Showing posts with label ரசம். Show all posts
Showing posts with label ரசம். Show all posts

Thursday, June 12, 2008

தக்காளி ரசம் - 2 ம் வகை

தேவையான பொருள்கள் :

வேக வைத்த துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
தக்காளி - 2
ரசப்பொரி - 2 ஸ்பூன்
புளி விழுது - 2 ஸ்பூன்
கடா பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மல்லி இலை - கொஞ்சம்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

புளியில் தக்காளியை நன்கு கரைத்து உப்பு, மஞ்சள்தூள் , ரசப்பொடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவேண்டும். பருப்பில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து, தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடா பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு, கரைத்து வைத்துள்ள பருப்பில் கலந்து, தக்காளி+புளியில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கிவிடவும். மல்லி இலை போடவும். பெருங்காய வாசனையுடன் ரசம் சூப்பராக இருக்கும். காரம் இன்னும் அதிகம் தேவை எனில் தாளிக்கும் போது வரமிளகாய் கிள்ளி போட்டு தாளிக்க்லாம்.

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
வர மிளகாய் - 2
மஞ்சள்தூள் - கொஞ்சம்
தண்ணீர் - 3 டம்ளர்
கல் உப்பு - ருசிக்கு
தாளிக்க ; நெய், கடுகு, கறிவேப்பிலை.
பெருங்காயம் [அ] 2 பல் பூண்டு


செய்முறை :

தக்காளியை கொஞ்சம் சுடு நீரில் போட்டு தோலை எடுத்து அதனுடன் மிளகு, சீரகம், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் நெய் [அ] பிடித்த எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயம், வரமிளகாய் போட்டு வறுபட்டதும், அரைத்த தக்காளியை ஊற்றி கறிவேப்பிலை போட்டு நுரைத்ததும் இறக்கவும். புளிப்புக்கு தகுந்தபடி உப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பருப்பு போடாமல் அவசரத்துக்கு உடனே செய்து விடலாம். தினமும் பருப்பு சேர்க்க வேண்டாம். வாரம் 2 நாட்கள் மட்டும் பருப்பு ரசம் செய்து, இது போல் சிம்பிளாக செய்யலாம். சுவையும் நன்றாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது. ரசம் செய்தவுடன் சூடாகவும் குடிக்கலாம்.பூண்டு சேர்த்தால் கடுகு தாளிக்கும் போது தட்டி சேர்க்கலாம்.

Thursday, January 10, 2008

பருப்பு ரசம்

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு -1/4 கப்
புளி- எலுமிச்சை அளவு
தக்காளி- 1
ரசப்பொடி- 1 ஸ்பூன்
கடா பெருங்காயம்-கொஞ்சம்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
தாளிக்க கடுகு

செய்முறை:
இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.
துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும். அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கொள்ளவும்.சுடுநீரில் ஊறவைப்பதால் வேஸ்ட் ஆகாது. சீக்கிரம் கரையும். புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தக்காளியை கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். உப்பு,மஞ்சள்தூள், ரசப்பொடி,போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, வெந்த பருப்பை நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பருப்பு வேகவைக்கும்போதும் கொஞ்சம் மஞ்சள்தூள் போடலாம். உப்பு, புளிப்பு பார்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும். நுரைத்து வந்த போது இறக்கி, நெய்யில், கடுகு,கடா பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாக நறுக்கி போடவும். சூப்பரான பருப்பு ரசம் ரெடி. காரம் கொஞ்சம் தேவைஎனில் கடுகு தாளிக்கும் போது மிளகுபொடியை பொரித்து போடவும்.

Wednesday, January 9, 2008

மிளகு ரசம்

தேவையான பொருள்கள்; புளி- எலுமிச்சை அளவு
துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்
மிளகு- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- சிறிது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி சிறிது

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2 நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி விட்டு சாப்பிடவும். இந்த ரசம் ஜீரண்த்துக்கு நல்லது. சளி, இருமல் தொல்லை இருந்தால் அதை கட்டுப்படுத்தும். செய்வது எளிது. ருசியாக இருக்கும்.

சீரக ரசம்

தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு- 2 ஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க -கடுகு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்

செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தால் பச்சை வாசனை போய் விடும். இறக்கும்போது உப்பு, புளி பார்த்து இறக்கவும். பின் நெய்யில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை
மல்லி இலை போட்டு மூடி வைக்கவும்.இந்த ரசம் பித்தத்திற்கு மிகவும் நல்லது.சுவையும் சூப்பராக இருக்கும்.



இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்; இளசாக இருக்கும் இஞ்சி- 50 கிராம்
தக்காளி-2
எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2
பருப்பு தண்ணீர்-2 கப்
ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்
பெருங்காயம்-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதில் கொஞ்சம் கல் உப்புபோட்டு வைக்கவும்.
ஏனெனில் சாறு கசக்காமல் இருக்கும். பருப்பு தண்ணீரில் தக்காளியை பொடியாக நறுக்கி கையால் பிழிந்து சிறிது உப்பு மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அதனுடன் ரசபொடியையும் போடவும். 2 நிமிடம் கழித்து இஞ்சி சாறு,
எலுமிச்சை சாறு ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன்
இறக்கி வைத்து, 1 ஸ்பூன் நெய்யில் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு விடவும்.இன்னும் காரம் தேவைஎனில் 2 பச்சை மிளகாயை கீறி போட்டு கொள்ளலாம். இந்த இஞ்சி ரசம் அஜீரணம்,வாயு,பித்தம் ஏற்பட்டால் அடிக்கடி செய்து சாப்பிடவும்.


அரைத்து விட்ட ரசம்

தேவையான பொருள்கள்; துவரம்ப் பருப்பு- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்
கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டி
தக்காளி- 2
புளி விழுது- 1 ஸ்பூன்
உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.

செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன் புளி விழுது சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். புளி விழுது இல்லையெனில் ,தேவையான புளியை சுடுநீரில் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ளதை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நுரைத்துவந்தவுடன் இறக்கி விடவும். கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இதில் எல்லா பொருட்களையும் வறுத்து செய்வதால் அதிக நேரம் கொதிக்க வேண்டாம்.



























பைனாப்பிள் ரசம்

தேவையான பொருள்கள்; அன்னாசிப் பழம்- 1
பருப்பு தண்ணீர்- 2கப்
உப்பு- 1-1/2 ஸ்பூன்
வரமிளகாய்-5
பெருங்காயம்- 1/4 ஸ்பூன்
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.
மஞ்சள்தூள்- கொஞ்சம்.

செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வரமிளகாயை கிள்ளிபோட்டு, கறிவேப்பிலையும் போட்டு 1 நிமிடம் கழித்து பைனாப்பிள் சாறை ஊற்றி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு 2 நிமிடம் கழித்து பருப்பு தண்ணீரை ஊற்றி , புளிப்பு,காரம் பார்த்து நுரைத்து வரும் சமயம் இறக்கி விடவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.

Tuesday, January 8, 2008

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள்: தக்காளி-5 நன்கு பழுத்து இருக்கவேண்டும்
புளி தண்ணீர்- 1 கப்
பருப்பு தண்ணீர்- 2 கப்
பச்சை மிளகாய் -4
மஞ்சள்தூள்- கொஞ்சம்
ரசப்பொடி- 1 ஸ்பூன்,
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு தேவையானது
கடுகு-1/4 ஸ்பூன்

செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை,மல்லி இலை போட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி விட்டு,நெய்யில் கடுகு தாளித்து,பின் அதிலேயே ரசபொடியை பொரித்து ரசத்தில் கலந்து விடவும். சுவையான சூப்பரான தக்காளி ரசம் தயார்.

பூண்டு ரசம்

தேவையான பொருள்கள்; பூண்டு- 10 பற்கள்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மிளகு, சீரகம்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.

செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு, புளியையும் ஊற்றி கொதிக்க விட்டு[2 நிமிடம்] போதும். ஏனெனில் சுடுநீரில் வெந்து இருக்கும். அதில் மிளகு,சீரகபொடி,உப்புபோட்டு பின் பூண்டும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி,
கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு இறக்கி விடவும். அடிக்கடி பூண்டு ரசம்அடிக்கடி செய்து சாப்பிட்டால் கொலஸ்ரால் சேராது வாயுவுக்கும் நல்லது

குளிருக்கு இதமாக ரசம் வகைகள்- கொத்துமல்லி ரசம்.

தேவையான பொருள்கள்; கொத்துமல்லி- 1 சிறிய கட்டு
வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்
தக்காளி - 2[அ] 3
ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்
பொடிசெய்து கொள்ளவும்
உப்பு- தேவையானது
மஞ்சள்தூள்- கொஞ்சம்
தாளிக்க- கடுகு, சீரகம்.

செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1- ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, ரசபொடி[அ] மிளகு,சீரகபொடியை போட்டு பொரிந்தபின் தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான உப்பை போடவும். சிறிது நேரம் கழித்து பருப்பு தண்ணீயை ஊற்றி கொதிக்கவிட்டு, வடிகட்டி வைத்துள்ள மல்லி இலை சாறை ஊற்றி நுரைத்து வந்தவுடன் இறக்கி விடவும். குளிருக்கு இதமாக இந்த ரசத்தை குடிக்கலாம். சாப்பாட்டிற்க்கு தேவைஎனில் 1 எலுமிச்சைபழம் பிழிந்து கொள்ளவும்.உடலுக்கு கெடுதல் செய்யாது.

Thursday, November 8, 2007

இஞ்சி ரசம்

தேவையான பொருள்கள்:

இஞ்சி- 50 கிராம், தோல் சீவி நன்கு
நசுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய்- 4,
மிளகு- 1ஸ்பூன்,
சீரகம்-1 ஸ்பூன்,
துவரம்பருப்பு-1 ஸ்பூன்,
தனியா- 1 ஸ்பூன்,
எலுமிச்சம் பழம்-2,
தாளிக்க கடுகு,நெய்,

செய்முறை:

மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்,கீறிய பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும். பாதி சுண்டிய பின் நசுக்கிய இஞ்சி போட்டு ஒரு கொதி வந்த பின் பொடி செய்து வைத்துள்ளதை போட்டு புளிப்புக்கு தகுந்த மாதிரி தண்ணீர் விட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்து மூடி வைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைபழம் பிழிந்து கலக்கி கொள்ளவும். இந்த ரசம் பித்தத்தை போக்கும். இந்த ரசத்திற்க்கு புளி, தக்காளி போட கூடாது. ஏனெனில் இஞ்சியின் குணம் தெரியாது.

கண்டந்திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள்:

கண்டந்திப்பிலி - 10 கிராம்,
அரிசி திப்பிலி- 10 கிராம்,
தனியா- 1 ஸ்பூன், சீரகம்-1 ஸ்பூன்,
மிளகு- 1/4 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய்-4,
புளி- எலுமிச்சை அளவு,
தாளிக்க- கடுகு- 1/2 ஸ்பூன்,
தாளிக்க நெய்- 1 ஸூன்,
உப்பு- சுவைக்கு ஏற்ப .

செய்முறை:

கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலியை நெய்யில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து கொண்டு பின், அதனுடன் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தயும் பச்சையாகவே போட்டு அரைக்கவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். ஒரு கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, மிளகாய் தாளித்து, கொஞ்சம் மஞ்சள்தூள் போட்டு புளி கரைசலை ஊற்றி, உப்பும் போட்டுகொதிக்க விடவும். பாதி சுண்டிய பின் அரைத்த விழுதை போட்டு நுரைத்து வந்ததும் இறக்கி விடவும். இதற்கு தக்காளி சேர்க்க கூடாது. சேர்த்தால் கண்டந்திப்பிலியின் குணம் கிடைக்காது. இந்த ரசத்தை சூடாக குடித்தால் தலைவலி, ஜலதோஷம்,உடம்புவலி நீங்கும்.

Monday, November 5, 2007

கொட்டு ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு - 2 ஸ்பூன்,
தனியா - 1 ஸ்பூன்,
மிளகு, சீரக்பொடி - 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
தாளிக்க கடுகு, சீரகம்
உப்பு தேவையானது
2- ஸ்பூன் நெய்

செய்முறை:

புளியை 5நிமிடம் முன்பு சுடுநீரில் ஊறவைக்கவும். மேலே கொடுத்துள்ள பொருள்களை எண்ணெய் விடாமல் வறுத்து கரகர வென்று பொடி செய்து கொள்ளவும். புளியை நன்கு கரைத்து இந்த பொடியை கலந்து கொதிக்க வைத்து புளிப்புக்கு தகுந்த தண்ணீர், உப்பு சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி வைத்து நெய்யை காய வைத்து கடுகு, சீரகம் பெருங்காயம் தாளிக்கவும். கடைசியில் மிளகு, சீரகபொடி, கறிவேப்பிலை,மல்லி சேர்க்கவும்.

இந்த ரசம் உடலுக்கு மிகவும் நல்லது. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இந்த ரசம் செய்து சாப்பிட்டால் சீக்கிரம் குணமாகும். சீக்கிரம் செய்து விடலாம்.நெய்யில் தாளித்தால்தான் இந்த ரசம் ருசியாக இருக்கும்.

கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்:

கொள்ளு-1-கப்,
புளி பெரிய எலுமிச்சை அளவு,
கிளகு,சீரகம்- 2ஸ்பூன்,
பெருங்காயம்-கொஞ்சம்,
ரசபொடி- 3ஸ்பூன்,
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்,
கடுக்கு, சீரகம்-1/2 ஸ்பூன்,
உப்பு தேவையானது,
தாளிக்க நெய்-2ஸ்பூன்

செய்முறை:

கொள்ளை வெடிக்கும்படி வறுத்து ஊற வைத்து நன்கு குழைய வேகவிட்டு கொள்ளவும். கெட்டியான வாணலியில் புளியை கரைத்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். புளி பச்சை வாசனை போன பின் வேக வைத்துள்ள கொள்ளுடன், மிளகு, சீரகபொடி,ரசபொடி இவற்றை போட்டு நன்கு மசித்து தேவையான தண்ணீர் கலந்து கொதித்து கொண்டு இருக்கும் புளியில் விட்டு நன்கு கலந்து எல்லாம் நன்கு நுரைத்து வரும் சமயம் இறக்கி வைத்து நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி தூவிவிடவும்.இந்த ரசம் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க செய்யும். பூண்டு வாசனை பிடித்தவர்கள் கடைசியில் 4பல் பூண்டை தட்டி சேர்த்து கொள்ளலாம். ரசம் செய்த உடன் டம்ளரில் ஊற்றி குடித்தால் உடம்புக்கு தெம்பு வந்ததுபோல் இருக்கும்.குளிர்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.