Tuesday, June 17, 2008

வெஜிடபுள் பொங்கல்

தேவையானவை :

சாப்பாடு அரிசி அவரவர் விரும்பி சாப்பிடும் அரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 200 கிராம்
கேரட் - பெரியதாக - 1
பீன்ஸ் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
நூல்கோல் - 1
குடமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையானவை.


தாளிக்க:

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - கொஞ்சம்.

செய்முறை :

அரிசி, பருப்பை தனிதனியாக, வறுக்க வேண்டும். வறுப்பதால் பொங்கல் வாசனையாக இருக்கும். குழைந்தாலும் கையில் எடுத்து சாப்பிடும்போது மென்மையாக இருக்கும். குக்கர் [அ] ஃப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் ஊற்றி முந்திரி, மிளகு, சீரகத்தை வறுத்து எடுத்து வைக்கவும். காய்களை பொடியாகவோ, அவரவ்ர் விருப்பம் போல் நறுக்கி கொண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதே ஃப்ரஷரில் வெங்காயத்தை போட்டு வதக்கி, இஞ்சியை, பெருங்காயம் + காய்களை போட்டு நெய் ஊற்றி வதக்கவும். அரிசி+ பருப்பை = அளந்து கொண்டு 2 டம்ளர் இருந்தால் 4-1/2 டம்ளர் நீரை ஊற்றி உப்பும் போட்டு கொதிக்க விட்டு வறுத்த, மிளகு,சீரகத்தை போட்டு நன்கு கலந்து மூடி சிம்மில் எரியவிட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். கொஞ்ச நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரியை போடவும். குடமிளகயை பொடியாக நறுக்கி கடைசியில் முந்திரி போடும்போது போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் மேலே நெய் ஊற்றி கொள்ளவும். இதற்கு கார சட்னி சூப்பராக இருக்கும்.

Saturday, June 14, 2008

உதிர்த்த வெங்காய பக்கோடா

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 2
பஜ்ஜி மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க

பஜ்ஜி மாவு இல்லையெனில் கடலை மாவு - 1 கப் என்றால் அரிசி மாவு - 1/4 கப் தேவை .

செய்முறை :

வெங்காயத்தை இரண்டாக வெட்டி கொண்டு மேல் பக்கம் கெட்டியான பகுதியை வெட்டிவிட்டு நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். அதி கொஞ்சம் உப்பு க்லந்து உதிர்த்து கொண்டு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்தூள், கறிவேப்பிலை எல்லாம் போட்டு பிசிறி, எண்ணெய்யை காயவிட்டு அதில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு மொறு மொறுன்னு வெந்ததும் எடுத்து விடவும். இதில் சிறிய கேரட்டை [ தேவைஎனில்] துருவி கலந்து பொரிக்கலாம்.இதற்கு மாவு குறைவாகவும், வெங்காயம் அதிகமாகவும் இருக்கனும். அப்போதுதான் வெங்காய வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

இட்லி மாவு போண்டா

தேவையான பொருள்கள் :

இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மைதா மாவு - 1/4 கப்
பெருங்காயம் - கொஞ்சம்
உப்பு -ருசிக்கு
தாளிக்க - கடுகு, சீரகம் - 1/4 ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அது காய்வதற்குள் பெரியவெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி இட்லி மாவுடன்+ மைதா மாவு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து பெருங்காயம்+ கடுகு, சீரகம் தாளித்து, இட்லி மாவில் உப்பு இருப்பதால் தேவையான உப்பு போட்டு நன்கு கலந்து எண்ணெய் காய்ந்தவுடன் கையில் எடுத்து கிள்ளி போடவும். சிறிய போண்டா போல் வரும். பொன் கலரில் ஆனதும் எடுத்து விடவும். மிளகாய்க்கு பதில் மிளகும் போடலாம். விருந்தினர்களோ, [அ] அவசரத்திற்க்கு நொறுக்கு தீனி வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம்.

குறிப்புகள்: பஜ்ஜி

  1. பஜ்ஜிக்கு எந்த காய்கள் போட்டும் செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே இருக்கும் காய்கள் வேகாது.
  2. மாவு கரைக்கும் போது இன்னும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கொண்டால் இது போல் மொறு, மொறு அயிட்டங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை வராது.
  3. ஆரம்பத்தில் தண்ணீர் குறைவாக ஊற்ற வேண்டும். அதிகம் ஆனால் மறுபடியும் அதில் மாவு போட வேண்டி வரும். தண்ணீர் குறைவாக இருந்தால் பரவாயில்லை. உப்பும் அதேபோல்தான்.
  4. முதலில் எண்ணெய் கொஞ்சமாக வைத்து ஒன்று மட்டும் போட்டு உப்பு, காரம் பார்த்து பின் தேவையானால் போட்டு கொள்ளலாம்.
  5. காலிஃப்ளவர், பனீர் மஞ்சூரியன் செய்வதாக இருந்தால் மாவில் அந்த பொருள்களை கலந்துஃப்ரிஜில் மதியம் தேவை எனில் காலையிலேயே ரெடி செய்து வைத்து மாலையில் எடுத்து பொரித்து கொள்ளலாம். ஆனால் அன்றே உபயோகபடுத்தி விட வேண்டும்.
  6. சிலர் ஸ்நாஸ் செய்ய வாணலியில் அதிகமாக எண்ணெய் வைத்துதான் செய்வார்கள். அந்த பொருள் முழுகும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
  7. சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த பொருள்களை போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும். சுட்டெண்ணெய் உடலுக்கு கெடுதல் ஆவதை தடுக்கலாம். பொருளும் வேஸ்ட ஆகாது.
  8. கொஞ்சம் யோசனை செய்து செய்தால் செய்யும் பொருளும் ருசியாக, சூப்பராக வரும்.

பிரெட் சில்லி டோஸ்ட

தேவையான பொருள்கள் ;

பிரெட் - 10 ஸ்லைஸ்
பால் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 [ பொடியாக நறுக்கவும்]
உப்பு - ருசிக்கு

செய்முறை:

பாலில் மிளகுதூள், பச்சைமிளகாய், உப்பு போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். ஒவ்வொரு பிரட்டின் மேலும் இந்த பேஸ்டை தடவி மூடி விட்டு அதன் மேல் வெண்ணெய் தடவி ஸாண்ட்விச் டோஸ்ட்டர் [அ] தோசைகல்லில் [அடுப்பை சிம்மில் எரியவிட்டு ] போட்டு டோஸ்ட் செய்யவும்.பேஸ்ட் நன்கு மசிந்து இருக்கனும்.அப்போதுதான் சுவையாக இருக்கும்.

Friday, June 13, 2008

ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 2 கப்
காரம் தேவைஎனில் - 2 ஸ்பூன்
கொஞ்சம் ஊப்பு
எண்ணெய் பொரிக்க

ஸ்டஃப்க்கு மாவு : 1/2 கப் கடலைமாவு, தனியா பொடி- 1/4 ஸ்பூன், கரம்மாசாலா - 1/4 ஸ்பூன், உப்பு கொஞ்சம், கொஞ்சம் சீரகம், வேக வைத்த சிறிய உருளைகிழங்குடன் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து பூரணமாக பிசைந்து வைத்து கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி உள்ளே பூரணத்தை அடைத்து வைக்கவும்.

செய்முறை :

பஜ்ஜி மாவில் கொஞ்சம் உப்பு, மிளகாய்தூள் போட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு, ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை போட்டு மிதமாக எரிய விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சூடாக சாப்பிடவும். எல்லோரும் விரும்பி சாப்பிடும் காரசாரமான பஜ்ஜி இது.

மசாலா வேர்க்கடலை

தேவையான பொருள்கள் :

வேர்க்கடலை - 200 கிராம் [ வறுக்காதது]
பஜ்ஜி மாவு - 1-1/2 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது [தேவையானால்]
எண்ணெய் பொரிக்க .

செய்முறை :

கடலையையுடன் மிளகாய்தூள், கலர்,உப்பு, பஜ்ஜி மாவையும் கலந்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறி ஊற வைக்கவும். எண்ணெய்யை காய விட்டு [ தண்ணீர் வேண்டும் எனில் இன்னும் கொஞ்சம் தெளித்து கொண்டு] கொஞ்சமாக கையில் எடுத்து உதிர்த்து போடவும். போடவுடன் கிளற கூடாது. கொஞ்ச நேரம் கழித்து திருப்பி விட்டு வெந்தபின் எடுக்கவும்.

ஸ்நாக்ஸ் வகைகள் :

குறிப்பு : உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவை தயார் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கிலோ
பச்சரிசி - 100 கிராம்
வரமிளகாய் - 30
கட்டி பெருங்காயம் - 25 கிராம்
கல் உப்பு - 2 ஸ்பூன்
இவற்றை ந்ன்கு வெய்யிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும். இந்த மாவில் சமையல் சோடா - 1 ஸ்பூன், 50 கிராம் மைதா கொஞம் [ஆரஞ்சு கலர் தேவையானால்] போட்டு கலந்து ஆற விட்டு பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும் போது பயன்படுத்தலாம். பஜ்ஜி, ப்க்கோடாவுக்கு எண்ணெய் காய விட வேண்டும் அதற்கு புகை வரும் அளவுக்கு வேண்டாம். எண்ணெய் காயாமல் போட்டால் சதசதன்னு இருக்கும். மொர, மொரப்பாக வராது.



ஆப்பிள் பஜ்ஜி


தேவையான பொருள்கள் :

ஆப்பிள் - 1
பஜ்ஜி மாவு - 1 கப்
கொஞ்சம் மஞ்சள்பொடி
இன்னும் காரம் தேவை எனில் மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

ஆப்பிளை நன்கு சுத்தம் செய்து நீளமாக, மெல்லியதாக நறுக்கி விதையை எடுத்து கொள்ளவும். மாவில் எல்லாவற்றையும் கலந்து த்ண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். எண்ணெயை காய விட்டு ஆப்பிளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். தொட்டு கொள்ள தேங்காய் சட்னி அரைத்து கொள்ளவும். இல்லை எனில் தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

Thursday, June 12, 2008

வெங்காய பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 1
பஜ்ஜி மாவு - 1கப்
மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

வெங்காயத்தை மெல்லிய வட்டமாக நறுக்கவும். காரம் தேவை எனில் போட்டு கொள்ளவும். பஜ்ஜி மாவை கரைத்து கொள்ளவும். எண்ணெய் காய விட்டு மாவில் வெங்காயத்தை தோய்த்து [ இரண்டு பக்கமும் மாவு படும்படி ] காய்ந்த எண்ணெயில் போட்டு, இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். பொன் கலர் ஆனவுடன் எடுத்து விடவும்.இந்த வெங்காய் பஜ்ஜி சூடாக சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

தக்காளி சாதம் [ 2 வகை]

தேவையான பொருள்கள் :


அரிசி - 2 கப்
தக்காளி - 300 கிராம்
புதினா - 20 இலை
மல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் [அ] கெட்டியான பாலில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும்.1 - கப்
எண்ணெய் - 50 கிராம்
பட்டை - 1,லவங்கம் - 2 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - 1
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :


தக்காளியுடன் புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு,உப்பு, பச்சைமிளகாய் அரைத்து வைக்கவும். அரிசியை நன்கு அலம்பி [ கழுவி] தண்ணீரை வடித்து தக்காளி கலவை + பாலில் ஊறவைக்கவும். 1/2 மணி நேரம் ஊறட்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின் மசாலாவில் ஊறி கொண்டு இருக்கும் அரிசியை போட்டு வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள் தேவையான த்ண்ணீர் ஊற்றி [ 4 கப்] குக்கரை மூடி விட்டு சிம்மில் வைத்து இ விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மசாலா வாசனையுடன் தக்காளி பிரியாணி ரெடி. அடுப்ப்ன் எரிச்சல் சிறியதாக எரிவதால் தீயாது. தண்ணீர் குறைவாக வைத்தாலோ, அதிகம் ஆகி போனாலோ பயப்பட வேண்டாம். பதமாக வெந்து இருக்கும்.பிரியாணி செய்ய கொஞ்சம் அதிகம் எண்ணெய் சேர்த்தால்தான் உதிராக வரும். கடைசியில் கொஞ்சம் நெய்யும் ஊற்றலாம்.

தக்காளி ரசம் - 2 ம் வகை

தேவையான பொருள்கள் :

வேக வைத்த துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
தக்காளி - 2
ரசப்பொரி - 2 ஸ்பூன்
புளி விழுது - 2 ஸ்பூன்
கடா பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மல்லி இலை - கொஞ்சம்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

புளியில் தக்காளியை நன்கு கரைத்து உப்பு, மஞ்சள்தூள் , ரசப்பொடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவேண்டும். பருப்பில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து, தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடா பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு, கரைத்து வைத்துள்ள பருப்பில் கலந்து, தக்காளி+புளியில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கிவிடவும். மல்லி இலை போடவும். பெருங்காய வாசனையுடன் ரசம் சூப்பராக இருக்கும். காரம் இன்னும் அதிகம் தேவை எனில் தாளிக்கும் போது வரமிளகாய் கிள்ளி போட்டு தாளிக்க்லாம்.

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
வர மிளகாய் - 2
மஞ்சள்தூள் - கொஞ்சம்
தண்ணீர் - 3 டம்ளர்
கல் உப்பு - ருசிக்கு
தாளிக்க ; நெய், கடுகு, கறிவேப்பிலை.
பெருங்காயம் [அ] 2 பல் பூண்டு


செய்முறை :

தக்காளியை கொஞ்சம் சுடு நீரில் போட்டு தோலை எடுத்து அதனுடன் மிளகு, சீரகம், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் நெய் [அ] பிடித்த எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயம், வரமிளகாய் போட்டு வறுபட்டதும், அரைத்த தக்காளியை ஊற்றி கறிவேப்பிலை போட்டு நுரைத்ததும் இறக்கவும். புளிப்புக்கு தகுந்தபடி உப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பருப்பு போடாமல் அவசரத்துக்கு உடனே செய்து விடலாம். தினமும் பருப்பு சேர்க்க வேண்டாம். வாரம் 2 நாட்கள் மட்டும் பருப்பு ரசம் செய்து, இது போல் சிம்பிளாக செய்யலாம். சுவையும் நன்றாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது. ரசம் செய்தவுடன் சூடாகவும் குடிக்கலாம்.பூண்டு சேர்த்தால் கடுகு தாளிக்கும் போது தட்டி சேர்க்கலாம்.

தக்காளிபழம் சாப்ஸ்

தேவையான பொருள்கள் :

தக்காளிபழம் - 300 கிராம்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1கப்
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பட்டை - 1, லவங்கம் - 1, பிரிஞ்சி இலை - 1, ஏலக்காய் - 1
எண்ணெய் - 25 கிராம்
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :

தக்காளியை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்தூள், தனியா தூள்,பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, தாளித்து மஞ்சள்பொடி போட்டு வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் கழித்து தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பின் அரைத்த விழுதுடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து தக்காளியில் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஊற்றி கொள்ளலாம். மசாலா சுவை கொண்ட இந்த குழம்பு சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்றது. எண்ணெய் பிரிந்து மேலே வந்தால் நல்ல சுவை, மணம் இருக்கும்.