Showing posts with label சாதம். Show all posts
Showing posts with label சாதம். Show all posts

Wednesday, May 13, 2009

தயிர் சாதம்

தேவையானவை: 

பச்சரிசி - 2 கப்
தயிர் - 2 கப்
கொட்டை இல்லாத திராட்சை- 20
மாதுளை முத்துக்கள்- 1/4 கப்
ஆப்பிள் சிறிய துண்டுகளாக - 10
புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள்- 10
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது- 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி- பொடியாக 1/2 ஸ்பூன்
முந்திரி பொடியாக - 2 ஸ்பூன்
தாளிக்க- கடுகு, பெருங்காயம்- கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம் உப்பு.

செய்முறை: 

அரிசியை நன்கு அலம்பி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விடவும். ஆறியபின் பெரிய கிண்ணத்தில் போட்டு, மேலே கூறி உள்ள எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து , கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரையும் ஊற்றி நன்கு கலந்து, மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கொள்ளவும். கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கொள்ளலாம் சூப்பராக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள வறுத்த மோர் மிளகாய், அல்லது மாவடு இருந்தால் சுவை சூப்பர்தான்.

Thursday, June 12, 2008

தக்காளி சாதம் [ 2 வகை]

தேவையான பொருள்கள் :


அரிசி - 2 கப்
தக்காளி - 300 கிராம்
புதினா - 20 இலை
மல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் [அ] கெட்டியான பாலில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும்.1 - கப்
எண்ணெய் - 50 கிராம்
பட்டை - 1,லவங்கம் - 2 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - 1
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :


தக்காளியுடன் புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு,உப்பு, பச்சைமிளகாய் அரைத்து வைக்கவும். அரிசியை நன்கு அலம்பி [ கழுவி] தண்ணீரை வடித்து தக்காளி கலவை + பாலில் ஊறவைக்கவும். 1/2 மணி நேரம் ஊறட்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின் மசாலாவில் ஊறி கொண்டு இருக்கும் அரிசியை போட்டு வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள் தேவையான த்ண்ணீர் ஊற்றி [ 4 கப்] குக்கரை மூடி விட்டு சிம்மில் வைத்து இ விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மசாலா வாசனையுடன் தக்காளி பிரியாணி ரெடி. அடுப்ப்ன் எரிச்சல் சிறியதாக எரிவதால் தீயாது. தண்ணீர் குறைவாக வைத்தாலோ, அதிகம் ஆகி போனாலோ பயப்பட வேண்டாம். பதமாக வெந்து இருக்கும்.பிரியாணி செய்ய கொஞ்சம் அதிகம் எண்ணெய் சேர்த்தால்தான் உதிராக வரும். கடைசியில் கொஞ்சம் நெய்யும் ஊற்றலாம்.

Saturday, June 7, 2008

தயிர் சாதம்

தேவையான பொருள்கள் :

பச்சரிசி - 200 கிராம்
பால் - 1/2 லிட்டர்
தயிர் - 100 கிராம்
உப்பு - கொஞ்சம்

தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மாதுளை முத்துக்கள் - 10 கிராம்
திராக்‌ஷை - கருப்பு , வெள்ளை - கொஞ்சம், முந்திரி - 10, ஆப்பிள் துண்டுகள் - சிறியதாக - 10

செய்முறை :

அரிசியை நன்கு கழுவி பாலுடன் 1 கப் தண்ணீர் கலந்து குக்கரில் குழைய வேக விடவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து ஆறிய சாதத்தில் உப்பு, தாளிதம் செய்ததை போட்டு நன்கு கலந்து, பின் தயிர் ஊற்றி பழதுண்டுகளை போட்டு கலக்கவும். தேவையானால் வெள்ளரி துண்டுகளும் சேர்க்கலாம். செய்து உடனே சாப்பிடலாம்.வெங்காய வாசனை பிடித்தவர்கள் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். உடல் சூட்டை தணிக்கும்.காரத்திற்க்கு பச்சை மிளகாயை + இஞ்சியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருள்கள் :

கறிவேப்பிலை - உதிர்த்தது - சிறிய கப் அளவு
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய கட்டி
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,மிளகு, சீரகம், கட்டி பெருங்காயம்,இவற்றை பொன் நிறமாக வறுத்து, கடைசியில் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து ஆறிய பின், கல் உப்பை போட்டு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். உதிரான சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி நன்றாக கலக்கவும். கறிவேப்பிலை வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

பூண்டு சாதம்

தேவையான பொருள்கள் :

சிறிய வெங்காயம் [அ] பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல் [ பெரியதாக]
வரமிளகாய் - 7
புளி - எலுமிச்சை அளவு [அ] சிட்ரிக் ஆசிட் 1/2 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிராக வடித்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, வரமிளகாயை லேசாக வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு, தாளித்து கொஞ்சம் மஞ்சள்பொடி போட்டு வதக்கவும்.பின் அரைத்ததை போட்டு [ தண்ணீர் ஊற்றாமல் சிறிய ஜாரில் போட்டு விட்டு, விட்டு அரைத்தால் மசிந்துவிடும்.சுருள வதக்கி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

உளுந்து பொடி சாதம்

தேவையான பொருள்கள் :

சாதம் - 3 கப்
சிட்ரிக் ஆசிட் - 1/4 ஸ்பூன் [அ] எலுமிச்சை பழம் - 1
உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயம் சிறிய கட்டி
கல் உப்பு - தேவையானது

செய்முறை:

உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கல் உப்பு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொஞ்சம் மஞ்சள்பொடி சேர்த்து சாதத்தை போட்டு கிளறி பொடி செய்துள்ளதை போட்டு கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு [அ] சிட்ரிக் ஆசிட் கலந்து விடவும். உளுந்து பொடி சாதம் ரெடி.

எள் சாதம்

தேவையான பொருள்கள் :

சாதம் - 3 கப் [அ] அவரவருக்கு தேவையானது
வெள்ளை எள்- 5 ஸ்பூன்
வரமிளகாய்-6 [அ] 8
கல் - உப்பு கொஞ்சம்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் பொரியும்படி வறுத்து கொள்ளவும். பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், உப்பு வறுத்து ஆறியபின் மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து, கடைசியில் எள்ளை அதனுடன் போட்டு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை சாதத்தில் போட்டு சாதம் உடையாமல் கலக்கவும். கொஞ்சம் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் போடவும். எள் வாசனையுடன் சாதம் சூப்பராக இருக்கும்.

புதினா சாதம்

தேவையான பொருள்கள்:

புதினா _ சிறிய கட்டு
சிறிய வெங்காயம் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 7
பெருங்காய தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையானது

செய்முறை :

சாதத்தை உதிராக வடித்து கொள்ளவும். புதினா, வெங்காயம், இஞ்சி, மிளகாய், இவற்றை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்ததை போட்டு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும். சீக்கிரமே சுண்டி விடும். சாதத்தை அதில் போட்டு உடையாமல் கிளறவும். தேவையானால் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பூண்டு வாசனை தேவைபட்டால் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். பூண்டு சேர்க்கும் போது பெருங்காயம் சேர்த்தால் அதன் வாசனை தெரியாது.

பூண்டு சாதம்

தேவையானவை :

உதிராக வடித்த சாதம் - 3 கப்
பூண்டு - 20 பற்கள்
வெங்காயம் - 2 - பொடியாக நறுக்கவும்
இஞ்சி - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்
மிளகு, சீரக பொடி- 2 ஸ்பூன்
உப்பு - தேவையானவை

செய்முறை:

வாணலியில் எண்ணெய் [அ] நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, பூண்டை பொடியாகவோ, தட்டி போட்டோ வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, மிளகு சீரகபொடி போட்டு வறுத்தபின் அடுப்பை சிம்மில் எரியவிடவும். சாதத்தை போட்டு மெதுவாக கிளறவும்.கடுகு தாளிக்கும்போதே கறிவேப்பிலை போட்டால் கலர் மாறாது. தேவையானால் கேரட் துறுவி போட்டு கொள்ளலாம்.

தக்காளி சாதம்

தேவையான பொருள்கள்:


உதிராக வடித்த சாதம் - 3 கப்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையானது
இஞ்சி - சிறிய துண்டு


செய்முறை:

கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியாதூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுருள வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயம் சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும். சீக்கிரம் செய்து விடலாம். வேலைக்கு செல்பவர்கள் லஞ்சுக்கு எடுத்து செல்ல இது போல் செய்து கொள்ளலாம். ஆறிய பின் டிபன் பாக்ஸில் போடனும்.ஹாட் பாக்ஸில் எடுத்து செல்வதானால் சூடாகவே போட்டு கொள்ளலாம்.

வெங்காய சாதம்

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பெரிய வெங்காயம் [அ] சிறிய வெங்காயம்- 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 7
தாளிக்க - கடுகு, சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - 5 ஸ்பூன் [அ] நெய்


செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். வெங்காயத்தை பொடி, பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயையும் பொடியாகவோ [அ] கீறி போட்டோ வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியபின் சாதத்தை சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கிளறவும்.மேலே கறிவேப்பிலை போட்டு கொள்ளவும். சீக்கிரம் செய்து விடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் கொடுக்க இதுபோல் செய்து கொடுக்கலாம்.

Friday, June 6, 2008

சீரக சாதம்

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பாசுமதி அரிசியாக இருந்தால் சுவை சூப்பராக இருக்கும்
முந்திரி - 10 கிராம்
சீரகம் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரகத்தை உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, முந்திரியை சிறியதாக உடைத்து வறுக்கவும். கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும். மேலே கறிவேப்பிலை போட்டு சாப்பிடவும். பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு கிளறவும். சீரக சாதம் ரெடி.

காளான் சாதம்

தேவையானவை:

உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி - பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு - பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு - தேவையானவை
நெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் - 200 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் [அ] நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும். அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார். மசாலா வாசனை வேண்டும் என்றால் காளானை போடும் போது 1 ஸ்பூன் தூவிகொள்ளலாம். சாப்பிடும்போது (தேவையானால்) பூந்தியோ, மிக்ஸரோ தூவி சாப்பிடவும். இல்லையெனில் கேரட்டை துறுவி மேலே போட்டு கொள்ளலாம். அவரவர் இஷ்டம் போல் சாப்பிடலாம்.

Thursday, May 29, 2008

தக்காளி பாத்

தேவையானவை:

ரவை- 2 கிராம்,
தக்காளி- 3[அ] 5,
பெரிய வெங்காயம்-1,
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
சீரகம்- 1/4 ஸ்பூன்,
பட்டை-1, லவங்கம்-2 ஏலக்காய்-2,
மஞ்சள்பொடி- 1/4 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

செய்முறை:

ரவை பொன் கலரில் வறுத்து கொள்ளவும். தக்காளியை சுடு நீரில் போட்டு ஆறிய பின் அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் தண்ணீரும் கலந்தால் 2 பங்குதான் இருக்கனும். வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, லவங்க,ஏலக்காய்,மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி தக்காளி+ தண்ணீர் சேர்த்து கொதி வரும்போது ரவையை போட்டு கிளறவும். சிம்மில் வைத்தால் 2 நிமிடத்தில் நன்கு வெந்து விடும். மேலே குடமிளகாய், மிக்ஸர் தூவி சாப்பிடலாம். சுவையாக இருக்கும். உப்புமாவுக்கு 2 பங்கு தண்ணீர் தான் வேண்டும். அப்போதுதான் உதிராக இருக்கும்.

Saturday, January 19, 2008

பூண்டு இல்லாத, மசால்பொடி சேர்க்காத தக்காளி சாதம்.

தேவையான பொருள்கள்:

உங்களுக்கு பிடித்த அரிசி - 1 டமளர்
தக்காளி - 5
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

பொடி செய்ய:

கடலைப்பருப்ப, உளுத்தம்பருப்பு, தனியா- தலா- 1 ஸ்பூன், பெருங்காயம்- சிறிய துண்டு, மிளகாய்-3 தேங்காய் துறுவியது- 2 ஸ்பூன், கொஞ்சம் உப்பு. தாளிக்க- கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

ப்ரஷர் பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அதன்பின் தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி அதில் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சாறு சுண்டியபின் அரிசியைபோட்டு சிம்மில் வைத்து வதக்கவும். பொடி செய்ய கூறபட்டுள்ளதை சிவப்பாக வறுத்து பொடிசெய்து அரிசியுடன் போட்டு வறுக்கவும். தேவையான எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 2நிமிடம் கழித்து 2பங்கு தண்ணீர் ஊற்றி பேனை மூடி வைத்து சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியபின் மேலே, மல்லி இலை தூவி சாப்பிடவும். தேவையானால் 2ஸ்பூன் நெய் போடலாம்.சுவையாக இருக்கும் இந்த தக்காளி சாதம். நேரம் கிடைக்கும்போது பொடியை செய்து வைத்து கொண்டால் இன்னும் சீக்கிரம் செய்து விடலாம்.

Monday, November 5, 2007

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்,
உளுத்தம்ப்ருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்,
மல்லி விதை - 2 ஸ்பூன
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்,
காய்ந்த ம்ளகாய் - 10,
சீரகம் - 1/2ஸ்பூன்,
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
புளி - கொஞ்சம் ருசிக்கு,
உப்பு தேவையான அளவு.
கறிவேப்பிலை உதிர்த்தது - 2 கப்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடாமல் மேலே கூறி உள்ள பொருட்களை தனிதனியாக வறுத்து, இறுதியில் 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு புளியை கறுக விடாமல் வறுத்து, எல்லாவற்றையும், நன்றாக கலந்து மிக்ஸியில், பொடி செய்துச் செய்து கொள்ளவும், கடைசியில் 1 ஸ்பூன் சர்க்கரை தேவையானல் கலந்து கொள்ளலாம், இந்த பொடியை, சாதம் உதிராக வடித்து அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து, இந்த பொடியை தேவையான அளவு கலந்தால் கறிவேப்பிலை சாதம் ரெடி. மேலே நமக்கு தேவையான, மல்லியோ, தக்காளியோ, வெங்காயமோ, காராபூந்தியோ கலந்து சாப்பிடலாம்.