Thursday, May 29, 2008

சேமியா மசாலா உப்புமா

தேவையானவை:

மெல்லிய (அணில்) சேமியா - 1 பாக்கெட் - 200கிராம்
பெரிய வெங்காயம் - 3
பட்டை- 1, லவங்கம்- 2, ஏலக்காய்-2
தக்காளி - சிறியதாக இருந்தால்-5,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 ஸ்பூன்
பிடித்த காய்கள் - மெல்லியதாக நீளமாக நறுக்கியது- 100 கிராம்,
குடமிளகாய்- 1
உப்பு- தேவையானது,
எண்ணெய்-தேவையானது

செய்முறை:

வறுத்த சேமியாவே கிடைக்குது, சேமியா 1பங்குக்கு 2 பங்கு தண்ணீர் தேவை. வாணலியில் கடுகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு லேசாக வறுபட்டபின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் வதங்கிய பின் காய்களை போட்டு 1 நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பும் போட்டு கொதி வரும்போது சேமியாவை போட்டு கிளறவும். சேமியா வேகும்போது காய்களும் நன்கு வெந்துவிடும். தண்ணீர் தேவையான அளவு மட்டுமே ஊற்ற வேண்டும். ஜாஸ்தி ஆனால் கொஞ்சம் சேமியாவை போட்டு கிளறவும். இல்லையெனில் தண்ணீர் கொதிக்கும் சமயம் கொஞ்சம் எடுத்து வைத்து தேவைஎனில் ஊற்றி கொள்ளலாம். அதிகம் ஆனால் சேமியா இல்லையெனில் கொஞ்சம் ரவை இருந்தால் போட்டு கொள்ளலாம். தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம். இல்லையெனில் மிக்ஸியில் 1 நிமிடம் அரைத்தும் போடலாம்.

அரிசி ரவை உப்புமா

தேவையானவை:

பச்சரிசி/புழுங்கல் அரிசி- 1 டம்ளர்,
துவரம் பருப்பு- 25 கிராம்,
கடலை பருப்பு- 25 கிராம்,
மிளகு- 1/2 ஸ்பூன், சீரகம்- 1/2 ஸ்பூன்,
கல் உப்பு- 1 ஸ்பூன், தேவைஎனில் சேர்த்து கொள்ளலாம்.
வர மிளகாய்-2,
எண்ணெய்- கொஞ்சம்,

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்கள் +அரிசி, பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து [ குருனையாக] கொள்ளவும். குருனை 1 பங்குக்கு 2-1/2 பங்கு தண்ணீர் வேண்டும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து [தேவை எனில்] 3 ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது குருனை தூவியபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விட்டு நன்கு வேக விடவும். சிறிய குக்கரில் செய்வதாக இருந்தால் ரவையை போட்டபின் மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். மிளகு, சீரக வாசனையுடன் உப்புமா சூப்பராக இருக்கும். தேவை எனில் 1 ஸ்பூன் நெய் விட்டு கொள்ளலாம்.

ரவா கிச்சடி

தேவையானவை:

ரவை- 200 கிராம்,
மெல்லிய [அணில்] சேமியா- 200 கிராம்,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-6 [அ] 8,
கேரட்-1, பீன்ஸ்-10, பீட்ரூட்- 1, குடமிளகாய்-1,பச்சை பட்டாணி- 25 கிராம்,
காலிஃப்ளவர்- சிறிய பூக்களாக - 50 கிராம்,
உப்பு- தேவைக்கு.
எண்ணெய்- 50 கிராம்,

செய்முறை:

ரவை மட்டும் வறுத்து கொள்ளவும். சேமியா வறுத்ததே கிடைப்பதால் வறுக்க வேண்டாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து [ காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.] மேலே கூறி உள்ளதை போட்டு நன்கு வதக்கி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது சேமியாவை போட்டு 1 நிமிடம் கழித்து ரவை போட்டு கட்டி விழாமல் கிளறவும். [பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.] சிம்மில் வைத்து மூடி வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.

தக்காளி பாத்

தேவையானவை:

ரவை- 2 கிராம்,
தக்காளி- 3[அ] 5,
பெரிய வெங்காயம்-1,
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
சீரகம்- 1/4 ஸ்பூன்,
பட்டை-1, லவங்கம்-2 ஏலக்காய்-2,
மஞ்சள்பொடி- 1/4 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

செய்முறை:

ரவை பொன் கலரில் வறுத்து கொள்ளவும். தக்காளியை சுடு நீரில் போட்டு ஆறிய பின் அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் தண்ணீரும் கலந்தால் 2 பங்குதான் இருக்கனும். வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, லவங்க,ஏலக்காய்,மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி தக்காளி+ தண்ணீர் சேர்த்து கொதி வரும்போது ரவையை போட்டு கிளறவும். சிம்மில் வைத்தால் 2 நிமிடத்தில் நன்கு வெந்து விடும். மேலே குடமிளகாய், மிக்ஸர் தூவி சாப்பிடலாம். சுவையாக இருக்கும். உப்புமாவுக்கு 2 பங்கு தண்ணீர் தான் வேண்டும். அப்போதுதான் உதிராக இருக்கும்.

Wednesday, May 28, 2008

அவல் உப்புமா

தேவையானவை:

கெட்டியான அவல்- 1 கப்,
பெரிய வெங்காயம்-2,
பச்சை மிளகாய்-5,
இஞ்சி- சிறிய துண்டு,
தேவையான காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும்-1 கப்
தக்காளி-2, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்பு- தேவையானவை.
எண்ணெய்- தேவையானது.

செய்முறை:

அவலை மிக்ஸியில் ரவையாக உடைத்து 2 முறை கழுவி உடனே சுத்தமாக தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். அதனுள் இருக்கும் நீரே ஊற போதும். கொஞ்ச நேரத்தில் ஊறி கையில் எடுத்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து பொன் கலர் ஆனவுடன் மேலே கூறி இருக்கும் எல்லாவற்றையும் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதனுடன் அவலையும் சேர்த்து வதக்கவும்.தண்ணீரை வடியவிட்டு ஊற வைப்பதால் ரவை ஊறும் அளவுக்குதான் தண்ணீர் இருக்கும். மூடி வைத்து 1 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து இருக்கும்.

இட்லி உப்புமா

தேவையானவை:

இட்லி- 10,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்
உப்பு- கொஞ்சம்,

செய்முறை:

இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1 நிமிடம் வதக்கவும். கொஞ்சநேரம் வதங்கினால் போதும். பின் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கவும். முதலிலேயே இட்லி வெந்து இருப்பதால் அதிக நேரம் விட வேண்டாம். இட்லி கையில் ஒட்டாமல் இருக்க கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டு உதிர்க்கலாம்.

Tuesday, May 27, 2008

ரவா உப்புமா

தேவையான பொருள்கள்:

ரவை - 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 ,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-5,
உப்பு- தேவையானவை,
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.

செய்முறை:

ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச நேரத்தில் வதங்கி விடும். 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவைபோட்டு சிம்மில் வைத்து கட்டி விழாமல் கிளறி தீயை குறைத்து 5 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து விடும். கடைசியில் கறிவேப்பிலை, மல்லி போட்டு சாப்பிடவும். சுவையான, மணமுள்ள ரவா உப்புமா ரெடி.

அரிசி ரவை மிளகு உப்புமா

தேவையான பொருள்கள்:

பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
கடலைபருப்பு-2 ஸ்பூன்,
சீரகம்-1/4 ஸ்பூன்,
மிளகு--1 ஸ்பூன்,
வரமிளகாய்- 4,
துறுவிய தேங்காய்- கொஞ்சம்,
உப்பு- தேவையான அளவு.
பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,
கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.

செய்முறை:

அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும். அதை அளந்து கொண்டு 1 கப்புக்கு, 2 கப் தண்ணீர் ஊற்றனும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் தேங்காய்,உப்பு சேர்த்து வதக்கவும். ரவையின் அளவுக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவையை போட்டு கட்டி தட்டாமல் கிளறி சிம்மில் மூடி வைத்து 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்து இருக்கும். மேலே கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடவும். வறுத்து செய்வதால் நல்ல வாசனையுடன் இருக்கும். ப்ரஷர் பேனில் செய்வதாக இருந்தால் 1 விசில் விட்டு இறக்கவும்.

Monday, May 26, 2008

வெஜிடபுள் உப்புமா

தேவையானவை:

ரவை- 1 கப் பொன் கலரில் வறுத்துகொள்ள வேண்டும்
பிடித்த காய்கள் எல்லாவற்றையும் சேர்க்கலாம்.
பட்டை-1
லவங்கம்-2
ஏலக்காய்-2
இஞ்சி- பொடியாக 1 ஸ்பூன், பூண்டு - 10 பற்கள்
சோம்பு-1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
உப்பு- தேவையானது, எண்ணெய் தேவையானவை.

செய்முறை:

மசாலா பொருள்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொண்டு, வாணலியில் கடுகு போட்டு வெடித்தபின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி காய்கள்,பச்சை மிளகாய், உப்பு,இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கியபின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் சமயம் ரவைபோட்டு நன்கு கிளறி மூடி வைத்து சிம்மில் அடுப்பை எரியவிட்டால் 5 நிமிடத்தில் எல்லாம் நன்கு வெந்துவிடும்.கம, கம வாசனையுடன் வெஜிடபுள் உப்புமா தயார்.

ரவா குஸ்கா

தேவையானவை:

ரவை- 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 நீளமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்,
இஞ்சி, பூண்டு விழுது- 2 ஸ்பூன்,
பச்சை மிளகாய்- 5 கீறி கொள்ளவும்,
பட்டை-1 லவங்கம்-2
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
தேங்காய் பால் -2 கப், [அ] சாதாரணபாலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின் பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு விழுது போட்டு நன்கு வதங்கியபின் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியபின் தேங்காய் பால் ஊற்றி கொதி வரும்போது உப்பும் ரவையும் போட்டு கிளறவும். 2 நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். ரவை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்து கொண்டு விடவும். வறுப்பதால் வாசனையாகவும். குழையாமலும் வரும். 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.ரவை குஸ்கா ரெடி.

மிளகு, சீரக உப்புமா

தேவையானவை:

ரவை- 1 கப் [ ரவை எண்ணெய் விடாமல் வறுத்து கொள்ளவும்]
பெரிய வெங்காயம்- 1
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம்- தலா- 1 ஸ்பூன்
தண்ணீர்- 2 கப்
உப்பு கொஞ்சம்
தாளிக்க கடுகு, எண்ணெய்.

செய்முறை:

மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவேண்டும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் மிளகு, சீரகப் பொடியை போட்டு உப்பு போடவும். பின் தண்ணீர் ஊற்றி கொதி வரும் சமயம் ரவை தூவினபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறி தட்டை போட்டு மூடி வைத்து விட்டால் 5 நிமிடத்தில் வெந்துவிடும்.இந்த உப்புமா மிளகு, சீரகபொடி வாசனையுடன் சூப்பர் சுவையாக இருக்கும்.

உப்புமா வகைகள்

உப்புமாவை ருசியாக செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை ருசியாக செய்யகூடிய பக்குவம் தெரியாததால் பலரும் செய்வது இல்லை. உப்புமா என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதை சரியானபடி, வெவ்வேறு சுவைகளில் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவை உதிராக சாப்பிடுபவர்களும் உண்டு. கொஞ்சம் குழைவாக சாப்பிடுபவர்களும் உண்டு. உதிராக வேண்டும் என்றால் 1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குழைவாக வேண்டும் எனில் 2, 1/2 பங்கு என்ற அளவில் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதி வரும்போது அடுப்பை சிறியதாக எரியவிட்டு ரவைபோட்டு கிளறினால் கட்டி தட்டாது.இறக்கியபின் 1 ஸ்பூன் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறினால் சூப்பர் வாசனையுடன் இருக்கும்.

கோதுமை ரவை உப்புமா



தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பிடித்த காய்கள் பொடியாக நறுக்கியது- 1 கப்
பச்சை மிளகாய்-4, பெரிய வெங்காயம்- 1 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
எண்ணெய்- கொஞ்சம்
உப்பு தேவையானது

செய்முறை:

ப்ரஷர் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கியபின் காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் உப்பு போட்டு ரவையை தூவியபடி போட்டு கிளறி ப்ரஷர் பேனை மூடி வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, சிறிது நேரம் கழித்து திறந்து மேலே கொஞ்சம் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

உப்புமா வகைகள்

திடீரென்று விருந்தாளிகள் வந்தாலோ, நமக்கே பசித்தாலோ உப்புமாவை உடனடியாக செய்யலாம். சில பேர் அதை பக்குவமாக செய்ய தெரியாதலால் உப்புமாவை பலரும் விரும்புவதில்லை. ருசியாக செய்தால் பலரும் விரும்பி சாப்பிடகூடிய உணவு. அதை ஒரே மாதிரியாக செய்யாமல் பல வகையாக செய்யலாம். செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உப்புமா உதிராக வர ரவையை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்துக் கொள்ளவேண்டும்.

ரவை ஒரு பங்கு எனில் தண்ணீர் 2 பங்கு என்ற அளவில்தான் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதி வந்ததும் ரவை தூவினபடி போடனும். அப்போதுதான் கட்டி தட்டாது. ரவையை போடும் போது அடுப்பை சிறியதாக எரியவிடவும். இதுபோல் செய்தால் கட்டி தட்டாமல் வரும். இறக்கும்போது 1 ஸ்பூன் நெய், [அ] தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் சுவையாக இருக்கும். உப்புமாவை விரும்பாதவர்கள் கூட ருசியாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

1.அரிசி புளி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு [ புழுங்கல்,பச்சை அரிசி] எதுவாக இருந்தாலும் பரவாயில்லை - 2 கப்
தண்ணீர்-2கப்
புளி கரைசல்- 1/2 கப்
நல்லெண்ணெய்-தேவையான அளவு
கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு- தலா- 1 ஸ்பூன்
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவைனயானது
மோர் மிளகாய்-6
கறிவேப்பிலை- கொஞ்சம்

செய்முறை:

அரிசி மாவை புளி, தண்ணீரில் [ மேலே கூறிஉள்ளபடி அளவில்] கரைத்து கொண்டு, கெட்டியான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் சேர்த்து பொன் நிறமாக ஆனதும் மோர் மிளகாய் போட்டு உப்பும் போட்டு கலந்து கரைத்துவைத்துள்ள மாவை கொட்டி கிளறவும். சிம்மில் வைத்து கிளறவேண்டும்.அப்போதுதான் தீயாது. சிம்மில் வைத்து மூடி வைத்து 2 நிமிடத்துக்கு ஒருமுறை கிளற வேண்டும்.நன்கு வெந்து பொன் கலரில் உதிராக வெந்து இருக்கும் போது இறக்கி விடவும்.கடைசியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். சூப்பராக இருக்கும்.

2.கோதுமை ரவை மசாலா உப்புமா

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பெரிய வெங்காயம்- 1
விருப்பபட்ட காய்கள்- 1 கப்
பட்டை-1, லவங்கம்-2
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/4 ஸ்பூன்
பூண்டு- பொடியாக நறுக்கியது-1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய்-4
எண்ணெய் தேவையானது.
உப்பு தேவையானவை.

செய்முறை:

ப்ரஷர் பேன் [அ] கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடுகு, கடலைபருப்பு, பட்டை, லவங்கம்,போட்டு சிவந்ததும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். 2 கப் ஊற்றி உப்பு போட்டு கொதி வரும்போது ரவைபோட்டு, 1நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய காய்களை போட்டு நன்கு கலந்து சிம்மில் வைத்து ப்ரஷர் பேனை மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். ப்ரஷர் பேனில் செய்தால் எண்ணெய் குறைவாகதான் ஆகும். காய்கறிகள் சேர்வதால் உடலுக்கு சத்துள்ளது.

3.பொடி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி- 1 டம்ளர்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-2 ஸ்பூன்,
வரமிளகாய்-5
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

தாளிக்க -கடுகு,கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு தலா-1/4 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாக உடைத்து கொண்டு, ப்ரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் தாளித்து, உடைத்த ரவையை அளந்து அதில் 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதிவந்தபின் அடுப்பை சிம்மில் எரியவிட்டு ரவைபோட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.தேவையானால் தேங்காயை துறுவி போட்டு கொள்ளலாம். முதலிலேயே வறுத்து கொள்வதால் சீக்கிரம் வெந்துவிடும். வறுத்து செய்வதால் வாசனையாக இருக்கும்.