Saturday, May 10, 2008

தக்காளி சப்ஜி

தேவையானவை:

தக்காளி பழமாக- 1/4 கிலோ, பெரிய வெங்காயம்- 1/4 கிலோ, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு- 10 பற்கள, மிளகாய் தூள்- 2 ஸ்பூன், கறி மசால் பொடி- 1/4 ஸ்பூன் உப்பு- தேவையானது.

செய்முறை:

தக்காளியை சுடு நீரில் போட்டு தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி வதக்கவும். அதில் கொஞ்சம் எடுத்து தக்காளி விழுதுடன் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கி வதக்கவும்.

மீதம் இருக்கும் வெங்காயத்தையும் போடவும். அடுப்பை சிம்மில் எரியவிடவும். அரைத்தவிழுது, மசால்பொடி, மிளகாய்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு, கடைசியில் 1/2 [ தேவையெனில்] கார்ன்ப்ளார் மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து விட்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மிளகு பொடி

தேவையான பொருட்கள்:

மிளகு- 50 கிராம்
சீரகம்- 50 கிராம்
தனியா- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 20 இலைகள்
பெருங்காயம்- சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்.

செய்முரை:

பெருங்காயத்தை கல்லில் தட்டினால் தூளாகிவிடும். அதை வாணலியில் போட்டு பொரித்து, அதனுடன் எல்லாவற்றையும் கலந்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்[அ] அவரவர்க்கு பிடித்த எண்ணெய் ஊற்றி இந்த பொடியை போட்டு சாப்பிடவும். தொண்டை சம்பந்தபட்ட கோளாறுகள் வராது. சளி, கபம் கட்டாது.

சத்து மாவு

தேவையான பொருட்கள்:

கோதுமை, கம்பு, பாசி பயறு, உளுந்து, சோயா, கேழ்வரகு, பொட்டு கடலை - தலா - 100 கிராம்
பாதாம், முந்திரி, பிஸ்தா- தலா 25 கிராம்
சாப்பாட்டு புழுங்கல் அரிசி - 1/2 கிலோ

செய்முரை:

பயறுகளை முதல் நாளே சுத்தம் செய்து ஊற விட்டு இரவில ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால் நன்கு முளைவிட்டு இருக்கும். அரிசியை கழுவி சுத்தம் செய்து எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து வெயிலில் காய விட்டு மிஷினில் அரைத்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும்போது 1- ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு பின் பால், சர்க்கரை கலந்து குடிக்கவும. இல்லையெனில் பாலுக்கு பதில் போர் கலந்தும் குடிக்கலாம். சர்க்கரை கலந்து குடிப்பவர்கள் 5 ஏலக்காய் கலந்து அரைத்து கொள்ளலாம். வெயில் காலத்தில் உப்பு போட்டு மோர் கலந்து குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். சத்துள்ளதுகூட.

வேப்பம்பூ பொடி

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ- 1 கப்
கடலைபருப்பு- 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்- 10
பெருங்காயம்- சிறிய துண்டு
உப்பு- 1 ஸ்பூன். 

செய்முரை:

எல்லா பொருள்களையும் தனிதனியாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடி செய்யவும். உடலுக்கு நல்லது. [ தேவையெனில் புளிப்புக்கு 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் போட்டு பொடி செய்து கொள்ளவும்]

வேப்பிலைக் கட்டி

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை இலை-20
நார்த்தம் இலை-20
வரமிளகாய்-10
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம்- சிறியதுண்டு
சிறிது உப்பு.

செய்முரை:

புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து கொண்டு, மிளகாய், இலைகளை நன்கு வெயிலில் காய விட்டு மிக்ஸியில் பொடிசெய்து அதனுடன் புளி,பெருங்காயம் போட்டு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பாட்டிலில் போட்டு வைத்து வேண்டும் போது அந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் போட்டு சாப்பிடவும்.

சுக்கு பொடி

தேவையான பொருட்கள்:

சுக்கு- 10 கிராம்
பெருங்காயம் - சிறிய துண்டு
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 20 இலைகள்
கல் உப்பு - 2 ஸ்பூன். 

செய்முரை:

சுக்கு, பெருங்காயத்தை சிறியதாக தட்டி வைத்து கொண்டு, மற்ற பொருள்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து கொண்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சுக்கு பொடி வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. வாயு சேராது. சூடான சாதத்தில் சாப்பிடவும். புளிப்பு தேவை எனில் 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட்டை பொடி செய்யும் போது போட்டு அரைத்து கொள்ளவும்.

கொப்பரை பொடி

தேவையான பொருட்கள்:

நன்கு முற்றிய தேங்காய் - 1
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்-10
கல் உப்பு- 2 ஸ்பூன்

செய்முரை:

தேங்காயை கேரட் துருவியில் துருவி கொண்டு, உளுந்துடன், பெருங்காயத்தையும் சேர்த்து, எண்ணெய் விடாமல் வறுத்து அதனுடன் தேங்காயை சேர்த்து வறுத்து கொண்டு 2 ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

துவரம்பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு- 1- கப்
உளுத்தம்பருப்பு- 1ஸ்பூன்
கடலைபருப்பு- 1 ஸ்பூன்
வரமிளகாய்- 20
பெருங்காயம் - சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்

செய்முரை:

பெருங்காயத்தை சிறியதாக உடைத்து கொண்டு, எல்லா பருப்புகளையும் வறுக்கும் சமயம் பெருங்காயத்தையும் போட்டால் பொரிந்து விடும். ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை இட்லிக்கு தொட்டு கொள்ளலாம். பொரியல் செய்யும் போது இந்த பொடியை கடைசியில் தூவி இறக்கலாம்.

Friday, May 9, 2008

டிப்ஸ்

எந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]

அடை மாவு

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 கப்
பட்டாணிப் பருப்பு, துவரம்ப் பருப்பு - தலா 1 கப்
இட்லிக்கு போடும் புழுங்கல் அரிசி - 2 கப்
வரமிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கல் உப்பு- கொஞ்சம். 

செய்முரை:

இவற்றை ஒன்றாக கலந்து வெயிலில் காய வைத்து மிஷினில் குருனையாக அரைத்து [ ரவைபோல்] வைத்து கொண்டு தேவைபடும் சமயம் பெருங்காயம், கறிவேப்பிலை,பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கொஞ்ச நேரம் ஊறவைத்து அடைகளாக ஊற்றவும். மெல்லியதாக வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தண்ணியாக கரைத்து கொள்ள வேண்டும். புளிப்பாக அடை வேண்டும் எனில் மோர் கலந்து [தண்ணீருக்கு பதில்] ஊறவிட்டு அடைகளாக ஊற்றவும்.

எல்லா பயறு வகைகள் கலந்தும் அடை வார்க்கலாம். உளுந்து கலப்பதால் அடை பிய்ந்து போகாமல் அழகாக வரும். மொறுகலாகவும் வரும். எல்லா பயறுகளையும் முதல் நாள் ஊற விட்டு மறுநாள் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்து 1 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு முளைவிட்டு இருக்கும் . அரிசியை மட்டும் ஊற வைத்து [ மேலே சொன்ன அதே அளவு] பயறுகளை மிக்ஸியில் அரைத்து,சீக்கிரம் மாவாகிவிடும். பின்அரிசியுடன், 10 வர மிளகாய், உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை இஞ்சி ஒரு துண்டு போட்டு குருனையாக அரைத்து அந்த மாவில் 2- ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கல்ந்து அடைகளாக ஊற்றவும்.

Thursday, May 8, 2008

ரெடி மாவு தயாரிக்க

ரெடி மாவு தயாரிக்க: கடலை பருப்பு- 1/2 கிலோ, அரிசி- 100 கிராம், வரமிளகாய்-20, கல் உப்பு- கொஞ்சம், கட்டி பெருங்காயம்-சிறியது. இவற்றை வெய்யிலில் நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து வைத்து கொள்ளவும். தேவையான போது மாவுடன் ஒருசிட்டிகை- சமையல் சோடா கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொண்டு செய்யவும்.காரம் தேவை எனில் மிளகாய் பொடி கலந்து கொள்ளவும்.

மெதுவடை செய்ய: உளுந்து 1 - கிலோ, புழுங்கல் அரிசி- 250 கிராம், உப்பு கொஞ்சம் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து கொண்டு தேவையான போது மாவை எடுத்து சப்பாத்திக்கு பிசைவதுபோல் கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விட்டு, அதனுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
கறிவேப்பிலை, மல்லி இலை, கேரட்[ தேவையானால்] சேர்த்து வடைகளாக பொரித்து எடுக்கவும். புழுங்கல் அரிசி போடுவதால் வடை மொறு, மொறுப்பாகவும், சாப்டாகவும் இருக்கும். எண்ணெயும் அதிகம் குடிக்காது.

போண்டா மிக்ஸ்: கடலைபருப்பு- 1 கிலோ, புழுங்கல் அரிசி-100 கிராம், வர மிளகாய்-20 கொஞ்சம் கல் உப்பு சேர்த்து நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து கொள்ளவும். தேவையான மாவை எடுத்து 2 ஸ்பூன் எண்ணெய் காயவிட்டு மாவில் ஊற்றி,பெரியவெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இஞ்சி, பிடித்தமான கீரை ஏதாவது சேர்த்து தளர்வாக பிசைந்து 1நிமிடம் ஊற விடவும். உப்பு போட மறக்க வேண்டாம். மாவை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

புளியோதரை மிக்ஸ்: புளியை சுடு நீரில் ஊறவைக்கவும்.இதனால் பேஸ்ட் அதிகம் வரும்.வேஸ்ட ஆகாது. புளி-1/2 கிலோ, கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் கடலைபருப்பு, 2 - ஸ்பூன் உளுத்தம்பருப்பு, தனியா-5 ஸ்பூன், வரமிளகாய்-25, கட்டி பெருங்காயம் போட்டு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொண்டு,புளியை நன்கு கரைத்து கெட்டியாக சுண்டும் வரை கொதிக்க விட்டு அதில் 1/4 ஸ்பூன்- மஞ்சள்பொடி,கல் உப்பு , பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.கடைசியில் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கடைசியில் 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கவும். தேவையானபோது சாதத்தை வடித்து இந்த புளிகாய்ச்சலை போட்டு கலந்தால் புளியோதரை ரெடி.

Wednesday, May 7, 2008

சேமியா உணவு வகைகள்

இப்போது எல்லாம் வறுத்த சேமியாவே கிடைக்குது. முதலில் தேவையான தண்ணீர் கொதிக்க விட்டு கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சேமியாவைபோட்டு 1 நிமிடம் போட்டு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள மாவு வாசனை போகும்.மெல்லியதாக இருப்பதால் 1 நிமிடம் போதும். அதை தட்டில் போட்டு ஆற விடவும். இதை வைத்து பலவகை டிஷ் செய்யலாம்.

1. தேங்காய் சேமியா: கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பச்சைமிளகாய்,போட்டு நன்கு சிவந்தபின் பொஞ்சம் பெருங்காயம் போட்டு,தேவையான தேங்காய் துறுவி போட்டு வதக்கவும். இதற்குதகுந்த உப்பு சேர்க்கவும். பின் வடிய விட்ட சேமியாவை போட்டு கிளறி, மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும். 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கடைசியில் சேர்க்கவும்.

2. எலுமிச்சை சேமியா: தேவையான எலுமிச்சைபழத்தை [நறுக்கி தண்ணீரில் போட்டு பிழிந்தால் கசப்பு வராது] கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து சிவந்தவுடன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்போட்டு வதக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து,உப்பு போட்டு வதக்கி அதில் சேமியாவை போட்டு கிளறவும.மேலே கொஞ்சம் பெருங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால எலுமிச்சைசேமியா ரெடி.

3. தக்காளி சேமியா: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெடித்தவுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் தேவையான தக்காளி, பச்சைமிளகாயைபொடியாக நறுக்கி போட்டு,கொஞ்சம் மஞ்சள்பொடி, உப்பும் போட்டு, தக்காளியின் நீர் சுண்டியபின் தேவையான அளவு சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.

4. மசாலா சேமியா:வாணலியில் எண்ணெய் விட்டு 1- பட்டை, 2- லவங்கம், 2-ஏலக்காய்,மராட்டிமொக்கு-1, பிரிஞ்சி இலை போட்டு வறுபட்டபின், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/4 ஸ்பூன்- மல்லிபொடி, 1/4 ஸ்பூன் -மிளகாய்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி சேமியாவை போட்டு நன்கு கிளறவும். மேலே மல்லி இலை போடவும்.
கடைசியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.

5. சேமியா பிரியாணி: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி 2-ப்ட்டை, 2-லவங்கம்- 2- ஏலக்காய், சிறியதாக கடல் பாசியை உதிர்த்துபோட்டு தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி போட்டு வதக்கவும். இதில் காளானை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து போட்டு கொள்ளலாம். உப்பு போட்டு கொஞ்ச நேரம் வதங்கியபின் சேமியாவை போட்டு கிளறவும். இதில் மசாலா போருள்களை மிக்ஸியில் அரைத்து காய்கள் வேகும்போதும் போட்டு கொள்ளலாம்.அரைத்து போடுவதாக இருந்தால் 5- சிறிய வெங்காயம், 2பல் புண்டு, 1 துண்டு இஞ்சி போட்டு அரைத்து வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வந்த சமயம் சேமியாவை போடனும்.


6. புளியோதரை சேமியா: வாணலியில் எண்ணெய் ஊற்றி சேமியாவை போட்டு கிளறி, புளியோதரையை போட்டு அதற்கு தேவையான உப்பு போட்டு நன்கு கலந்தால் சேமியா புளியோதரை தயார்.

7. பிஸிபேளாபாத் சேமியா: பாசிபருப்பை சிவக்க வறுத்து வேக வைத்து கொள்ளவும்.
பொடிசெய்ய: 2- ஸ்பூன் கடலை பருப்பு, 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,2- ஸ்பூன் தனியா, கொஞ்சம் கட்டி பெருங்காயம், கொஞ்சம் வெந்தயம், 4 வர மிளகாய்.
இவற்றை எண்ணெய் ஊற்றி வறுத்து, கொஞ்சம் கொப்பரை தேங்காயை துறுவி போட்டு அதனுடன் வறுத்து பொடியாக செய்து கொண்டால் பிஸிபேளாபாத் பொடி ரெடி. வெந்த பருப்புடன் இந்த பொடியை போட்டு கிளறி உப்பும் போட்டு, சேமியாவை போட்டு கிளறி எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கிளறினால் பிஸிபேளாபாத் சேமியா ரெடி.

8. தயிர் சேமியா: கொஞ்சம் தேங்காய்,பச்சைமிளகாய்-2 , 10 கறிவேப்பிலை இலை இவற்றை மிக்ஸியில் அரைத்து கெட்டியான தயிரில், கொஞ்சம் உப்பு கலந்து அதில் [வெந்த]சேமியாவை கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் தாளித்தால் ரெடி, மல்லி இலை போட்டு சாப்பிடவும். அதில் கேரட்டை துருவி மேலே போட்டு, சாப்பிடலாம். வெள்ளரிக்காயை துருவி போட்டும் சாப்பிடலாம். காராபூந்தி தூவி சாப்பிடலாம்.

9. பொடி சேமியா: இதற்கு எந்த பொடியாக இருந்தாலும், பூண்டு பொடி, கொள்ளு பொடி, கறிவேப்பிலைபொடி, மல்லி பொடி, சாம்பார் பொடி, எதுவாக இருந்தாலும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேமியாவை போட்டு வதக்கி உப்பு சேர்த்து விருப்பபடும் பொடி சேர்த்து கிளறி சாப்பிடவும். இதை உடனே செய்து விடலாம். இதற்கு வெங்காய தயிர் பச்சடி தொட்டு கொள்ளலாம்.

Tuesday, May 6, 2008

பலவகை இட்லி

முதலில் இட்லி பூப்போல் வர இட்லி மாவில் [இட்லி ஊற்றும் போது தேவையான மாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் அதில் கொஞ்சம் [Eno salt ] போட்டு மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றினால் மிகவும் சாப்டாக வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும் சமயம் Eno salt கலக்க வேண்டும். மாவின் பதம் மாறி போயிருந்தால் கூட இட்லி மென்மையாக இருக்கும்.

1. தயிர் இட்லி: இட்லி தேவையானதை செய்து கொண்டு, கொஞ்சம் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து,தேவையான தயிரில் கலந்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,கொஞ்சம் பெருங்காயம், தாளித்து கறிவேப்பிலை போட்டு அதில் இட்லிகளை போட்டு மேலே மல்லி இலை போட்டு சாப்பிடவும்.

2.பொடி இட்லி: தேவையான இட்லிகளை ஊற்றி கொண்டு அந்த இட்லிகளை ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, அதன் மேல் இட்லி பொடியை தூவி கொஞ்சம் நேரம் ஊறியபின் சாப்பிடவும்.

3.காய்கறி இட்லி: தேவையான காய்களை பொடியாக நறுக்கி கொண்டு வாணலியில் கடுகு,உளுத்தம்பருப்பு,1 பட்டை, 2 லவங்கம்,4 பல்பூண்டு,கொஞ்சம் பொடியாக நறுக்கிய இஞ்சி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,பின் காய்களை போட்டு வதக்கி [ பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்துவிடும்.] 1 நிமிடம் போதும் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும்.பின் உப்பு போட்டு,
இட்லிகள தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு கொஞ்சம் தேவையான எண்ணெய் ஊற்றி வதக்கவும். இப்படி செய்யும் போது அது இட்லிமாதிரியே தெரியாது. ஏதோ புது வகை டிஷ் போல் இருக்கும்.

4.தக்காளி இட்லி: நன்கு பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி கொண்டு, வாணலியில் கடுகு,1-ப்ட்டை, 3 லவங்கம்-1 ஏலக்காய்-4 பச்சைமிளகாய்பொடியாக நறுக்கி கொள்ளவும் இல்லையெனில் நீளமாக கீற்றி கொள்ளவும். உப்பு போட்டு நன்கு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கி,1/4 ஸ்பூன் கறிமசால்பொடி சேர்த்து இட்லியை தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு 1 நிமிடம் வதக்கினால் போதும். தக்காளியை நன்கு வதக்கியபின் இட்லியை சேர்க்கவும்.பின் கறிவேப்பிலை, மல்லி இலை தூவி விடவும்.

5.இட்லி மஞ்சூரியன்: இட்லிகளை தேவையான ஷேப்பில் கட் செய்து வைக்கவும். அதில் 1-ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,கார்ன்ஃப்ளார் கொஞ்சம்,அரிசிமாவு கொஞ்சம்,மிளகாய்தூள்கொஞ்சம்[காரம் தேவையான அளவு] உப்பு,கரம் மசாலாபொடி கொஞ்சம் இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு அதில் கட் செய்து வைத்துள்ள இட்லியை மாவில் தோய்த்து [டிப் செய்து ]
பொரித்து எடுக்கவும்.

6.மிளகு இட்லி: இதற்கு மினி இட்லியாக ஊற்றி கொண்டு, வாணலியில் கடுகு, தாளித்து,இட்லிகளை போட்டு வதக்கி, 1- ஸ்பூன் நெய் சேர்த்து மிளகுதூள், சீரக தூள், உப்பு போட்டு வதக்கினால் பெப்பர் இட்லி தயார்.அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிடலாம்.

7.பிரியாணி இட்லி: தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி, கொண்டு, எண்ணெய் காய வைத்து 2-பட்டை, 2 லவங்கம்,2- ஏலக்காய்-பிரிஞ்சி இலை,பச்சைமிளகாய் நீளமாக கீறி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு விழுது-2 ஸ்பூன் உப்பு கொஞ்சம் போட்டு வதக்கி[இதுக்கு கொஞ்சம் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.] பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கி வதக்கியபின் காய்களைபோட்டு வதக்கி,இட்லிகளை தேவையான படி கட் செய்து அதில் போட்டு வதக்கினால் பிரியாணி இட்லி தயார்.மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

8. சாம்பார் இட்லி: 1-பெரிய வெங்காயம், 4- தக்காளி, தேவையான சாம்பார்பொடி, கொஞ்சம்,மஞ்சள்தூள்,உப்பு , 1 ஸ்பூன் பொட்டுகடலை போட்டு 2-நிமிடம் வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்ததை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிய வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டால் அதிரடி சாம்பார் தயார். நன்கு சுவையாக இருக்கும்.இதில் இட்லிகளை போட்டு ஊறவைத்தும் சாப்பிடலாம்.தொட்டும் சாப்பிடலாம்.