்பு,[அ] பாசிபருப்பு- 1 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்,
வெண்ணெய்- 1/2 ஸ்பூன்[தேவையானால்]
உப்பு- 1/2 ஸ்பூன்,
எண்ணெய்- பொரிக்க

செய்முறை:

மாவு அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிய விட்டு மாவாக திரித்து கொள்ளவும். இந்த வகையில் செய்யும் பலகாரங்கள் சுவையாக இருக்கும். பருப்பை 10 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். கொஞ்சம் தண்ணீரிலஉப்பையும்,பெருங்காயத்தையும் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் சலித்த அரிசி மாவையும்,ஊளுத்தம்மாவையும் நன்கு கலந்து அதோடு, வெண்ணெய், மிளகாய்தூள் போட்டு கலந்து வைக்கவும். ஊற வைத்துள்ள கடலைபருப்பை வடித்து மாவில் சேர்த்து, உப்பு,பெருங்காய தண்ணீரையும் ஊற்றி, கொஞ்சமாக நீரை தெளித்து பிசையவும்.இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு வெள்ளை துணியில் ஒவ்வொரு உருண்டையும் வைத்து அதை விரல்களால் தட்டைகளாக தட்டவும்.
துணியில் தட்டையை தட்டுவதால் அதிக ஈரம் இருந்தால் அதை இழுத்து கொள்ளும். சரியான பதமாக இருந்தால் வாழை இலை,[அ] பிளாஸ்டிக் கவர் எதில் வேண்டுமானாலும் தட்டி கொள்ளலாம். ஊறவைத்த பருப்புகளில் நிலகடலை,பொட்டுகடலை எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். நம் விருப்பம்.

பூண்டு ஊறுகாய்

தேவையான பொருய்கள்:

வெள்ளைப் பூண்டு தோல் நீக்கியது - 1/4 கிலோ,
கல் உப்பு - 50 கிராம்
மிளகாய்தூள் - 100 கிராம்
லெமன் சால்ட் - 20 கிராம் [அ] எலுமிச்சை சாறு - 1 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 200 கிராம்
மண் இல்லாத வெல்லம் - சிறிய கட்டி

செய்முறை:

வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மஞ்சள்தூள், பூண்டு, மிளகாய்தூள், உப்பு, வெல்லம், பொடிகள், எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும். பூண்டு ஊறிய பின் எடுத்து உபயோகப் படுத்தலாம். பூண்டு ஊறுகாய் தயார்.

இனிப்பு அப்பம்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
வெல்லம் - 1.25 கப்
ஏலக்காய் - 5
எண்ணெய் பொரிக்க

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 1மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தல் சிறிது தண்ணீர் விட்டு சுடான பின் வடிகட்டவும். அதில் கோதுமைமாவு, அரைத்த அரிசி மாவு, ஏலக்காய்பொடி [சுக்கு] போட்டு இட்லி மாவு பதத்திற்க்கு கரைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு வைக்கவும் குழிவாக உள்ள வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிய கரண்டியால் மாவை எடுத்து ஊற்றவும். ஊற்றியவுடன் முதலில் கீழே தங்கி பின்பு தான் மேலே வரும். அவசரப்பட்டு திருப்பினால் பிரிந்து விடும். ஒரு பக்கம் சிவக்க விட்டு, திருப்பி போட்டு சிவந்த பின் எடுக்கவும். கரகரவென்று வேண்டும் என்றால் கொஞ்சநேரம் விட்டு எடுக்கலாம். அடுப்பை மிதமாக எரிய விடவேண்டும்.

கறிவேப்பிலை குழம்பு

தேவையான பொருட்கள்:

கொழுந்தாக உதிர்த்த கறிவேப்பிலை - 50 கிராம்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் [அ] பச்சை மிளகாய் 25 கிராம்
புளி விழுது - 1 கப்
உப்பு தேவையானது.

செய்முறை:

கறிவேப்பிலையை,புளியுடன் சேர்த்து பச்சையாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, பச்சைமிளகாயானால் புளியுடன் அரைத்து கொள்ளவும். மஞ்சள்ள்தூள், அரைத்தவிழுது, வெந்தயம், பெருங்காயம், எல்லாவற்றையும், சேர்த்து நன்கு கிளறி சுண்டியவுடன் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து தேவையானால் 1/2 டமளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். இந்த வகை குழம்பிற்க்கு நல்ல எண்ணெய்தான் சுவையாக இருக்கும். எல்லாவற்றுக்கும் பொறுத்தமான டிஷ்.

தக்காளி பிரியாணி

செய்முரை:

பாசுமதி ரைஸ் - 2 கப், தக்காளி [நன்றாக பழுத்த சிகப்பு கலராக உள்ள பழமாக இருந்தால் சுவையாக இருக்கும்]. அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறுவதால் சாப்டாக இருக்கும். ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து, 2 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், 1/4 ஸ்பூன் பெருங்காயம், போட்டு ஒரு பெரிய வெங்காயதை ஸ்லைஸாக நறுக்கி போட்டு பொன் நிறமாக வதங்கியவுடன். தக்காளியை பொடி, பொடியாக நறுக்கி பொட்டு மசித்து விட்டு, அரிசியையும், வடிய விட்டு வெங்காயத்துடன் போட்டு சிறிது நேரம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2 ஸ்பூன் உப்பு போட்டு, நன்கு கலந்து பேனை முடி விடவும். சிம்மில் 1 விசில் விட்டு இறக்கவும். பரிமாறும் போது மல்லி இலை தூவி உடனே பரிமாறவும்.

பிண்டி குரெ

செய்முறை:

வெண்டைக்காயை - 1/4 கிலோ (காம்பு நீக்கி), இஞ்ச துண்டுகளாக நறக்கவும் - 2, அதனுடன் 2 ஸ்பூன் கடலைமாவு,3-ஸ்பூன் அரிசி மாவு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, 1/2ஸ்பூன் எலுமிச்சை சாறு போட்டு பிசிறி எண்ணெய் காயவைத்து, ஊறிய வெண்டைக்காய்களை போட்டு கர, கர வென்று பொரித்து எடுக்கவும். ஒரு சில நிமிடங்களில் செய்து விடலாம். சாப்பாட்டிற்க்கு தொட்டு சாப்பிட ஏற்ற டிஷ் இது.

நூடுல்ஸ் பிரியாணி

செய்முறை:

எந்த வகையான நூடுல்ஸ் வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம். தேவையான நூடுல்ஸை கொத்க்கும் நீரில் போட்டு 2 நிமிடம் விட்டு நீரை வடித்துவிட்டு, நன்கு உதிராக வைத்துக் கொள்ளவும். பிடித்தமான காய்கறிகளை, நறுக்கி கொண்டு, அடுப்பில் ப்ரஷர் பேனை வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை 1, லவங்கம் 3, ஏலக்காய் 2 இவற்றை போட்டு வறுபட்டபின் இஞ்சி, பூண்டு விழுது 1 ஸ்பூன் போட்டு பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய காய்களை போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து உப்பு, கறிமசால்பொடி 1 ஸ்பூன் போட்டு வதங்கிய பின் வடிய வைத்துள்ள நூடுல்ஸை போட்டு உடையாமல் கிளறவும். சுவையான நூடுல்ஸ் தயார். மேலே தக்காளி,வெள்ளைக்காய், வெங்காயம் வட்டமாக நறுக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.தேவையானால் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ளலாம். செய்தவுடன் சாப்பிடவும். 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

அவல் பிரியாணி

செய்முறை:

அவல் - 1/4 கிலோ அவலை நன்கு கழுவி வடிய விட்டால் போதும், அதில் உள்ள தண்ணீரில் ஊறி இருக்கும். கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடுகு 1 ஸ்பூன், பட்டை சிறியதுண்டு 4, லவங்கம் 4, ஏலக்காய் 2, பச்சைமிளகாய் 6 [பொடியாக நறுக்கி கொள்ளவும்], பெரியவெங்காயம் 1 பொடியாக நறுக்கி, எல்லாவற்றையும் வதக்கவும். உப்பு சேர்த்து ஊறிய அவலை சேர்த்து நன்கு வதககவும். மேலே மல்லி,கறிவேப்பிலை,தக்காளி பொடியாக ந்றுக்கி சேர்க்கலாம். அவல் ஊறினால் போதும் 5 நிமிடத்தில் செய்து விடலாம்.

மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:

பிடித்தமான காய்கள்,
தயிர் - 2 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
பச்சை மிளகாய்-6,
சீரகம் - 1 ஸ்பூன்,
உப்பு.

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, காய்களை போட்டு வதக்கவும். அதற்குள் தேங்காய், மிளகாய், சீரகம் இவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது காய் வெந்து இருக்கும். அதனுடன், மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விட்டு தயிரை கடைந்து ஊற்றி கலந்து விடவும். மல்லி, கறிவேப்பிலை, 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து மூடி விடவும். மணக்கும் மோர்க் குழம்பு தயார்.

உருளைக்கிழங்கு வறுவல்

செய்முறை:

1/2 கிலோ பெரிய உருளைக் கிழங்குகளாக வாங்கவும். அப்போதுதான் வறுவலுக்கு நன்றாக இருக்கும். நான்காக நறுக்கி 1 ஸ்பூன் உப்பு போட்டு கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்து வேக வைப்பதால் அதில் உள்ள வாயு போயிடும். பிடித்தமான சைசில் கட் செய்து கொள்ளவும், அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, கார்ன்ப்ளவர் தலா 2 ஸ்பூன், காரம் அதிகம் தேவைப்பட்டால் மிளகாய்தூள் சேர்த்து கொள்ளலாம். எல்லாம் போட்டு பிசிறி 10 நிமிடம் ஊற வைத்து கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, சீரகம் தாளித்து கிழங்கை போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

கோவைக்காய் வறுவல்

செய்முறை:

தேவையான கோவைக்காய்களை நமக்கு விருப்பமான வட்டமாகவோ, சதுரமாகவோ, சுருளாகவோ, நறுக்கிக் கொண்டு, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், உப்பு,-1/4 ஸ்பூன், மிளகாய்தூள் - 2 ஸ்பூன், மிளகுதூள் - 1/2 ஸ்பூன், கார்ன்ப்ளவர் - 3 ஸ்பூன், இட்லி பொடி - 1 ஸ்பூன் எல்லாம் கலந்து பிசிறி 10 நிமிடம் வைத்து கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, ஊற வைத்துள்ள கோவைக் காய்களை போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும். மேலே 1 ஸ்பூன் சர்க்கரை தூவினால் சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

காரக் குழம்பு

தேவையான பொருட்கள்:

பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2 கப்
சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 கப்
புளி கரைசல் கெட்டியாக கரைத்தது - 2 கப்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
வெந்தயம், பெருங்காய பொடி - 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெல்லம் சிறியகட்டி - 2 ஸ்பூன்
இட்லிபொடி

செய்முறை:

வாணலியில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு பொரிந்தபின், வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதங்கியபின் புளியை ஊற்றி மற்ற எல்லா பொருட்களையும் போட்டு நன்கு வற்றிய பின் 2 டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.

மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
புளி - 100 கிராம்
மல்லி - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 20 இலை
சிறிய கட்டி பெருங்காயம்,சிறிய கட்டி வெல்லம்
நறுக்கிய பூண்டு - 1 கப்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். புளியையும் லேசாக வறுத்து சுடு நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். அந்த புளியில் வெல்லத்தை போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு,வெடித்ததும் பூண்டைப் போட்டு நன்றாக வதக்கி,மஞ்சள்தூள் போட்டு,புளியை நன்கு கரைத்து ஊற்றவும். வடிகட்டும்போது, வெல்லத்திலும்,புளியிலும் உள்ள கல்,மண் அடியில் தங்கி விடும். பாதியாக சுண்டிய பின் வறுத்து வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு பொடி செய்து போட்டு இறக்கவும். கொஞ்சம், கொஞ்சமாக எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த குழம்பிற்க்கு நல்லெண்ணெய்தான் நல்லது. கைபடாமல், தண்ணீர் படாமல், ஸ்பூனில் எடுத்து உபயோக படுத்தினால் கெடவே கெடாது.உடலுக்கு நல்லது.காரம் அதிகம் வேண்டும் என்று விரும்பினால் மிளகு செர்த்துக் கொள்ளலாம். வெல்லம் சுவைக்காக போடுகிறோம்.

தக்காளி மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்:

நாட்டு தக்காளி-1/2கிலோ
வெங்காயம் - 200 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
தேவையான உப்பு.

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து,மஞ்சள்தூள் போட்டு, இஞ்சி, பூண்டு விழுதை போட்டு,பச்சை வாசனை போனபின்,நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து மிளகாய்தூள், தனியாதூள், [சோம்பு,4-பச்சை மிளகாய் அரைத்த விழுது] இவற்றை போட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போனபின் 2டமளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் தக்காளி மசாலா குழம்பு தயார். இது சாப்பாட்டிற்கும், டிபனுக்கும் ஏற்றது. ரிச்சாக வேண்டும் எனில் 2 ஸ்பூன் வெண்ணைய் மேலே போட்டு இறக்கலாம்.

பீன்ஸ் மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி -100கிராம்
பெரியவெங்காயம்- 2
தக்காளி - 4 [அ] 6
மிளகாய்பொடி - 3 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு சுவைக்கு

செய்முறை:

காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாளே ஊறவைத்து விடவும். குருமா செய்ய ப்ரஷர் பேனில் செய்தால் ஈஸியாக இருக்கும். வெங்காயாம், தக்காளியை எண்ணைய் 1ஸ்பூன் விட்டு நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். பட்டாணியை உப்பு போட்டு வேக வைத்து, அதே பேனில் 2- ஸ்பூன் வெண்ணைய் போட்டு சீரகம் தாளித்து,இஞ்சி,பூண்டு விழுது - 2 நிமிடம் வதங்கியபின் அரைத்த தக்காளி,வெங்காய விழுதை போட்டு வதக்கவும்.மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,தனியதூள், கரம் மசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வாசனைக்கு 3-பச்சைமிளகாயை கீறி போடலாம். ரிச்சாக வேண்டும் என்றால் 5+5=10 பாதாம்ப்பருப்பு, ந்திரிப்பருப்பு அரைத்து விடலாம். சூப்பராக இருக்கும்.

கத்தரிக்காய் ஸ்டூ

தேவையான பொருள்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் - 400 கிராம்
புளி பேஸ்ட் - 3 ஸ்பூன்
கறி மசால் பொடி - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு ருசிக்கு ஏற்ப

செய்முறை:

புளி பேஸ்டில் பொடிகளை கலந்து ,அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு எல்லாவற்றையும் பேஸ்ட் போல் செய்யவும். கத்தரிக்காயை நான்காக கீறிஅத்னுள் அந்த பேஸ்டை வைத்து வாணலியில் எண்ணைய் காய வைத்து கத்தரிக்காயை போட்டு உடையாமல் வதக்கவும். சிம்மில் எரிய விட்டு செய்யவும். கத்தரிக்காயின் மேல் பகுதி விரிந்து இருந்தால் காய் பிஞ்சாக இருக்கும்.நன்றாக வெந்தபின் சாப்பிட்டால் சூப்பர் சுவையாக இருக்கும்.

வெஜிடபுள் தோசை

இந்த தோசை வீட்டில் இருக்கும் பொருளை வைத்து செய்து கொள்ளலாம். இதற்கு தோசை மாவு, பிடிக்கும் காய்கறிகள், 1 ஸ்பூன் மிளகுதூள், பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கி கொஞ்சம் உப்பு போட்டு கையால் பிசிறி வைத்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி அதன் மேல் காய்கறி கலவையை தூவி, 1/2 ஸ்பூன் வெண்ணைய் போட்டு சிம்மில் எரிய விட்டு முடி வைத்து வேகவிடவும். தேவையானால் தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு கொள்ளலாம். இந்த தோசை சூப்பராக இருக்கும், தக்காளி சாசுடனும் சாப்பிடலாம். இல்லை இட்லி பொடியுடனும் சாப்பிடலாம். தயிரில் வெங்காயம் போட்டும் சாப்பிடலாம். இதன் டேஸ்ட் வெண்ணய்தான்.

ரசப்பொடி

தேவையான பொருள்கள்:

மிளகு, சீரகம் - 200 கிராம்
துவரம் பருப்பு, கடலை பருப்பு - 50 கிராம்
கட்டி பெருங்காயம் - 10 கிராம்
வரமிளகாய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அள்வு
சுத்தம் செய்யபட்ட புளி - 100 கிராம்

செய்முறை:

மேலே கொடுததுள்ள பொருட்க்ளை தனிதனியாக எண்ணைய் விடாமல் வறுத்து, புளியை சிறிதாக பிய்த்து போட்டால் நன்றாக வறுபட்டுவிடும். கடைசியில் உப்பையும் வறுத்து, எல்லாவற்றையும் நன்கு கலந்து ஆற வைத்து மிக்ஸியில் பவுடர் செய்து, மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, தேவைபட்டால் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து கொண்டு தாளித்த பொருட்களுடன் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு போட்டு வதக்கி, புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் விட்டு நுரைத்து வந்த பின் இறக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பொடியில் புளியையும் வறுத்து கொள்வதாலும், மேலும் அநத பொடியில், கடுகும், சீரகமும் தாளித்து கலந்து கொண்டால், தேவையான பொடியை நீரில் கலக்கி நுரைத்து வரும் சமயம் 1 ஸ்பூன் நெய் விட்டு, மல்லி இலை தூவியும் செய்யலாம். 2 நிமிடம் இருந்தால் போதும் இந்த ரசம் செய்து விடலாம்.

அரிசி உப்புமா

தேவையான பொருட்கள்:

பச்சரிசிகுருனை - 2 கப்
துறுவிய தேங்காய் - 2 கப்
தண்ணீர் - 5 கப்
தாளிக்க: கடுகு, கடலை பருப்பு, உளுத்தபருப்ப, சீரகம், தலா - 2 ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 ஸ்பூன், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது-6, [அ] வரமிளகாய் - 6 (கிள்ளி வைத்து கொள்ளவும்) உப்பு - தேவையான அளவு
தாளிக்க எண்ணைய்.

செய்முறை:

ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி நன்கு காய்ந்த்தும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி,மிளகாய்,இவற்றை போட்டு நன்கு சிவக்க வறுபட்ட பின், தேங்காய் போட்டு வதக்கி 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு கொதித்து வரும் சமயம் பச்சரிசி குருனையை போட்டு நன்கு கலந்து ஒரு விசில் விட்டு இறக்கவும். சிறிது நேரம் கழித்து ப்ரஷர் பேனை திறந்து கறிவேப்பிலை, மல்லி பொடியாக ந்றுக்கி, வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கலந்து சாப்பிடவும். தக்காளி சட்னி,[அ]இஞ்சி பச்சடி இத்ற்கு சுவையாக இருக்கும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். இல்லையெனில் உப்புமா தீய்ந்து போய்விடும்.

காலிஃப்ளவர் தயிர் மசாலா

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1
பச்சை பட்டாணி - 1 கப்
பிரியாணி இலை - 1
தக்காளி விழுது - 1/2 கப்
புளிக்காத தயிர் - 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

அரைக்க:

வெங்காயம் - 1
பட்டை சிறியது - 1
லவங்கம் - 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கசகசா, மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
இவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் 50கிராம் எண்ணைய் விட்டு சீரகம் தாளித்து பட்டாணியை வதக்கவும். பின் பூக்கள் உடையாமல் காலிஃப்ளவரை வதக்கவும் பின் அரைத்த விழுது, தயிர், தக்காளி, பிரியாணி இலை, உப்பு இவற்றை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணைய் பிரிந்து மேலே வரும். மல்லி இலை தூவி பரிமாறவும். இது சாப்பாட்டிற்கும் சுவையாக இருக்கும். எந்த வகையான டிபனுக்கும் ஏற்றது. கிரேவியாக தேவைபடுபவர்கள் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். சுருள வதக்குவதில்தான் இதன் வாசனையே.

வெஜிடபுள் சப்ஜி

தேவையான பொருட்கள்:

உருளைகிழங்கு - 2
காலிப்ளவர் - 1
கேரட் - 2
பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சைமிளகாய் - 5
பூண்டு - 5
பற்கள்பொடியாக நறுக்கி கொள்ளவும்
இஞ்சி - 1 துண்டு
பொடியாக நறுக்கிகொள்ளவும்
சீரகபொடி, தனியா பொடி - 1 ஸ்பூன்
தேவைபட்டால் மிளகாய் பொடிசேர்த்துக்கொள்ளலாம்.
டேஸ்டுக்கு 1ஸ்பூன் சர்க்கரை
உப்பூ தேவையான அளவு.

செய்முறை:

காலிப்ளவரை சிறு பூக்களாக எடுத்து சுடுநீரில் 5 நிமிடம் போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,சீரகம் தாளித்து,மஞ்சள்தூள் சேர்த்து வெங்காயம் போட்டு நன்கு பொன்நிறமாக வதக்கி, பொடியாக நறுக்கிய காய்களை சேர்த்து ந்ன்கு வதங்கிய பின்தனியாபொடி, சீரகபொடி, இஞ்சி, பூண்டு, சர்க்கரை, உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய்,நன்கு சுளுள வதங்கி சூப்பரான வாசனை வந்த உடன் இறக்கி மல்லி இலை தூவினால் சப்ஜி தயார். டிபனுக்கும், சாப்பாட்டிற்கும் ஏற்ற சமையல்.

கத்தரிக்காய் பொடி கறி

தேவையான பொருடகள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 [பொடியாக நறுக்கி கொள்ளவும்] கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 ஸ்பூன், மல்லி - 1.5 ஸ்பூன், பெருங்காயம் - சிறிய கட்டி [இவற்றை எணணைய் விடாமல் வறுத்து பொடிசெய்த்து கொள்ளவும்.]
உப்பு - தேவையான அள்வு
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்தூள்[அ] வரமிளகாய் - 6

செய்முறை:

கத்தரிக்காயை அவரவர் விருப்பபடி ந்றுக்கி கொள்ளவும. வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு சுத்தம் செய்த கத்திரிக்காயை போட்டு ந்னகு வத்ங்கிய பின் பொடி செய்து வைத்துள்ள பொடியை போட்டு, உப்பும் சேர்த்து நன்கு வதங்கிய பின் மல்லி இலை பொடியாக தூவி இறக்கவும். வாசனையான பொடி கறி தயார்.

மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப் - இரண்டு முறை நன்கு கழுவி ஊறவைக்கவும்.
காளான் - 200 கிராம்,
பட்டை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
புதினா இலை - 1 கைபிடி
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

குக்கரில் 50 கிராம் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி- பூண்டு விழுது, புதினா, நறுக்கிய தக்காளி போட்டு, 2 நிமிடம் கழித்து, அரிசியை போட்டு அத்னுடன் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தபின் குக்கரை மூடி சிம்மில் வைத்து 1 விசில் வந்த்தும் அடுப்பை அணைத்து சத்தம் அடங்கிய பின் குக்கரை திறந்து தேவையானால் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவலாம், மல்லி இலை தூவி பரிமாறவும், கம,கமக்கும் காளான் பிரியாணி தயார். எப்போதும் அரிசியை வறுத்து போட்டால் சாதம் குழையாது. இரவு வரை இருந்தாலும் கெடாது. வாசனைக்கு மேலே கொஞ்சம் நெய் ஊற்றலாம்.

காய்கறி கூட்டு

தேவையான பொருட்கள்:

பூசணி, அவரை, கத்திரிக்காய், பரங்கி, முருங்கைகாய் - 2,
கொத்தவரங்காய், புடலங்காய், பீர்க்கங்காய், தட்டைபயிறு, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்
பச்சைமிளகாய் - 6
தேங்காய் துறுவியது - 1/2 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தட்டைபயிறை லேசாக வறுத்து முதல் நாளே ஊற வைக்கவேண்டும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவைக்க வேண்டும். காய்களை பொடியாக நறுக்கவேண்டும். தேங்காயுடன், சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவேண்டும். வெந்த பருப்புடன் காய்களை சேர்த்து 2 நிமிடம் கழித்து அரைத்த விழுதுடன், உப்பையும் சேர்த்து நன்கு கொதித்து வரும் சமயம் இறக்கி தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு, தேவைபபட்டால் கடலைபருப்பு, உளுத்தமபருப்பு, பெருங்காயம் தாளிக்கலாம். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு இறக்கிவிடவும். சத்துள்ள, வயிற்றுக்கு கெடுதல் செய்யாத கூட்டு தயார்.

பேல் பூரி

தேவையான பொருட்கள்:

பொரி - 100 க்ராம்
பெரிய வெங்காயம், கேரட், பீட் ரூட், குடை மிளகாய் - தலா 50 கி்ராம்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி - 2
மாங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
லெமன் சால்ட் [அ] எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
சாட் மசாலா - 1 ஸ்பூன்
மல்லி தழை - 3 ஸ்பூன
பூண்டு - 5 பற்கள், இஞ்சி - 1 சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 6 [இவற்றை அரைத்து கொள்ளவும்]
உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

எண்ணையைக் காய வைத்து, அரைத்த விழுதை போட்டு குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, காய்கறிகளைதுருவி, பொரியுடன் கலந்து லெமன் சாறும் சேர்த்து, மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து உடனே பரிமாறுங்கள்.

வெஜிடபுள் சூப்

தேவையான பொருட்கள்:

அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் நறுக்கியது - 1 கப்
பால் - 1/4 டமளர்
பூண்டு 5 - பற்கள்
பெரிய வெங்காயம் - 1
சோள மாவு 2 - ஸ்பூன்
மிளகுதூள் - 1 ஸ்பூன்
வெண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு சுவைக்கு ஏற்ப

செய்முறை:

காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் வெண்ணையை உருக்கி நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு வதங்கியபின் வேகவைத்துள்ள காய்கறியை நன்கு மசித்தோ, மிக்ஸியில் அரைத்தோ வெங்காயத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். பாலில் சோளமாவை கரைத்து அதில் ஊற்றவும். நன்கு கொதித்தபின் இறக்கி வைத்து சாப்பிடும் போது வெண்ணய் மேலே போட்டு, மிளகுதூள் தூவி சாப்பிடலாம். எல்லா காய்கறிகளும் சேருவதால் உடலுக்கும் நல்லது.

மோர்க் கூழ்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
மோர் - 4 கப்
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
உளுததம்பருப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் [அ] வரமிளகாய் - 5
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு போடவும். சிவந்தபின், பெருங்காயம் போட வேண்டும். மோரில் அரிசி மாவை கலக்கவும். மாவு தோசை மாவு பதம் இருக்க வேண்டும். இந்த கலவையை அடுப்பில் இருக்கும் தாளிதம் செய்ததில் ஊற்றி கட்டி விழாமல் நன்கு கிளற வேண்டும். தேவைப்பட்டால் நெய், [அ] தேங்காய் கொஞ்சம் ஊற்றி நன்கு கலந்து வெந்தபின் இறக்கி,மல்லி இலை தூவி சாப்பிடலாம்.

ரவா இட்லி

தேவையான பொருட்கள்:

ரவை - 2 கப்
தயிர்- 3 கப்
கடலைப்ருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6 பொடியாக நறுக்கி கொள்ளவும்
கடுகு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி ரவையை வறுத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, இவற்றை பொன்நிறமாக வறுத்து, அதனுடன் பெருங்காயம், பச்சை மிளகாய், தேவையான உப்பு போட்டு கலந்து அதனுடன் ரவையும், தயிறும் கலந்து கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கலந்து 10 நிமிடம் ஊறிய பின் நன்கு கலந்து, கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இந்த மாவை இட்லியாக ஊற்றினால் சுவையான, மணமுள்ள ரவா இட்லி தயார். இதற்கு சாம்பார், எந்த வகை சட்டினியும் பொருத்தமாக இருக்கும்.

அவல் உப்புமா

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் இல்லாமலும் செய்யலாம்.
தேவையான காய்கறிகள் (காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி- 1 துண்டு
பச்சை மிளகாய் - 6
10 நிமிடம் முன்பு அவலை நன்கு அலம்பி வடிய விடவும். அதில் உள்ள ஈரம் போதும்
தேவையான உப்பு
கறிவேப்பிலை
மல்லி இலைகள்

செய்முறை:

வாணலியில் 50 கிராம் எண்ணைய் ஊற்றி காய்ந்த பின் கடுகு போட்டு வெடித்தபின், கடலைப்ருப்பு, உளுத்தம்ப்ருப்பு தலா 1 ஸ்பூன் போட்டு நன்கு கழுவி வைத்துள்ள காய்கள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதன் பின் ஊறிய அவலை போட்டு தண்ணீர் தேவைபட்டால் தெளிக்கவும். இல்லையெனில் வேண்டாம். முடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். பொடியாக நறுக்கிய் மல்லி இலை தூவி உடனே சாப்பிடலாம். மிக விரைவாக செய்திடலாம். ருசியான சிற்றுன்டி.

வற்றல் குழம்பு

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி [அ] சுண்டைக்காய் வற்றல் - 25 grms
புளி -100 grms[or] கரைத்த புளி 1-கப் கெட்டியாக
கடுகு, பெருங்காயம், வெந்தயம் - 1/2 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சாம்பார் தூள்[அ] குழம்பு தூள் - 2 ஸ்பூன்
வெல்லம் - சிறியக்கட்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 50-gram எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்தபின் வெந்தயம், 2 காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு, அதனுடன் வற்றலையும் போட்டு வறுத்து, சிவந்தபின் பெருங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கரைத்த புளியை சேர்த்து கொஞ்சநேரம் கொதிக்க விடவும். அதன் பின் 1 டம்ளர் நீரில் சாம்பார் தூள், அரிசிமாவையும் கட்டி இல்லாமல் கரைத்து, குழம்பில் விட்டு நனறாக கொதிக்க விடவும், குழம்பு கெட்டியாக வருவதற்க்கு அரிசி மாவு ஊற்றுகிறோம். கடைசியாக வெல்லத்தை பொடி செய்து குழம்பில் போடவும். மணமணக்கும் வற்றல் குழம்பு ரெடி. ;-)

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி,பூண்டுவிழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்தாள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறுதுண்டுகளாக கட் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் உற்றி அதில் இஞ்சி, பூண்டுவிழுதைச் சேர்த்து, தீயை குறைத்து வைத்து அந்த விழுது நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை நன்கு வத்க்கி, அதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், கரம் மசாலா, தக்காளி, வெங்காயம் விழுது சேர்த்து, உப்பும் சேர்த்து நன்கு வதக்கிய பின், பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு சுருள வதக்கி மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பனிர் பட்டர் மசாலா தயார். கொஞ்சம் கிரேவியாக வேண்டும் என்றால் 1 டம்ளர் தண்ணிர் விட்டு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இது சாப்பாட்டிற்க்கும் நன்றாக இருக்கும். டிபனில் எந்த வகைக்கும் ஏற்றது.

பருப்புப் பொடி

தேவையானப் பொருட்கள்:

துவரம் பருப்பு-1கப்
கடலை பருப்பு 1 கப்
உளூத்தம் பருப்பு 1/4 கப்,
கொள்ளூ - 1/2 கப்
பெருங்காயம் - 10 கிராம்
வரமிளகாய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலேக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணைவிடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் 1 டீஸ்பூன், எண்ணெய் விட்டு, பெருங்காயத்தை வறுத்துக் கொண்டு, பின் மிளகாயைப் போட்டு வறுத்து, உப்பையும் வறுத்து, பின் வறுத்த எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து ஆற வைத்து மிக்ஸியில் நன்குப் பொடி செய்துக் கொள்ளவும்.நன்கு ஆறியபின் பாட்டிலில்ப் போட்டு பயன்படுத்திக் கொள்ளவும். சுவையான மணமுள்ள பருப்புப் பொடி தயார்.

கறிவேப்பிலைத் தொக்கு



தேவையானப் பொருட்கள்:

கறிவேப்பிலை - 100 கிராம்
புதினா - 100 கிராம்
மல்லி இலை - 100 கிராம்
பூண்டு - 20 பற்கள்
சிறிய வெங்காயம் - 20
இஞ்சி - 10 கிராம்
பிரண்டை - 10 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
புளி - 50 கிராம்
வெல்லம் - 20 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முரை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப்போட்டுவதக்கி, பூண்டு, இஞ்சி, பிரண்டை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, புதினா, மல்லி, புளி போட்டு நன்கு வதக்கி, ஆறியபின் உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து கடுகு போட்டு வெடித்த பின், மஞ்சத்தூள் 1 டீஸ்பூன் சேர்த்து, அரைத்த விழுதைச் சேர்த்து, கை விடாமல் கிளறி வெல்ல்ம்ச் சேர்த்து, உப்பு, வெந்தயம்ப்பொடி போட்டு, நன்கு சுருள வதக்கி, ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். சுவையான கறிவேப்பிலைத் தொக்கு தயார். இது உடலுக்கு மிகவும் நல்லது.

புழுங்கரிசி தட்டை

தேவையான பொருள்கள்:

இதற்கு இட்லிக்கு போடும் அரிசிதான் ரொம்ப சுவையாக இருக்கும்.
வறுத்து பொடி செய்த உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 2[அ] 5 ஸ்பூன்,
கறுப்பு எள்- 2 ஸ்பூன்,
கட்டிபெருங்காயம் சிறிய துண்டு,
கல் உப்பு தேவையான அளவு,

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 1 /2 மணி நேரம் ஊற வைத்து , அதனுடன் [கட்டி பெருங்காயத்தையும்,கல் உப்பையும் நீரில் ஊற வைத்து கரைத்து ஊற்றி] கிரைண்டரில் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த மாவில் மிளகாய்தூள், சுத்தம் செய்த எள், உளுத்தம்மாவு, கறிவேப்பிலை நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மெல்லிய சுத்தமான துணியில் உருண்டைகளாக உருட்டி கொண்டு, வட்டமாக தட்டவும். பெரிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து, தேவைபடும் அளவில் மூடிகளை வைத்தும் கட் செய்து கொள்ளலாம்.இது போல் செய்தால் சீக்கிரம் நிறைய தட்டை செய்யலாம்.

தட்டை 2 நிமிடம் காயட்டும். ஈரமாக இருக்கும்போது போட்டால் அதிக எண்ணெய் குடிக்கும். அதிக நேரம் காய்ந்து போனாலும், சிவந்து போகும். உளுத்தம் பொடி வாசனைக்கு தான் சேர்க்க வேண்டும். அதிகம் சேர்த்தால செய்யும் சமயம் மொறுப்பாகவும், சில நாட்களில் நமுத்தும் போய் விடும்.

அரைக்கீரை தொக்கு

தேவையானப் பொருட்கள்:

அரைக்கீரை - 2 கட்டு
சிறிய வெங்காயம் - 20
பூண்டு - 10 பற்கள்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிய கட்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கி பின் வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சிறிய வெங்காயம், பூண்டு சேர்த்து பின்பு கீரையை சேர்த்து நன்கு வதக்கிப் புளி சேர்த்து மிக்ஸியில் வீழுதாக அரைத்து அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு சேர்த்து வெடித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு சுருள வதக்கி தேவையான உப்பு சேர்த்து வெல்லம், மிளகாய் தூள் 2 டீஸ்பூன், வெந்தயம், பெருக்காயம் 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்கு வதங்கி எண்ணெய் மேலே வந்த பின் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

சாம்பார் பொடி

தேவையானப் பொருட்கள்:

மல்லி - 3 கப்
கடலை பருப்பு - 1.5 கப்
வெள்ளை உளுந்து - 1 tea spoon
வெந்தயம் - 1 tea spoon
பெருஙகாயம் - சிறிய கட்டி
வரமிளகாய் - 250 க்ராம்
உப்பு - 2 tea spoon

செய்முறை:

வாணலியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கட்டிப் பெருங்காயத்தை வறுத்தபின் அதனுடன் வரமிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதை வேறு மாற்றிவிட்டு மல்லி, கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, வெந்தயம், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய் இல்லாமல் வறுத்து, நன்றாக ஆறவைத்து, பின் மிக்சியில் வறுத்த பொருட்க்களனைத்தையும் பொடி செய்து கொள்ளவும். இது நன்கு ஆறிய பின் bolltleலில் போட்டு வைத்துக்கொள்ளவும். சுவையான, மனமான சாம்பார் பொடி ரெடி. ;-)

உப்புட்டு

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ
கடலைப்பருப்பு - 1/4 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் துறுவியது - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
நெய் - 300 கிராம் [அ] பிடித்த எண்ணைய்
கலர் தேவை எனில் - 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

பூரணம் செய்முறை:

கடலைப்பருப்பை அரை வேக்காடு பதம் வேக வைக்கவும். வெல்லத்தை சுத்தம் செய்து, அடுப்பில் வைத்து கரைந்த பின் வடிக்கட்டி சுத்தம் செய்து, மறுபடியும் அடுப்பில் வைத்து பாகுபதம் வரும் சமயம் மிக்ஸியில் அரைத்த கடலைப்பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, போட்டு கெட்டியாக கிளறி வைக்கவும்.

உப்புட்டு செய்முறை:

1 மணி நேரம் முன்பு மைதாமாவை மஞ்சள் தூள், கொஞ்சம் நெய் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும். அந்த மாவை சப்பாத்தி போல் இட்டு அதன் நடுவில் பூரணத்தை தேவையான அளவு வைத்து நனறாக மூடி, மீண்டும் அந்த மாவை சப்பாத்தி போல் இட்டு தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி இரண்டு பககமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இலையிலோ [அ] ப்ளாஸ்டிக் கவரிலோ தட்டலாம்.

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
வெந்தயப் பொடி, பெருங்காய பொடி - 1 ஸ்பூன்
வெல்லம் - சிறிய கட்டி
உப்பு தேவையான அளவு
எண்ணைய் - 300கிராம்.

செய்முறை:

தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகுதாளித்து, மஞ்சள்தூள் போட்டு நறுக்கியதை போட்டு நன்கு வதக்கவும். தக்காளி சாறில் நன்கு வதங்கி விடும். [வதங்கிய விழுதை அரைத்தும் செய்யலாம்] மிளகாய்தூள், வெந்தயபொடி, பெருங்காய பொடி, உப்பு,வெல்லம், சேர்த்து நன்கு சுருள வதக்கி ஆறவைத்து பாட்டிலில் போட்டு, தண்ணீர் படாமல் வைத்து கொண்டால் கெடாது. வதங்கும் போது கொஞ்சம், கொஞ்சமாகதான் எண்ணைய் ஊற்ற வேண்டும். வெல்லம் சேர்ப்பதால் ருசியாக இருக்கும்.

கறிமசால்ப் பொடி

தேவையான பொருட்கள்:

தனியா [எ] மல்லி விதை - 1/4 கிலோ
பட்டை - 10 கிராம்,
லவங்கம் - 10 கிராம்
சோம்பு - 10கிராம்
வரமிளகாய் - 100கிராம்
கடல் பாசி - 10-கிராம்
ஏலக்காய் - 10கிராம்
மராட்டி மொக்கு - 5 கிராம்
அன்னாசிப்பூ - 5 கிராம்
கல் உப்பு - 10 கிராம்.

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை நன்கு வெய்யிலில் காய வைத்து பச்சையாகவே மிக்ஸியிலோ, மிளகாய் அரைக்கும் மெஷினிலோ பவுடராக அரைத்து நன்கு கலந்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். குருமாவுக்குதான் பயன் படுத்தவேண்டும் என்று இல்லாமல், மசாலா வாசனை பிடித்தவர்கள் , பிடித்த சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம். உப்பு போட்டு அரைப்பதால் பொடியில், பூச்சி, வண்டு எதுவும் வராது.

அவல் கேசரி

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 2 கப்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
கார்ன்ப்ளவர் - 2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு.

செய்முரை:

அவலை வெறும் வாணலியில் நனறாக வறுத்து,மிக்ஸியில் ரவை போல் உடைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் நெய்-2ஸ்பூன் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அவல் ரவையை கொஞ்சம், கொஞ்சமாக தூவி கிளறவும். பாதி வெந்தபின், சர்க்கரை, தேவையானல் கேசரி பவுடர் 1/4 ஸ்பூன் போட்டு நன்றாக கிளறவும்.சிறிது,சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். அடுப்பை சிம்மில் எரியவிட்டு கிளறவும். கார்ன் ப்ளவரை லேசாக தூவிவிட்டு கிளறவும். கொஞ்ச நேரத்தில் நனறாக வெந்து விடும். கடைசியில் வறுத்த முந்திரி, திராட்சை,ஏலக்காய்தூள்,சிட்டிகைஉப்பு போட்டு இறக்கவும். 10 நிமிடத்தில் செய்து விடலாம். சூப்பராக இருக்கும்.

வாழைக்காய் சாப்ஸ்

தேவையானவை:

வாழைக்காய் - 1
மிளகு, சீரகம்,சோம்பு, கசகசா, மிளகாய்தூள், தலா - 1 ஸ்பூன்
தேவையான உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவேண்டும்.

செய்முறை:

2 டமளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில வாழைக்காயை பெரியதுண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை அணைத்து விடவும். 5 நிமிடம் கழித்து வாழைக்காயுடன், அரைத்த மசாலா விழுதை போட்டு, பெருங்காயதூள், வெந்ததூள் 2 சிட்டிகையும் போட்டு, எல்லாவற்றையும் நன்கு கலந்து, வாழைகாய் துண்டுகள் மேல் தடவி 10 நிமிடம் ஊற வைத்தால் மசாலா நன்கு ஊறி இருக்கும். தோசைக்கல்லை காய வைத்து சிறிது எண்ணைய் ஊற்றி வாழைகாயை போட்டு, இரு பககமும் திருப்பி போட்டு பொன் நிறம் வந்ததும் எடுத்து சாப்பிடலாம். இஞ்சி,பூண்டு வாசனை பிடித்தவர்கள் மசாலா அரைக்கும் போது இதையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

அக்கார அடிசல்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பால் 3/4 லிட்டர்
வெல்லம் - 2.5 கப்
முந்திரி - 10 சிறியதாக பொடித்து கொள்ளவும்
திராட்சை - 10
ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்

செய்முறை:

அரிசியை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியை போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின். வெல்லத்தை அடுப்பில் வைத்து கரைந்தபின் கல், மண் இருந்தால் சுத்தம் செய்து வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். கெட்டி பாகு வந்தவுடன் அதை வெந்த சாதத்தில் போட்டு. கொஞ்சம் நெய்யை விட்டு நன்கு கெட்டியாகும் வரை அடி பிடிக்காமல் கிளறவும். நன்கு கெட்டியான பின் இறக்கி மீதி நெய்யை காய வைத்து அதில் முந்திரி, திராட்சை, வறுத்து சேர்த்துகடைசியில் ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கி பரிமாறவும்.சூடாக சாப்பிட்டால் சுவை அறுமை.

டிப்ஸ்

1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை நேரம் கிடைக்கும் போது புளியை கெட்டியாக கரைத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு, சமையலுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

2. கறும்பு சாறு சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையோ,சுவை.

3. மெது வடைக்கு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்தால் மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாப்டாகவும் இருக்கும்.

4. தோசை கருகாமல் வர ஒவ்வொரு தோசை ஊற்றும்போதும் லேசாக தண்ணீர் தெளித்து ஊற்றினால் பொன் தீயாமல் நிறமாக வரும்.

5. பலகாரங்களுக்கு வெள்ளை எள்ளை விட கறுப்பு எள் நல்லது.பார்க்கவும் அழகாக இருக்கும்.ருசியும் சூப்பர்.

6. காய்கறிகளை பொடியாக ந்றுகினால் சீக்கிரம் வெந்து விடுவதுடன், காயின் நிறமும்,சத்தும் கிடைக்கும்.காய் நறுக்கியதை பார்த்தாலே சாப்பிட ஆசை வர வேண்டும்.

7. காய்களை புதியதாக வாங்கி சமைத்தால், சத்தும், வாசனையும் அபாரம்.

8. ஃப்ரிஜ் இருக்கறது என்று நிறைய காய்களை வாங்கி அடைக்க வேண்டாம்.

9. திட்ட மிட்டு சமையல் செய்தால் பொருளும் வேஸ்ட் ஆகாது. சீக்கிரமாகவும் செய்து விடலாம். ஏனோ தானோ என்று சமைக்க கூடாது. சமையல் ஒரு கலை ஆதலால் பொறுமையாகவும், பக்குவமாகவும், ரசனையுடன் சமைக்க வேண்டும்.

10. திட்டமிட்டு சமையல் செய்ய எல்லாம் ரெடி செய்து கொண்டு அடுப்பை பற்ற வைத்தால் சமைக்கும் நேரமும்,கேஸும் குறைவாகவே ஆகும்.

11. நேரம் கிடைக்கும் போது இஞ்சி, பூண்டை உறித்து, உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், மசாலா குழம்பு வகைகளுக்கு ஏற்றது.

12. பச்சைமிளகாயை உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் சில்லி பேஸ்ட்.

13. மிளகு சீரகம் பொடிசெய்து வைத்து கொண்டால் அவசர ரசத்திற்க்கு கை கொடுக்கும்.

14. கட்டி பெருங்காயம்,வெந்தயம் வறுத்து பொடி செய்து வைத்து கொண்டால் எல்லா வகை குழம்புகளுக்கும் கை கொடுக்கும்.

15. இஞ்சி நிறைய இருக்கும் சமயங்களில் தோல் சீவி பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், 1/4ஸ்பூன் உப்பு சேர்த்து பொடி செய்து வைத்து கொண்டால், வெண் பொங்கல், மற்ற சமையலிலும் பயன் படுத்தி கொள்ளலாம்.

16. எந்த பொடி வகை செய்தாலும் கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து பொடி செய்து கொண்டால் ரொம்ப நாடகள் ஆனாலும் கெடாது.

17. கலர் பொடி சேர்ப்பத்ற்க்கு பதில் லெமன் சால்ட், எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். புளியை ஊற வைக்கும் போதே சிறிது கல் உப்பும் சேர்க்கலாம்.

18. சமையலில் நல்ல எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தினால் உடலுக்கு நல்லது.

19. சாம்பாரில் பருப்பை சேர்க்கும் போதுநன்கு கொதிக்க விட்டு இறக்கினால் அதிக நேரம் கெடாது.

20. காய்களை எண்ணெயில் 1 நிமிடம் வதக்கி விட்டு போட்டால் வாசனையாக இருக்கும்.விரைவில் வெந்துவிடும்.

21. ரசத்திற்க்கு பருப்பு தண்ணீர் விட்டு நுரைத்து வந்தவுடன் இற்க்கி 1 ஸ்பூன் நெய்யில் கடுகு, மிளகு, சீரக பொடி, கடா பெருங்காயம் பொடித்துபோட்டால் மணமாக இருக்கும்.

22. தேங்காய் பால் ஊற்றி செய்யும் குழம்புகளுக்கு இறக்கும் போதுதான் பால் ஊற்ற வேண்டும் இல்லையெனில் பால் திரிந்துவிடும்.

23. அல்வா செய்யும் சமயம் பதம் தவறி நீர்த்துவிட்டால் கார்ன் ஃப்ளார் மாவை தேவையான அளவு சேர்த்துபின், [அதற்கு தகுந்த சர்க்கரைபோடவும்] ஆறியபின் விரைவில் கெட்டியாகிவிடும். அல்வாவும் மினுமினுப்பாக, சுவையாக இருக்கும்.

24. குலோப்ஜாமூன் செய்ய சர்க்கரை பாகில் எலுமிச்சை சாறு 5 சொட்டுகள் விட்டால் பாகு இளகியே இருக்கும்.

25. ரவா கேசரி செய்யும் சமயம் நீர்த்து விட்டால், அதை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு கோதுமை மாவு கொஞ்சம் எடுத்து வறுத்து போட்டால் கெட்டியாகிவிடும். 2 ஸ்பூன் நெய்விட்டால் சூப்பராக இரூக்கும்.

ஆரோக்கியம் காக்க

1. மாதம் - 2 முறை முடக்கத்தான் கீரை துவையல் சாப்பிடலாம்.

2. பேரிச்சம்பழம், அத்திப்பழம், சப்போட்டாப்பழம் - தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்.

3. கீரை வகைகளில் தினம் ஒரு கீரை சாப்பிட்டால் அடிக்கடி வரும் சோர்வும், கை, கால் வலியும் வராது.

4. வயதானால் வரும் வாதபிடிப்புக்கு: பொடுதலை + வாதநாராயணன் இலை சாறு சம அளவு தினம் கலையிலும், மாலையிலும் 2 ஸ்பூன் சாப்பிட்டு 100 கிராம் பால் 21 நாட்கள் குடிக்க குணம் தெரியும். உணவில் உப்பு, புளி சேர்க்க கூடாது.

5. விளாம்பழம், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அடிக்கடி உணவில் சேர்த்தால் நககோளாறுகள் வராது. சர்க்கரை நோயினால் ஏற்படும் களைப்பிற்கு நெல்லிகாய் ஊறவைத்த நீரைகுடிக்கலாம்.

6. வைட்டமின் 'A' வெந்தயகீரை, முருங்கை கீரை, கேரட், பப்பாளி, தயிர், முட்டை ஆகியவற்றில் நிரைய உள்ளது.

7. வைட்டமின் 'B' கோதுமை, பருப்பு வகைகள், பால், தயிர் ஆகியவற்றில் உள்ளது.

8. வைட்டமின் 'C' முட்டைகோஸ், தக்காளி, மல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா நெல்லிக்காய் ஆகியவற்றில் நிரைய உள்ளது.

9. இரும்பு சத்து முருங்கை கீரை, முள்ளங்கி, புதினா, முட்டைகோஸ், வெல்லம், கேழ்வரகு (ராகி) ஆகியவற்றில் நிரைய உள்ளது.

10. சுண்ணாம்பு சத்து: பச்சை காய்கறிகள்,பூண்டு, இஞ்சி, கேழ்வரகு, பால்.

11. புரத சத்து: பால்,தயிர், வெண்ணெய், பருப்பு மற்றும் கடலை வகைகள், முட்டையின் வெள்ளைக்கரு.

12. வாய்புண், குடல் புண் குணமாக மணத்தக்காளி கீரையை (10 இலைகள்) தினமும் காலையும், மாலையும் பச்சையாக மென்று 1 டம்ளர் மோர் தண்ணியாக குடிக்க வேண்டும்.

இனிப்பு பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,
பாசிபருப்பு - 1 கப்,
வெல்லம் - 3 கப்,
நெய் - 3/4 கப்,
முந்திரி - 20, சிறிதாக ஒடித்து கொள்ளாவும்,
ஏலக்காய் - 3,
பச்சை கற்பூரம் - மிளகில் பாதி அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் பருப்பை சிவப்பாக வறுத்து, அரிசியையும் லேசாக வறுத்து, குக்கரில் [3] கப்புக்கு 6- கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசி, பருப்பை போட்டு வேக வைக்கவும். 2,3 விசில் விடலாம். நன்கு குழைந்து இருந்தால்தான் அது பொங்கல். வேறு ஒரு வாணலியில் வெல்லத்தை போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி கரைந்து வந்த சமயம் கல், மண் இல்லாமல் சுத்தம் செய்து மறுபடியும் கெட்டியான பாகு வைத்து, அதை வெந்த அரிசி, பருப்பில் போட்டு நன்கு கலந்து, மசித்து விட்டு, நெய்யில், முந்திரியை வறுத்து போடவும். ஏலக்காய், பச்சை கற்பூரம், போட்டு கிளறினால் சுவையான பொங்கல் ரெடி. மீதி நெய்யை பொங்கல் மேல் ஊற்றி விடவும். வெல்லத்தை பாகு வைத்து போட்டால்தான் மீதி இருந்தால் கூட 2 நாட்களுக்கு கெடாது. அரிசி,பருப்பு ரொம்ப குழைவாக வேண்டும் எனில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இல்லையெனில் கடைசியாக கெட்டியான பால் சேர்க்கலாம். பாகு சேர்க்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும். பயப்படவேண்டாம். சிறிது நேரத்தில் கெட்டியாக மாறிவிடும். பாகை சேர்க்கும் சமயம் கொஞ்சம் கைவிடாமல் கிளறினால் கட்டி தட்டாது. ஸ்வீட் அதிகம் வேண்டும் என்றால் இன்னும் 1/2 கப் வெல்லம் சேர்க்கலாம். சர்க்கரை சேர்த்தும் இந்த பொங்கல் செய்யலாம். பொங்கல் வெள்ளையாக இருக்கும். ஆனால் சர்க்கரை 5 கப் போட்டு செய்யனும். அதையும் பாகு காய்ச்சி செய்யனும்.

அரிசி, பருப்பை வறுத்து செய்தால்தான் பொங்கல் வாசனையாக இருக்கும். அரிசி, பருப்பை கொஞ்சம் எடுத்து, வாணலியில் கடுகு, இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், தட்டி, நெய்யில் பொரித்து் காரத்துக்கு 2 பச்சைமிளகாய் கீறி போட்டு தேவையான உப்பும் போட்டு மேலே கொஞ்சம் நெய் ஊற்றினால் வெண்பொங்கலும் தயார். இரண்டும் தேவைஎனில் அதற்கு தகுந்தபடி அரிசி, பருப்பு போடவும். ருசியான இரண்டு பொங்கலும் ஒரே சமயத்தில் செய்யலாம்.

சேமியா பொங்கல்

தேவையான பொருட்கள்:

சேமியா - 1/4கிலோ
பாசிபருப்பு-100கிராம்,
மிளகு- 2ஸ்பூன், சீரகம்-1 ஸ்பூன்,
பச்சைமிளகாய்-2,
நெய்-50கிராம்,
உப்பு- தேவையானது,

செய்முறை:

பாசிபருப்பை வெறும் வாணலியில் வறுத்து, அதனுடன் 4 முந்திரி பருப்பையும் உடைத்துபோட்டு வறுத்து,பருப்பைமட்டும் தனியாக வேக வைக்கவும். 2 ஸ்பூன் நெய்யில் சேமியாவை வறுத்து, 2 டமளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து, வெந்த பாசிபருப்பையும் போட்டு,உப்பும் போட்டு, நன்குகலந்து நெய்யில் மிளகு,சீரகம்,தாளித்து,வறுத்த முந்திரியையும்போட்டால் சேமியா வெண்பொங்கல் தயார். சுலபமாக செய்யகூடிய குறைந்த கலோரி கொண்ட டிஷ்.

கத்தரிக்காய் கொஜ்ஜு

தேவையான பொருட்கள்:

பெரிய கத்தரிக்காய்- 2,
தக்காளி-2 (பெங்களுர் தக்காளி)
புளி எலுமிச்சை அளவு,
பெரிய வெங்காயம்-2 ,
குழம்ப பொடி- 2 ஸ்பூன்,
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூம்,
பெருங்காய்ம்- கொஞ்சம்,
தாளிக்க கடுகு,உளுத்தம்பருப்ப,கடலைபருப்பு-1 ஸ்பூன்,

செய்முறை:

கெட்டியான வாணலியில் 2- ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம், இவற்றை தாளித்து எடுத்து கொண்டு, அதிலேயே கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு சிம்மில் வைத்து மூடி, பாதி வெந்தபின் அதனுடன் தக்காளியை போட்டு மூடி விட்டால் இரண்டும் சிறிது நேரத்தில் வெந்து நல்ல சுட்ட வாசனை வரும். புளியை நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து பொடியாக வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். கொஞ்சம் மஞ்சள்தூள், குழம்பு பொடிபோட்டு வதக்கி, வதக்கி வைத்துள்ள கத்தரிக்காய், தக்காளியை தோல் நீக்கிவிட்டு, கத்தரிக்காயை கையால் நன்கு மசித்து, தக்காளியை மிக்ஸியில் அடித்து, வெங்காய கலவையில் ஊற்றி கொதிக்க விடவும். புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி, உப்புபோட்டு நன்கு கொதிக்கவிட்டு, தாளித்து வைத்துள்ள பொருள்களை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, மல்லி தூவி விடவும். [சுட்டதை தண்ணீரில் போட்டால் சுலபமாக உரிக்கலாம்.] புளிப்பும், காரமும் நிறைந்த இந்த டிஷ் வெண்பொங்கல், உப்புமா, கிச்சடிக்கு சூப்பர் சைட்டிஷ்.