Monday, May 26, 2008

உப்புமா வகைகள்

திடீரென்று விருந்தாளிகள் வந்தாலோ, நமக்கே பசித்தாலோ உப்புமாவை உடனடியாக செய்யலாம். சில பேர் அதை பக்குவமாக செய்ய தெரியாதலால் உப்புமாவை பலரும் விரும்புவதில்லை. ருசியாக செய்தால் பலரும் விரும்பி சாப்பிடகூடிய உணவு. அதை ஒரே மாதிரியாக செய்யாமல் பல வகையாக செய்யலாம். செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உப்புமா உதிராக வர ரவையை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்துக் கொள்ளவேண்டும்.

ரவை ஒரு பங்கு எனில் தண்ணீர் 2 பங்கு என்ற அளவில்தான் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதி வந்ததும் ரவை தூவினபடி போடனும். அப்போதுதான் கட்டி தட்டாது. ரவையை போடும் போது அடுப்பை சிறியதாக எரியவிடவும். இதுபோல் செய்தால் கட்டி தட்டாமல் வரும். இறக்கும்போது 1 ஸ்பூன் நெய், [அ] தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் சுவையாக இருக்கும். உப்புமாவை விரும்பாதவர்கள் கூட ருசியாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

1.அரிசி புளி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு [ புழுங்கல்,பச்சை அரிசி] எதுவாக இருந்தாலும் பரவாயில்லை - 2 கப்
தண்ணீர்-2கப்
புளி கரைசல்- 1/2 கப்
நல்லெண்ணெய்-தேவையான அளவு
கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு- தலா- 1 ஸ்பூன்
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவைனயானது
மோர் மிளகாய்-6
கறிவேப்பிலை- கொஞ்சம்

செய்முறை:

அரிசி மாவை புளி, தண்ணீரில் [ மேலே கூறிஉள்ளபடி அளவில்] கரைத்து கொண்டு, கெட்டியான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் சேர்த்து பொன் நிறமாக ஆனதும் மோர் மிளகாய் போட்டு உப்பும் போட்டு கலந்து கரைத்துவைத்துள்ள மாவை கொட்டி கிளறவும். சிம்மில் வைத்து கிளறவேண்டும்.அப்போதுதான் தீயாது. சிம்மில் வைத்து மூடி வைத்து 2 நிமிடத்துக்கு ஒருமுறை கிளற வேண்டும்.நன்கு வெந்து பொன் கலரில் உதிராக வெந்து இருக்கும் போது இறக்கி விடவும்.கடைசியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். சூப்பராக இருக்கும்.

2.கோதுமை ரவை மசாலா உப்புமா

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பெரிய வெங்காயம்- 1
விருப்பபட்ட காய்கள்- 1 கப்
பட்டை-1, லவங்கம்-2
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/4 ஸ்பூன்
பூண்டு- பொடியாக நறுக்கியது-1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய்-4
எண்ணெய் தேவையானது.
உப்பு தேவையானவை.

செய்முறை:

ப்ரஷர் பேன் [அ] கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடுகு, கடலைபருப்பு, பட்டை, லவங்கம்,போட்டு சிவந்ததும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். 2 கப் ஊற்றி உப்பு போட்டு கொதி வரும்போது ரவைபோட்டு, 1நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய காய்களை போட்டு நன்கு கலந்து சிம்மில் வைத்து ப்ரஷர் பேனை மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். ப்ரஷர் பேனில் செய்தால் எண்ணெய் குறைவாகதான் ஆகும். காய்கறிகள் சேர்வதால் உடலுக்கு சத்துள்ளது.

3.பொடி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி- 1 டம்ளர்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-2 ஸ்பூன்,
வரமிளகாய்-5
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

தாளிக்க -கடுகு,கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு தலா-1/4 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாக உடைத்து கொண்டு, ப்ரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் தாளித்து, உடைத்த ரவையை அளந்து அதில் 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதிவந்தபின் அடுப்பை சிம்மில் எரியவிட்டு ரவைபோட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.தேவையானால் தேங்காயை துறுவி போட்டு கொள்ளலாம். முதலிலேயே வறுத்து கொள்வதால் சீக்கிரம் வெந்துவிடும். வறுத்து செய்வதால் வாசனையாக இருக்கும்.

No comments:

Post a Comment