Sunday, June 8, 2008

அரைத்துவிட்ட சாம்பார்

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் - 1
சிறிய வெங்காய்ம் - 10
கத்தரிக்காய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி - 2 [அ] 4
துவரம் பருப்பு - 50 கிராம்
கல் உப்பு - தேவையானது

வறுக்க:

உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறியதாக
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 8


செய்முறை:

துவரம்பருப்பை 2 முறை கழுவி மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும். புளியை சுடு நீரில் ஊற வைக்கவும். வாணல்யில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, தனியா, இவற்றை பொன் நிறமாக வறுத்து பின் தேங்காயை போடவும். முதலிலேயே தேங்காய் போட்டால் பருப்பு வறுபடாது. தேங்காய் போட்டு வறுபடும்போது மிளகாயை போடவும்.முதலிலேயே போட்டால் மிளகாய் கறுப்பாகிவிடும்.ஆதலால் கடைசியில் போடவும். வறுத்ததை மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி [சட்னி பதத்தில்] அரைத்து கொள்ளவும். காய்களை நீளமாக நறுக்கி பருப்பு தண்ணிரில் உப்பு போட்டுவேகவைத்து தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு அதனுடன், புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி வேகவிடவும். கொஞ்ச நேரத்தில் வெந்துவிடும். வெந்தபருப்புடன், அரைத்த விழுதை கரைத்து காய்கறியில் ஊற்றவும். தேவையான கல் உப்பு போடவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். தக்காளியை பருப்புகள் வறுக்கும்போது பொடியாக நறுக்கி வதக்கியும் அரைக்கலாம்.குழம்பு கலராக இருக்கும். தக்காளியை பருப்புடன் வேகவைத்து கையால் கரைத்தும் கலந்து கொள்ளலாம். அவரவர் இஷ்டம். நன்கு கொதிக்கும் போது இறக்கி நெய் [அ] நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். மல்லியை மேலே தூவி விடவும்.

இதே சாம்பாரில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிறிய கட்டி வெல்லம் சேர்த்தால் டிபனுக்கும் பயன் படுத்தலாம்.காரம் தேவை எனில் தாளிக்கும்போது வரமிளகாய் கிள்ளி போட்டு கொள்ளலாம்.புளி புதியதாக இருந்தால் சாம்பார் நல்ல கலரில் இருக்கும். பருப்பு வேகவிடும் போது மஞ்சள்தூள் சேர்த்தாலும் கலர் வரும். இது போல் செய்யும் சாம்பாரில் எந்த காய்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம். சேப்பங்கிழங்கு சேர்ப்பதாக இருந்தால் கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கியபின் சாம்பாரில் போடவும்.இந்த அரைத்துவிட்ட சாம்பார் சூப்பராக இருக்கும்.
.


No comments:

Post a Comment