Showing posts with label நொறுக்கு தீணி. Show all posts
Showing posts with label நொறுக்கு தீணி. Show all posts

Saturday, June 14, 2008

உதிர்த்த வெங்காய பக்கோடா

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 2
பஜ்ஜி மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க

பஜ்ஜி மாவு இல்லையெனில் கடலை மாவு - 1 கப் என்றால் அரிசி மாவு - 1/4 கப் தேவை .

செய்முறை :

வெங்காயத்தை இரண்டாக வெட்டி கொண்டு மேல் பக்கம் கெட்டியான பகுதியை வெட்டிவிட்டு நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். அதி கொஞ்சம் உப்பு க்லந்து உதிர்த்து கொண்டு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்தூள், கறிவேப்பிலை எல்லாம் போட்டு பிசிறி, எண்ணெய்யை காயவிட்டு அதில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு மொறு மொறுன்னு வெந்ததும் எடுத்து விடவும். இதில் சிறிய கேரட்டை [ தேவைஎனில்] துருவி கலந்து பொரிக்கலாம்.இதற்கு மாவு குறைவாகவும், வெங்காயம் அதிகமாகவும் இருக்கனும். அப்போதுதான் வெங்காய வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

இட்லி மாவு போண்டா

தேவையான பொருள்கள் :

இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மைதா மாவு - 1/4 கப்
பெருங்காயம் - கொஞ்சம்
உப்பு -ருசிக்கு
தாளிக்க - கடுகு, சீரகம் - 1/4 ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அது காய்வதற்குள் பெரியவெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி இட்லி மாவுடன்+ மைதா மாவு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து பெருங்காயம்+ கடுகு, சீரகம் தாளித்து, இட்லி மாவில் உப்பு இருப்பதால் தேவையான உப்பு போட்டு நன்கு கலந்து எண்ணெய் காய்ந்தவுடன் கையில் எடுத்து கிள்ளி போடவும். சிறிய போண்டா போல் வரும். பொன் கலரில் ஆனதும் எடுத்து விடவும். மிளகாய்க்கு பதில் மிளகும் போடலாம். விருந்தினர்களோ, [அ] அவசரத்திற்க்கு நொறுக்கு தீனி வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம்.

குறிப்புகள்: பஜ்ஜி

  1. பஜ்ஜிக்கு எந்த காய்கள் போட்டும் செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே இருக்கும் காய்கள் வேகாது.
  2. மாவு கரைக்கும் போது இன்னும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கொண்டால் இது போல் மொறு, மொறு அயிட்டங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை வராது.
  3. ஆரம்பத்தில் தண்ணீர் குறைவாக ஊற்ற வேண்டும். அதிகம் ஆனால் மறுபடியும் அதில் மாவு போட வேண்டி வரும். தண்ணீர் குறைவாக இருந்தால் பரவாயில்லை. உப்பும் அதேபோல்தான்.
  4. முதலில் எண்ணெய் கொஞ்சமாக வைத்து ஒன்று மட்டும் போட்டு உப்பு, காரம் பார்த்து பின் தேவையானால் போட்டு கொள்ளலாம்.
  5. காலிஃப்ளவர், பனீர் மஞ்சூரியன் செய்வதாக இருந்தால் மாவில் அந்த பொருள்களை கலந்துஃப்ரிஜில் மதியம் தேவை எனில் காலையிலேயே ரெடி செய்து வைத்து மாலையில் எடுத்து பொரித்து கொள்ளலாம். ஆனால் அன்றே உபயோகபடுத்தி விட வேண்டும்.
  6. சிலர் ஸ்நாஸ் செய்ய வாணலியில் அதிகமாக எண்ணெய் வைத்துதான் செய்வார்கள். அந்த பொருள் முழுகும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
  7. சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த பொருள்களை போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும். சுட்டெண்ணெய் உடலுக்கு கெடுதல் ஆவதை தடுக்கலாம். பொருளும் வேஸ்ட ஆகாது.
  8. கொஞ்சம் யோசனை செய்து செய்தால் செய்யும் பொருளும் ருசியாக, சூப்பராக வரும்.

பிரெட் சில்லி டோஸ்ட

தேவையான பொருள்கள் ;

பிரெட் - 10 ஸ்லைஸ்
பால் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 [ பொடியாக நறுக்கவும்]
உப்பு - ருசிக்கு

செய்முறை:

பாலில் மிளகுதூள், பச்சைமிளகாய், உப்பு போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். ஒவ்வொரு பிரட்டின் மேலும் இந்த பேஸ்டை தடவி மூடி விட்டு அதன் மேல் வெண்ணெய் தடவி ஸாண்ட்விச் டோஸ்ட்டர் [அ] தோசைகல்லில் [அடுப்பை சிம்மில் எரியவிட்டு ] போட்டு டோஸ்ட் செய்யவும்.பேஸ்ட் நன்கு மசிந்து இருக்கனும்.அப்போதுதான் சுவையாக இருக்கும்.

Friday, June 13, 2008

ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 2 கப்
காரம் தேவைஎனில் - 2 ஸ்பூன்
கொஞ்சம் ஊப்பு
எண்ணெய் பொரிக்க

ஸ்டஃப்க்கு மாவு : 1/2 கப் கடலைமாவு, தனியா பொடி- 1/4 ஸ்பூன், கரம்மாசாலா - 1/4 ஸ்பூன், உப்பு கொஞ்சம், கொஞ்சம் சீரகம், வேக வைத்த சிறிய உருளைகிழங்குடன் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து பூரணமாக பிசைந்து வைத்து கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி உள்ளே பூரணத்தை அடைத்து வைக்கவும்.

செய்முறை :

பஜ்ஜி மாவில் கொஞ்சம் உப்பு, மிளகாய்தூள் போட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு, ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை போட்டு மிதமாக எரிய விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சூடாக சாப்பிடவும். எல்லோரும் விரும்பி சாப்பிடும் காரசாரமான பஜ்ஜி இது.

மசாலா வேர்க்கடலை

தேவையான பொருள்கள் :

வேர்க்கடலை - 200 கிராம் [ வறுக்காதது]
பஜ்ஜி மாவு - 1-1/2 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது [தேவையானால்]
எண்ணெய் பொரிக்க .

செய்முறை :

கடலையையுடன் மிளகாய்தூள், கலர்,உப்பு, பஜ்ஜி மாவையும் கலந்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறி ஊற வைக்கவும். எண்ணெய்யை காய விட்டு [ தண்ணீர் வேண்டும் எனில் இன்னும் கொஞ்சம் தெளித்து கொண்டு] கொஞ்சமாக கையில் எடுத்து உதிர்த்து போடவும். போடவுடன் கிளற கூடாது. கொஞ்ச நேரம் கழித்து திருப்பி விட்டு வெந்தபின் எடுக்கவும்.

ஸ்நாக்ஸ் வகைகள் :

குறிப்பு : உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவை தயார் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கிலோ
பச்சரிசி - 100 கிராம்
வரமிளகாய் - 30
கட்டி பெருங்காயம் - 25 கிராம்
கல் உப்பு - 2 ஸ்பூன்
இவற்றை ந்ன்கு வெய்யிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும். இந்த மாவில் சமையல் சோடா - 1 ஸ்பூன், 50 கிராம் மைதா கொஞம் [ஆரஞ்சு கலர் தேவையானால்] போட்டு கலந்து ஆற விட்டு பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும் போது பயன்படுத்தலாம். பஜ்ஜி, ப்க்கோடாவுக்கு எண்ணெய் காய விட வேண்டும் அதற்கு புகை வரும் அளவுக்கு வேண்டாம். எண்ணெய் காயாமல் போட்டால் சதசதன்னு இருக்கும். மொர, மொரப்பாக வராது.



ஆப்பிள் பஜ்ஜி


தேவையான பொருள்கள் :

ஆப்பிள் - 1
பஜ்ஜி மாவு - 1 கப்
கொஞ்சம் மஞ்சள்பொடி
இன்னும் காரம் தேவை எனில் மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

ஆப்பிளை நன்கு சுத்தம் செய்து நீளமாக, மெல்லியதாக நறுக்கி விதையை எடுத்து கொள்ளவும். மாவில் எல்லாவற்றையும் கலந்து த்ண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். எண்ணெயை காய விட்டு ஆப்பிளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். தொட்டு கொள்ள தேங்காய் சட்னி அரைத்து கொள்ளவும். இல்லை எனில் தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

Thursday, June 12, 2008

வெங்காய பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 1
பஜ்ஜி மாவு - 1கப்
மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

வெங்காயத்தை மெல்லிய வட்டமாக நறுக்கவும். காரம் தேவை எனில் போட்டு கொள்ளவும். பஜ்ஜி மாவை கரைத்து கொள்ளவும். எண்ணெய் காய விட்டு மாவில் வெங்காயத்தை தோய்த்து [ இரண்டு பக்கமும் மாவு படும்படி ] காய்ந்த எண்ணெயில் போட்டு, இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். பொன் கலர் ஆனவுடன் எடுத்து விடவும்.இந்த வெங்காய் பஜ்ஜி சூடாக சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

Thursday, May 8, 2008

ரெடி மாவு தயாரிக்க

ரெடி மாவு தயாரிக்க: கடலை பருப்பு- 1/2 கிலோ, அரிசி- 100 கிராம், வரமிளகாய்-20, கல் உப்பு- கொஞ்சம், கட்டி பெருங்காயம்-சிறியது. இவற்றை வெய்யிலில் நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து வைத்து கொள்ளவும். தேவையான போது மாவுடன் ஒருசிட்டிகை- சமையல் சோடா கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொண்டு செய்யவும்.காரம் தேவை எனில் மிளகாய் பொடி கலந்து கொள்ளவும்.

மெதுவடை செய்ய: உளுந்து 1 - கிலோ, புழுங்கல் அரிசி- 250 கிராம், உப்பு கொஞ்சம் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து கொண்டு தேவையான போது மாவை எடுத்து சப்பாத்திக்கு பிசைவதுபோல் கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விட்டு, அதனுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
கறிவேப்பிலை, மல்லி இலை, கேரட்[ தேவையானால்] சேர்த்து வடைகளாக பொரித்து எடுக்கவும். புழுங்கல் அரிசி போடுவதால் வடை மொறு, மொறுப்பாகவும், சாப்டாகவும் இருக்கும். எண்ணெயும் அதிகம் குடிக்காது.

போண்டா மிக்ஸ்: கடலைபருப்பு- 1 கிலோ, புழுங்கல் அரிசி-100 கிராம், வர மிளகாய்-20 கொஞ்சம் கல் உப்பு சேர்த்து நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து கொள்ளவும். தேவையான மாவை எடுத்து 2 ஸ்பூன் எண்ணெய் காயவிட்டு மாவில் ஊற்றி,பெரியவெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இஞ்சி, பிடித்தமான கீரை ஏதாவது சேர்த்து தளர்வாக பிசைந்து 1நிமிடம் ஊற விடவும். உப்பு போட மறக்க வேண்டாம். மாவை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

புளியோதரை மிக்ஸ்: புளியை சுடு நீரில் ஊறவைக்கவும்.இதனால் பேஸ்ட் அதிகம் வரும்.வேஸ்ட ஆகாது. புளி-1/2 கிலோ, கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் கடலைபருப்பு, 2 - ஸ்பூன் உளுத்தம்பருப்பு, தனியா-5 ஸ்பூன், வரமிளகாய்-25, கட்டி பெருங்காயம் போட்டு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொண்டு,புளியை நன்கு கரைத்து கெட்டியாக சுண்டும் வரை கொதிக்க விட்டு அதில் 1/4 ஸ்பூன்- மஞ்சள்பொடி,கல் உப்பு , பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.கடைசியில் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கடைசியில் 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கவும். தேவையானபோது சாதத்தை வடித்து இந்த புளிகாய்ச்சலை போட்டு கலந்தால் புளியோதரை ரெடி.

Tuesday, February 26, 2008

வெல்ல சீடை

தேவையானவை:

(மாவு பதம் உப்பு சீடைக்கு சொன்னது போலதான் .)
வெல்லம் - மாவு 2 கப் என்றால் வெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 4
எள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கொஞ்சம் முற்றிய தேங்காய் என்றால் வாசனையாக இருக்கும்
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

வெல்லத்தை தூள் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைந்தபின் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பிசுகென்று வரும் போது மாவை போட்டு மற்ற எல்லா பொருள்களையும் போட்டு கெட்டியாக பிசைந்து துணியில் ஊருட்டி போட்டு பொரித்து எடுக்கவும். கண்டிப்பாக மாவை வறுத்துதான் செய்ய வேண்டும். இல்லையெனில் உருண்டைகளை போட்டவுடன் கரைந்து விடும். மாவின் பதமும் கெட்டியாகதான் இருக்கவேண்டும். அதற்கு தகுந்தபடி மாவில் கொஞ்சம் , கொஞ்சமாக வெல்லம் ஊற்றி பிசைவும். உருட்டும் பதம் வராவிட்டால் அதில் கொஞ்சம் கோதுமை மாவு கலந்து அப்பமாக பொரித்துக் கொள்ளலாம். கலந்த மாவை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

சீடை [உப்பு சீடை]

தேவையானவை:

மாவு பச்சரிசி - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 50 கிராம்
கல் உப்பு, பெருங்காயம் - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்.
கடலைப் பருப்பு [அ] பாசிப்பருப்பு ஊறவக்கவும் [3 ஸ்பூன்]

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி நிழலில் காய வைத்து அரைத்து கொள்ளவும். மாவு ஈரமாக இருக்கும். நன்கு சலித்து கொள்ளவும். இல்லையெனில் சீடை வெடிக்கும். ஊளுத்தம்பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசிமாவை கெட்டியான வாணலியில் போட்டு கோலம் போடும் பதத்திற்கு வறுக்கவும். அதனுடன் எல்லாவற்றையும் சேர்த்து [ பெருங்காயம்,உப்பு ஊறவைத்து அந்த நீர், மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு கொஞ்ச நேரம் காய்ந்தபின் எண்ணெயில் பொட்டு பொரித்து எடுக்கவும். காரம் தேவைபடுபவர்கள் மிளகாய்தூள் [அ] மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் சேர்க்கும் போது ஈரம் இருப்பதால் தண்ணீர் தெளித்து பிசையவும். முதலிலேயே தண்ணீர் அதிகமாக போனால் ஒன்றும் செய்ய முடியாது. கவனமாக செய்யவும். மாவை வறுக்காமல் போட்டால் சீடை வெடிக்கும்.

Monday, November 5, 2007

நிலக்கடலை முறுக்கு

தேவையானவை:

அரிசி மாவு - 2 கப்
வறுத்த நிலகடலை - 1 கப்
உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்தது - 2 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - ருசிகேற்ப
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

நிலகடலையை மிக்ஸியில் பவுடர் செய்து, அதனுடன் அரிசி மாவு, எள், மிளகாய்தூள், உளுந்து பொடி, பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொண்டு, எண்ணெயை காய வைத்து சிறிய முறுக்குகளாக பிழிந்து வெந்தபின் எடுக்கவும். செய்வது எளிது.

பானி பூரி

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
மைதா - 2 ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு துளி
உப்பு - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்

பானி செய்ய:

புதினா, மல்லி இலை - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 8
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வறுத்த சீரகம் - 1.5 ஸ்பூன்
ப்ளாக் சால்ட் - 1.5 ஸ்பூன்
உப்பு கொஞ்சம்

இனிப்பு சட்னி:

கொஞ்சம் புளி, பேரிச்சம் பழம், சிறிது வெல்லம், மிளகாய் பொடி, பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து கொண்டால் இனிப்பு சட்னி ரெடி. தேவைப்படுபவர்கள் இந்த சட்னியை கலந்து கொள்ளலாம்.இல்லையேனில் பானி மட்டும் போதும். புளியை 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மற்ற எல்லா பொருட்களையும் அந்த புளி தண்ணீரில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேவையான தண்ணீர் கலந்து வைத்து கொள்ளவும்.

பூரி செய்முறை:

ரவை,மைதா,சோடா,உப்பு கொஞசம் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி இடுவது போல் தேய்த்து, சிறிய பாட்டில் மூடியை வைத்து ஒரே மாதிரி கட் செய்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடு செய்து பூரியை பொரிக்கவும்.

சாப்பிடும் முறை:

(இது அனைவரும் அறிந்ததே, இருப்பினும் கோப்புக்காக ;-)
பொரித்து வைத்துள்ள பூரியில் நடுவில் ஓட்டை போட்டு பானி தண்ணீர் கொஞ்சம், இனிப்பு சட்னி கொஞ்சம், ஊற்றி சாப்பிடவும். பச்சை வெங்காயம் பிடித்தவர்கள் பொடியாக நறுக்கி மேலே தூவி சாப்பிடவும். கேரட், பீட்ரூட்டையும் துருவி மேலே போட்டும் சாப்பிடலாம். அப்போது சட்னி கொஞ்சம் அதிகமாக ஊற்றி கொள்ள வேண்டும். இனிப்பு, காரம், புளிப்பு எல்லாம் சேர்ந்து சூப்பர் சுவையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன். டைம் கிடைக்கும் போது பூரியை செய்து வைத்து கொண்டு சைட் டிஷ்ஷை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.ஆனால் என்னதான் சொல்லுங்கள், இது சத்தான உணவு அல்ல!! தமிழ் உணவு இல்லை!! அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

பச்சரிசி தட்டை

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு- 1கப்,
உளுத்தம் மாவு- 1 ஸ்பூன்,
கடலைபருப்பு,[அ] பாசிபருப்பு- 1 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்,
வெண்ணெய்- 1/2 ஸ்பூன்[தேவையானால்]
உப்பு- 1/2 ஸ்பூன்,
எண்ணெய்- பொரிக்க

செய்முறை:

மாவு அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிய விட்டு மாவாக திரித்து கொள்ளவும். இந்த வகையில் செய்யும் பலகாரங்கள் சுவையாக இருக்கும். பருப்பை 10 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். கொஞ்சம் தண்ணீரிலஉப்பையும்,பெருங்காயத்தையும் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் சலித்த அரிசி மாவையும்,ஊளுத்தம்மாவையும் நன்கு கலந்து அதோடு, வெண்ணெய், மிளகாய்தூள் போட்டு கலந்து வைக்கவும். ஊற வைத்துள்ள கடலைபருப்பை வடித்து மாவில் சேர்த்து, உப்பு,பெருங்காய தண்ணீரையும் ஊற்றி, கொஞ்சமாக நீரை தெளித்து பிசையவும்.இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு வெள்ளை துணியில் ஒவ்வொரு உருண்டையும் வைத்து அதை விரல்களால் தட்டைகளாக தட்டவும்.
துணியில் தட்டையை தட்டுவதால் அதிக ஈரம் இருந்தால் அதை இழுத்து கொள்ளும். சரியான பதமாக இருந்தால் வாழை இலை,[அ] பிளாஸ்டிக் கவர் எதில் வேண்டுமானாலும் தட்டி கொள்ளலாம். ஊறவைத்த பருப்புகளில் நிலகடலை,பொட்டுகடலை எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். நம் விருப்பம்.

பேல் பூரி

தேவையான பொருட்கள்:

பொரி - 100 க்ராம்
பெரிய வெங்காயம், கேரட், பீட் ரூட், குடை மிளகாய் - தலா 50 கி்ராம்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி - 2
மாங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
லெமன் சால்ட் [அ] எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
சாட் மசாலா - 1 ஸ்பூன்
மல்லி தழை - 3 ஸ்பூன
பூண்டு - 5 பற்கள், இஞ்சி - 1 சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 6 [இவற்றை அரைத்து கொள்ளவும்]
உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

எண்ணையைக் காய வைத்து, அரைத்த விழுதை போட்டு குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, காய்கறிகளைதுருவி, பொரியுடன் கலந்து லெமன் சாறும் சேர்த்து, மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து உடனே பரிமாறுங்கள்.

புழுங்கரிசி தட்டை

தேவையான பொருள்கள்:

இதற்கு இட்லிக்கு போடும் அரிசிதான் ரொம்ப சுவையாக இருக்கும்.
வறுத்து பொடி செய்த உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 2[அ] 5 ஸ்பூன்,
கறுப்பு எள்- 2 ஸ்பூன்,
கட்டிபெருங்காயம் சிறிய துண்டு,
கல் உப்பு தேவையான அளவு,

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி 1 /2 மணி நேரம் ஊற வைத்து , அதனுடன் [கட்டி பெருங்காயத்தையும்,கல் உப்பையும் நீரில் ஊற வைத்து கரைத்து ஊற்றி] கிரைண்டரில் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த மாவில் மிளகாய்தூள், சுத்தம் செய்த எள், உளுத்தம்மாவு, கறிவேப்பிலை நெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மெல்லிய சுத்தமான துணியில் உருண்டைகளாக உருட்டி கொண்டு, வட்டமாக தட்டவும். பெரிய உருண்டைகளாக செய்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து, தேவைபடும் அளவில் மூடிகளை வைத்தும் கட் செய்து கொள்ளலாம்.இது போல் செய்தால் சீக்கிரம் நிறைய தட்டை செய்யலாம்.

தட்டை 2 நிமிடம் காயட்டும். ஈரமாக இருக்கும்போது போட்டால் அதிக எண்ணெய் குடிக்கும். அதிக நேரம் காய்ந்து போனாலும், சிவந்து போகும். உளுத்தம் பொடி வாசனைக்கு தான் சேர்க்க வேண்டும். அதிகம் சேர்த்தால செய்யும் சமயம் மொறுப்பாகவும், சில நாட்களில் நமுத்தும் போய் விடும்.