Saturday, March 1, 2008

பிரேட் கோஃப்தா

தேவையானவை:

சால்ட் பிரேட்- 1 பாக்கெட்
உருளைகிழங்கு - 2
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
கறிமசால் பொடி - 1/2 ஸ்பூன்
சீரகபொடி - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை:

உருளைகிழங்கை உப்பு போட்டு வேக வைத்து நன்கு மசித்து அதனுடன் பிரெட்டையும் மசித்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு அதனுடன் தக்காளியை போட்டு வதக்கி ஆறியபின் மிக்ஸியில் கிரேவியாக அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து மசால் பொடி, இஞ்சி,பூண்டு விழுது போட்டு பொரிந்தபின் அரைத்த கிரேவியை ஊற்றி, மிளகாய்தூள், சீரகபொடி, உப்பு போட்டு கொதிக்கவிட்டு சாப்பிடும்போது பொரித்த கோஃதாக்களை அதில் போட்டு சாப்பிடவும். இதற்கு 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.

பிரெட் டோஸ்ட்

தேவையான பொருள்கள்:

சால்ட் பிரெட்- 1 பாக்கெட்
உருளைக்கிழங்கு- 1/2 கிலோ
இஞ்சி- சிறிய துண்டு
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-5 [அ] 8
வெண்ணெய்[ அ] எண்ணெய்

செய்முறை:

உருளைகிழங்கை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு,சீரகம் தாளித்துஇஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். உருளை கிழங்கில் உப்பு போட்டு வேக வைப்பதால் அதனால் ஏற்படும் வாய்வு தொல்லை வராது. கிழங்கை தோல் உரித்து நன்கு மசித்து அதனுடன் சேர்க்கவும். இதை ஒரு ஸ்பூனால் எடுத்து ஒரு பிரெட்டில் தடவி மற்றொரு பிரெட்டை மூடி தோசைகல்லில் போட்டு வெண்ணெய்[அ] எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு பொன் கலரில் எடுத்து சாப்பிடவும். மைக்ரோ அவன் இருந்தால் அதில் 2 நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.

ப்ரெட் பீட்ஸா

வெளிநாட்டில் இருப்பவர்கள், அங்கு வேலைக்கு செல்பவர்கள், நம் நாட்டில் இருவரும் வேலைக்கு சென்று களைப்பாக வரும் போது சீக்கிரமாக சிம்பிளாக சுவையாக செய்ய கூடிய ரெசிபிக்களை சொல்கிறேன். செய்து சுவைத்து பார்க்கவும்.

தேவையானவை:

சால்ட் பிரெட் 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் -2
பெங்களுர் தக்காளி - 4
குட மிளகாய் -2
கேரட் பெரியதாக - 1
பச்சை மிளகாய் -5 [காரம் தேவையானால் சேர்த்து கொள்ளலாம்]
தக்காளி சாஸ், சில்லி சாஸ் - தலா 4 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
வெண்ணெய் - டோஸ்ட் செய்ய

செய்முறை:

கெட்டியான வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொண்டு அதனுடன் சேர்க்கவும். கேரட் துருவியில், கேரட்டையும், குடமிளகாயையும் மெல்லியதாகவும், தக்காளியையும் மெல்லியதாக நறுக்கி அதனுடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கினால் போதும். ஏனெனில் பிரெட்டில் வைத்து டோஸ்ட் செய்யனும். இறக்கியபின் சாஸ்களை சேர்த்து மல்லி த்ழை இருந்தால் பொடியாக நறுக்கி உப்பும் போட்டு நன்கு கலந்து விட்டு, பிரெட்டில் கொஞ்சம் வெண்ணெய் தடவி இந்த கலவையை வைத்து ,அதன் மேல் இன்னொரு பிரெட்டை வைத்து அழுத்தி, தோசைகல்லில் போட்டு சிம்மில் எரியவிட்டு வெண்ணெய் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு பொன் கலரில் வந்ததும் எடுக்கவும். மசால் வாசனை வேண்டும் என்றால் வெங்காயம் வதங்கும் போது 1/2 ஸ்பூன் கறி மசால் பொடி சேர்க்கவும்.

Tuesday, February 26, 2008

வெல்ல சீடை

தேவையானவை:

(மாவு பதம் உப்பு சீடைக்கு சொன்னது போலதான் .)
வெல்லம் - மாவு 2 கப் என்றால் வெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 4
எள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கொஞ்சம் முற்றிய தேங்காய் என்றால் வாசனையாக இருக்கும்
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

வெல்லத்தை தூள் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைந்தபின் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பிசுகென்று வரும் போது மாவை போட்டு மற்ற எல்லா பொருள்களையும் போட்டு கெட்டியாக பிசைந்து துணியில் ஊருட்டி போட்டு பொரித்து எடுக்கவும். கண்டிப்பாக மாவை வறுத்துதான் செய்ய வேண்டும். இல்லையெனில் உருண்டைகளை போட்டவுடன் கரைந்து விடும். மாவின் பதமும் கெட்டியாகதான் இருக்கவேண்டும். அதற்கு தகுந்தபடி மாவில் கொஞ்சம் , கொஞ்சமாக வெல்லம் ஊற்றி பிசைவும். உருட்டும் பதம் வராவிட்டால் அதில் கொஞ்சம் கோதுமை மாவு கலந்து அப்பமாக பொரித்துக் கொள்ளலாம். கலந்த மாவை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

சீடை [உப்பு சீடை]

தேவையானவை:

மாவு பச்சரிசி - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 50 கிராம்
கல் உப்பு, பெருங்காயம் - கொஞ்சம்
பொரிக்க எண்ணெய்.
கடலைப் பருப்பு [அ] பாசிப்பருப்பு ஊறவக்கவும் [3 ஸ்பூன்]

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி நிழலில் காய வைத்து அரைத்து கொள்ளவும். மாவு ஈரமாக இருக்கும். நன்கு சலித்து கொள்ளவும். இல்லையெனில் சீடை வெடிக்கும். ஊளுத்தம்பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசிமாவை கெட்டியான வாணலியில் போட்டு கோலம் போடும் பதத்திற்கு வறுக்கவும். அதனுடன் எல்லாவற்றையும் சேர்த்து [ பெருங்காயம்,உப்பு ஊறவைத்து அந்த நீர், மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் போட்டு கொஞ்ச நேரம் காய்ந்தபின் எண்ணெயில் பொட்டு பொரித்து எடுக்கவும். காரம் தேவைபடுபவர்கள் மிளகாய்தூள் [அ] மிளகுதூள் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் சேர்க்கும் போது ஈரம் இருப்பதால் தண்ணீர் தெளித்து பிசையவும். முதலிலேயே தண்ணீர் அதிகமாக போனால் ஒன்றும் செய்ய முடியாது. கவனமாக செய்யவும். மாவை வறுக்காமல் போட்டால் சீடை வெடிக்கும்.

பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

பச்சை சுண்டைக்காய் - 1/2 கிலோ
உப்பு - 100 கிராம்
எலுமிச்சம் பழம் - 2
வர மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சை சுண்டைக்காய் கொத்தாக இருந்தால் காம்புகளை ஆய்ந்து தனிதனியாக எடுத்து நன்கு அலம்பி சுத்தமாக வைத்து கொள்ளவும். ஊறுகாய்க்கு எப்பொதுமே ஜாடி, அல்லது கெட்டியான ப்ளாஸ்டிக் பக்கெட் நல்லது. சுண்டைக்காயை போட்டு அதனுடன் உப்பு,மிளகாய்தூள், மஞ்சள்பொடிபோட்டு, எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். தினமும் கிளறி விடவும். 5 நாட்களில் நன்கு தண்ணீர் விட்டு இருக்கும். பச்சை சுண்டைக்காய் என்பதால் கடுக்கென்றுதான் இருக்கும். அதுதான் உடம்புக்கு நல்லது தினமும் 5 [அ] 10 சுண்டைக்காய் சாப்பிடலாம். வயிற்று கோளாறுகளை போக்கும். ஊறிய சுண்டைகாயை வதக்கியும் சாப்பிடலாம். மாவடு ஊறுகாய் போட்டு அதன் தண்ணீர் இருந்தால் அதில் சுண்டைக்காயை போட்டு வைக்கலாம்.

Monday, January 28, 2008

பொடி மாஸ்

கடலைப்பருப்பு [ அ] பட்டாணிப்பருப்பு [அ] நமக்கு பிடித்தபருப்பை நன்கு ஊற வைத்து அதனுடன் வரமிளகாய்[அ] பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயதூள் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைத்து உதிர்த்து வைத்து கொண்டு எந்த காய்களாக இருந்தாலும் பொடியாக நறுக்கி வெந்தபின் கடைசியில் இந்த பருப்பு பொடிமாஸை போட்டு நன்கு கலந்து இறக்கினால் இதுதான் பொடிமாஸ்.

இதை தேங்காய் சேர்க்கவேண்டும் என்று விரும்பினால் பருப்பை அரைத்து கடைசியில் தேங்காயை துருவி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளலாம். ஆனால் பொடிமாஸில் வெறும் பருப்பை மட்டும் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும். கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் தாளித்தும் போடலாம். எந்த வகை கீரைகளிலும் செய்யலாம்.

Friday, January 25, 2008

பாசிப் பருப்பு மசாலா குழம்பு

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 200 கிராம்
நன்கு பழுத்த தக்காளி - 4
மிள்காய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது- தலா- 1 ஸ்பூன்
உப்பு - தேவையானவை
தாளிக்க - கடுகு, சீரகம். கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுத்து, மஞ்சள்தூள் போட்டு ப்ரஷர் பேனில் மூடி போட்ட பாக்ஸில் வேகவிடவும். இவ்வாறு வேகவிட்டால் பொங்காது. குழையாது. சிம்மில் வைத்து 1 விசில் விட்டால் போதும். மலரவெந்து இருக்கும். அதே பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து இஞ்சி, (தேவையானால் பூண்டு போட்டு) வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள் தக்காளி பொடியாக நறுக்கி கைகளால் பிசைந்து போட்டு நன்கு வதக்கவும்.உப்பு போட்டு வெந்த பருப்பை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து நுரைத்து வந்தபின் கறிவேப்பிலை, மல்லி போட்டு விடவும். தேவையானால் இறக்கியபின் 1 ஸ்பூன் வாசனைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இது கிராமத்து குழம்புபோல் இருக்கும். சாப்பாட்டிற்க்கும், டிபனுக்கும் ஏற்ற டிஷ்.

Thursday, January 24, 2008

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவையான பொருள்கள் :

மாகாளிக் கிழங்கு- 1/2 கிலோ
புளித்த தயிர்- 1/4 லிட்டர்
மிளகாய்தூள்- 100கிராம்
கடுகு பொடி- 1/4 கப்
உப்பு- 200கிராம்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:

மாகாளிக் கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு ஊறியபின் மண் போக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, தயிரில் எல்லா பொருள்களையும் போட்டு நன்கு கலந்து அதில் கிழங்கை போட்டு ஊறவிடவும். தினமும் நன்கு கிளறி கலந்து விடவும். கைபடாமல் இருந்தால் எத்தனை மாதமோ, வருடமோ ஆனாலும் கெடாது. சாப்பிடும் போது சிறிய கிண்ணத்தில் தேவையானதை எடுத்து பயன் படுத்தவேண்டும்.

பூண்டு ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

பூண்டு- 1/4 கிலோ
புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
எலுமிச்சைப் பழம்- 2
மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
கல் உப்பு- 25 கிராம்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
வெல்லம்- சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய்- 200 கிராம்
தாளிக்க கடுகு- 1 ஸ்பூன்
ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்

செய்முறை :

புளியை சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு ஊறவைத்து கெட்டியாக கரைத்து சாறு எடுத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை போட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உறித்து வைத்துள்ள பூண்டைபோட்டு 1 நிமிடம் வதக்கி, [ கொஞ்சம் வதங்கினால் போதும்] அதில் புளியை ஊற்றி [கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கிளறினால் சீக்கிரம் சுண்டி விடும். வதங்கும்போது தெளிக்காது] அதனுடன் மற்ற எல்லா பொருள்களையும் போட்டு 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மேலே எண்ணெய் ஊற்றி ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும். கடைசியில் லெமன் சாறு சேர்க்கவும். பூண்டு அதிகமாக வதங்ககூடாது. 2 நாட்கள் கழித்து ஊறியபின் பயன்படுத்தவும். இன்னும் காரம் அதிகம் தேவைஎனில் பச்சைமிளகாய் கீறிபோட்டு கொள்ளலாம்.

Tuesday, January 22, 2008

தக்காளி-பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

நல்ல சிகப்பு கலரில் பழுத்த தக்காளி- 1/2 கிலோ
பச்சை மிளகாய்- 50 கிராம்
பெரிய வெங்காயம்- 2
எலுமிச்சம் பழம்-1
தேவையானால் மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
வெல்லம்- கொஞ்சம் ருசிக்கு
உப்பு தேவையானது.
தாளிக்க கடுகு, பெருங்காயம்- 1/4 ஸ்பூன்

செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கி கைகளால் நன்கு கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி கொண்டு, கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன் கலரில் வதக்கி,மிளகாய், மஞ்சள்தூள் சேர்க்கவும். பின் கரைத்துள்ள தக்காளியை போட்டு சுருள வதக்கவும். உப்பு, மிளகாய்பொடி, வெல்லம் சேர்த்து தேவையான எண்ணெய் ஊற்றி, கெட்டியான பின் இறக்கவும்.வெல்லம் போடுவதால் டேஸ்ட் அருமையாக இருக்கும். சீக்கிரம் செய்து விடலாம்.

Monday, January 21, 2008

பச்சை மிளகாய் ஊறுகாய்

நன்றாக காரம் சாப்பிடுபவர்கள் இந்த ஊறுகாய் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:


பச்சை மிளகாய்- 200 கிராம்
புளி- 50 கிராம்
வெல்லம்- 50 கிராம்
ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்
கல் உப்பு- 25 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மிளகாயை பொடியாக நறுக்கி வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு, வெல்லம், ஊறுகாய்பொடியை சேர்க்கவும். சிம்மில் வைத்து கொதிக்கவிட்டால் கொதிக்கம்போது தெளிக்காது. சுருள வதங்கியபின் இறக்கி ஆறியபின் பாட்டிலில் வைத்து பயன் படுத்தவும். மேலே கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வைக்கவும்.

இஞ்சி ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

இஞ்சி- 200கிராம்
புளி- 50 கிராம்
புதிய மிளகாய் பொடி 50 கிராம்
கல் உப்பு- 1/4 கப்
வெல்லம் - 25 கிராம்

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி, புளியுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்ததை போட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள், போட்டு சுருள வதங்கியபின் மிளகாய் பொடி, ஊறுகாய் பொடி-1 ஸ்பூன் போட்டு நன்கு கலந்து, சிறியகட்டி வெல்லம் சேர்த்து, தேவையான நல்லெண்ணெய் கலந்து ஆறிய பின் பாட்டிலில் வைத்து கொள்ளவும். இஞ்சி ஊறுகாய் தயார்.