Wednesday, May 7, 2008

சேமியா உணவு வகைகள்

இப்போது எல்லாம் வறுத்த சேமியாவே கிடைக்குது. முதலில் தேவையான தண்ணீர் கொதிக்க விட்டு கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சேமியாவைபோட்டு 1 நிமிடம் போட்டு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள மாவு வாசனை போகும்.மெல்லியதாக இருப்பதால் 1 நிமிடம் போதும். அதை தட்டில் போட்டு ஆற விடவும். இதை வைத்து பலவகை டிஷ் செய்யலாம்.

1. தேங்காய் சேமியா: கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பச்சைமிளகாய்,போட்டு நன்கு சிவந்தபின் பொஞ்சம் பெருங்காயம் போட்டு,தேவையான தேங்காய் துறுவி போட்டு வதக்கவும். இதற்குதகுந்த உப்பு சேர்க்கவும். பின் வடிய விட்ட சேமியாவை போட்டு கிளறி, மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும். 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கடைசியில் சேர்க்கவும்.

2. எலுமிச்சை சேமியா: தேவையான எலுமிச்சைபழத்தை [நறுக்கி தண்ணீரில் போட்டு பிழிந்தால் கசப்பு வராது] கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து சிவந்தவுடன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்போட்டு வதக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து,உப்பு போட்டு வதக்கி அதில் சேமியாவை போட்டு கிளறவும.மேலே கொஞ்சம் பெருங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால எலுமிச்சைசேமியா ரெடி.

3. தக்காளி சேமியா: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெடித்தவுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் தேவையான தக்காளி, பச்சைமிளகாயைபொடியாக நறுக்கி போட்டு,கொஞ்சம் மஞ்சள்பொடி, உப்பும் போட்டு, தக்காளியின் நீர் சுண்டியபின் தேவையான அளவு சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.

4. மசாலா சேமியா:வாணலியில் எண்ணெய் விட்டு 1- பட்டை, 2- லவங்கம், 2-ஏலக்காய்,மராட்டிமொக்கு-1, பிரிஞ்சி இலை போட்டு வறுபட்டபின், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/4 ஸ்பூன்- மல்லிபொடி, 1/4 ஸ்பூன் -மிளகாய்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி சேமியாவை போட்டு நன்கு கிளறவும். மேலே மல்லி இலை போடவும்.
கடைசியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.

5. சேமியா பிரியாணி: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி 2-ப்ட்டை, 2-லவங்கம்- 2- ஏலக்காய், சிறியதாக கடல் பாசியை உதிர்த்துபோட்டு தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி போட்டு வதக்கவும். இதில் காளானை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து போட்டு கொள்ளலாம். உப்பு போட்டு கொஞ்ச நேரம் வதங்கியபின் சேமியாவை போட்டு கிளறவும். இதில் மசாலா போருள்களை மிக்ஸியில் அரைத்து காய்கள் வேகும்போதும் போட்டு கொள்ளலாம்.அரைத்து போடுவதாக இருந்தால் 5- சிறிய வெங்காயம், 2பல் புண்டு, 1 துண்டு இஞ்சி போட்டு அரைத்து வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வந்த சமயம் சேமியாவை போடனும்.


6. புளியோதரை சேமியா: வாணலியில் எண்ணெய் ஊற்றி சேமியாவை போட்டு கிளறி, புளியோதரையை போட்டு அதற்கு தேவையான உப்பு போட்டு நன்கு கலந்தால் சேமியா புளியோதரை தயார்.

7. பிஸிபேளாபாத் சேமியா: பாசிபருப்பை சிவக்க வறுத்து வேக வைத்து கொள்ளவும்.
பொடிசெய்ய: 2- ஸ்பூன் கடலை பருப்பு, 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,2- ஸ்பூன் தனியா, கொஞ்சம் கட்டி பெருங்காயம், கொஞ்சம் வெந்தயம், 4 வர மிளகாய்.
இவற்றை எண்ணெய் ஊற்றி வறுத்து, கொஞ்சம் கொப்பரை தேங்காயை துறுவி போட்டு அதனுடன் வறுத்து பொடியாக செய்து கொண்டால் பிஸிபேளாபாத் பொடி ரெடி. வெந்த பருப்புடன் இந்த பொடியை போட்டு கிளறி உப்பும் போட்டு, சேமியாவை போட்டு கிளறி எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கிளறினால் பிஸிபேளாபாத் சேமியா ரெடி.

8. தயிர் சேமியா: கொஞ்சம் தேங்காய்,பச்சைமிளகாய்-2 , 10 கறிவேப்பிலை இலை இவற்றை மிக்ஸியில் அரைத்து கெட்டியான தயிரில், கொஞ்சம் உப்பு கலந்து அதில் [வெந்த]சேமியாவை கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் தாளித்தால் ரெடி, மல்லி இலை போட்டு சாப்பிடவும். அதில் கேரட்டை துருவி மேலே போட்டு, சாப்பிடலாம். வெள்ளரிக்காயை துருவி போட்டும் சாப்பிடலாம். காராபூந்தி தூவி சாப்பிடலாம்.

9. பொடி சேமியா: இதற்கு எந்த பொடியாக இருந்தாலும், பூண்டு பொடி, கொள்ளு பொடி, கறிவேப்பிலைபொடி, மல்லி பொடி, சாம்பார் பொடி, எதுவாக இருந்தாலும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேமியாவை போட்டு வதக்கி உப்பு சேர்த்து விருப்பபடும் பொடி சேர்த்து கிளறி சாப்பிடவும். இதை உடனே செய்து விடலாம். இதற்கு வெங்காய தயிர் பச்சடி தொட்டு கொள்ளலாம்.

No comments:

Post a Comment