Thursday, July 30, 2009

டிப்ஸ்

  1. அவசரமாக ரசம் செய்ய வேண்டுமா 2 நபர்க்கு- மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1ஸ்பூன், தனியா - 1 ஸ்பூன், வரமிளகாய் - 3 புளி எலுமிச்சை அளவு. உப்பு தேவையானது.கடுகு- தாளிக்க கொஞ்சம், மஞ்சள்பொடி - கொஞ்சம், பெருங்காயம் - கொஞ்சம். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா, மிளகாய், புளியை லேசாக சூடு செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிவந்த பின் , நன்கு ஆறியபின் உப்பு போட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத்து கொண்டபின், வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, மஞ்சள்பொடி, பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தபின் இறக்கி கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால் சூப்பரான ரசம் ரெடி. நெய்யில் தாளித்தால் ரசம் சூப்பராக இருக்கும்.
     
  2. சட்னி செய்ய பருப்புகள் இல்லையெனில் கவலை வேண்டாம். தக்காளி சட்னி செய்ய வேண்டும் எனில் தக்காளி, வெங்காயம்[ சிறிய, பெரிய] எதுவாக இருந்தாலும் சரி, லேசாக வதக்கி ஆறியபின் இட்லி பொடி இருந்தால் 2 ஸ்பூன் அல்லது தேவையான அளவு போட்டு காரம் அதிகம் தேவைஎனில் வரமிளகாய் [அ] பச்சைமிளகாய் சேர்த்து அத்துடன் தேங்காய் இருந்தால் 2 ஸ்பூன் போடலாம் இல்லையெனில் தேவையில்லை. உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் அரைத்தால் சட்னி தயார். இதில் சிறிய துண்டு பீட்ரூட், கேரட், பொடியாக நறுக்கி போட்டு வதக்கினால் காய்கறி சட்னி தயார். சாப்பாட்டுக்கு தேவை எனில் கொஞ்சம் புளி சேர்த்து அரைக்க வேண்டும்.டிபனுக்கு எனில் புளி வேண்டாம்.
     
  3. ரவை - 1 கப் எனில், அரிசி மாவு- 1/4 கப், பச்சைமிளகாய் - 2 இஞ்சி - சிறிய துண்டு பெரியவெங்காயம் - 1 பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்து , உப்பும் சேர்த்து கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்தால் பொன் நிறமாக இருக்கும்.மொறு, மொறுப்பாகவும் இருக்கும். தொட்டு கொள்ள தயிரில் கடுகு தாளித்து சாப்பிடலாம்.
     
  4. கத்தரிக்காய் பச்சடி செய்ய கொஞ்சம் வாணலியில் எண்ணெய் ( 1 ஸ்பூன்) எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு மூடி வைத்தால் சீக்கிரம் வதங்கி விடும்.இப்படி செய்தாலும் சுட்ட வாசனை இருக்கும். ஆறிய பின் எடுத்து தோல் உரித்து கையினால் மசித்து கொண்டு எண்ணெயில் கடுகு,பெருங்காயம் 4 -வரமிளகாய் தாளித்து 100 கிராம் தயிரில் போட்டு, அதில் கத்தரிக்காயை கலந்தால் பச்சடி தயார்.இதுபோல் எந்த காய்களிலும் செய்யலாம். காய்களை வதக்கனும் அப்போதுதான் பச்சடியின் வாசனை வரும்.
     
  5. முதல் நாள் இரவு வைத்த சாதம் எனில் காலையில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம்,வறுப்பட்டபின் பெரியவெங்காயம் -2 பச்சைமிளகாய் 4 (அ) வரமிளகாய் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை பொடியாக நறுக்கி போட்டு தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் எரியவிட்டு சாதத்தை போட்டு வதக்கினால் வெங்காய சாதம் ரெடி. சூப்பராக இருக்கும். தேவை எனில் குடமிளகாயை பொடியாக நறுக்கி போட்டு கலக்கலாம். கேரட்டை துருவி மேலே போட்டு சாப்பிடலாம்.எதுவுமே அவசரத்துக்கு இல்லையெனில் கொஞ்சம் மிளகு, சீரகத்தை பொடிசெய்து சாதத்தில் கலந்து வதக்கலாம்.
     
  6. பீர்க்கங்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவி, பச்சை மிளகாய்சேர்த்து வதக்கி உப்பு போட்டு தயிரில் கலந்தால், பீர்க்கங்காய் தயிர் பச்சடி தயார்.

1 comment: