Wednesday, April 30, 2008

வெயில் காலத்திற்க்கு பயன்படும் டிப்ஸ்

1. கோசாப்பழம்[ தர்பூசணி] வெயில் காலத்தில் நிறைய சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் யூரினரி ட்ராக் இன்ஃபெக்‌ஷனில் கொண்டுவிடும். ஒரு நாளைக்கு 2 பீஸ் சாப்பிட்டால் பிரச்சனை வராது.

2. முலாம்பழம், கிர்ணிபழம் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

3. வெள்ளை பூசணிக்காயை நிறைய சாப்பிடலாம். தோல் சீவி , அதனுடன், கொஞ்சம் கேரட், கொஞ்சம் வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுதூள் கலந்து,உப்பு போட்டு சாலட் செய்து சாப்பிடவும். கடுகு தாளித்து, கொஞ்சம் தயிர் போட்டு கலந்து தயிர் பச்சடியாக சாப்பிடவும். மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

4.வெயில் காலத்தில் அடிக்கடி சூடு பிடிக்குதா தண்ணீரை சூடு செய்து கொஞ்சம் காசி கட்டியை கலந்து ஆற வைத்து குடித்தால் எல்லா இன்ஃபெக்‌ஷனும் ஓடி போய் விடும். இது நல்ல மருத்துவகுணம் உள்ளது. தலைவலி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்களும் இந்த தண்ணீரை குடிக்கலாம்.

5. வெள்ளரிக்காயை துறுவி கொண்டு அதில் மிளகுதூள், ஏலக்காய்பொடி கலந்து சாப்பிட்டாலும் நீர்கடுப்பு வராது.

6. வெள்ளரிக்காய்= மாதுளைதோல் இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்தாலும் நீர்கடுப்புக்கு நல்லது.

7.வெயில் காலத்தில் மோர் குடிக்கும்போது அடிக்கடி பச்சைமிளகாயை சேர்த்தால் சூடு அதிகம் ஆகும். அதற்குபதில் இஞ்சி,கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம்,உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கலாம்.

8. வெயில் காலத்தில் கத்தரிக்காய் சாபிட்டால் உடல் சுடு அதிகம் ஆகும்.கீரை அதிகம் சேர்த்து கொள்ளவும். கூடிய வரை மசாலா பொருட்களை கோடை காலத்தில் அதிகம் சேர்க்கவேண்டாம்.

9. வெயிலில் வரும் வேனல் கட்டிகளுக்கு சந்தனமும்+மஞ்சளும் கலந்து பூசி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.நல்ல நிவாரணம் கிடைக்கும்.

10. காலையில் 4-பேரிச்சைபழம்,கிஸ்மிஸ் பழம்-4,1-ஸ்பூன் கசகசா இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கலாம். தித்திப்பு இன்னும் தேவைஎனில் பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம்.

11. குடி நீர் இருக்கும் பாத்திரத்தில் குறுமிளகு,கொஞ்சம் வெட்டிவேர்,சீரகம், பனங்கல்கண்டு போட்டு சூடு செய்து அதையே அன்று முழுவதும் குடிக்கலாம். [வெறும் தண்ணீருக்கு பதிலாக] அந்த நீர் அன்றன்று புதியதாக போட்டு கொள்ளனும்.முதல் நாள் தண்ணீர் இருந்தால் கீழே கொட்டி விடவும்.

12.முட்டை கோஸ் அதிகமாக சாப்பிடவும். பொடியாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் கேரட், வெள்ளரிக்காய்+உப்பு+ மிளகுதூள் போட்டு சாலட் போல் சாப்பிடவும். தக்காளி, பெரிய வெங்காயமும் சேர்த்து சாப்பிடலாம்.

13.சோப் தேய்த்து குளிப்பதற்க்கு பதிலாக மஞ்சள்+சந்தனதூள்+பன்னீர்[அ] கடலைமாவு+பன்னீர்+தயிர் இதில் ஏதாவது ஒன்றை கலந்து தேய்த்து கொஞ்ச நேரம் ஊறியபின் குளிக்கவும்.

14.சந்தனம் + மஞ்சள் + பன்னீர் பேஸ்ட் அருமையான சன்ஸ்க்ரீனும் கூட. இதை தடவி குளித்து விட்டு வெளியில் போனாலும் சூரியனின் சூடு தெரியாது.
வியர்குருவின் மேல் இந்த பேஸ்டை போட்டு சில நாள் குளித்தால் வியர்க்குரு மறைந்துவிடும்.

15.குளிக்கும் நீரில் கொஞ்சம் தினமும் பன்னீர் கலந்து குளித்தால் உடம்பு வாசனையாக இருக்கும்.வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 2[அ] 4 முறைகூட குளிக்கலாம். வேர்வை நாற்றம் வராது. வெட்டி வேரை கொஞ்சம் முதல் நாளே குளிக்கும் நீரில் போட்டு வைத்தும் குளிக்கலாம்.

மசாலா மோர்

செய்முறை: மோர்- தேவையான அளவு, பூண்டு- 2 பற்கள், சிறிய வெங்காயம்-5,கறிவேப்பிலை -10 இலை, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-2 உப்பு- தேவைக்கு ஏற்ப. தாளிக்க கடுகு- 1/4 ஸ்பூன்.
செய்முறை: மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டி, கடுகு தாளித்து குடிக்கலாம். ஜில்லுன்னு வேண்டும் எனில் ஐஸ் கட்டிகளை மேலே மிதக்கவிட்டு குடிக்கவும். கொஞ்சநேரம் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். கோடைகாலத்தில் அதிகமாக குடிக்கலாம்.உடலுக்கு ரொம்ப நல்லது.

பாதாம் கீர்

தேவையான பொருட்கள்; பாதாம் பருப்பு-200 கிராம்
சர்க்கரை-150 கிராம்
லெமன் எல்லோ- கொஞ்சம்
பாதாம் எசன்ஸ்- 2 ஸ்பூன்
தனண்ணீர்-1/4 டம்ளர்
சிட்ரிக் ஆசிட்- கொஞ்சம்
செய்முறை: பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தண்ணீரில் சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு ஆறியபின் பாதாம்விழுது, மற்ற மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளை மேலே போட்டு ஜில்லுனு குடிக்கவும். கொஞ்ச நேரம் கழித்து குடிக்க வேண்டும் என்றால் ஃப்ரிஜில் வைத்து குடிக்கவும். உடலுக்கு ரொம்பவும் நல்லது.

மசாலா மில்க் ஷேக்

தேவையான பொருள்கள்; கெட்டியான பாலை காய்ச்சி ஆற வைத்து குளிர வைக்கவும். [ தேவையான அளவு] சிறிய பட்டை, 1 லவங்கம், ஏலக்காய்-2 வெள்ளை மிளகு-2 பனங்கல்கண்டு- 4 ஸ்பூன், தேவையான [Ice] கட்டிகள்
செய்முறை: பாலுடன் எல்லா மசாலா பொருட்களையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து நுரைத்து வரும் சமயம் டம்ளரில் ஊற்றி மேலெ [Ice]கட்டிகளை போட்டு குடிக்கவும். வெயில் காலத்தில் வரும் அஜிரணத்துக்கு நல்லது.

ரோஸ் சிரப்

தேவையான பொருட்கள்; கெட்டியான ரோஸ் எசன்ஸ்- 3 ஸ்பூன், சர்க்கரை-150 கிராம், தண்ணீர்- 2, கப், ரோஸ் கலர்- கொஞ்சம், எலுமிச்சை பழம்-2, எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் நன்கு அடித்து [எல்லாம் ஒரே மாதிரி கலக்க] டம்ளரில் ஊற்றி [Ice] கட்டிகளை மேலே போட்டு குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்துதேவைபடும் போது குடிக்கலாம்.பன்னீர் வாசனையுடன் சூப்பராக இருக்கும். வெயில் காலத்திற்க்கு ஏற்றது.

Tuesday, April 29, 2008

கம்பு கூழ்

தேவையான பொருள்கள்:

சுத்தம் செய்த கம்பு- 1/4 கிலோ
தண்ணீர்- 2 டம்ளர்
மோர்- 2 டம்ளர்
சிறிய வெங்காயம்-10
உப்பு- கொஞ்சம்
மோர் மிளகாய்- வறுத்தது=2[அ]4

செய்முறை:

சுத்தம் செய்த கம்பை நன்கு கழுவி வடிகட்டி துணியில் போட்டு நன்கு காய விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கம்பு மாவை போட்டு நன்கு கிளறவும். [பச்சை தண்ணீரில் மாவை கலந்தால் கட்டி தட்டாமல் வரும்.] அடுப்பை சிம்மில் எரியவிடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும். தண்ணீரில் கையை தொட்டு வெந்த மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். அது கெட்டியான களியாக இருக்கும்.நன்கு ஆறிய பின்போ[அ] அடுத்த நாளோ அதில் சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிபோட்டு மோர்மிளகாயை கலந்து உப்பு, மோரை நன்கு தண்ணியாக கடைந்து அதில் ஊற்றி சாப்பிடலாம். உடலுக்கு வெயில் காலத்தில் குளிர்ச்சியை தரும் இந்த கம்பு கூழ்.

புதினா, சீரக ஜூஸ்

தேவையான பொருட்கள்; புதினா- 1 சிறிய கட்டு
சீரகம்- 3 ஸ்பூன்
சர்க்கரை- 100 கிராம்
சிறிய மாங்காய் நறுக்கியது- 10 துண்டுகள்
தண்ணீர்- 2 டம்ளர்
உப்பு- ருசிக்கு கொஞ்சம்

செய்முறை: புதினாவில் இலைகளை மட்டும் ஆய்ந்து அதில் சீரகபொடி,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மாங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதன் சாறையும் கலந்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்கு கலந்து அப்படியே குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்து சில்லென்றும் குடிக்கலாம். அவரவர் விருப்பம்.

கேரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்;
கேரட்-1/4 கிலோ
கெட்டியான காய்ச்சிய பால்-2 டம்ளர்
சர்க்கரை-50கிராம்
ஏலக்காய் பொடி- கொஞ்சம்

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் ஆறிய பால், ஏலக்காய், சர்க்கரை போட்டு நன்கு கலந்து [Ice] கட்டிகளை போட்டு கப்புகளில் ஊற்றி குடிக்கலாம்.

நுங்கு கீர்

தேவையானவை: பால்- 1/2 லிட்டர்
இளசான நுங்கு- 20
சர்க்கரை- 200கிராம்
ஏலக்காய்தூள்- கொஞ்சம்
செய்முறை: நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை தவிர்க்க வேண்டும்.

பானகம்.

தேவையானவை; வெல்லம்- 100கிராம்
எலுமிச்சை பழம்- 2
ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்
சுக்கு தூள்-1/2 ஸ்பூன்
தண்ணீர்- 3 கப்
கொஞ்சம்-உப்ப [ 1சிட்டிகை]
செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரையவிட்டு,அதில் எலுமிச்சை பழத்தை பிழியவும். ஏலக்காய்பொடி, சுக்குபொடி, உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கவும். தேவையானால் [ice ] கட்டிகள் போட்டும் குடிக்கலாம். வெயிலுக்கு இதமாக இருக்கும்.

கோடைக்கு ஏற்ற பானங்கள்

கேரட், வெள்ளரி ஜுஸ். [100 கிராம் சீரகத்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இது ஜுஸுக்கு தேவை, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளுக்கு நல்லது.]

தேவையானவை: தயிர்- 2-கப்
கேரட்- 2
வெள்ளரி காய்-பிஞ்சாக- 2
இஞ்சி- சிறிய துண்டு
உப்பு- தேவையானவை.

செய்முறை: கேரட், வெள்ளரியை நன்கு கழுவி கொண்டு பொடியாக நறுக்கி, இஞ்சி, உப்பு, சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிகொள்ளவும். அதனுடன் தயிரையும் நன்கு கடைந்து கலந்து சீரகதூள் சேர்த்து அப்படியே குடிக்கலாம். குளிரவைத்தும் குடிக்கலாம்.

Monday, April 28, 2008

மோர் குழம்பு பொடி

தேவையானவை:

கொப்பரை தேங்காய் - 1
பச்சை மிளகாய்- 20
சீரகம் - 25கிராம்
இஞ்சி - 10கிராம்
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

தேங்காயை துறுவி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, இதனுடன் சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும். இதை ஃப்ரிஸரில் வைத்து தேவையான போது எடுத்து செய்யவும். தேவையான காய்கறிகள் போட்டு வெந்தபின் மோரில் இந்த பொடியை கலந்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மோர் குழம்பு தயார்.

தந்தூரி மசாலா பொடி

தேவையானவை:

புதிய மிளகாய் தூள் பொடி - 100 கிராம் (நன்கு சிகப்பாக இருக்கனும்)
தனியா பொடி- 50 கிராம்
சீரகபொடி-25 கிராம்
கரம் மசாலா- 25 கிராம்
கருப்பு உப்பு -[ இந்துப்பு] 10 கிராம்
அஜினமோட்டோ- 25 கிராம்
லைம் சால்ட்- 10 கிராம்
ஆரஞ்சு கலர் - 1/2 ஸ்பூன்

செய்முரை:

இந்த போருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொண்டு நன்கு கலந்த பின் உபயோகிக்கவும்.

காலிஃப்ளவர் கறி, உருளைகறி, பனீர் கறி[அ] மசாலா செய்யும் போது இந்த பொடியை போட்டு இறக்கினால் சுவை சூப்பராக இருக்கும். [உப்பு தனியாக இதற்கு சேர்த்து கொள்ளவும்.]

செட்டி நாடு மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

வர மிளகாய்- 1/4 கிலோ (நன்கு சிகப்பாக இருக்க வேண்டும்)
சீரகம்- 25 கிராம்
மிளகு-25கிராம்
சோம்பு-25 கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பவுடராக செய்து கொள்ள வேண்டும். சல்லடையில் சலித்து, (சலித்து செய்தால் நன்கு பவுடராக வரும். ஒரே மாதிரியாக இருக்கும்.) ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைக்கவும். மிஷினில் அரைத்தால் ஒரிஜினல் வாசனை வராது.

வறுவல் பொடி

தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்
சிகப்பு மிளகாய் - 50கிராம்
பட்டை-1 [சிறிய துண்டு]
லவங்கம்- 2 மட்டும் போதும்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
கல் உப்பு - 1 ஸ்பூன்

செய்முரை:

மிளகாயை தவிர எல்லா பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிளகாயும் கலந்து நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். எந்த காய்கறிகளை வதக்கி பொறியல் செய்யும் போது கடைசியில் 1/2 ஸ்பூன் போட்டுவதக்கி இறக்கினால் சுவையாக இருக்கும். காய்களுக்கு உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

சாட் மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

இந்துப்பூ- 50கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

மேலே கூறிய கரம் மசாலா பவுடருடன் [50] மிக்ஸியில் போட்டு இரண்டையும் போட்டு பொடி செய்து நன்கு கலந்து கொள்ளவும். இதுதான் சாட் மசாலா.

கரம் மசாலா பொடி

தேவையான பொருள்கள்:

பட்டை- 50 கிராம்
லவங்கம்- 50 கிராம்
ஏலக்காய்- 5 கிராம்
சோம்பு-10 கிராம்
மல்லி-[தனியா] 100 கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருள்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடிசெய்து சலித்து பவுடராக இருக்கனும். அப்போதுதான் வாசனையாக இருக்கும். பிரியாணி செய்யும்போது காய்களை வதக்கியபின் இந்த பொடி 1/2 ஸ்பூன் போட்டு செய்யவும்.

சைனீஷ் ஃபிரைடு ரைஸ் மசாலா

தேவையான பொருள்கள்:

வெள்ளை மிளகு தூள்- 50 கிராம்
அஜினமோட்டோ -30 கிராம்
கல் ஊப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பவுடராக செய்து கொள்ளவும். ஃபிரைடு ரைஸ் செய்யும் போது சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவேண்டும். தேவையான காய்கறிகளை அவரவர் விருப்பபடி நறுக்கிக்கொண்டு எண்ணெய் விட்டு வதக்கி 1/2 நிமிடம் மட்டும் காய் வதங்க வேண்டும். பின் மேலே கூறிஉள்ள பொடியை போட்டு கொஞ்சம் நெய்[அ] அவரவர் விருப்பபடும் எண்ணெய் ஊற்றி சாதத்தை போட்டு தேவைபட்டால் உப்பு
போட்டு கொள்ளவும். கடைசியில் ஸ்பிரிங் ஆனியன் பொடியாக தூவி க் கொண்டால் அழகாக இருக்கும்.

பிரியாணி பொடி

தேவையான பொருள்கள்:

பட்டை- 10கிராம்
லவங்கம்-10கிராம்
கசகசா- 20-கிராம்
மிளகாய்-50கிராம்
கல் உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து கொண்டு பிரியாணி செய்யும்போது செய்யவும். கல் உப்பு போட்டு அரைப்பதால் வண்டு வராது.