Monday, September 7, 2009

பருப்பு உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1
துவரம்பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
வர மிளகாய் - 10
சோம்பு - 1 ஸ்பூன்
தக்காளி - 4
உப்பு - தேவைக்கு

அரைக்க : 
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன் நிறமாக வதக்கி அதில் பாதி எடுத்து வைத்து மீதியில் தக்காளியை + 2 பல் பூண்டு சேர்த்து வதங்கிய பின் மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை:
துவரம்பருப்பை ஊறவைத்து மிளகாய், சோம்பு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். பீட்ரூட்டை துருவி, எடுத்து வைத்து வெங்காயத்தையும் சேர்த்து எண்ணெய் ஊற்றி வதக்கவும். இதனுடன் பருப்பு விழுதை போட்டு கொஞ்ச நேரம் வதக்கி ஆறிய பின் உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு சுண்டி பச்சை வாசனை போன பின் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டவும். பிடித்து வைத்து இருக்கும் உருண்டைகளை சேர்த்து மேலே மிதந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். உருண்டை மேலே மிதந்து வந்தால் வெந்து விட்டது.

Thursday, July 30, 2009

டிப்ஸ்

  1. அவசரமாக ரசம் செய்ய வேண்டுமா 2 நபர்க்கு- மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1ஸ்பூன், தனியா - 1 ஸ்பூன், வரமிளகாய் - 3 புளி எலுமிச்சை அளவு. உப்பு தேவையானது.கடுகு- தாளிக்க கொஞ்சம், மஞ்சள்பொடி - கொஞ்சம், பெருங்காயம் - கொஞ்சம். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா, மிளகாய், புளியை லேசாக சூடு செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிவந்த பின் , நன்கு ஆறியபின் உப்பு போட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத்து கொண்டபின், வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, மஞ்சள்பொடி, பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தபின் இறக்கி கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால் சூப்பரான ரசம் ரெடி. நெய்யில் தாளித்தால் ரசம் சூப்பராக இருக்கும்.
     
  2. சட்னி செய்ய பருப்புகள் இல்லையெனில் கவலை வேண்டாம். தக்காளி சட்னி செய்ய வேண்டும் எனில் தக்காளி, வெங்காயம்[ சிறிய, பெரிய] எதுவாக இருந்தாலும் சரி, லேசாக வதக்கி ஆறியபின் இட்லி பொடி இருந்தால் 2 ஸ்பூன் அல்லது தேவையான அளவு போட்டு காரம் அதிகம் தேவைஎனில் வரமிளகாய் [அ] பச்சைமிளகாய் சேர்த்து அத்துடன் தேங்காய் இருந்தால் 2 ஸ்பூன் போடலாம் இல்லையெனில் தேவையில்லை. உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் அரைத்தால் சட்னி தயார். இதில் சிறிய துண்டு பீட்ரூட், கேரட், பொடியாக நறுக்கி போட்டு வதக்கினால் காய்கறி சட்னி தயார். சாப்பாட்டுக்கு தேவை எனில் கொஞ்சம் புளி சேர்த்து அரைக்க வேண்டும்.டிபனுக்கு எனில் புளி வேண்டாம்.
     
  3. ரவை - 1 கப் எனில், அரிசி மாவு- 1/4 கப், பச்சைமிளகாய் - 2 இஞ்சி - சிறிய துண்டு பெரியவெங்காயம் - 1 பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்து , உப்பும் சேர்த்து கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்தால் பொன் நிறமாக இருக்கும்.மொறு, மொறுப்பாகவும் இருக்கும். தொட்டு கொள்ள தயிரில் கடுகு தாளித்து சாப்பிடலாம்.
     
  4. கத்தரிக்காய் பச்சடி செய்ய கொஞ்சம் வாணலியில் எண்ணெய் ( 1 ஸ்பூன்) எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு மூடி வைத்தால் சீக்கிரம் வதங்கி விடும்.இப்படி செய்தாலும் சுட்ட வாசனை இருக்கும். ஆறிய பின் எடுத்து தோல் உரித்து கையினால் மசித்து கொண்டு எண்ணெயில் கடுகு,பெருங்காயம் 4 -வரமிளகாய் தாளித்து 100 கிராம் தயிரில் போட்டு, அதில் கத்தரிக்காயை கலந்தால் பச்சடி தயார்.இதுபோல் எந்த காய்களிலும் செய்யலாம். காய்களை வதக்கனும் அப்போதுதான் பச்சடியின் வாசனை வரும்.
     
  5. முதல் நாள் இரவு வைத்த சாதம் எனில் காலையில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம்,வறுப்பட்டபின் பெரியவெங்காயம் -2 பச்சைமிளகாய் 4 (அ) வரமிளகாய் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை பொடியாக நறுக்கி போட்டு தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் எரியவிட்டு சாதத்தை போட்டு வதக்கினால் வெங்காய சாதம் ரெடி. சூப்பராக இருக்கும். தேவை எனில் குடமிளகாயை பொடியாக நறுக்கி போட்டு கலக்கலாம். கேரட்டை துருவி மேலே போட்டு சாப்பிடலாம்.எதுவுமே அவசரத்துக்கு இல்லையெனில் கொஞ்சம் மிளகு, சீரகத்தை பொடிசெய்து சாதத்தில் கலந்து வதக்கலாம்.
     
  6. பீர்க்கங்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவி, பச்சை மிளகாய்சேர்த்து வதக்கி உப்பு போட்டு தயிரில் கலந்தால், பீர்க்கங்காய் தயிர் பச்சடி தயார்.

Thursday, July 23, 2009

காய்கறி கூட்டு

தேவையானவை


பூசணி
அவரை
கோஸ்
பரங்கி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்,
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை

பாசிப்பருப்புடன் மஞ்சள்பொடி சேர்த்து மலர வேகவிடவும். தேங்காயுடன் 2 பச்சைமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். அதில் மிளகாயை கீறி போடவும். பாதி வெந்தபின் உப்பு போட்டு, வெந்தபருப்பு, அரைத்துவிட்ட தேங்காயை போட்டு, கெட்டியாக இருந்தால் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இறக்கிவிட்டு நெய்யில் [அ] தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். நன்கு கலந்து விடவும்.இதற்கு தக்காளி, எலுமிச்சை தேவை இல்லை. எல்லா காய்கள், பருப்பு ஒன்றாக போட்டு ஃப்ரஷர் பேனிலும் ஒரு விசில் விட்டு பின், தாளிக்கலாம். எல்லா காய்களும் சேர்க்கலாம். சத்துள்ளது.

பாசிப்பருப்பு கடையல் (தால்)

தேவையானவை

பாசிப்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2 [அ] 3
பச்சைமிளகாய் - 4
கேரட் - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் [அ] சிட்ரிக் ஆசிட் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு -
தாளிக்க - எண்ணெய், கடுகு, சீரகம்,
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்

செய்முறை - 1

பாசிப்பருப்பை 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு குக்கரில் மூடி போட்ட டிபன் பாக்ஸில் போட்டு வேகவிட்டால் பொங்காது. குழையாது. ஒரு விசில் விட்டு அணைக்கவும். இல்லையெனில் தனியாகவும் மலர வேகவிடலாம். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மிளகாயை கீறிபோடவும். கேரட்டை பொடியாக நறுக்கி வதக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி போடவும். மூடி வேக விடவும். சீக்கிரம் வெந்துவிடும். உப்பு போட்டு வெந்த பருப்பையும் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மேலே கறிவேப்பிலை, மல்லி தூவி இறக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு, [அ] சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். எலுமிச்சை பழம் இல்லையெனில் சிட்ரிக் ஆசிட் சேர்க்கலாம்.

செய்முறை - 2

குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மிளகாய், கேரட், தக்காளி, மஞ்சள்பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி தம்மிலும் வைக்கலாம். எந்த வகையில் செய்தாலும் பாசிப்பருப்பை கொஞ்ச நேரம் (15 நிமிடம்) ஊற விட்டால் சீக்கிரம் வேகும். 1 விசில் விட்டால் போதும். கடைசியில் கடுகு, சீரகம் 1 ஸ்பூன் நெய்யில் [அ] தேங்காய் எண்ணெயில் தாளித்தால் நல்ல வாசனையாக இருக்கும். எந்த டால் செய்தாலும் இறக்கி விட்டு எலுமிச்சைசாறு பிழியனும். முதலிலேயே பிழிந்தால் தால் கசந்து போகும். இந்த தால் சாப்பாட்டுக்கும், சப்பாத்தி, டிபனுக்கும் சுவையாக இருக்கும்.

Wednesday, July 22, 2009

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை :

பச்சைமிளகாய் - 1/2 கிலோ,
தனியா பொடி - 1/4 கப்,
மஞ்சள்பொடி - 2 ஸ்பூன்,
வினிகர் - 1/4 கப்
வறுத்து பொடி செய்த கடுகு - 1/2 கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
கல் உப்பு - தேவையானவை
நல்லெண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை : 

எல்லா பொடிகளையும் வினிகரில் கலந்து கொள்ளவும். மிளகாயை சுத்தம் செய்து நீளமாக கீறி பொடியை அடைக்கவும். மேலே எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும். 4 நாட்களில் நன்கு ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல உறைப்புடனும் இருக்கும்.

டிப்ஸ்

1. தோசை மாவு குறைவாக இருந்தால் தேவையான சாதத்தை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இருக்கும் மாவையும் ஊற்றி ஒரு சுற்று சுற்றவும். நன்கு கலந்துவிடும். அதில் தோசை வார்த்தால் நன்கு முறுகலான தோசை வரும்.

2. கொழுக்கட்டைக்கு மாவுக்கு 1 டம்ளர் அரிசிக்கு 1 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் கொழுக்கட்டை விரியாமல் அழகாக வரும்.

3. சாம்பாரில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் 4 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இல்லையெனில் கொஞ்சம் தேங்காயுடன் 1 ஸ்பூன் மல்லி[ தனியாவை] மிக்ஸியில் அரைத்து கலந்தாலும் உப்பு குறையும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு சாம்பாரில் போடலாம். பரிமாறும் சமயம் உப்பு அதிகம் இருந்தால் உடனே ஒரு கப் பால் கலந்து பரிமாறவும். ஆனால் பால் கலப்பதால் இந்த சாம்பாரை உடனே சாப்பிட்டுடனும். அதிக நேரம் இருந்தால் கெட்டு விடும். அதனால் பரிமாறும் அளவுக்கு சாம்பாரில் பால் கலந்து கொள்ளலாம்.

4. சாதம் குழைவாக வேண்டும் என்று விரும்பினால அரிசியை 1 மணி நேரம் முன்பாகவே நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். அடுப்பை சிம்மில் எரியவிட்டு 1பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கலாம். உதிராக வேண்டும் எனில் 1பங்கு அரிசிக்கு 2/12 அளவு தண்ணீர் சேர்க்கலாம். அரிசி ஊறுவதால சாதம் குழையாது. உதிராகவும் இருக்கும். சாப்டாகவும் இருக்கும்.

5. உளுந்து வடை செய்யும் போது தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் தேவையான அளவு அவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கலந்து வடை தட்டவும். உப்பு போட மறக்க வேண்டாம்.

6. பாகற்க்காய் பொரியலுக்கு [ கசப்பு சுவை பிடிக்காதவர்கள்] நறுக்கி கொஞ்ச மஞ்சள்பொடி, உப்பு, புளிசாறு [அ] 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஊறவைத்து 1/2 மணி நேரம் கழித்து பொரியலோ, அதில் எது செய்தாலும் கசக்காது.

7. சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவை வறுத்து அதிகமான தண்ணீர் ஊற்றி பாதி வேகும் சமயம் அடுப்பை அணைத்து குளிர்ந்த தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி கலந்து வடிக்கவிட்டு செய்தால பாயசம் குழையாமல் சேமியாவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சேமியா பாயசம் சூப்பராக இருக்கும்.

8. சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு கிரேவி செய்தால் முதலில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் சிம்மில் எரிய விடவும். 1 ஸ்பூன் சர்க்கரை போட்டு கரைந்து பொன்கலரில் வரும் போது தக்காளி, வெங்காயம் என்று அவரவர் செய்யும்படி செய்யவும். இப்படி செய்யும்போது கலரும் வரும். டேஸ்டும் சூப்பராக இருக்கும்.

9. வெண்டைக்காயை பொரியல் செய்ய சிறிது நேரம் முன்பாகவே நறுக்கி தட்டில் பரப்பி ஃபிரிஜ்ஜில், [அ] வெயில் இருந்தால் கொஞ்ச நேரம் வைத்து பொரியல் செய்தால் சீக்கிரமும் வதங்கிடும். எண்ணெயும் குறைவாக ஆகும். வழுவழுப்பும் இருக்காது.

10. பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் குறுனையாக உடைத்து குக்கரில் பாலும் தண்ணீரும் கலந்து நன்கு வேகவிட்டு, வெந்தபின் மேலும் பால் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

11. குருமா, பிரியாணிக்கு முதலில் வாசனை பொருட்களை போட்டு, வெங்காயத்தை சேர்த்து வதங்கியபின் பூண்டை சேர்த்து வதக்கினால் வாசனை நன்றாக இருக்கும். முதலிலேயே பூண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்து கருகிவிடும்.

12. பஜ்ஜி செய்யும் போது கடலைமாவு- 1 கப், அரிசி மாவு- 1/2 கப், பொட்டுகடலை மாவு- 1/2 கப் அளவில் போட்டு நன்கு தேவையான ஊப்பு, மிளகாய் பொடி,பெருங்காய பொடி, தேவையான தண்ணீர் கலந்து பஜ்ஜி செய்தால் நன்கு உப்பி வரும்.

13. பயறுகள், பருப்புகளை ஊற விடும் போது 2 முறை நன்கு கழுவிய பின் ஊற வைக்கவும். வேகவிடும்போது அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரில் வேக வைக்கவும்.

Tuesday, May 19, 2009

பூந்தி தயிர்பச்சடி

தேவையானவை :

புளிக்காத தயிர் - 2 கப்
காராபூந்தி - 1 கப்
கேரட் - சிறியதாக - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 5
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
புதினா இலை - 10
மல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தயிரில் உப்பு கலந்து கடைந்து அதில் மல்லி, புதினாவை நறுக்கி போட்டு கொள்ளவும். கேரட், வெள்ளரிக்காயை துருவி கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தபின் பெருங்காயம் போட்டு அடுப்பை அணைத்து எல்லாவற்றையும் போட்டு, தயிரையும் கடைந்து ஊற்றி நன்றாக கலக்கவும்

Monday, May 18, 2009

வாழைப்பூ பச்சடி

தேவையானவை :

துவரம்பருப்பு - 50 - கிராம்
வாழைப்பூ - சிறியதாக - 1 கசப்பு இல்லாமல் இருக்கனும்
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு - 1/4 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/4ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பூ கசக்காமல் இருக்குதா என்று பார்க்க பூவை பிரித்து உள்ளே இருக்கும் இதழை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு பார்த்தால் கசக்காமல் இருக்க வேண்டும். பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். [ கறுத்து போகாமல் இருக்கும்] வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாய்,போட்டு வறுபட்டபின் பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு சுருள வதக்கவும். மோரில் ஊறிய வாழைப்பூவை நன்கு பிழிந்து போட்டு +மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். பின்பு வெந்த பருப்பை வாழைப்பூ கலவையில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாகவும் தாளிக்கலாம். மேலே மல்லி இலை போடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தளர்வாக வேண்டும் எனில் 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்.

Sunday, May 17, 2009

மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையானவை:

மாங்காய் கொஞ்சம் புளிப்பாக - 1
சர்க்கரை - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
சுக்கு பொடி - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய் - 4

தாளிக்க:

கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
வரமிளகாய் - 2

செய்முறை:

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 1 விசில் விட்டு வேகவிடவும். வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெந்தமாங்காயை நன்கு மசித்து சுக்கு பொடி, உப்பும் போட்டு வெல்ல+சர்க்கரை கலவையில் கலந்து விடவும். வாணலியில் 2 எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய், வரமிளகாயை கிள்ளி போட்டு வறுபட்டதும் பச்சடியில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

மாம்பழ தயிர்பச்சடி

தேவையானவை:

பழுத்த மாம்பழம் - 1
புளிக்காத தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு


தாளிக்க : 
கடுகு, பெருங்காயம் - கொஞ்சம்,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

மாம்பழத்தை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மாம்பழதுண்டுகள் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து [அ] மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அதில் தயிரையும் ஊற்றி நன்கு கலக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் காயவிட்டு கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் தயிர் கலவையில் போட்டு கலக்கவும். மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போடவும். இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும் இந்த பச்சடி.

Saturday, May 16, 2009

தக்காளி, அன்னாசிப்பழம் பச்சடி

தேவையானவை :

அன்னாசிப்பழம் - பழுத்து, புளிப்பு இல்லாமல் பாதி - 1/2
நன்கு பழுத்த பெங்களூர் தக்காளிப்பழம் - 10
சர்க்கரை - 50 கிராம்
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
கார்ன்ஃப்ளார் - 1/2 ஸ்பூன்

செய்முறை :

அன்னாசிப்பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியில் அன்னாசிப்பழத்தை வதக்கி சுண்டியதும் தக்காளியை போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளாரை 1/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதி வந்ததும் இறக்கி ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். இதை சப்பாத்தி, பிரெட், பீட்ஸா எல்லாத்துக்கும் தொட்டு கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

தேவையானவை :

உருளைக்கிழங்கு - 200 கிராம் [அ] 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 5
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 கப்
உப்பு - ருசிக்கு ஏற்ப

தாளிக்க : கடுகு,
எண்ணெய் - 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவிட்டு மசித்து கொள்ளவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும் உருளைக்கிழங்கை போட்டு 1 நிமிடம் வதக்கி ஆறிய பின் உப்பு, தயிர்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கடைசியில் தக்காளியை நீளமாக நறுக்கி போட்டு நன்கு கலந்து சாப்பிடலாம்.

கத்தரிக்காய் தயிர்பச்சடி

தேவையானவை :

பிஞ்சு கத்தரிக்காய் - 4
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 [அ] 6
புளிக்காத தயிர் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு, கொஞ்சம் பெருங்காயம், எண்ணெய் - 1 ஸ்பூன்.


செய்முறை :

கத்தரிக்காயை நீளமாகவும், மெல்லியதாகவும் நறுக்கி கழுவி கொண்டு வாணலியில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும் காயை போட்டு வதக்கிக்கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிகொள்ளவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு + தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும். மேலே மல்லி இலை போட்டு கொள்ளவும். வித்யாசமான ருசியுடன் சூப்பராக இருக்கும்.

தேங்காய் - தக்காளி பச்சடி

தேவையானவை:

தக்காளி சிவப்பாக - 4
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 கப்
பச்சைமிளகாய் -6
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவைக்கு

தாளிக்க: கடுகு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய், உப்பு, தயிர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். எண்ணெயை காய விட்டு கடுகு போடு வெடித்தபின் அதில் சேர்த்து நன்றாக கலந்து மேலே மல்லி தழை போட்டு கொள்ளலாம்.

Friday, May 15, 2009

அவல் வடை

தேவையான பொருட்கள்:

அவல் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - சிறியதாக ஒன்று
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

அவலை மிக்ஸியில் குருணையாக பொடித்து தண்ணீர் ஊற்றி நன்கு அலம்பி வடித்து விடவும். அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதிலேயே அவல் ஊறிவிடும். உருளைக்கிழங்கை வேக்விட்டு , உதிர்த்து கொள்ளவும். ஊறிய அவலுடன் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்,வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு எல்லாம் போட்டு நன்கு கலந்து, பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு வாணலியில் எண்ணெய் காயவிட்டு வடைகளாக தட்டி பொன் கலரில் பொரித்து எடுக்கவும்.

அவல் இட்லி

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 5 [அ] 7
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்


தாளிக்க:
கடுகு, உழுந்து, கடலைப்பருப்பு - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

அவலை மிக்ஸியில் ரவைபோல் குருணையாக பொடித்து கொள்ளவும். அதில் ஒரு கப் தயிரை கடைந்து 1 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் போட்டு அவல் குருணையை ஊற விடவும். 5 நிமிடத்தில் ஊறிவிடும். அவல் ஊறுவதற்க்குள் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்ப்பருப்பு, போட்டு பொன்நிறமானவுடன் அடுப்பை அனைத்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை கலந்து ஊறிய அவல் போட்டு எல்லாவற்றையும் நன்கு கலந்து [இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கனும்] இட்லி தட்டில் ஊற்றி நன்கு வேகவிட்டு எடுக்கவும். தேவை எனில் மாவில் நெய் [அ] தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கலந்து கொள்ளலாம். கையில் தொட்டால் ஒட்டாமல் நன்கு உதிராக இருக்கும். கார சட்னி சூப்பராக இருக்கும்.

Thursday, May 14, 2009

அவல் பிரியாணி

தேவையானவை:

அவல் - 200 கிராம்
அவரவர்க்கு பிடித்த காய்களும் போட்டுக் கொள்ளலாம். பொடியாகவோ, மெல்லிய நீள துண்டுகளாகவோ, நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு வாசனைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


செய்முறை:

அவலை 2 முறை நன்கு கழுவி, நன்கு வடியவிட்டு வைக்கவும். இருமுறை அலம்பும் போதும் தண்ணீர் ஊற்றுவதால் அதிலேயே ஊறி தண்ணீரை உறிஞ்சுகொள்ளும். தனியாக நீரூற்றி ஊறவக்க்த்தேவை இல்லை. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்த உடனேயே இஞ்சி, பூண்டு விழுது போட்டுவிட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். வெங்காயம் சிவக்க வதங்கியபின் காய்களுடன், உப்பு போட்டு பாதி வதங்கியபின் அவலையும் போட்டு நன்கு வதக்கவும்.

அடுப்பை சிம்மில் எரியவிடவும். தேவை எனில் பிரட்டை நெய்யில் பொரித்தும் போடலாம். அவல் பிரியாணியை எளிதில் செய்து விடலாம். மேலே மல்லி இலை, புதினா இலைகளை போட்டு சாப்பிடவும். சூப்பராக இருக்கும்.

அவல் புட்டு

தேவையானவை:

அவல்- 200 கிராம்
பொடித்த வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - கொஞ்சம்
நெய் - கொஞ்சம்

செய்முறை:

அவலை நெய்யில் பொன் நிறமாக வறுத்து பின் மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இது உதிராக இருக்கும். தேவை எனில் முந்திரி வறுத்து சேர்த்து கலக்கவும். சீக்கிரம் செய்து விடலாம்.[ அவலை வறுக்கும்போது சிவக்க வறுக்கவும்.

அவல் பாயசம்

தேவையானவை:

அவல் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி- 20
பால் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
நெய் - கொஞ்சம்

செய்முறை:

நெய்யில் அவலையும் முந்திரியையும் வறுத்து மிக்ஸியில் பவுடராக செய்து 1 கப் பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அவலை வேகவிட்டு, பின் மீதி உள்ள பால் சேர்த்து கொதிக்கவிட்டு, கொஞ்சம் ஆறியபின் சர்க்கரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும். சுவையாக இருக்கும் இந்த பாயசத்தை சீக்கிரம் தயார் செய்து விடலாம்.

அவல் மோர் களி

தேவையானவை:


அவல் - 200 கிராம்
லேசாக புளித்த மோர் - 500 கிராம்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானவை
ஊப்பு - ருசிக்கு ஏற்ப
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்

செய்முறை:


அவலை மிக்ஸியில் நன்கு பொடிசெய்து கொள்ளவும். அதில் மோரை கலந்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தேவைஎனில் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பும் தாளித்து கொள்ளலாம். ஊறிய அவலில் உப்பும் போட்டு நன்றாக கலந்து கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது மோர் கலந்து வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை போட்டு கிளறவும். கையில் ஒட்டாமல் வந்ததும் வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடலாம். மோர் மிளகாய் இருந்தால் தாளிக்கும்போது போடலாம். வாசனையாக இருக்கும்.

தயிர் பூரி

தேவையானவை:

மைதா - 100 கிராம்
ரவை - 2 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
சாட் மசாலா பொடி- 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கப்
மல்லி இலை - கொஞ்சம்
புதினா இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பூரி பொரிக்க எண்ணெய்
ஓமம் - கொஞ்சம்


செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். புதினா, மல்லி இலையுடன் கொஞ்சம் உப்பு, 1 மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மைதாவுடன் ரவை, உப்பு கலந்து கெட்டியாக பிசைந்து பூரியாக பொரித்து கொள்ளவும். கிண்ணத்தில் பூரிகளை உதிர்த்து போட்டு, அதனுடன் உருளைகிழங்கு, புதினா, மல்லி பேஸ்ட், ஓமம், சாட் பொடி, காரபொடி, தயிர் உப்பு எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே கொஞ்சம் மல்லி இலைகளை தூவி சாப்பிடவும்.

Wednesday, May 13, 2009

உழுந்து பச்சடி

தேவையானவை: 

வெள்ளை உளுந்து- 1/4 கப்,
தயிர் - 1 கப்
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - கொஞ்சம்,
பெருங்காய தூள் - கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு- தேவையானது.

செய்முறை:

உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், பெருங்காயம், வரமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து ஆறியபின் அதில் உளுந்து பொடி, தயிர், ஊப்பு,போட்டு நன்கு கலக்கவும். சூப்பர் வாசனையுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் நன்றாக இருக்கும்.

தயிர் சாதம்

தேவையானவை: 

பச்சரிசி - 2 கப்
தயிர் - 2 கப்
கொட்டை இல்லாத திராட்சை- 20
மாதுளை முத்துக்கள்- 1/4 கப்
ஆப்பிள் சிறிய துண்டுகளாக - 10
புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள்- 10
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது- 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி- பொடியாக 1/2 ஸ்பூன்
முந்திரி பொடியாக - 2 ஸ்பூன்
தாளிக்க- கடுகு, பெருங்காயம்- கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம் உப்பு.

செய்முறை: 

அரிசியை நன்கு அலம்பி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விடவும். ஆறியபின் பெரிய கிண்ணத்தில் போட்டு, மேலே கூறி உள்ள எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து , கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரையும் ஊற்றி நன்கு கலந்து, மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கொள்ளவும். கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கொள்ளலாம் சூப்பராக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள வறுத்த மோர் மிளகாய், அல்லது மாவடு இருந்தால் சுவை சூப்பர்தான்.

மணத்தக்காளி பச்சடி

தேவையானவை: 

மணத்தக்காளி வற்றல்- 1/4 கப்
தயிர்- 2 கப்
பெருங்காயதூள்- கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு கொஞ்சம்,
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: 

வற்றலை எண்ணெய் விட்டு பொரிய வறுத்து கொள்ளவும். இன்னும் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் வறுத்து ஆறியபின் அதில் தயிர், மணத்தக்காளி வற்றல் போட்டு நன்கு கலந்து சாப்பிடவும். வற்றலில் உப்பு இருப்பதால் பார்த்து உப்பு போடவும். கறிவேப்பிலை மேலே போடவும். இந்த பச்சடி பித்ததுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும். வயிற்றுபுண் இருந்தால் ஆற்றும்.

காய்கறி பச்சடி

தேவையானவை:

கேரட்- 1
வெள்ளரிக்காய்- 1
வெள்ளை பூசணி- 1 கீற்று
செள செள - சிறியது
கோஸ்- 50 கிராம்
குடை மிளகாய்- 1
பெரிய வெங்காயம்- 1
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
உப்பு- தேவையானவை;
தேவையானால் பெங்களூர் தக்காளி- 3
தாளிக்க கடுகு.
தேங்காயுடன், மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.


செய்முறை:

எல்லா காய்களையும் நன்கு சுத்தம் செய்து துறுவி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயத்தை போட்டு அடுப்பை அணைத்து விடவும். அதில் துறுவிய காய்களுடன் அரைத்ததேங்காய் உப்பு போட்டு, தயிறும் ஊற்றி, கடைசியில் பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி போட்டு, அதனுடன் மல்லி இலை, தக்காளி பொடியாக நறுக்கி நன்கு கலக்கவும். இந்த பச்சடியை கப்பில் போட்டும் சாப்பிடலாம். சப்பாத்திக்கு, தோசைவகைகள், உப்புமா எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

கீரை தயிர் கூட்டு

தேவையானவை: 

பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கப்
தயிர்- 1 கப்
தேங்காய் துறுவியது - கொஞ்சம்
பச்சை மிளகாய்- 2
மிளகு- 1/4 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
தாளிக்க- கடுகு, சுவைக்கு ஏற்ப உப்பு.

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஊளுத்தம்பருப்பு, தேங்காய், பெருங்காயம், மிளகு, மிளகாய், பொன் நிறத்தில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கீரை நன்கு பொடியாக நறுக்கி கொண்டு, மண் போக சுத்தம் செய்து வாணலியில் அரைத்ததுடன் கீரையை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியபின் தயிர், உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான தயிர் கூட்டு தயார்.

Friday, April 10, 2009

ஆலு சப்ஜி

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு - 350 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்
தனியா பொடி - 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 ஸ்பூன்
கசூரி மேதி - 1 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரஷர் குக்கரில் உருளை கிழங்கை போட்டு முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். ஆறியவுடன் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, நீளமாக
நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன், மசித்த உருளை கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். 2 கப் தண்ணீர், கரம் மசாலா பொடி, ஆம்சூர் பொடி, கசூரி மேதி சேர்த்து நன்றாக கொதித்தவுடன், மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ஆலு சப்ஜி தயார். பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Thursday, April 2, 2009

சேமியா கேசரி

தேவையான பொருட்கள்:

வருத்த சேமியா - 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
முந்திரி -10
திராட்சை -10
ஏலக்காய் - 2
பால் – 100 கிராம்
நெய் – 50 கிராம்
கேசரி கலர் – 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும். 1 கப் தண்ணீர், பால் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். 1 சிட்டிகை கேசரி கலர் மற்றும் பொடித்த ஏலக்காயை சேர்க்கவும். இதில் வருத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். தண்ணீர் நன்றாக சுண்டியவுடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சேமியா கேசரி தயார்.